மும்பை: உலக அதிசயமான, காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் கடந்த மாதம் மூடப்பட்ட ஒன்றே, கோவிட் 19 தொற்று, இந்தியாவின் பயண மற்றும் சுற்றுலாத்துறையை எவ்வாறு மாற்றி இருக்கிறது என்பதற்கான ஒரு உதாரணமாகும். நாட்டின் பயண மற்றும் சுற்றுலாத்துறையின் எதிர்காலமானது, கொரோனாவால் பல லட்சம் பேரின் வேலைகளை பறித்துக் கொண்டு, ஒரு மங்கிப்போன எதிர்காலத்தை காட்டுகிறது. ஊரங்கின் விளைவாக, எந்த பயணமும் சாத்தியமில்லாமல், சுற்றுலாத்துறை “மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று அரசின் 2020 ஏப்ரல் 10 செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் கோவிட்19 பரவலால் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் கடும் வேலையிழப்பு ஏற்படக்கூடும் என்று அறிக்கைகளும், நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். கோவிட் 19 காரணமாக, "இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில், சுமார் 3.8 கோடிக்கும் அதிகமான வேலையிழப்பை சந்தித்து வருகிறது; இது மொத்த தொழிலாளர்களில் 70% ஆகும்" என்று நிதி சேவைகள் மற்றும் வணிக ஆலோசனை நிறுவனமான கே.பி.எம்.ஜி-யின் ஏப்ரல் 1, 2020 அறிக்கை கூறியது. இந்தியாவின் பயண மற்றும் சுற்றுலாத்துறையில் 90 லட்சம் வேலைகள் - இது, கோவாவின் மக்கள்தொகையில் ஆறு மடங்கு - ஆபத்தில் உள்ளதாக, தொழில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவம் உலகளாவிய மன்றமான உலக பயண மற்றும் சுற்றுலா கவுன்சில் (WTTC) தெரிவிக்கிறது.
கோவிட் 19 நெருக்கடி அதிகரிக்கும் போது இந்த போக்கு தொடர்ந்தால், அது தேசிய வேலைவாய்ப்புக்கு ஒரு பின்னடைவாக இருக்கும். இத்துறை 12.75% வேலைவாய்ப்பை, அதாவது 5.56% நேரடி மற்றும் 7.19% மறைமுக வேலைவாய்ப்பை கொண்டுள்ளது. 2018-19ம் ஆண்டில் சுற்றுலாத்துறையில் 8.7 கோடிக்கும் அதிகமானோர் பணியாற்றியதாக, சுற்றுலா அமைச்சகத்தின் 2019-20 ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
பயண மற்றும் சுற்றுலா நிறுவன அதிகாரிகள் பிப்ரவரி 2020 முதல், ரத்து செய்யப்பட்ட முன்பதிவுகளை காட்டி நமக்கு மோசமான கதையை சொல்கிறார்கள்; இது 2020 மார்ச் முதல் பிற்பகுதி வரை “முழுமையான முடக்குதலுக்கு” வழிவகுத்துள்ளது. "நெருக்கடி அதன் நரம்பு மையங்களை - விமான நிறுவனங்கள் மற்றும் ரயில்வேயைத் தாக்கியுள்ளதால் தொழில் நிறுத்தப்பட்டுள்ளது" என்று டச்சு கார்ப்பரேட் டிராவல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவான மும்பையைச் சேர்ந்த பி.சி.டி டிராவல் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜய் பாலி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "அடுத்த 45 நாட்களில், இத்துறை மீளுமா என்பது எங்களுக்கு தெரியாது" என்றார் அவர்.
"கொரோனா, சுற்றுலாத்துறையை தாக்கும் மிக மோசமான நெருக்கடிகளில் ஒன்றாகும்; மேலும் இது, இங்கு வருகை தருவோர் மற்றும் வெளியே செல்லும் சுற்றுலாவாசிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா, ஓய்வெடுப்போர், கப்பல், சாகச, கார்ப்பரேட் கூட்டங்கள், மாநாடு மற்றும் கண்காட்சிகள், ஊக்கப்பயணங்கள் மற்றும் மாநாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக, கார்ப்பரேட் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற மும்பையை சேர்ந்த இக்கோமி டிராவல் சர்வீசஸ் அமைப்பின் வணிகத்தலைவர் உன்மேஷ் வைத்யா ஒப்புக் கொண்டார்.
