கோவிட் -19: அரசு விதிகள் இருந்தபோதும், மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பீடு வழங்காத காப்பீட்டாளர்கள்

Update: 2020-12-01 00:30 GMT

புதுடெல்லி: கோயம்புத்தூரை சேர்ந்த பயிற்சியாளரான அபிஷேக் முத்தையன், வலைதளம் ஒன்றை  நடத்தி வருகிறார், அதில் அவர் காப்பீடு தொடர்பான  பலமணிநேர தொலைபேசி உரையாடல்கள், பல மின்னஞ்சல்கள், உதவி மையம் மற்றும் இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் அலுவலக முகவர்களின் விவரங்களை பதிவேற்றியுள்ளார். கோவிட்19 தொற்றுநோயின் போது அதிக சுகாதாரச்செலவுகள் குறித்த கவலை, அவரை மருத்துவக்காப்பீட்டை தேடத் தூண்டியது. ஆனால் நிறுவனங்கள், அவருக்கு பாலிசியை வழங்க மறுத்துவிட்டன.

வளர்ச்சி குறைபாட்டுடன் வாழ்ந்து வருகிறார், 34 வயதான முத்தையன்.  மார்ச் மாத இறுதியில் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ், எச்.டி.எஃப்.சி எர்கோ, பஜாஜ் அலையன்ஸ் மற்றும் மேக்ஸ் பூபா ஆகிய ஐந்து முன்னணி நிறுவனங்களிடம் இருந்து மருத்துவக்காப்பீட்டை வாங்க முயன்றார். ஐந்து நிறுவனங்களுமே அவருக்குள்ள மாற்றுத்திறன் அடிப்படையில் இக்கோரிக்கையை நிராகரித்தன. குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மருத்துவக்காப்பீடு மறுக்கப்படக்கூடாது என்று அரசின் பல்வேறு சுற்றறிக்கைகள் தெரிவித்திருந்த போதும், நிறுவனங்கள் இத்தகைய போக்குடன் நடந்து கொள்கின்றன.

கோவிட்19 தொற்றுநோய், நமது சுகாதார அமைப்புகளில் நிகழும் பல்வேறு தவறுகளை வெளிப்படுத்தியுள்ளது: தனியார் சுகாதார மருத்துவமனகளின் கட்டணம் உயர்வு, அரசின் பொது சுகாதாரத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்டவை வெளிப்பட்டன. இந்த சிக்கலின் பல்வேறு அம்சங்களை பற்றி இந்தியா ஸ்பெண்ட்,  ‘கோவிட் சிகிச்சையின் விலை’  என்ற  கட்டுரைத்தொடரில் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளை அணுகும் எவருக்கும் சுகாதாரக்காப்பீடு,  ஒரு நிவாரணமாக இருக்கும். ஆனால் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளபடி, இந்த தொற்றுநோய் காலத்தில் செல்லுபடியாகக்கூடிய சுகாதாரக்காப்பீட்டை கொண்ட பலரும், தங்கள் கோவிட்-19 சிகிச்சைக்காக காப்பீட்டு தொகையை பெற முடியவில்லை. மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்று கூறுவதில் தொடங்கி, இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று பல சாக்கு போக்குச்சொல்லி , உரிமைகோருபவர்களின் கோரிக்கையை பல  காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரித்தன.

இந்த தொடரின் எங்கள் ஒன்பதாவது விசாரணையில், மருத்துவக்காப்பீட்டை வாங்குவதில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள், வழக்கமாக காப்பீடுகளை எவ்வாறு மறுத்தன என்பதை ஆவணப்படுத்த,  இந்தியா ஸ்பெண்ட் முயற்சிக்கிறது. தொற்றுநோயானது மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய கவலைகளைக் கொண்டு வந்துள்ளதோடு, பழைய கவலையையும்  வலுப்படுத்தியுள்ளது, அதாவது: மருத்துவக்காப்பீடு இல்லாமல், கோவிட்-19 அல்லது வேறு எதற்கும் அவர்கள் சிகிச்சை மற்றும் சுகாதாரச்சேவையை பெற முடியுமா?

மாற்றுத்திறன் பொறுப்பு?

