புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக இந்தியா போராட்டிக் கொண்டிருக்கும் போது, ஆண்டுதோறும் மிரட்டும் மலேரியாவின் நெருக்கடி தொடர்கிறது; அதன் மீதும் கவனத்தை செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் மருத்துவ இதழான லான்செட் ஆகியன, தனித்தனி அறிக்கைகளில் எச்சரித்துள்ளன. "திட்டமிட்ட உங்களது மலேரியா தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை குறைத்துவிட வேண்டாம்" என்று, உலக சுகாதார அமைப்பின் குளோபல் மலேரியா திட்ட இயக்குனர் பேட்ரோ அலோன்சோ, மார்ச் 25, 2020இல் கூறினார்.
உலகளவில் மலேரியாவால் பாதிப்புக்குள்ளான 11 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2018ம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 4,30,000 நோயாளிகளுக்கு இது காரணமாக இருந்ததாக, அரசு தரவு காட்டுகிறது. நாட்டின் மக்கள்தொகையில் 95% பேர், மலேரியா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் சூழலில், நமது சுகாதார அமைப்புகள் தற்போது கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே மும்முரமாக இருப்பதால், மலேரியா தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று வல்லுநர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
வழக்கமாக மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகியன மருந்து தெளித்தல், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முக்கியமான மாதங்கள் ஆகும்.
"மலேரியாவின் உச்ச காலம் மே மாதம் முதல் தொடங்குகிறது; ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைக்காலத்திற்குப் பிறகு இதில் சீரான வேகம் காணப்படுகிறது" என்று சண்டிகரை சேர்ந்த முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஜிஐஎம்ஆர்) சமூக மருத்துவம் மற்றும் பொது சுகாதாரப்பிரிவின் மது குப்தா கூறினார். "இந்த மாதங்களில் மலேரியா வழக்குகளை தடுக்க, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்குகின்றன. கோவிட்-19ஐ நோக்கி மட்டுமே நமது வளங்களும் கவனமும் செலுத்தப்படுவதால் மலேரியா தடுப்பில் பின்னடைவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது; அது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மலேரியா பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானவை” என்று அவர் கூறினார்.
இந்தியா போன்ற மலேரியா பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கான லான்செட் இதழின் மார்ச் 16, 2020 எச்சரிக்கையானது, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 2014 மற்றும் 2016 க்கு இடையே 9,428 உயிர்களை காவு வாங்கிய எபோலா வைரஸ் பரவலின் போது, மலேரியா இறப்புகளின் எண்ணிக்கை எவ்வாறு கிட்டத்தட்ட 900% உயர்ந்தது என்பதை நினைவூட்டுகிறது.
கோவிட்-19 மற்றும் மலேரியாவின் அறிகுறிகளில் உள்ள ஒற்றுமையையும், இந்த எச்சரிக்கையானது விளக்குகிறது. "காய்ச்சல், தசைவலி மற்றும் சோர்வு உள்ளிட்ட கோவிட்-19ன் ஆரம்ப அறிகுறிகள் மலேரியாவுக்கும் இருப்பதால் குழப்பம் ஏற்படுத்தக்கூடும்; இது, ஆரம்பகால நோயறிதலில் மருத்துவர்களுக்கு சவால்களுக்கு வழிவகுக்கும்" என்று லான்செட் வெளியிட்ட கருத்து தெரிவிக்கிறது. "எனவே, ஒரு தொற்று நோய் பரவல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்போது மலேரியா ஆபத்துள்ள உள்ளூர் பகுதிகளுக்கு ஒரு உண்மையான, நெருக்கடியான ஆபத்து உள்ளது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மலேரியாவை கட்டுப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அரசு கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த செலவிடப் போகிறது என்று அர்த்தமல்ல," என, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) தேசிய நீர் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்திற்கான மலேரியா கட்டுப்பாட்டு திட்டத்தின் கூடுதல் இயக்குனர் அவ்தேஷ்குமார் கூறினார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பது மிக முன்கூட்டியேவாக அமைந்துவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கையை போலவே, கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் விரிவான சோதனைகளை மேற்கொண்ட மாநிலங்கள் அதிக நோயாளிகளை கண்டறிந்துள்ளன என்று, மார்ச் 25, 2020இல் நாங்கள் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். ஏப்ரல் 2, 2020 நிலவரப்படி, இந்தியாவில் 2,069 கோவிட் -19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்; இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஹெல்த் செக் தரவுத்தளமான கொரோனா வைரஸ் மானிட்டர் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சுகாதார இயந்திரங்களின் செறிவு, மலேரியாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஒரு சவாலாக இருக்கும் என்று, பூனேவைச் சேர்ந்த உலகளாவிய சுகாதாரம், உயிர்வேதியியல் மற்றும் சுகாதாரக் கொள்கை தொடர்பான ஆராய்ச்சியாளர் அனந்த் பான் கூறினார்.
