இந்தியாவுக்கு ஏன் இரு குழந்தை சட்டம் தேவையில்லை

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளித்த இந்திய சுகாதார அமைச்சகம், பெரிய குடும்பங்களுக்கு அரசு வேலைகள், மானியங்கள் மற்றும் சில உரிமைகளை மறுப்பதன் மூலம் இரு குழந்தைகள் என்ற கொள்கையை கட்டாயப்படுத்தி அமலாக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இது சரியான முடிவு என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.;

By :  Baala
Update: 2020-12-22 00:30 GMT

ஜெய்ப்பூர்: மாநிலங்களில் கருவுறுதல் வீதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் ஒருவர் கோரியபடி இரு குழந்தைகள் விதிமுறைகளை அமல்படுத்தக்கூடிய சட்டம் இந்தியாவுக்கு தேவையில்லை என்று நிபுணர்கள், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர். அத்தகைய சட்டம், அதன் நோக்கத்திற்கு பதிலாக எதிர்பாராத தாக்கங்களை - அதாவது பாலின-தேர்வு, பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மற்றும் இந்தியாவின் பாலின விகிதத்தில் மேலும் சரிவு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.

பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வானி குமார் உபாத்யாய், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு அரசு வேலைகள், மானியங்கள் மற்றும் சில உரிமைகளை அணுக மறுக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றும்படி கேட்டிருந்தார். மனுவின் படி மறுக்கப்பட்ட உரிமைகள், வாக்களிக்கும் உரிமை, சொத்து மற்றும் இலவச தங்குமிடம் உள்ளிட்டவை அடங்கும்.

இம்மனுவுக்கு பதிலளித்த இந்திய அரசு, கட்டாய இரண்டு குழந்தைகள் கொள்கையை அரசு அமல்படுத்தாது என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியது. "இந்தியாவில் குடும்ப நலத்திட்டம் தன்னார்வத்துடன் செயல்படுகிறது, இது தம்பதியினருக்கு தங்கள் குடும்பத்தின் அளவை தீர்மானிக்க உதவுகிறது மற்றும் எந்தவொரு நிர்ப்பந்தமும் இன்றி தங்களின் விருப்பப்படி அவர்களுக்கு மிகவும் பொருத்தமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற உதவுகிறது," என்று, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உண்மையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை பெறுவதற்கான எந்தவொரு வற்புறுத்தலும் உருவாக்கலுக்கு எதிரான மற்றும் மக்கள்தொகை சிதைவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை சர்வதேச அனுபவம் காட்டுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் அசாம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவிகளுக்கு அல்லது அரசு வேலைகளுக்கு போட்டியிடுவோருக்கு, இரண்டு குழந்தை விதிமுறைகளில் சில வடிவங்களைக் கொண்டுள்ளன.

புதிதாக வெளியான அரசின் சுகாதார தரவுகளின் பகுப்பாய்வு, அத்தகைய சட்டங்கள் தேவையற்றவை என்பதைக் காட்டியது: தரவு வெளியிடப்பட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19 இல், பெண்களுக்கு சராசரியாக இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ளனர்.

மேலும், இந்திய குடும்பங்களில் இன்னும் ஆண் குழந்தை என்ற விருப்பம் உள்ளது - இந்தியாவில் பிறக்கும் போது பாலின விகிதம், தரவு கிடைக்கக்கூடிய சமீபத்திய ஆண்டில் ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 896 பெண்கள் என்றுள்ளது; இது, 2015-17 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 943-980 பெண்கள் என்ற சாதாரண விகிதத்துடன் ஒபிட்டால் குறைவு. இதன் பொருள் என்னவென்றால், குடும்பங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெறுவதில் இருந்து விலக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஒரு மகனைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு மகளை கைவிட வாய்ப்புள்ளது, இது இந்தியாவின் பாலின விகிதத்தை மோசமாக்குகிறது.

