ஜெய்ப்பூர் தனது சுகாதார ஊழியர்களை தொற்றுநோயில் இருந்து எப்படி பாதுகாத்தது

ஜெய்ப்பூர் தனது சுகாதார ஊழியர்களை தொற்றுநோயில் இருந்து எப்படி பாதுகாத்தது
X

ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி: தேவையான நேரத்தில் சரியானபடி கோவிட்-19 பரிசோதனைகள், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மனிதாபிமான பணிச்சூழல், சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது போன்றவற்றால் ஜெய்ப்பூர் நகரின் சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுநோய் காலத்திலும் தொடர்ந்து ஊக்கத்துடன் பணி புரிந்து வருவது, இந்தியா ஸ்பெண்ட் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மிக மோசமான நேரங்களில் நோயாளிகளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு கவனம் செலுத்திய மருத்துவ ஊழியர்களின் வலுவான வலையமைப்பை உருவாக்க, இந்த காரணிகள் அந்நகரத்தை அனுமதித்தன.

இதற்கு நேர்மாறாக டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் உள்ள பொது மற்றும் தனியார் சுகாதாரப்பணியாளர்கள் நீண்ட வேலை நேரம், போதிய பாதுகாப்பு கருவிகள் இல்லாதது, தாமதமான பரிசோதனை மற்றும் பகுதி அல்லது தாமதமான சம்பளப் பட்டுவாடா என தங்களது சோதக்கதைகளை வெளிப்படுத்துகின்றனர்.

மருத்துவமனைகள் மற்றும் மாநில அதிகாரிகள் சுகாதாரப் பணியாளர்களைக் கவனித்துக்கொண்டால், வசதிகள் பரவலால் ஏற்படும் ஊழியர்களின் பற்றாக்குறையை அது குறைக்கிறது. அதிக முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு, மருத்துவமனைகளை தொற்று பரவும் ஹாட்ஸ்பாட்களாக மாறுவதைத் தடுக்கிறது மற்றும் தொழிலாளர்கள் தங்களது வாயிலாக சமூகங்களுக்கு நோயை பரப்பும் வாய்ப்பைக் குறைக்கிறது.

குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கோவிட்-19 ஆல் சமூகத்தில் களங்கத்தை எதிர்கொள்ளும் போது நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்கான கூடுதல் சுமை மற்றும் உணர்வுபூர்வமான உழைப்பு காரணமாக தங்களுக்கு அடிப்படை வசதிகள், பரிசோதனை அணுகல் மற்றும் போதுமான ஓய்வு உள்ளிட்டவை இன்னும் முக்கியமானவை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஜெய்ப்பூரின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO- சி.எம்.எச்.ஓ) நரோட்டம் ஷர்மா கூறுகையில், "எங்களது உத்திகள், சுகாதார ஊழியர்கள் சோர்வடையாமல் இருப்பதையும், ஊக்கம் பெறுவதையும் உறுதி செய்கிறது. பிப்ரவரி இறுதிக்குள் கோவிட்-19 க்கு முன்கூட்டியே தயாராவதன் மூலம் இந்நகரத்திற்கு நன்மையும் இருந்தது - என்று ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் (RUHS) முதன்மை மற்றும் கட்டுப்பாட்டாளர் சுதான்ஷு கக்கர் சுட்டிக்காட்டினார், தற்போது நகரத்தில் அரசின் மிகப்பெரிய அர்ப்பணிப்பு கொண்ட கோவிட்-19 சுகாதார வசதி கிடைக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் தனது முதலாவது கோவிட்-19 வழக்கை மார்ச் 2ம் தேதி கண்டது; 68 வயதான இத்தாலிய சுற்றுலாப்பயணி ஒருவருக்கு ஜெய்ப்பூரில் கோவிட் நேர்மறை இருப்பது தெரியவந்தது. கேரளா மற்றும் மகாராஷ்டிராவுக்கு பிறகு எட்டு நாட்கள் கழித்து ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் கோவிட் வழக்கு எண்ணிக்கை 100தாண்டியது. ஜூலை 26 நிலவரப்படி, ராஜஸ்தானில் கோவிட்-19 வழக்குகள் 35,787 ஆக இருந்தன; இதில் 9,935 வழக்குகள் செயல்பாட்டில் உள்ளன, இது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பதிவாகியுள்ளதைவிட ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானது. ஜெய்ப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜூலை 26 வரை ஜோத்பூரில் 4,848 வழக்குகள் இருந்தன; அவற்றில் 1,080 செயல்பாட்டில் உள்ளன.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), ஓய்வூதியத்தை ஒத்திவைத்தல் மற்றும் சம்பளம் வழங்காதது என சுகாதாரப்பணியாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்ட சில நிகழ்வுகளை நாங்கள் சந்தித்தோம் - ஆனால் அவை களையப்பட்டன.

