கோவிட் நெருக்கடி: ‘அதிக’ கட்டணம் பெற்றும் நஷ்டத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள்
புதுடெல்லி: மேக்ஸ் ஹெல்த்கேர் ஜூன் மாதத்தில் பதிவிட்ட ரெட் கார்ட் ட்வீட் ஒன்றில், டெல்லி மருத்துவமனைகளில் பல்வேறு கோவிட்-19 சிகிச்சையின் குறைந்தபட்ச செலவு குறிப்பிடப்பட்டிருந்தது. வென்டிலேட்டருடன் ஐ.சி.யு-க்கான செலவு ரூ .7,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. எட்டு நாட்களுக்குப் பிறகு, தேசிய தலைநகரில் உள்ள தனியார் மருத்துவமனைகள் வென்டிலேட்டருடன் ஐ.சி.யு. சிகிச்சைக்கு ரூ.18,000 க்கு மேல் வசூலிக்க முடியாது என்று டெல்லி அரசு கூறியது - இது, மேக்ஸ் மருத்துவமனையின் வீத அட்டை விலையை விட ரூ .54,500 குறைவு. அதே நேரம், அரசு மருத்துவமனையில் கோவிட் 19 சிகிச்சைகள் பெரும்பாலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
தற்போதைய கோவிட் தொற்றுநோயின் போது, முற்றிலும் இந்த வேறுபாடு தனியார் மற்றும் அரசு சுகாதாரச்செலவுகள் குறித்த விவாதத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது: தனியார் மருத்துவமனைகள், மிகைப்படுத்தப்பட்ட பில்களை கொண்டிருந்தபோதும், நோயாளிகளுக்கு மிகச் சிறந்த, நியாயமான விலையை வசூலிப்பதாகக் கூறுவது எப்படி? இந்த அதிகச்செலவை அரசு மருத்துவமனைகள் எவ்வாறு கிரகிக்கின்றன?
இந்தியா ஸ்பெண்ட், தனது ‘கோவிட் சிகிச்சைக்கான விலை’ என்ற தொடரில், தொற்றுநோயால் ஏற்படும் சுகாதாரச் செலவினங்களின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து வந்துள்ளது. இத்தொடரின் எங்களது ஏழாவது கட்டுரையில், தொற்றுநோய்களின் போது இந்தியாவில் தனியார் சுகாதாரத்துக்கான அதிக செலவுகளுக்கான காரணங்களை புரிந்து கொள்ள தனியார் சுகாதாரத் துறையைச் சேர்ந்த வணிகத் தலைவர்களுடன், தனியார் மருத்துவமனைகளுக்கான ஆலோசனை ஏஜென்சிகளை நடத்தும் பொது சுகாதார நபர்கள், ஆலோசகர்களுடன் நாங்கள் பேசினோம்.
இருப்புநிலைகளை குறிவிலக்கம் செய்தல்
இந்திய நிறுவனங்கள் 2020-21ம் நிதியாண்டின் “கோவிட் காலாண்டு” எனப்பட்ட முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) நிதி முடிவுகளை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளன. இக்காலகட்டத்தில், மார்ச் மாதத்தில் தொடங்கிய நாடு தழுவிய ஊரடங்கால், அனைத்து வணிகங்களும் பாதிக்கப்பட்டு ஜூன் 1ம் தேதிக்கு பிறகு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின.
இந்தியாவின் முன்னணி பட்டியலிடப்பட்ட தனியார் மருத்துவமனைகளான நாராயண ஹிருதாலயா மற்றும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் போன்றவற்றின் இருப்புநிலைகளை, அவற்றின் வருவாய் மற்றும் நிகர லாபத்தில் கோவிட்-19ன் தாக்கத்தை புரிந்து கொள்வதற்காக, இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்தது. 2019-20ம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, பட்டியலிடப்பட்ட பல தனியார் மருத்துவமனைகள், கோவிட்19 காலாண்டில் பாதிப்பை சந்தித்துள்ளது, தெரியவந்துள்ளது.
உதாரணத்திற்கு, ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் செயல்பாடுகளால் மொத்த வருமானம் ரூ.532.4 கோடி அல்லது 46.8% (2019 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ரூ.1,138.3 கோடி என்பதில் இருந்து 2020 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ரூ.606 கோடியாக குறைந்துள்ளது). இது 2019 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ரூ .67.8 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடும்போது, கோவிட் காலாண்டில் ரூ. 178.9 கோடி நிகர இழப்பை அது பதிவு செய்துள்ளது.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையைவிட வருவாய் குறைவாக இருக்கும் நாராயண ஹ்ருதயாலயாவின் மொத்த வருமானம் ரூ. 383.9 கோடியாக (ரூ. 777.4 கோடியில் இருந்து ரூ .393.5 கோடியாக) குறைந்துள்ளது. இதன் விளைவாக, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.30.3 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடும்போது, கோவிட் காலாண்டில் ரூ .119.7 கோடி நிகர இழப்பை அவர்கள் கண்டுள்ளனர்.