பாலி, வேலை நிலைமை குறித்து விவரித்தார். சில ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் (ரத்து செய்தல் போன்ற பணிகளை கையாள); மற்றவர்கள் தங்களுக்கு தரப்பட்ட விடுப்பை எடுக்க அறிவுறுத்தப்பட்டார்கள். விடுப்பு இல்லாதவர்கள் ஊதியம் இல்லாமல் விடுப்பில் செல்லும்படி கேட்கப்பட்டனர். மூத்த அனுபவ ஊழியர்கள், 30-40% ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுதப்பட்டதாக, அவர் கூறினார். சில பயண நிறுவனங்களில், ப்ளூ காலர் பணியாளர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வந்தாலும், “ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மட்டுமே ஏப்ரல் மாத இறுதியில் உண்மையான பணிநீக்கம் நடக்கும்” என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 12, 2020 நிலவரப்படி, குறைந்தது ஆறு மாநிலங்கள் --ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா-- ஆகியன, 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்தன.
இதற்கிடையில், தற்போதைய ஊரடங்கு, 2019 ஆகஸ்டில் காஷ்மீருக்கு விதிக்கப்பட்ட தடைகளை மேலும் விரிவுபடுத்துகிறது; இது சுற்றுலா மற்றும் கைவினைத் துறையில் பணியாற்றும் 1,44,500 காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்ததாக, 2020 ஜனவரி 28 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
இந்தியாவின் மிகப்பெரிய பயண நிறுவனங்கள் ஒன்றில் பணி புரியும் 22 வருட அனுபவமுள்ள ரவிக்குமார் (வேண்டுகோளின்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 2020 மார்ச் மாதத்தில் 15 நாட்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். கோவிட்19 பாதிப்பால் பிப்ரவரி இறுதியில் தொடங்கி, 2020 ஜூன் 30 வரை பயணங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம், அவரது நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போதைய தருணம் துரதிர்ஷ்டவசமானது: "இது பயண மற்றும் விமான நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய சீசன் ஆகும் " என்று இந்தியா ஸ்பெண்டிடம் குமார் தெரிவித்தார். "பிப்ரவரி-மே மாதங்களில், வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள், ஓய்வு மற்றும் விடுமுறைப் பயணம், கார்ப்பரேட் பயணம், மத மற்றும் புனித யாத்திரை பயணம் மற்றும் வயதானவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு செல்வது போன்றவற்றால் நிறைய முன்பதிவு செய்யப்படுகிறது" என்று அவர் கூறினார்.
பயணம் மற்றும் சுற்றுலாத்துறை பணியில் இருந்து வெளியேற்றப்படும் பல ஆயிரக்கணக்கான பகுதிநேர பணியாளர்களுக்கு, எதிர்கால நிலைமை இருண்டு போயுள்ளது. "எங்கள் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன," என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் தொழில்முறை சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வரும் நைனா தாக்கர் கூறினார். பயண முகவர் என்பவர், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுடன் ஒரு ஒதுக்கீட்டு அடிப்படையில் பணிபுரியும் 100 க்கும் மேற்பட்ட வழிகாட்டிகளின் குழுவின் ஒரு பகுதி ஆவார். உலகளாவிய மந்தநிலை காரணமாக பணமின்றி, பயண முகவர் நிறுவனங்கள் தங்கள் தொகையையை நிறுத்தியதால், சிலருக்கு 2019 நவம்பருக்குப் பின்னர் ஊதியம் வழங்கப்படவில்லை.