தணியும் ஆரம்பகால அச்சங்கள்

நீண்ட பூட்ஸ், முகக்கண்ணாடி, என் -95 முகமூடிகள், கையுறைகள் மற்றும் ஒரு தொப்பி அணிந்து, ரவி மீனா மற்றும் சுமார் 200 துப்புரவுத் தொழிலாளர்கள் சவாய் மான் சிங் (எஸ்.எம்.எஸ்.) மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில் தூய்மைப்பணி மற்றும் சுகாதாரத்தை மேற்கொண்டு வந்தனர் - மே 31ம் தேதி நகரில் செயலில் உள்ள வழக்குகள் குறையத் தொடங்கியபோது, இது ஜெய்ப்பூரின் மிகப்பெரிய கோவிட் -19 மருத்துவமனையாக இருந்தது. ஒரு கட்டத்தில், மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்ட கோவிட் -19 நோயாளிகள் இருந்தனர்.

"நாங்கள் முதலில் பயந்தோம், ஆனால் எங்கள் சகாக்கள் சிலர் நேர்மறை கண்டறியப்பட்டு, பின்னர் அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டபோது, எங்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது" என்று 26 வயதான துப்புரவு மேற்பார்வையாளர் கூறினார். மருத்துவமனை நோயாளிகள் மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட மருத்துவக்கழிவுகளுடன் துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்பில் இருப்பதன் மூலம் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஏப்ரல் 2020 இல் ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மருத்துவமனை பிரதான கட்டிடத்தில் துப்புரவு மேற்பார்வையாளர் ரவி மீனா, 26 பணியில் இருந்த காட்சி.

ஆரம்பத்தில் கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அது எளிதானதாக இல்லை என்பதைதொழிலாளர்கள் நினைவு கூர்ந்தனர்.

"முதல் நோயாளி ஏப்ரல் 7 ஆம் தேதி எனது வார்டில் அனுமதிக்கப்பட்டார், அன்றைய இரவில் இருந்து நாங்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானோம்; சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் தூக்கமின்றி இரவுகளை கழித்தோம். ஒரு வாரம் கழித்து பயம் நீங்கியது,”என்று ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை வார்டின் பொறுப்பாளராக இருக்கும் செவிலியர் ராம்சந்திர வர்மா கூறினார்.

"நாங்கள் முதலாவது நோயாளியை மருத்துவமனையில் இறக்கிவிடச் சென்றபோது, காவலர்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர்," என்று எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் 33 வயதான, அவசரகால பராமரிப்பு ஆம்புலன்ஸ் செவிலியர் ரேகா பூந்தேலா விவரித்தார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு இப்போது 500 படுக்கைகள் மற்றும் 40 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ள ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக (RUHS) மருத்துவமனையில், அந்த நேரத்தில் சில துப்புரவுத் தொழிலாளர்கள் “ஓடிவிட்டார்கள்” அல்லது அந்த மருத்துவமனை கோவிட் -19 மருத்துவமனையாக மாறும்போது வேலை செய்ய மறுத்துவிட்டதாக, அதன் முதல்வர் கக்கர் கூறினார். "அவர்களுக்கு எதுவும் நடக்காது என்பதை விளக்க நான்கு-ஐந்து மணி நேரம் ஆனது. அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க நான் ஒரு வார்டு பையனுடன் சென்றேன், ”என்று கக்கர் கூறினார்.