கோவை மெடிக்கல் மற்றும் ஆர்ட்டெமிஸ் மெடிக்கல் சர்வீசஸ் போன்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளிடமும் இந்த போக்கு தொடர்கிறது. கோவை மெடிக்கல் மருத்துவமனையின் மொத்த வருமானம், ரூ .165.4 கோடியில் இருந்து ரூ. 129 கோடியாக குறைந்துள்ளது, ஆர்ட்டெமிஸ் மெடிக்கல் சர்வீசஸ் ஆண்டுக்கு ரூ .73 கோடி வருவாய் குறைந்து அதாவது ரூ .135.7 கோடியில் இருந்து ரூ.62.7 கோடியாக சரிந்துள்ளது.
இதற்கிடையில், 200 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை கொண்ட தெற்கு மும்பையில் உள்ள தனியாரான ப்ரீச் கேண்டி மருத்துவமனை, மகாராஷ்டிரா அரசு ஆகஸ்ட் 31- க்கு பிறகு நோயாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் விஷயத்தை ஒழுங்குபடுத்தினால் மருத்துவமனையை மூட வேண்டியிருக்கும் என்று, ஜூலை 31ல் தெரிவித்தது.
ஒரு பெருநிறுவன விளக்கம்
இந்தியாவில் தனியார் சுகாதாரத்துறை ஒரே மாதிரியாக இல்லை. பெரிய நகரங்களில் உள்ள பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளைத் தவிர, தனியார் சுகாதார சேவையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளினிக்குகள், நர்சிங் ஹோம்ஸ் மற்றும் ஒற்றை கட்டிடத்தில் செயல்படுபவை உள்ளன.
கார்ப்பரேட் ஹெல்த்கேர் துறையைச் சேர்ந்தவர்களுடன் இந்தியா ஸ்பெண்ட் நடத்திய நேர்காணல்களில், சில பொதுவான புகார்கள் வந்தன; அதாவது அதிக கட்டணம் என்ற புகாருக்கு பிரதிநிதிகள் விளக்கம் தந்துள்ளனர்: கோவிட்-19 ஊரடங்கலால் மக்கள் தங்களது அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க நேரிட்டது; டயாலிசிஸ், கீமோதெரபி, இரத்தமாற்றம் போன்ற வழக்கமான சேவைகள் தேவைப்படும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கமாக நிலையான வருவாயையும், இது வறண்டுவிடச் செய்துவிட்டது. சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டதால், வெளிநாட்டு நோயாளிகளும் அறுவை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதை நிறுத்தினர்.
வளாகத்தை சுத்தப்படுத்தவும், சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்குவதற்குமான கூடுதல் தேவை, அவர்களின் செலவுகளில் கூடுதலால்க சேர்ந்தது. ஊழியர்களைத் தொடர்ந்து தனிமைப்படுத்த வேண்டி இருந்ததால், சுகாதார ஊழியர்கள் குறைவாகவே இருந்தனர், மேலும் சில மருத்துவமனைகள் பணியாளர்களுக்கு போனஸ் தொகை கொடுக்க வேண்டியிருந்தது. இறுதியாக, விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும், மருத்துவமனைகளில் கோவிட்-19 தொற்றுக்காக படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்ற அரசின் கட்டாய முடிவு, தனியார் மருத்துவமனைகளை அடிமட்டம் வரை பாதிக்கிறது.
இரண்டு மாதங்கள் இந்தியாவின் தீவிர ஊரடங்கால், மேக்ஸ் ஹெல்த்கேர் கடும் நிதிச்சூழலை எதிர்கொண்டதாக, மேக்ஸ் ஹெல்த்கேர் தலைவர் அபய் சோய், ஜூலை மாதம் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஒருபுறம் லாபம் ஈட்டியதாக நாங்கள் எவ்வாறு குற்றம் சாட்டப்படலாம், மறுபுறம் இழப்புகளை நாங்கள் எவ்வாறு காட்டுவது? இந்த இழப்புகள் விரைவில் அனைத்து மருத்துவமனைகளின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளிலும் தெரிய வரும்” என்றார்.