தோல்வியடைந்த முந்தைய முயற்சிகள்

முன்னதாக, உபாத்யாய் இதேபோன்றதொரு பொது நலன் வழக்கை, (PIL) டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், நீதிமன்றம் அவ்வாறு செய்வது அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே என்றும் குறிப்பிட்டு, 2019 செப்டம்பரில் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் போலியோ தினத்திற்கு பதிலாக "சுகாதார நாள்" என்று அறிவிக்கக்கோரி உபாத்யா பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "மக்கள்தொகை பரவல் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும், கருத்தடை மாத்திரை, ஆணுறைகள், தடுப்பூசிகள் போன்றவற்றை பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர் [EWS] மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள [BPL] குடும்பங்களுக்கு, போலியோ தடுப்பூசிகளுடன் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தது. "மக்கள்தொகை பரவல்" பற்றிய விரிவான அறிக்கையைத் தயாரிக்க இந்திய சட்ட ஆணையத்திற்கு உத்தரவிடவும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை பரிந்துரைக்கவும், அந்த மனு நீதிமன்றத்தை கோரியது.

இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, வளங்கள் பற்றாக்குறை மற்றும் குற்றங்கள் (குறிப்பாக பெண்களுக்கு எதிராக) பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் சிறைகளில் கூட்டம் போன்ற பிரச்சினைகள் அனைத்தும் இந்தியாவின் அதிக மக்கள் தொகைக்கு காரணமாக இருக்கலாம் என்று மீண்டும் வலியுறுத்தி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டிலும், கட்டாய இரண்டு குழந்தை விதிமுறைகளை உருவாக்கக்கோரிய மற்றொரு பொதுநல மனுவை நிராகரித்தது, உச்ச நீதிமன்றம். மேலும், பிப்ரவரி 2020 இல், சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய், இரு குழந்தைகளுக்கு மேல் இல்லாத குடும்பங்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்க அரசுக்கு உத்தரவிட வழிவகுக்கும் அரசியல் சட்டத்தில் திருத்தம்கோரி, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.

"இந்தியாவின் மக்கள்தொகை ஏற்கனவே 125 கோடியை [1.25 பில்லியன்] தாண்டியுள்ளது என்பது உண்மையில் பயமுறுத்துகிறது" என்று, தேசாய் முன்வைத்த மசோதா கூறியது. 2050 ஆம் ஆண்டளவில், சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும், இது அதன் இயற்கை வளங்களை சுமந்து, பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

இருப்பினும், வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த கட்டத்தில் கட்டாய குடும்பக்கட்டுப்பாடு உத்திகளுக்கு இந்தியா உண்மையில் செல்ல தேவையில்லை.

கட்டாய குடும்பக்கட்டுப்பாடு தேவையில்லை

"இருபத்தைந்து இந்திய மாநிலங்கள் ஏற்கனவே மாற்றீடு நிலைகளில் அல்லது மாற்றீடு நிலைகளுக்கு அருகில் கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன. எனவே, கட்டாய குடும்பக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் தேவையில்லை "என்று டெல்லியைச் சேர்ந்த அரசுசாரா அமைப்பான இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் (PFI - பிஎஃப்ஐ) கூட்டு இயக்குனர் அலோக் வாஜ்பாய் கூறினார். கருவுறுதல் விகிதங்கள் மாற்றீடு நிலை கருவுறுதல் விகிதங்களை விடக் குறைவு (சராசரியாக ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள்) என்பதன் பொருள், தற்போதைய மக்கள்தொகையை, நடைமுறையில் உள்ள மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் மாற்ற முடியாது என்பதாகும்.

இந்தியாவின் மொத்த கருவுறுதல் வீதம், 1992-93ம் ஆண்டில் 15-49 வயதுடைய ஒரு பெண்ணுக்கு 3.4 குழந்தைகளில் இருந்து, 2015-16ம் ஆண்டில் 2.2 குழந்தை என்று குறைந்ததாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 (NFHS 4) தரவு காட்டுகிறது. சுகாதார அமைச்சக அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் இது, 1.93 ஆகவும், 2030 ஆம் ஆண்டில் 1.8 ஆகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கருவுறுதல் வீதத்தின் வீழ்ச்சி