நெரிசல் மிகுந்த மருத்துவமனைகளை தவிர்த்தல்

ஊழியர்கள் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக, ஜெய்ப்பூர் நிர்வாகம் ஓய்வுபெறும் சுகாதாரப் பணியாளர்களின் பணிக்காலத்தை நீட்டித்தது, நோயாளிகள் வருகை குறைவாக இருந்த சுகாதார மையங்களில் பணி புரியும் பணியாளர்கள், தேவைப்படும் இடங்களுக்கு மாற்றப்பட்டனர் மற்றும் அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தப்பட்டனர். முதல்வரின் தலைமை அலுவலகம் மற்றும் இரண்டு அரசு கோவிட் -19 மருத்துவமனை நிர்வாகிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். சம்பளம் பெரும்பாலும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதாலும், ஊழியர்கள் கவனித்துக் கொள்ளப்பட்டதாலும், மற்ற நகரங்களை போல் அல்லாமல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யவோ அல்லது ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யவோ இல்லை.

மருத்துவமனை ஊழியர்கள் மீதான பணிச்சுமையை குறைப்பதற்காக, “ராஜஸ்தான் அரசு 100 ஊழியர்களை [ஜெய்ப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள] சிறிய மருந்தகங்களில் இருந்து எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்கு அனுப்பி உதவியது” என்று எஸ்.எம்.எஸ். மருத்துவமனை முதல்வரின் செயலாளர் நீரஜ் ஜெயின் கூறினார்.

"ஆரம்பத்தில், 10 அருகாமை மாவட்டங்கள் [எஸ்எம்எஸ்] மருத்துவமனைக்கு கைகொடுத்தன; இது குழப்பத்திற்கும் கூட்டத்திற்கும் வழிவகுத்தது," வர்மா கூறினார். "ஆனால் மற்ற மாவட்டங்களில் பிரத்யேக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டதால், நிலைமை மேம்பட்டது” என்றார். இது ஊழியர்களின் பணிச்சுமையையும் குறைத்தது. உதாரணமாக, ஏப்ரல் மாதத்தில், வர்மா நிர்வகித்த எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட வார்டு ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள பகுதிகளில் இருந்து பல நோயாளிகளுடன் முழுத்திறனுடன் இயங்கியது. ஆனால் மே மாத இறுதிக்குள், வார்டில் 25% படுக்கைகள் காலியாக இருந்தாக அவர் தெரிவித்தார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஓய்வுபெறும் அந்த சுகாதார ஊழியர்களின் பதவிக்காலத்தையும் அரசு செப்டம்பர் 5 வரை நீட்டித்தது என்று சி.எம்.எச்.ஓ சர்மா கூறினார். அத்துடன் நீட்டிக்கப்பட்ட ஊழியர்களின் பணிக்காலம் முடிவடையும் போது,அந்த இடத்தில் பணியை தொடர சுமார் 75 செவிலியர்களை அரசு நியமித்ததாக சர்மா மேலும் தெரிவித்தார்.