மருத்துவமனை நிர்வாகிகளின் பொதுவான விளக்கம் என்னவென்றால், அவர்களுக்கு எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை, மேலும் அவர்கள் தங்களது சொந்த வருவாயில் லாபத்தையும் ஈட்ட வேண்டும். "தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், அரசு பொது மருத்துவமனைகள் வரிப்பணம் மூலம் பட்ஜெட் நிதியில் கோடி ரூபாய் பெறுகின்றன. எங்கள் செலவுகளை ஈடுசெய்ய எங்களுக்கும் அவ்வகையான பணம் கிடைத்திருந்தால், நாங்கள் குறைந்த கட்டணத்தை வசூலிக்க முடியும், ” என்று, பெயர் வெளியிட விரும்பாத கார்ப்பரேட் மருத்துவமனையின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். "தனியார் மருத்துவமனை தரும் பில்களால் பொதுமக்கள் வருத்தப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அதை கவனிப்பு நடக்கும் நேரத்திலேயே செலுத்துகிறார்கள், அதே நேரம் பொது மருத்துவமனைகளில் அந்த கஷ்டத்தை அவர்கள் உணரவில்லை. ஏனென்றால், நாம் அனைவரும் காலப்போக்கில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி பணத்தை செலுத்துகிறோம்” என்றார்.
சுகாதார அமைச்சத்திற்கான இந்தியாவின் மத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ .67,111 கோடி (ஆராய்ச்சி உட்பட). இதுதவிர சுகாதாரத்துக்கான மாநில அரசின் வரவு செலவுத் திட்டங்கள் தனி. பல மாநில அரசுகளும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவற்றை கொண்டுள்ளன, அவை தனியார் துறையில் சிகிச்சை பெற முடியாதவர்களுக்கு சிகிச்சைக்கு தொகையை செலுத்துகின்றன.
கோவிட்19 சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் அரசின் மருத்துவ வழிகாட்டுதல்கள் பற்றிய புரிதல் மெதுவாக உருவாகியுள்ளதால், தனியார் துறையிலும் செலவுகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது என்று மணிப்பால் மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரி திலீப் ஜோஸ் கூறினார். அரசு இறுதியாக கட்டண ஒழுங்குமுறையை கொண்டு வந்தபோது, அது "மாறக்கூடியது, விவேகமான வழிமுறை இல்லாதது மற்றும் விலையில் என்ன சேர்க்கப்பட வேண்டும் மற்றும் விலக்கப்பட வேண்டும் என்பதில் ஒற்றுமை இல்லாமல் இருந்தது" என்று அவர் கூறினார். (மாநிலங்களில் உள்ள தன்னிச்சையான கட்டண தொகுப்பு குறித்த இந்தியா ஸ்பெண்டின் கட்டுரையை இங்கே படிக்கலாம்). "சுகாதாரச் சேவையை வழங்குவதற்கான செலவு தனியார் மற்றும் பொதுத்துறைகளில் வேறுபட்டது, இதனால் விலை வேறுபட்டது" என்று சோயின் வாதத்தை ஜோஸ் எதிரொலித்தார்.
கோவிட் 19 சிகிச்சை மூலம் ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் வருவாய் என்பது, இதுவரை அதன் வருவாயில் 8% ஆகும் என்று குழுவின் அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். கோவிட்டுக்கு முந்தைய காலங்களில் அதன் படுக்கை வசதி விகிதம் 65-70% ஆக இருந்தது, ஆனால் ஜூலை மாதத்தில் 51% ஆக சரிந்தது.
நாராயண ஹ்ருதயலயா மருத்துவமனை, முதலீட்டாளர்களுக்கு அளித்த 2019-20 ஆண்டுக்கான அறிக்கையில், மற்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தனது சகாக்கள் கூறிய அதே வாதங்களை, அதன் தலைவர் தேவி ஷெட்டி முன்வைத்தார். "உங்கள் நிறுவனம் ஒவ்வொரு துறையிலும் பல சுற்று செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார். அத்துடன், நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை தாமதப்படுத்தியதால் அல்லது அதற்கு பணம் செலுத்த கையில் பணம் இல்லாததால் அவை அனைத்தும் அவசியமாக இருந்தாக குறிப்பிட்டார்.
இருப்பினும், ஃபோர்டிஸ் மற்றும் மேக்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே விஷயங்களை பார்க்கத் தொடங்கிவிட்டன. ஆகஸ்ட் மாதத்தில் நோயாளியின் சுமை மற்றும் வருகையில் அதிகரிப்பு இருப்பதை, ஃபோர்டிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆகஸ்ட் மாதத்தில் மேக்ஸ் ஹெல்த்கேரின் “பணப்புழக்கம் மற்றும் இருப்புநிலை கோவிட்-19 காரணமாக பாதிக்கப்படவில்லை”, என்று சிஎன்பிசி-டிவி 18 இடம் சோய் கூறினார். மேலும், கோவிட்க்குக்கு முந்தைய வருகை 70-75% ஆக இருந்த நிலையில், தொற்றுநோய் காலத்தில் 65% ஆகக் குறைந்துவிட்டன. "எங்களுக்கு பின்னால் மோசமானது இருப்பதாக தெரிகிறது," என்று அவர் கூறினார்.