இது, எந்தவொரு கட்டாயச் சட்டமும் இல்லாமல் 2025 ஆம் ஆண்டில் 1.93 ஆகவும், 2030 ஆம் ஆண்டில் 1.8 ஆகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அனைத்து இந்திய மாநிலங்களிலும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் கொள்கையானது, எதிர்விளைவுகளை தரும் என்று நிபுணர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர். மாநிலங்கள் பரவலாக கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன - உதாரணமாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4ன்படி, 2019-20 ஆம் ஆண்டில், பீகார் 15-49 வயதுக்குட்பட்டோரில் ஒரு பெண்ணுக்கு 3 குழந்தைகள் மற்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 தரவுகளின்படி சிக்கிம், 1.1 குழந்தைகள் என்ற கருவுறுதல் வீதத்தைக் கொண்டிருந்தது. அதாவது, சிக்கிமில், தற்போதைய தலைமுறையை மாற்றுவதற்கு தேவையான விகிதத்தை விட பெண்களுக்கு குறைவான குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப வருமானம் அதிகரித்து பெண்கள் கல்வி கற்றதால், இந்திய மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் கட்டாய நடவடிக்கைகள் எதுவுமில்லாமல் சரிந்துள்ளதாக, இந்தியாஸ்பெண்ட் ஆகஸ்ட் 2016 கட்டுரை தெரிவித்துள்ளது. நாங்கள் எழுதியது போல, சமூக பொருளாதார காரணிகள், கல்வி, நவீனமயமாக்கல், கருத்தடைகளுக்கான அணுகல் மற்றும் வளர்ச்சிக்கான மாநிலக் கொள்கைகள் அனைத்தும் கருவுறுதலை பாதிக்கின்றன.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 தரவு வெளியிடப்பட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19, மாற்றீடு நிலை கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன.


கட்டாயப்படுத்துதல் ஏன் தோல்வியடைகிறது

கடந்த 1991 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர், பல மாநிலங்கள், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் எந்த பஞ்சாயத்து பதவியையும் வகிக்கக்கூடாது என்று தடை விதித்தன. சிறந்த குடும்பக் கட்டுப்பாட்டிற்குப் பதிலாக, இது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தின - மூன்றாவது முறையாக கர்ப்பமாகிவிட்டால், மனைவியை விட்டு ஆண்கள் விலகுவது அல்லது விவாகரத்து செய்வது, பாலின நிர்ணயம் மற்றும் கருக்கலைப்பு செய்தல், மற்றும் மகன்களுக்கு தொடர்ச்சியான முன்னுரிமை அளித்தல், மீண்டும் மீண்டும் கர்ப்பத்தை சந்திக்கும் குடும்பங்கள் என விளைவுகள் ஏற்பட்டதாக, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

மூன்றாவது குழந்தையைப் பெற்ற குடும்பங்களை தண்டிக்கும் சட்டங்கள் அல்லது மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தும் சட்டங்கள் "பெண் கரு மற்றும் பிற கருக்கலைப்பை அதிகரிக்கும்" என்று, பெண் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்காக பணியாற்றும் லக்னோவை சேர்ந்த வத்சல்யா அமைப்பின் திட்ட மேலாளர் அஞ்சனி குமார் சிங் தெரிவித்தார். "நாங்கள் கள நிலவரத்தை கண்டோம், மேலும் தரவுகளும் காட்டுகின்றன, முதல் குழந்தைக்கு பாலின விகிதம் மிகவும் மோசமாக இல்லை, ஆனால் இது இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தைக்கு மிகவும் மோசமானது. குடும்பங்கள் பையனை மட்டுமே விரும்புகின்றன,"என்று சிங் கூறினார், இவர் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உத்தரபிரதேசத்தில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பாலின விருப்பத்தேர்வு தொடர்பான திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

பி.எஃப்.ஐ. சேர்ந்த வாஜ்பாய், சீனாவின் ஒரு குழந்தை என்ற கொள்கையை உதாரணம் காட்டுகிறார். அது பாலியல் - தேர்வு கருக்கலைப்புகளுக்கு வழிவகுத்தது மற்றும் வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் தொழிலாளர்கள் கொண்ட வயதான மக்கள் தொகைக்கு வழிவகுத்தது. சரியும் பாலின விகிதம், சீனாவில் பெண் கடத்தல் மற்றும் கட்டாய விபச்சாரத்திற்கு வழிவகுத்ததாக சிலர் தெரிவித்தனர்.

மூன்று குழந்தை கொண்டிருக்கும் குடும்பங்களுக்கான நன்மைகளைத் தடுத்து நிறுத்தும் சட்டத்தை, சிங் எதிர்க்கவில்லை என்றாலும், மக்கள் உண்மையில் சட்டத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே அத்தகைய விதிமுறை செயல்படும் என்றும், கருத்தடை மற்றும் நல்ல சுகாதார சேவைகளைப் பெற முடியும் என்றும் கூறினார்.