எபோலா நெருக்கடியின் போது மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மலேரியா இறப்பு
எபோலா பரவல், ஆப்பிரிக்காவில் மலேரியா நோய் கட்டுப்படுவதை எவ்வாறு தடுத்தது என்பதை விளக்கும் லான்செட் பத்திரிகை, கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் உள்ளிட்ட நாடுகள் மிக மோசமான பாதிப்புக்குள்ளானதை சுட்டிக் காட்டியுள்ளது. ஏனெனில் ஆரம்ப கட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே, மருத்துவ உதவியை நாடினர்.
இதன் விளைவாக கினியாவில் மட்டும் 1,067 மலேரியா இறப்புகள் ஏற்பட்டன; இது, 2014ம் ஆண்டில் நிகழ்ந்த 108 இறப்புகளை விட, கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாகும்; எபோலாவால் 2,446 பேர் இறந்தனர். "மிகவும் ஆபத்தான வகையில் எபோலா பரவியதால் கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோனில் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளிடையே சுமார் 7,000 கூடுதல் மலேரியா தொடர்பான இறப்புகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் உலக மலேரியா அறிக்கை-2019இன் படி, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பத்தொன்பது நாடுகள் உலகளாவிய மலேரியா சுமையில் கிட்டத்தட்ட 85% ஐ கொண்டுள்ளன.
- Providing insecticide-treated nets
- Indoor residual spraying
- Providing malaria chemoprevention for pregnant women and young children
- Presumptive malaria treatment
- Mass drug administration
Source: World Health Organization
மலேரியாவுக்கு தயாராகுதல், சோதனை
உலகிலேயே மலேரியா பாதிப்புக்குள்ளான 11 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்; இவற்றில் உலகளாவிய நோயாளிகளில் 70% பேர் உள்ளனர். 2018 ஆம் ஆண்டில் இந்தியா, 2017ம் ஆண்டைகாட்டிலும் 4,14,000 குறைவான மலேரியா நோயாளிகளை பதிவு செய்துள்ளது - இது 2017 ஐ விட 49% குறைவு மற்றும் 2016ஐ விட 60% குறைவு என்று அரசு தரவு காட்டுகிறது.
இந்தியாவின் வெற்றிகரமான மலேரியா தடுப்பு உத்திகள், உட்புறமாக பூச்சிக்கொல்லிகளை தெளித்தல், கொசு வளர்ப்பு இடங்களைக் குறைத்தல் மற்றும் நீண்ட காலமாக நீடிக்கும் பூச்சிக்கொல்லி அடித்தல், கொசு வலைகளை இலவசமாக விநியோகித்தல் உள்ளிட்டவை அடங்கும். மலேரியா நோய்த்தொற்றை குறைப்பதில் அறிகுறியற்ற அல்லது காய்ச்சல் இல்லாத மலேரியாவும் முக்கிய பங்கு வகித்தது என்று, நவம்பர் 2018 இல் எங்களது கட்டுரை தெரிவித்தது.
தற்போது, உலகளாவிய மலேரியா நோயாளிகளில் 3% பேர் இந்தியாவில் உள்ளனர்; மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை முற்றிலும் அகற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், கோவிட்-19 உடனான தற்போதைய நிலைமை, மலேரியா நோயாளிகளைக் குறைப்பதில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கால், மக்களை வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்; ஊரடங்கால், மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரமும் தடைபட்டுள்ளது. "தேவையான விழிப்புணர்வு சென்றடையவில்லை மற்றும் மக்களின் கவனம் மலேரியா மீது செலுத்தவில்லை என்றால், அது நிலைமையை மோசமாக்கும்" என்று பிஜிஐஎம்ஆர்- இன் குப்தா கூறினார். "டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற அனைத்து தண்ணீரில் மூலம் பரவும் நோய்கள் பற்றிய பிரச்சாரமும் இதில் அடங்கும்" என்றார் அவர்.