முன்கணிப்பு
“கார்ப்பரேட் மருத்துவமனைகள் அவர்களின் இருப்புநிலைகளுடன் புலம்புவது என்னைக் கவரவில்லை. இந்தத் துறை அவர்களுக்கு மிகவும் சாத்தியமற்றது என்றால், அவர்கள் கடையை மூட வேண்டும், ”என்று கிராமப்புற சத்தீஸ்கரில் உள்ள இலாப நோக்கற்ற மருத்துவமனையான ஜான் ஸ்வஸ்தியா சஹியோக்கின் மருத்துவரும் நிறுவன உறுப்பினருமான யோகேஷ் ஜெயின் கூறினார். "ஏதோ அது அவர்களுக்கு சாத்தியமானது என்று தெளிவாகிறது. இந்த கோவிட் நெருக்கடியில், அவர்கள் லாபத்தை தேடுவதால் அவர்களிடம் கட்டணங்கள் அதிகம் ” என்றார்.
"அவர்கள் ஒரு தனிப்பட்ட நோயாளியிடம் இருந்து எல்லாவற்றையும் வசூலிக்கிறார்கள். தொற்றுநோய்களின் போது ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணத்திற்கு தனித்தனியாக கட்டணம் செலுத்தியதை நாங்கள் கண்டோம். செலவுகளை அதிகரிப்பதன் மூலம், ஒவ்வொரு நோயாளியிடம் இருந்தும் எல்லாவற்றையும் பல மடங்காக மீட்டெடுக்கின்றனர் ”என்று தனியார் மருத்துவமனைகளின் பில்லிங் நடைமுறைகளை கேள்வி எழுப்பிய ஜெயின் கூறினார். (தனியார் மருத்துவமனைகளில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுக்கு அதிக கட்டணம் குறித்து இந்தியா ஸ்பெண்டின் விசாரணையை இங்கே படிக்கலாம்). அரசு பொது மருத்துவமனைகள் கூட தங்களது ஊழியர்களுடன் இதைச் செய்ய வேண்டியிருக்கும் போது, தனியார் மருத்துவமனைகளின் ஊழியர்களை தனிமைப்படுத்துவது குறித்த புகார்களையும் ஜெயின் கேள்வி எழுப்பினார்.
பெரிய மற்றும் சிறிய தனியார் மருத்துவமனைகள் தொற்றுநோய் பரவலின் ஆரம்ப மாதங்களில் நிதி பாதிப்பை சந்தித்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இந்தியாவின் பல்நோக்கு தேசிய ஆலோசனை நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நிதித் தாக்கல்களில் இருந்து தரவுகள் மட்டுமே எங்களிடம் உள்ளன, எனவே அவை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் பெரிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் ஆயிரக்கணக்கான சிறிய மருத்துவமனைகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன, அவை மீட்கப்படாமல் போகலாம். அவற்றின் பாதிப்பு அளவு நமக்கு தெரியாது, ஏனெனில் அவை பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அல்ல, ”என்று, பெயர் வெளியிட விரும்பாத அவர் கூறினார். பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் இதில் இருந்து மீண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் தேறிவிடும் என்று அவர் எதிர்பார்க்கிறார், ஆனால் தொற்றுநோயின் தாக்கம், சிறிய தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது மருத்துவமனைகளின் பலவீனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது என்றார் அவர்.
மலிவான பொது சுகாதாரத்திற்கான ஆதரவு, உண்மையில், ஒரு ஆச்சரியமான காலாண்டில் - தனியார் துறையில் இருந்து வருகிறது. "இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு சுகாதாரத்தை தனியார்மயமாக்குவது தீர்வு அல்ல என்று நான் வருத்தத்துடன் கூறுகிறேன். தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை எவ்வளவு குறைத்தாலும், பாக்கெட்டில் பணம் இல்லாத ஒரு நோயாளிக்கு அவர்களால் சிகிச்சை அளிக்க முடியாது ”என்று ஷெட்டி 2019-20 ஆண்டு அறிக்கையில் முதலீட்டாளர்களுக்கு எழுதிய குறிப்பில் கூறினார்.
(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.