இந்தியாவில், தற்போதைய கொள்கைகளால் குடும்பக்கட்டுப்பாட்டு தேவை என்பது ஏற்கனவே உள்ளது. 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பெண்களில் சுமார் 13% (சுமார் 30 மில்லியன்) தங்கள் கர்ப்பத்தைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த விரும்பினர், ஆனால் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தவில்லை என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 தரவு தெரிவிக்கிறது. இது அவர்களுக்கு கருத்தடை அணுகல் இல்லாததாலோ அல்லது ஒன்றை பயன்படுத்த தேர்வுசெய்யும் ஏஜென்சி இல்லாததாலோ இருக்கலாம் என்று வாஜ்பாய் மேலும் கூறினார்.

இரண்டு குழந்தை என்ற குடும்ப விதிமுறைகளின் சுமைகளை பெண்கள் தாங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். 2016 வரையிலான எட்டு ஆண்டுகளில், ஆணுறைகளின் பயன்பாடு 52% குறைந்து, வாஸெக்டோமிகள் 73% குறைந்துவிட்டன, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள ஆண்கள் மத்தியில் தயக்கம் உள்ளதாக, பிப்ரவரி 2017 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது.

இதன் குறைபாடுகளில் ஒன்று பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் -- இந்தியாவில் கருக்கலைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை பாதுகாப்பற்றவையே -- பெண்கள் குடும்ப அளவைக் கட்டுப்படுத்த விரும்பினாலும், அவர்களுக்கு பாதுகாப்பான குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் கிடைக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

"சில நேரங்களில் கருக்கலைப்பு மறைக்கப்பட வேண்டும் என்று குடும்பங்கள் விரும்புவதால், குறிப்பாக கரு பெண் என்றால், அல்லது பதிவுசெய்யப்பட்டவர்களுக்கு அணுகல் இல்லாததால், போலி மருத்துவர்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை செய்கின்றன [அவை] பெண்ணின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை "என்று வாட்சல்யா அமைப்பின் சிங் கூறினார்.

கல்வி, விழிப்புணர்வு சிறப்பாக செயல்படுகிறது

கட்டாய நடவடிக்கைகளை விட பெண்களின் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் எளிதில் கிடைக்கும் கருத்தடை சாதனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பி.எஃப்.ஐ.யின் மற்ற நிபுணர்கள் தெரிவித்தனர்.

தற்போது, தேசிய சுகாதார இயக்கத்தின் பட்ஜெட்டில் சுமார் 4%, குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது, இதில் பெரும்பான்மையானது குடும்பங்கள் மற்றும் சேவை வழங்குவோருக்கு கருத்தடை செய்வதற்கான ஊக்கத்தொகைக்காக உள்ளது என்று பிஎஃப்ஐ பகுப்பாய்வு கூறுகிறது.

மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்காக 2019ல் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட மசோதா, கருத்தடைக்கு ஊக்கத்தொகையை அந்த குடும்பங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

டாக்டர்கள் அல்லது பிற சேவை வழங்குநர்களுக்கு கருத்தடை நடவடிக்கைகளுக்காக ஊக்கத்தொகை அளித்தால், அது ஒரு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும், மருத்துவர்கள் ஒரே நாளில் தரமற்ற, பராமரிப்பு இல்லாமல் பல அறுவை சிகிச்சைகளை செய்வார்கள் என்று, வாஜ்பாய் கூறினார். 2014 ஆம் ஆண்டில் ஒரே நாளில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 83 பெண்களில் 13 பெண்கள் இறந்த பிலாஸ்பூரின் உதாரணத்தை, அவர் மேற்கோள் காட்டினார்.

குடும்பக் கட்டுப்பாடுக்கான பட்ஜெட் தொகை, அதிக இளம் பருவ பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு, கருத்தடை பயன்படுத்துவதில் சமூக மற்றும் கலாச்சார தடைகளை குறைப்பதற்கான திட்டங்கள் மற்றும் நடத்தை மாற்ற தகவல்தொடர்பு ஆகியவற்றில் சிறப்பாக செலவிடப்பட வேண்டும், குறிப்பாக ஆண்களுக்காக என்று வாஜ்பாய் பரிந்துரை செய்தார்.

மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான முந்தைய மசோதாக்கள்

நாங்கள் முன்பு கூறியது போல், மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான தண்டனை நடவடிக்கை குறித்து அரசு விவாதிப்பது இது முதல்முறை அல்ல, ஆனால் இதுபோன்ற எந்த சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த 2002 ஆம் ஆண்டில், அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கான ஒரு அரசுக்குழு 47- ஏ பிரிவு 47-ஐ வழிநடத்தும் கொள்கையைச் சேர்க்க பரிந்துரைத்தது, அதில் கூறியிருப்பதாவது: "மக்கள்தொகை கட்டுப்பாடு" - "கல்வி மற்றும் சிறு குடும்ப விதிமுறைகளை அமல்படுத்துவதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கும்" என்பதாகும். இருப்பினும், இது செய்யப்படவில்லை.

தற்போது இந்தியாவின் சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள பிரஹ்லாத் சிங் படேல் அவர்களால், மக்களவையில் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா, மூன்றாவது குழந்தையைப் பெற்றவர்களுக்கு அனைத்து நலவாரிய சலுகைகளையும் தரக்கூடாது என்று பரிந்துரைத்தது. அந்த மசோதாவில் குடும்பங்கள் மூன்றாவது குழந்தைக்கு, அரசிடம் அதிகாரபூர்வமாக அனுமதி பெற வேண்டும் என்றிருந்தது. எனினும், இந்த மசோதா ஒருபோதும் வாக்கெடுப்புக்கு வரவில்லை என்று 2019 ஜனவரியில் சி.என்.என் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம், பாஜகவைச் சேர்ந்த மக்களவை எம்.பி.யான அஜய் பட், மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா, 2019 ஐ மக்களவையில் அறிமுகப்படுத்தினார், ஒற்றை மற்றும் இரண்டு குழந்தை குடும்பங்களுக்கான சலுகைகள் மற்றும் நன்மைகளை நீக்குதல் மற்றும் மூன்றாவது குழந்தையைப் பெற்றவர்களுக்கு அபராதம் கேட்டல். மூன்றாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு குடும்பங்கள் ஒரு குழுவிடம் அனுமதி எடுக்க வேண்டும் என்று மசோதா தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி.யும், பாஜக உறுப்பினருமான ராகேஷ் சின்ஹா, 2019- மக்கள் தொகை ஒழுங்குமுறை மசோதாவை 2019 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தினார். வாழ்க்கைத் துணையில் ஒருவருக்கு கருத்தடை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகள் என்ற குடும்பக்கட்டுப்பாடு முறையில் உள்ள குடும்பங்களுக்கு பொதுத்துறை வேலைகளில் கூடுதல் சலுகை, வீட்டு மானியங்கள், வருமான வரிச்சலுகை, பயண மானியங்கள், சுகாதார காப்பீட்டு சலுகைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க வேண்டுமென்று அது பரிந்துரைத்தது. இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களிடம் இருந்து பல சலுகைகள் திரும்பப் பெற வேண்டும், இதில் பொது விநியோக முறைமையின் (பி.டி.எஸ்) கீழ் சலுகைகள் குறைப்பு, அதிக வட்டி விகிதத்தில் கடன்கள் மற்றும் குறைக்கப்பட்ட சேமிப்பு விகிதங்கள் ஆகியவற்றை இந்த மசோதா கொண்டிருந்தது.

ஜனவரி 2021 முதல், அஸ்ஸாமில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு பணிகளை பெறுவதற்கு அது தடை அம்சமாக கருதப்படும் என்று, மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக, அக்டோபர் 2019 இல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள்தொகை வளர்ச்சி பொருளாதாரத்திற்கு பயனளிக்கும்

இந்தியாவில் தம்பதியினர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்தாலும், மக்கள்தொகையில் பெரும்பகுதியினர், 35 வயதிற்குட்பட்ட 60% க்கும் அதிகமானவர்கள் இளமையானவர்கள் என்பதால், இந்தியாவின் மக்கள் தொகை 2051ம் ஆண்டு வரை தொடர்ந்து அதிகரிக்கும், என்று பி.எஃப்.ஐயின் வாஜ்பாய் விளக்கினார்.

ஒரு பெரிய மக்கள் தொகையானது பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க வேண்டிய அவசியமில்லை: சரியான திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டால், இந்தியா தனது பெரிய உழைக்கும் மக்களைப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சியைத் தூண்டலாம் என்று, யு.என்.எஃப்.பி.ஏ-வின் 2018 கட்டுரையை மேற்கோள்காட்டி, ஆகஸ்ட் 2019 இல் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

(குல்தீப் சர்மா, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர், இக்கட்டுரைக்கு பங்களிப்பு செய்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    
Load more

Similar News