தொற்றுநோய் பரவும் முன்பே போராடிக் கொண்டிருந்த சுற்றுலாத்துறைக்கு தற்போது மேலும் மோசமாக அது தொடர்கிறது என்று பொருளாதார ஆய்வு 2019-20 கூறுகிறது. "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [ஜிடிபி] மற்றும் அந்நிய செலாவணி வருவாய்க்கு பங்களிக்கும் வளர்ச்சியின் முக்கிய இயந்திரம் இது" என்று ஆய்வு குறிப்பிட்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்கு 2016-17ல் 5.06% ஆக இருந்தது; இது 2014-15 இல் 5.81% ஆக இருந்தது என்று சுற்றுலா அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
மீட்பதற்கான தெளிவான காலவரம்பு இல்லை
ஒவ்வொரு தொழிற்துறையும் அதன் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கிறது; இது, கோவிட்19ன் உலகளாவிய பரவால் நிகழ்கிறது; இதுவரை 185 நாடுகளில் இந்த தொற்று பரவி உள்ளது; அதன் மீதான அச்சங்கள் கவனத்துக்குரியவை. தொழில்துறையில் உள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, தகவல் தொழில்நுட்பம், வங்கி / நிதி சேவைகள் மற்றும் மருந்து துறைகள், வைரஸின் தாக்கத்தை உணர்ந்தன என்பதில் சந்தேகமில்லை; ஆனால் அவை மக்களின் உடல்சார்ந்த இயக்கம் மற்றும் பயண திட்டத்துடன் அவர்களுக்கு தரக்கூடிய ஆறுதலை பொறுத்ததல்ல; இவை இரண்டும் தற்போதைய நெருக்கடியில் உயிரிழப்பு ஏற்படுத்தும். ஒரு தடுப்பூசிக்கு இது கட்டுப்படாது என்பது ஆச்சரியத்திற்குரியது; ஏனென்றால் அத்தியாவசியமற்ற பயணங்களை மீண்டும் மேற்கொள்ளும் அளவுக்கு மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
வைத்யா ஒப்பீட்டளவில் நம்பிக்கை கொண்டவர். "இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் உணவகங்கள், பார்கள், நிகழ்வு இடங்கள், கேளிக்கை பூங்காக்கள், ஹோட்டல்கள், விமானத்துறை ஆகியன மீண்டு வந்து எங்களுக்கு ஒரு திருப்புமுனையை தரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்," என்று அவர் கூறினார்.
"நிலைமை இருண்டு போயிருப்பதாக தெரிகிறது என்ற குமார், ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மக்கள் பயணிக்க தயாராக இருக்க மாட்டார்கள். உள்நாட்டு பயணத்தை மீண்டும் தொடங்கலாம்; ஆனால் மக்கள் விரைவில் வெளிநாட்டு பயணம் செய்வதை நினைக்க மாட்டார்கள்” என்றார். முகவர்கள் தற்போது பயணிகளுக்கும் விமான நிறுவனங்களுக்கும் இடையில் சிக்கியுள்ளனர்; முன்னவர்கள், தங்களது முழு பணத்தைத் திரும்பப் பெற விரும்பும் நிலையில் பிந்தையவர்களோ, பயண தேதிகளை மாற்றிக் கொண்டு இலவசமாக பயணிக்கும்படி பயணிகளை கேட்டு கொள்கின்றனர்; ஆனால் கட்டண வேறுபாடுகள் காரணமாக கூடுதல் கட்டணங்களுடன் பயணிக்க வேண்டும். “மக்கள் தங்கள் பணத்தை இவ்வளவு காலமாக சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. வைரஸின் பரவலின் அளவு பலரும் தங்கள் பயணத் திட்டங்களை அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது,” என்று அவர் கூறினார்.