சில தொழிலாளர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டும் தங்களுக்கு கணினி மென்பொருள் குறைபாட்டால் ஏப்ரலில் இருந்து சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் கூறியதாக, துணை நர்ஸ் மற்றும் செவிலியர் (ஏ.என்.எம்), சுஷ்மா ஜெயின், 61, தெரிவித்தார். அவர் மார்ச் 31 அன்று ஓய்வு பெறவிருந்தார், ஆனால் செப்டம்பர் வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார். அவர் தனது நோயாளிகளை தற்போது கவனித்து வருவதாக சர்மா கூறினார். எந்தவொரு வழக்கமான சுகாதார ஊழியரும், ஒப்பந்தம் அல்லது மற்றவர்களோ, சம்பள தாமதங்கள் குறித்து புகார் கூறவில்லை என்று, சி.எம்.எச்.ஓ மற்றும் இந்தியா ஸ்பெண்டிடம் பேசிய பிற சுகாதாரப் பணியாளர்கள் கூறினார்.

மற்றொரு பெரிய கோவிட்-19 மருத்துவமனையான ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (RUHS), பிற இடங்களில் இருந்து வரும் சுகாதாரப் பணியாளர்களை கொண்டு சமாளிக்கிறது. "ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் ஒரு பெரிய மருத்துவமனை, ஆனால் அது மோசமாக பணியாற்றுகிறது. இதற்கு முன்பு அவர்கள் ஆண்டுக்கு 400 முதல் 500 நோயாளிகளை மட்டுமே கவனித்தனர் ”என்று எஸ்.எம்.எஸ் மருத்துவமனையின் மூத்த பேராசிரியர் அபிஷேக் அகர்வால் கூறினார். ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் 70-80 நர்சிங் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர், மே மாதத்திற்குப் பிறகு எஸ்.எம்.எஸ். இல் இருந்து ஊழியர்களுடன் இக்குழு கூடுதலாக வழங்கப்பட்டது [ஒருமுறை எஸ்.எம்.எஸ். வளாகம் ஒரு கோவிட் 19 அல்லாத மருத்துவமனையாக மாற்றப்பட்டது] மற்றும் குறைந்த பணிச்சுமை கொண்ட பிற புற சுகாதார மையங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டதாக, கக்கர் கூறினார்.

பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்தல்

மற்ற நகரங்களை போல் அல்லாமல் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் இருப்பதால் பணியில் பாதுகாபு இல்லை என்ற எண்ணமே வரவில்லை என்றனர். எஸ்.எம்.எஸ். நர்சிங் கல்லூரியில் சமூக சுகாதார செவிலியரும் ஆசிரிய உறுப்பினருமான சம்தா சோனி, மார்ச் 11 முதல் ஏப்ரல் 17 வரை வீட்டுக்கு வீடு வீடாக கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக, ஆரம்பகால கோவிட்-19 ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாக இருந்த ஜெய்ப்பூரின் ராம்கஞ்ச் பகுதிக்கு அனுப்பப்பட்டார். 80 பேர் கொண்ட அவரது அணிக்கு ஏராளமான கையுறைகள், முகமூடிகள் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். நர்சிங் கல்லூரியில் சமூக சுகாதார செவிலியர் மற்றும் ஆசிரிய உறுப்பினரான சம்தா சோனி, மார்ச் 2020ல் நகரின் கோவிட்-19 ஹாட்ஸ்பாட்டான நகரத்தின் ராம்கஞ்ச் பகுதியில் வீடு வீடாக கணக்கெடுப்புகளை மேற்கொண்டார்.

கோவிட் 19- வார்டுகளுக்குள் உள்ள பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன, இது ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் பிறகும் களைந்து வேறு மாற்றப்பட்டதாக, வர்மா கூறினார். இருப்பினும், பாதுகாப்பு உபகரணங்கள் கட்டுப்பாட்டுடன் வழங்கப்பட்டதாகவும், ஆரம்ப நாட்களில் தொழிலாளர்கள் அதை அணியும்போது தரம் போன்ற சில பிரச்சினைகள் மற்றும் அசவுகரியங்களை உணர்ந்ததாக, சில பணியாளர்கள் தெரிவித்தனர்.