"பஞ்சாபில் -மலேரியா பாதிப்புக்குள்ளான பகுதியில் - ஊரடங்கு உத்தரவு உள்ளது; அங்கு, எல்லா வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன" என்று குப்தா ஒரு எடுத்துக்காட்டை சுட்டிக்காட்டியதுடன், "நமது சுகாதார அமைப்பு கோவிட்-19 ஐ கையாள்வதில் தான் கவனம் செலுத்துகிறது" என்றார்.
கோவிட் -19 மீது மட்டும் கவனம் செலுத்துவது மலேரியாவுக்கான மருத்துவப் பரிசோதனையிலும் பெரும் சரிவுக்கு வழிவகுக்கும். "ஊரடங்கின் போது, மலேரியா கட்டுப்பாட்டுக்கான வழக்கமான நடவடிக்கைகளை நீங்கள் செய்ய முடியாது" என்று பான் கூறினார். இந்த நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகளின் கீழ் வருகின்றன. ஆனால், இதற்கு கொரோனாவுக்கான அதே முன்னுரிமை வழங்கப்படாமல் போகலாம். இது மலேரியாவுக்கு மட்டுமல்ல, காசநோய் மற்றும் வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டிற்கும் அல்லது நோய்த்தடுப்பு உள்ளிட்ட வேறு எந்த வழக்கமான திட்டத்திற்கும் பொருந்தும்” என்று அவர் கூறினார்.
"எடுத்துக்காட்டாக, துப்புரவு, நோய் கட்டுப்பாடு, மருந்து தெளித்தல் ஆகியவற்றுக்கு பொறுப்பான அனைத்து நகராட்சி ஊழியர்களும், கொரொனோ தடுப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார். “இரண்டு மாதங்களுக்கு அவர்கள் செய்ய வேண்டியது, கோவிட்-19 ஆல் பாதிக்கப்படக்கூடியவர்களைத் தொடர்பு கொள்வது மட்டும் தான். இதனால், மற்ற வழக்கமான பணிகளை யார் செய்வார்கள்? நம்மிடம் பேக் அப் வசதி இல்லை” என்றார்.
எனவே, இத்தகைய வழக்கமான பணித்திட்ட செயல்பாடுகள் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்வது பல்வேறு மட்டங்களில் - அதாவது தேசிய, பிராந்திய, உள்ளூர், நகராட்சி அளவில் உள்ள சுகாதார அமைப்புகளின் தலைமைக்கு இன்றியமையாதது; அவை திடீரென்று நிறுத்தப்படுவதில்லை என்று பான் கூறினார்.
எவ்வாறாயினும், அரசின் மலேரியா கட்டுப்பாட்டு திட்டத்தின் குமார் கூறுகையில், மலேரியா வழக்குகளை கிராம அளவில் கையாள முடியும் மற்றும் கடந்த காலங்களில் செய்ததைப்போல நகர மருத்துவமனைகளையும் திணறச் செய்யாது என்றார். காலப்போக்கில், படுக்கைகள், நோயறிதல் கருவிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சிகிச்சை வசதிகள் உட்பட கிராம அளவில் மலேரியாவை சமாளிக்கும் திறனை இந்தியா உருவாக்கியுள்ளது என்று குமார் கூறினார். இதனால் மருத்துவமனைகள் மீதான வளசார்பு குறைந்துள்ளது. ஒரு நோயாளிக்கு மலேரியா நோய் இருப்பது கண்டறியப்பட்டால், கிராமத்திலேயே சிகிச்சை தொடங்குகிறது; மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை எழவில்லை என்று குமார் மேலும் கூறினார். “ஒரு சில நோயாளிகள் விதிவிலக்காக இருக்கலாம்; ஆனால் அவ்வாறு நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை” என்றார்.
கோவிட் -19 கிராமங்களுக்கு பரவினால், அங்குள்ள கிராம சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு சமாளிக்கும்; அது மலேரியாவை சமாளிக்கும் திறனை எப்படி பாதிக்கும் என்றும் கேட்டதற்கு குமார் கூறுகையில், "இது, எவ்வளவு கொரோனா பரவுகிறது, எத்தனை மலேரியா வழக்குகள் உள்ளன என்பது போன்ற பல காரணிகளை பொறுத்தது. இந்த நேரத்தில் நமக்கு தெரியாத பொதுவான அனுமானங்கள் இதில் இருக்கக்கூடாது" என்றார்.
(திவாரி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.