ஜூன் - ஜூலை மாதங்களில் இடைக்கால மீட்பு தொடங்கும் என்று பாலி நம்பிக்கை தெரிவித்தார். "மே மாத நடுப்பகுதியில் கோவிட்டில் இருந்து இந்தியா குணமடைந்து, அதன் மக்கள் நாட்டிற்குள் பயணிக்கத் தொடங்குவார்கள் என்று கருதலாம்," என்ற அவர், "ஜனவரி 2021 க்குள் விஷயங்கள் இயல்பு நிலைக்கு வரும்" என்றார். ஆனால் இந்த முன்கணிப்பு கூட நிச்சயமற்ற தன்மையைக் கொண்டுள்ளது: "சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கினால், பயணம் செய்யும் முதல் நபர்கள் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களாகவே இருப்பர். பொழுதுபோக்கு ஓய்வுத்துறையானது அதன் மீட்பைத் தொடங்க, மிகவும் மெதுவாகவே செயல்படும்” என்றார்.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள், கொரோனா தொற்றுநோய் தாக்கத்தால் குறைந்தது ஜூன் மாதம் வரை கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று டாடா டிரஸ்ட்களின் சுற்றுலாத்தலைவர் மிருதுளா டாங்கிராலா தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொகுப்புகள் தவிர, ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்தியாவில் சுற்றுலாவுக்கு எப்போதும் சரிந்திருக்கும். அக்டோபர் மாதத்திற்கு பிறகு புத்துயிர் பெறும் விகிதத்தை இப்போது கணிக்க முடியாது, ஏனெனில் நெருக்கடியின் முழு தாக்கமும் இன்னும் தெரியவில்லை,” என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
இருப்பினும், ஏற்கனவே இழந்த வருமானத்தை ஈடுசெய்ய வழி இல்லை என்று ஜஸ்ட் ஜாப்ஸ் நெட்வொர்க்கின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சபீனா திவான் சுட்டிக்காட்டினார். கேரளா, இமாச்சலப் பிரதேசம் போன்ற சுற்றுலாவின் வருமானத்தை பெரிதும் நம்பியுள்ள மாநிலங்கள் அதன் விளைவுகளை அதிகமாக உணரும் என்று அவர் கூறினார்.
இருண்டுள்ள சர்வதேச தோற்றம்
சர்வதேச அளவில், நிலைமை மிகவும் இருண்டு கிடக்கிறது. பல நாடுகள், நகரங்கள் மற்றும் அதன் எல்லைகளுக்குள் இயங்குவதை தடை செய்துள்ளன, மேலும் பயணிகள் நிதி தொடர்பான காரணங்களுக்காகவும், சுகாதார கவலைகளுக்காகவும் பயணத் திட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
உலகளவில் 75 மில்லியன் பயண மற்றும் சுற்றுலா வேலைகள் ஆபத்தில் உள்ளன; அவற்றில் எட்டு பேரில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக, WTTC தெரிவித்துள்ளது. தொற்றுநோயால் 50 மில்லியன் உலகளாவிய வேலை இழப்பை முன்னரே கணித்திருந்த இந்த அமைப்பு, மார்ச் 25, 2020 அன்று வெளியிட்ட அறிக்கையில்: “வேலைகளுக்கான ஆபத்து இரண்டு வாரங்களுக்குள் 50% அதிகரிப்புக்கான இந்த சமீபத்திய திட்டம், ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் கவலையான போக்கைக் குறிக்கிறது; ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள் இழக்கப்படுகின்றன". தொற்றுநோய் மேலும் பரவுவதால் மதிப்பீடுகள் இன்னும் இருண்டதாக இருக்கும் என்று இந்த கருத்து தெரிவிக்கிறது.
2018 ஆம் ஆண்டு உற்பத்தித்துறை 4% வளர்ச்சியடைந்த நிலையில், WTTC கருத்தின்படி, அதற்கடுத்து சுற்றுலாத்துறை 3.9% என்று, இரண்டாவதாக வேகமாக வளரும் துறையாகும்.
தொற்றுநோய் காரணமாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 49 மில்லியன் பேர் வேலைகளை இழக்கக்கூடும். இதனால் பயண மற்றும் சுற்றுலா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 800 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என்று WTTC இன் மிக சமீபத்திய பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இந்த வேலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை (25.6 மில்லியன்) சீனாவில் உள்ளன, அங்கு தான் கோவிட் 19 தோன்றியது.