“எனது ஆறு மணி நேர ஷிப்டுகளின் போது என்னால் குளியலறையைப் பயன்படுத்த முடியவில்லை. இது எனக்கு அசவுகர்யமாக இருந்தது,”என்று அவசரகால பராமரிப்பு ஆம்புலன்ஸ் செலியர் பூந்தேலா கூறினார். ஒரு கழிப்பறை இடைவெளிக்குள் பாதுகாப்பு உபகரணங்களை அகற்றி மாட்டுவது, தொற்றுநோய் பரவலுக்கு வழிவகுக்கும். "இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவும், உடலின் நீரேற்றம் பராமரிக்கவும் நான் தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து, வேலைக்குச் செல்வதற்கு முன்பு 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பேன், குளியலறையைப் பயன்படுத்துவேன்," என்றார் அவர். சுகாதார தொழிலாளர்களுக்கு ஒரு ஷிப்டுக்கு ஒரு செட் பாதுகாப்பு உபகரணகள் வழங்கப்பட்டது, மாதவிடாய் உள்ள தொழிலாளர்களுக்கு கூடுதல் ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்று எஸ்எம்எஸ் முதல்வரின் செயலாளர் ஜெயின் கூறினார்.

கோவிட்-19 அல்லாத வார்டுகளில், சுகாதாரப் பணியாளர்கள் என்-95 முகக்கவசம் மற்றும் கையுறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு உபகரண பயன்பாட்டை மட்டுப்படுத்தினர் என்று, எஸ்எம்எஸ் மருத்துவமனையின் பூந்தேலா கூறினார்.

ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் 33 வயதான அவசரகால பராமரிப்பு ஆம்புலன்ஸ் செவிலியர் ரேகா பூந்தேலா, 2020 மார்ச் மாதம் கோவிட் -19 பணியின் போது முழு பாதுகாப்பு உபகரணம் அணிந்து ஆம்புலன்ஸ் அருகே நின்றிருந்த காட்சி.

தொற்றுநோய் தொடங்கியபோது, மருத்துவமனைகள் தயார் செய்யப்படாததால் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது மற்றும் உபகரணங்கள் எளிதில் கிடைக்கவில்லை என்று கக்கர் கூறினார். "இப்போது அரசு அதிகளவில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குகிறது, தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு ஐந்து எண்ணிக்கையில் கூட ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு ஷிப்டுக்கு ஒரு நபருக்கு மூன்றுக்கு மேல் இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.

"அவசர காலங்களில் தொழிலாளர்கள் தங்களது கார்களில் வைத்திருக்க 10-15 கூடுதல் உபகரணங்களைக்கூட நாங்கள் வழங்குகிறோம்" என்று எஸ்.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் ஆர்.யு.எச்.எஸ். உடன் ஒருங்கிணைப்பதற்காக மருத்துவ இணை பேராசிரியரும் நோடல் அதிகாரியுமான விஷால் குப்தா கூறினார்.

மற்ற நகரங்களில், செவிலியர்களுக்கு ஒரு ஷிப்டுக்கு ஒரு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

நிலையான பணி நேரம், தனிமைப்படுத்தப்பட்ட காலம்

மே 31 வரை, மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் 14 நாட்கள் வேலை என்ற சுழற்சி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்; அதைத் தொடர்ந்து ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். களத்தில் பணிபுரிபவர்கள் 15 நாள் சுழற்சியைக் கொண்டிருப்பார்கள், அதன் பிறகு அவர்கள் விரும்பினால் சோதனைக்கு உட்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு அடுத்த சுழற்சிக்காக களம் சாராத வேலைக்கு அனுப்பப்படுவார்கள். ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இம்முறையே பின்பற்றப்பட்டது என்று சி.எம்.எச்.ஓ சர்மா கூறினார். தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கென்ற கொள்கைகளை பின்பற்றுகின்றன என்றார் சர்மா.

துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, எஸ்எம்எஸ் மருத்துவமனையின் துப்புரவு மேற்பார்வையாளர் மீனா தெரிவித்துள்ளார்.

தங்களது தனிமைப்படுத்தலின் போது, எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஆரம்பத்தில் தர்மசாலைகள், அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் பொது இல்லங்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டதாக வர்மா கூறினார். மே மாதம் வரை, 400 முதல் 500 தொழிலாளர்கள் அடங்கிய மருத்துவமனையின் முழு துப்புரவு ஊழியர்களும் எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்கு அருகேயுள்ள மோடி தர்மசாலையில் தங்க வைக்கப்பட்டதாக மீனா தெரிவித்தார்.

பூந்தேலாவை போன்ற சில பணியாளர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதை தேர்வு செய்தனர். தன்னிடம் இருந்து குடும்பத்தினருக்கு தொற்று பரவாமல் பாதுகாக்க, தனது மூன்று வயது மகள் மற்றும் கணவரை உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வீட்டிலேயே பல வாரங்கள் தனியாக இருந்தார்.

ஆனால் வேலை செய்து வந்த ஏ.என்.எம்-க்கள் அத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட வசதியைப் பெறவில்லை, மேலும் தங்களால் தங்கள் குடும்பத்தினருக்கு தொற்று பரவுமோ என்று அஞ்சினர். பணிக்காலம் நீட்டிக்கப்பட்ட சுஷ்மா ஜெயின் என்ற ஏ.என்.எம், மே மாதத்தில் கோவிட் -19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து நாட்கள் சிறப்பு வார்டில் தங்க வைக்கப்பட்டனர். அவரது ஏழு வயது பேரன் தவிர அவர்கள் அனைவருக்கும் எதிர்மறை என்பது சோதனையில் தெரிய வந்ததாக, அவர் மேலும் கூறினார். சுஷ்மா ஜெயினும் அவரது பேரனும் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் 20 நாட்கள் இருந்தனர், பின்னர் ஏழு நாட்கள் வீட்டிற்கு தனிமைப்படுத்தப்பட்டனர். “நான் மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு பயந்தேன்; ஏனென்றால் எனக்கு மீண்டும் கோவிட் தொற்று வருமோ; என் வாயிலாக என் குடும்ப உறுப்பினர்களுக்கு பரவுமோ என்று நான் கவலைப்பட்டேன்,”என்று அவர் கூறினார்.

60 வயதுக்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கோவிட் -19 பாதித்த நோயாளிகளுடன் நேரடியாக பணித்தொடர்பில் இருப்பதில்லை என்று சி.எம்.எச்.ஓ. சர்மா கூறினார்.

கள ஊழியர்களை ஒருங்கிணைப்பேன், கணக்கெடுப்பு படிவங்களை சேகரிப்பேன், களப்பணியாளர்களுக்கு முகக்கவசம் போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்வேன் என்று சுஷ்மா ஜெயின் கூறினார்; ஆனால் களப்பணிக்கு செல்லும்படி கேட்கப்படவில்லை. தற்போது, அவர் குழந்தைகள் தடுப்பூசி கிளினிக்கில் பணிபுரிகிறார்.

ஜூன் மாதத்தில் இருந்து, ஆர்.யு.எச்.எஸ். இல் கோவிட் நோயாளிகள் கையாளும் மருத்துவமனையின் திறனை அதிகரிக்கவும் நீட்டிக்கவும் தொடங்கியபோது, சுகாதார ஊழியர்கள் 14 நாட்கள் வேலை மற்றும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலின் நெறிமுறையின்படி தனிமைப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, போதிய பாதுகாப்பு கருவிகள் மற்றும் அவர்களின் தொடர்புகள் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் 11 மருத்துவர்கள் “தனிமைப்படுத்தப்பட்ட குழு” முன் முன்வைக்கப்படுகிறார்கள், இது தனிமைப்படுத்தலின் அவசியத்தை தீர்மானிக்கிறது என்று வாரியத்தின் உறுப்பினரான அகர்வால் மற்றும் முதல்வர் கக்கர் கூறினார். "நேர்மறை அறியப்படும் அனைத்து தொழிலாளர்களும் தனிமைப்படுத்தலைப் பெறுகிறார்கள்," என்று அகர்வால் கூறினார். "எதிர்மறை முடிவு அல்லது அபாயத்தின் அடிப்படையில் பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பவர்கள் விஷயத்தில் வாரியம் முடிவுகளை எடுக்கிறது. தனிமைப்படுத்தச் செய்வதில் நாங்கள் மிகவும் தாராளமாக இருக்கிறோம். தனிமைப்படுத்துதலை தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான பாதுகாப்பாக இந்த குழு உள்ளது” என்றார்.