வெளிநாட்டினரின் சுற்றுலா வருகை சரிவும், ஓட்டல்களின் காலி அறைகளும்
2020 மார்ச் 25 முதல் நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கால் உள்நாட்டு விமானங்கள், ரயில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து இந்தியர்களும் வீட்டிலேயே இருக்குமாறு அரசு அறிவுறுத்தியது. 2020 மார்ச் மாதத்திற்கு முன்னர் அரசு ஏற்கனவே வெளிநாட்டு வருகையை தடை செய்தது; முதலில் சுற்றுலா விசாக்கள் மற்றும் விசா இல்லாத பயணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. கோவிட் 19 ஹாட்ஸ்பாட்களில் இருந்து வருவதை தடை செய்து, இறுதியாக மார்ச் 22, 2020 முதல், வாரத்திற்கு 700 என்ற அளவில் உள்ள அனைத்து சர்வதேச விமானங்களின் வருகைகளையும் அரசு ரத்து செய்தது.
அனைத்து விருந்தோம்பல் சேவைகளையும் நிறுத்தி வைக்குமாறு அரசு அழைப்பு விடுத்தது; இதில், ஏற்கனவே வந்து தங்கியுள்ள சுற்றுலா பயணிகளுக்கு இடமளிப்பவர்களுக்கும், ஊரடங்கால் சிக்கித்தவிக்கும் மக்களுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.
ஆக, இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, 2020 பிப்ரவரியில் (1.02 மில்லியன்), கடந்த 2020 ஜனவரி மாதத்தில் (1.12 மில்லியன்) இருந்ததைவிட 9% சரிவை கண்டது; இது, பிப்ரவரி 2019 உடன் ஒப்பிடும்போது 7% வீழ்ச்சி (1.09 மில்லியன்), மார்ச் 2020ல் சரிந்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் ஹோட்டல்களில் இருப்பவர்கள் எண்ணிக்கை, மார்ச் 2020ல் பல சந்தர்ப்பங்களில் 40%-க்கும் மேலாக சரிந்தன; புக்கிங் ரத்து செய்தல் என்பது எல்லா நேரத்திலும் உயர்ந்ததாக, சுயாதீன முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏவின் மார்ச் 23, 2020 அறிக்கை கூறியது.
பிப்ரவரி 2020ல் இந்தியாவின் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் 24%- என்ற எண்ணிக்கையை கொண்டிருந்தன. இந்த இரு நாடுகளும் கோவிட்19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன; அங்கு 6,00,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் (ஏப்ரல் 12, 2020ன்படி) உள்ளது என்று, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவு தெரிவிக்கிறது.
உள்நாட்டு சுற்றுலா வருகைகள் 2018ல் 1.8 பில்லியனாக இருந்தது; இது, 2017ம் ஆண்டைவிட 12% அதிகரிப்பு என்று சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் 2019 அறிக்கை தெரிவித்துள்ளது. ஊரடங்கிற்கு பிறகு இதுவும் நின்றுவிட்டது. 2018-19ம் ஆண்டில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) ஈர்த்த, காதல் சின்னமான தாஜ்மஹால், 2020 மார்ச் 17 ஆம் தேதி மூடப்பட்டது; இத்தகைய வியத்தகு மாற்றமே, சுற்றுலாத்துறையில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தை காட்டுவதாக உள்ளது. ஊரடங்கானது, மாநிலங்களில் உள்ள புண்ணிய தலங்கள் மற்றும் கோயில்களை மூடுவதற்கும், உள்ளூர் வணிகங்களையும், அவர்களை சார்ந்துள்ள வேலைவாய்ப்புகளையும் பாதிக்க வழிவகுத்தது.
தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பே, உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தை அனுபவித்து, சுற்றுலாத்துறை ஏற்கனவே சிக்கலில் இருந்தது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பலவீனமான வளர்ச்சியுடனும், அதன் விளைவாக சுற்றுலாவின் அந்நிய செலாவணி வருவாயிலும் 2019-20ல் வளர்ச்சி குறைந்தது என்று, பொருளாதார கணக்கெடுப்பு 2019-20s தெரிவித்தது.