ஆர்.யு.எச்.எஸ். 15 நாள் சுழற்சிகளில் எஸ்எம்எஸ் மூலம் ஊழியர்களையும் பெறுவதாக கக்கர் கூறினார்.

பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடுதலாக, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மருந்தை தற்காப்புகாக மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது. "செயல்பாட்டில் உள்ள கோவிட்-19 நோயாளிகளை கவனிக்கும் அனைத்து பணியாளர்களும் ஒவ்வொரு வாரமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை உட்கொள்கிறார்கள் ..." என்று அகர்வால் கூறினார். இருப்பினும், கோவிட்-19 க்கான தடுப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் செயல்திறன் நிரூபிக்கப்படவில்லை என்று, மே 24 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

சோதனைக்கு எளிதான அணுகல்

கோவிட் தொற்றின் ஆரம்பம் முதல், சுகாதாரத் தொழிலாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்ளலாம்; அவர்கள் மறுக்கப்பட மாட்டார்கள் என்று சி.எம்.எச்.ஓ.வின் சர்மா கூறினார். உதாரணமாக,ஏ.என்.எம். சுஷ்மா ஜெயின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கத் தொடங்கியதும், தனக்கு பரிசோதனை நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.

எந்தவொரு சுகாதார ஊழியருக்கும் சோதனை மறுக்கப்படவில்லை என்ற போதிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் முறையான வழிகாட்டுதல்கள் அல்லது கட்டாய சோதனைக் கொள்கைகள் இல்லை; எனவே, தகுதி அளவுகோல்களும் தெளிவற்றதாக இருக்கும்.

பல சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயுடன் தொடர்புடைய பழிச்சொல் மற்றும் பயம் காரணமாக பரிசோதிக்கப்படுவதில்லை, இதனால் அவர்களின் சமூகங்கள் மற்றும் நோயாளிகள் ஆபத்தில் உள்ளனர். 80 செவிலியர்களைக் கொண்ட ராம்கஞ்ச் கணக்கெடுப்புக் குழுவில், சுமார் 10-12 பேர் மட்டுமே பரிசோதிக்கப்பட்டதாக அதில் இடம்பெற்ற சமூக சுகாதார செவிலியர் சோனி கூறினார்.

ஒவ்வொரு வாரமும் ஆர்.யு.எச்.எஸ். சுகாதாரத் தொழிலாளர்கள் ரேண்டமாக பரிசோதிக்கப்படுகிறார்கள், அவர்கள் கோவிட் இல்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்த இது மேற்கொள்ளப்படுவதாக, கக்கர் கூறினார்.

அதேநேரம், எஸ்.எம்.எஸ் மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில் துப்புரவு நடவடிக்கைகளை மீனா தொடர்ந்து கண்காணித்து வருகிறார், அவர் இப்போது கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு சேவை செய்கிறார். "இந்த அனுபவத்தின் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்; ஆரம்பத்தில் இது கடினமாக இருந்தபோது, அவை நன்றாக கையாளப்பட்டு உள்ளன," என்று அவர் கூறினார்.

(பரத்வாஜ், யேல் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய பட்டதாரி மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்; கைதன் இந்தியா ஸ்பெண்ட் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story