பல காலாண்டுகளுக்கு வருவாய் இழப்பு; அமைப்புசாரா தொழிலாளர்கள் மீது பெரியளவில் தாக்கம்
பயண மற்றும் சுற்றுலாத்துறையில் வருவாய் இழப்புகள் பல காலாண்டுகளுக்கு நீளும் என்று ஐ.சி.ஆர்.ஏ.வின் துணைத்தலைவர் பவேத்ரா பொன்னையா மதிப்பிட்டுள்ளார்: "பல ஹோட்டல்கள் ஏற்கனவே அனைத்து ஒப்பந்த ஊழியர்களை நீக்கிவிட்டன. ஊதியக்குறைப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நிரந்தர தொழிலாளர்கள் விஷயத்தில் நீக்கம் குறித்து நாங்கள் இதுவரை கேட்கவில்லை. இத்தகைய சூழல் கீழ் நோக்கி நீடித்தால், அது நீக்கங்களுக்கு வழிவகுக்கும்” என்றார்.
சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அமைப்புசாரா துறையில் மறைமுக தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும் என்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழ பொருளாதார பேராசிரியரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் ஆய்வு மையத்தின் தலைவருமான சந்தோஷ் மெஹ்ரோத்ரா கூறினார். "சாதாரண தொழிலாளர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பணிபுரிகின்றனர்; ஆனால் அது நகர்ப்புறங்களில் தான் பொருளாதாரம் ஸ்தம்பித்து நிற்கிறது," என்று அவர் கூறினார். நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அமைப்புசாரா துறை வேலைகளும் பாதிக்கப்படும் மற்றும் மெதுவாக இதன் விளைவு கிராமப்புறங்களில் உணரப்படும்.
இந்தியாவில் உள்ள உணவகத்தொழிலின் ஆண்டு வருமானம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் (53 பில்லியன் டாலர் அல்லது 2020-21 ஆண்டிற்கான மத்திய சுகாதாரத்துறை பட்ஜெட் திட்டத்தைவிட ஆறு மடங்கு), ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு (இது, சிக்கிமின் மக்கள் தொகை 11 மடங்கு ) நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது என்று, இந்திய தேசிய உணவக சங்கத்தின் (NRAI) தலைவர் அனுராக் கத்ரியார் தெரிவித்தார். "இத்துறையானது அதன் பிழைப்புக்காக கடுமையாக போராடுகிறது," என்று அவர் கூறினார். "நாங்கள் உடனடி காலப்பகுதியான இப்போது கிட்டத்தட்ட பூஜ்ஜியம் வருவாயை பார்த்துக் கொண்டிருக்கிறோம்; அதன்பிறகு வரும் மாதங்களில் குறைந்தபட்சம் 50% வீழ்ச்சியை சந்திப்போம்" என்றார். இத்துறையில் பணியாற்றும் மில்லியன் கணக்கானவர்களின் தலைவிதி தான் மிகப்பெரிய கவலை என்று அவர் கூறினார்.
"ஊரடங்கு நீக்கப்பட்டதும் ஹோட்டல் மற்றும் உணவகத் தொழிலில் கிட்டத்தட்ட 15% வேலைகள் பாதிக்கப்படும்; ஏனெனில் தொழில்துறையின் தேவை உடனடியாக அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது" என்று இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கத்தின் (ஆஹார்) பொதுச்செயலாளர் சுகேஷ் ஷெட்டி மதிப்பிட்டுள்ளார். 35,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிராவில் உள்ள உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளின் மிகப்பெரிய சங்கம் ஆஹார். சுமார் இரண்டு மில்லியன் மக்கள், பல அமைப்புசாரா தொழிலாளர்கள் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளில் மாநிலம் முழுவதும் வேலை செய்கிறார்கள் என்று ஷெட்டி கூறுகிறார். உணவக உரிமையாளர்களை பொறுத்தவரை, சுகாதாரமற்ற தன்மை மற்றும் தொற்றுநோயை பற்றிய அச்சங்கள் வேரூன்றியிருக்கும் போது, ஊரடங்கிற்கு பிறகும் கூட, வெளியே சாப்பிடும் எண்ணத்துடனும், வசதியுடனும் மக்கள் இருப்பார்களா என்பது நிச்சயமற்ற ஒன்றாகும்.
"என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் பார்த்ததில்லை" என்று ஷெட்டி, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பாதி பேர் தொற்றுநோய்க்கு பயந்து மும்பையை விட்டு வெளியேறியதாக அவர் விளக்கினார். வணிகங்கள் மற்றும் அவற்றின் விநியோகச் சங்கிலிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த சரியான மதிப்பீட்டிற்கு பிறகே இழப்புகள் தெளிவாக தெரியும் என்றார் அவர். "வருமானம் அல்லது அரசு உதவி இல்லாமல் ஒரு பெரிய தொழிலாளர் தொகுப்பின் சுமையை உரிமையாளர்கள் சுமப்பது கடினமாக இருக்கும்," என்று அவர் கூறினார். அரசின் ஆதரவு இல்லாமல் போனால், பல நிறுவனங்கள் மூடப்படும் என்று அவர் எச்சரித்தார்.
வங்கிகளிடம் இருந்து வட்டி இல்லாத கடன்கள், அனைத்து உரிமக் கட்டணங்கள் தள்ளுபடி செய்தல், மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குதல் மற்றும் ஒரு வருட காலத்திற்கு வரி விலக்கு என்பது போன்ற வேலைகளை பராமரிப்பதற்கும் தொழில்துறையை ஆதரிப்பதற்கும், ஹோட்டல் மற்றும் உணவகத்தொழில்கள், மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் இருந்து நிவாரண உதவிகளை நாடுகின்றன. பொருட்கள் மற்றும் சேவை வரி மீதான உள்ளீட்டு வரிக்கடனை மீட்டெடுப்பதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் - இது வணிகத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கியதில் செலுத்தப்பட்ட கடனைக் கோருகிறது - இது நிலையான இயக்க செலவுகளைக் குறைக்க உதவும்.
"எங்கள் சில துயரங்களை தணிக்கும் நோக்கில் அரசும், ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் எடுத்த சில நடவடிக்கைகளுக்கு என்.ஆர்.ஏ.ஐ நன்றி கூறுகிறது" என்று கத்ரியார் கூறினார். "ஜிஎஸ்டி தொகை செலுத்துவதை ஒத்திவைத்தல், பிஎஃப் பங்களிப்புக்கு நீட்டிக்கப்பட்ட சலுகை மற்றும் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்குகளில் இருந்து ஓரளவு எடுத்துக் கொள்ள அனுமதி, ஈஎம்ஐக்கள் மீதான சலுகை, வட்டி விகிதங்களை தளர்த்துவது என்பது உள்பட அனைத்தும் சரியான திசையில் செல்லும் நடவடிக்கைகள்" என்று அவர் மேலும் கூறினார்.
விமானத்துறையில் தொடரும் சுழல்
இணைக்கப்பட்ட துறையில், விமான போக்குவரத்து, 2020-21 முதல் காலாண்டில் 3.3 - 3.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 27,000 கோடி) இழப்பை சந்திக்கக்கூடும் என்று ஆலோசனை கூறும் அமைப்பான இந்தியாவின் ஆசிய பசிபிக் ஏவியேஷன் சென்டர் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீடுகள் 2020 ஜூன் 30 வரை அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் நீடிக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தவை. "மே மற்றும் ஜூன் மாதங்களில் ஓரளவு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், நிதி முடிவுகள் கணிசமாக மாறாது," என்று அது கூறியது.
"விமானத்துறை எந்தவொரு விஷயத்திலுமே போராடி வருகிறது" என்று மெஹ்ரோத்ரா கூறினார். "பல தசாப்தங்களாக நாங்கள் ஏர் இந்தியாவை விற்க முயற்சிக்கிறோம்; ஆனால் இப்போது சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன, மீண்டும் பல மாதங்களுக்கு அதை விற்க வாய்ப்பில்லை” என்றார் அவர்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து சந்தையில் 400,000-க்கும் அதிகமானோர் பணியாற்றுவதாகவும், மேலும் 940,000 பேர் தொடர்புடைய விநியோகச் சங்கிலிகளில் பணியாற்றுவதாகவும், ஜஸ்ட் ஜாப்ஸ் நெட்வொர்க்கை சேர்ந்த திவான் மதிப்பிட்டுள்ளார். தொழில்துறையில் பயணக் கட்டுப்பாடுகளின் தாக்கம் மற்றும் பயணத்தில் அச்சம் மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கத்தைத் தவிர, விமான மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு புதிய சுகாதார மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களுடன் இசைந்து போவதற்கு ஆகும் செலவுகள் குறித்தும் அவர் குறிப்பிடுகிறார்.
கடன் மதிப்பீட்டு நிறுவனமான கேர் ரேட்டிங்ஸ், மார்ச் 25, 2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் விமானங்களின் பயணிகளின் வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்து 2020-21 ஆம் ஆண்டில் 20-25% எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்யும். இத்துறை ஏற்கனவே சிக்கலில் இருந்தது. உள்நாட்டு விமானங்களுக்கான பயணிகள் போக்குவரத்து 2019-20 (ஏப்ரல்-பிப்ரவரி) காலத்தில் 3.7% அதிகரித்துள்ளது; முந்தைய நிதியாண்டில் இதே காலப்பகுதியில் அடையப்பட்ட 15.1% வளர்ச்சி விகிதத்தில் இருந்து “ஒரு தனித்துவமான வீழ்ச்சி” பதிவு செய்யப்பட்டுள்ளது. "நிதியாண்டு தொடங்கியதில் இருந்து பொருளாதாரத்தில் ஏற்பட்ட பொதுவான மந்தநிலை உள்நாட்டு விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமான பயணிகள் வளர்ச்சியில் கூர்மையான மிதமான நிலைக்கு வழிவகுத்தது," என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
முன்னோக்கி செல்லும் வழி
உள்நாட்டு சுற்றுலாவை சரிசெய்ய வேண்டிய அவசியம், ஆற்றல் மற்றும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான முன்னோக்கி செல்லும் பாதையாக சாத்தியமான பயணிகளின் கற்பனையை படம் பிடிப்பதில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். "சீனா மிகப்பெரிய உள்ளே வரக்கூடிய சந்தை. அந்த சந்தை பாதிக்கப்படப் போகிறது," என்று, ஃபிக்கி (FICCI) சுற்றுலா குழுவின் இணைத்தலைவரும் நிர்வாக இயக்குநருமான தீபக் தேவா மற்றும் டிராவல் கார்ப்பரேஷன் இந்தியா மற்றும் டிஸ்டன்ஸ் பிரண்டைரை சேர்ந்த சீதா ஆகியோர், எப்ரல் 6, 2020 அன்று நடைபெற்ற ‘இந்திய சுற்றுலா மற்றும் சுற்றுலாத் தொழில்: தாக்கம், வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான பாதை வரைபடம்’ என்ற வெப் செமினாரில் கூறினார். "உற்பத்தித் துறையை போல் அல்லாமல் புத்துயிர் பெறும் போது வணிகத்தை முயற்சிக்கவும் சரி செய்யவும் இந்தியாவுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும்" என்று அவர் கூறினார்.
"உள்நாட்டு சந்தையின் வலிமைக்கு அதன் சொந்த நுகர்வுக்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும், அந்த இயந்திரத்தை நாம் பெற்றால், எதிர்மறையான வழியில் நாம் குறைவாகவே தொடுவோம்," என்று, சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ரூபீந்தர் பிரார், வெபினரின் கூறினார். "அடுத்த சில வாரங்களில், இந்தியாவில் நோயாளிகள் --மேற்கு ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் பாதித்ததை போல்-- அதிகரிக்கவில்லை என்றால் உள்நாட்டு சந்தையில் வாய்ப்புள்ளது; அதை நாம் மூலதனமாக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த கொள்கை ஆய்வாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.