அபிஷேக் முத்தையன் தனது வலைதளத்தில், பல்வேறு நிறுவனங்களுடனான தனது அனுபவங்களை விவரிக்கிறார். ராயல் சுந்தரம் நிறுவனம், தனது மாற்றுத்திறன் குறைபாடுகள் மற்றும் சுகாதார அளவுருக்களை எவ்வாறு தவறாக பட்டியலிட்டது என்பதை அவர் ஆவணப்படுத்தியுள்ளார். பலமுறை புகார்கள் வரும் வரை நிறுவனம்,  அவரது மருத்துவ அறிக்கைகளின் நகலை அவருக்கு வழங்கவில்லை. அந்த அறிக்கைகள் அவரை ஆரோக்கியமானவர் என்றே சான்றளித்துள்ளனன, ஆனால் நிறுவனம் அவருக்கு காப்பீட்டை  வழங்கவில்லை. எச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனம், அவரிடம் விபத்து ஏற்பட்டவர்களுக்கு காப்பீடு செய்ய முடியாது என்று கூறியது.  முத்தையனுக்கு எவ்விதமான விபத்தும் ஏற்படவில்லை. அவர் ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்து, அவருக்கு ஒரு குறைபாடு உள்ளது என்பதை  மட்டுமே  உண்மையாக அறிவித்தான், அதன் பிறகு, அந்த நிறுவனமே அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.  ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட், அவருக்கு முன்பே இருந்த "நோயை" மேற்கோள்காட்டி, காப்பீடு செய்ய மறுத்துவிட்டது. முத்தையன் சொன்னது போல,  இது அரசு வழிகாட்டுதல்களுக்கு எதிரானது.  மூன்று நிறுவனங்களும் ஆரம்பத்தில் ஒரு காப்பீட்டுகாக முத்தையனிடம் இருந்து தொகையை பெற்றுக்கொண்டன, ஆனால் அவருக்கு ஒருபோதும் அதை வழங்கவில்லை, பல மின்னஞ்சல்கள் மற்றும் புகார்களுக்கு பிறகு பணத்தை திருப்பித் தந்ததாக, இந்தியா ஸ்பெண்டிடம் முத்தையன் தெரிவித்தார்.

மருத்துவக் காப்பீடு கோரிய முத்தையனுக்கு, நிறுவனங்களில் ஒன்றின் சார்பில் அனுப்பப்பட்ட நிகாரிப்பு கடிதத்தின் நகல். அவரது வளர்ச்சியின்மை மாற்றுத்திறன் குறைபாடு, இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (IRDAI) நிரந்தர விலக்குகள் என்று பட்டியலிடப்பட்டவற்றில், எனக்குள்ள மாற்றுத்திறன் இடம்பெறவில்லை. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய வழிகாட்டுதல்கள்,  மக்கள் தங்களுக்கு ‘முன்பே இருக்கும் நோயை’ நேர்மையாக அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் அதன் காரணமாக மக்கள் பாதுகாப்பை மறுக்கக்கூடாது எனவும்  கேட்டுக்கொள்கின்றன. எனது உடல் மற்றும் மருத்துவநிலையை நான் எப்போதும் நேர்மையாக அறிவித்துள்ளேன். பல காப்பீட்டு நிறுவனங்களும், முன்பே இருக்கும் நோய் மற்றும் மாற்றுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு காப்பீட்டை வழங்குவதாகக் கூறுகின்றன. இருப்பினும், என்னால் மருத்துவக் காப்பீட்டை பெற முடியவில்லை, ”என்று அவர் கூறினார்.

ஒரு நபரின் மாற்றுத்திறன் அல்லது முன்பே இருக்கும் நோய் காரணமாக, அவருக்கு காப்பீடு மறுக்கப்படக்கூடாது என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. தேவைப்பட்டால், அவர்களின் குறிப்பிட்ட நோய் பகுதியை,  நீண்ட காத்திருப்பு நேரத்துடன் (அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை) கவரேஜில் இருந்து விலக்கு தர முடியும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன, ஆனால் அவரது மீதமுள்ள உடல்கள் பகுதிகள், மருத்துவக்காப்பீட்டின் கீழ் காப்பீடு பெறுவதற்கு தகுதியுடையவையாக இருக்கும். இந்த காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட நோய் பகுதிக்குகூட காப்பீட்டின் கீழ் கொண்டு வரமுடியும்.

இருப்பினும், உண்மையில் இந்தியா முழுவதும் மாற்றுத்திறன் குறைபாடுகள் உள்ளவர்களின் அனுபவங்கள், தொற்றுநோய்க்கு முன்னர் இது அவர்களுக்கு இல்லை என்பதாகவும், இப்போது அவர்களுக்கு அப்படியொரு வழக்கு இல்லை என்றும் காட்டுகிறது.

"காப்பீட்டு நிறுவனங்கள்,  ஒருநபரின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் சமரசம் செய்யும் குறைபாடுகள் மற்றும், அது இல்லாதவர்கள் இடையே வேறுபாட்டைக் காட்ட வேண்டும்" என்று ஐசிஐசிஐ லோம்பார்ட்டின் எழுத்துறுதி மற்றும் உரிமைகோரல் பிரிவின் தலைவர் சஞ்சய் தத்தா கூறினார். “எடுத்துக்காட்டாக, பார்வைக்குறைபாடு அல்லது எலும்பியல் இயலாமை உண்மையில் மற்ற எல்லா உறுப்புகளையும் அல்லது ஒரு நபரின் வாழ்க்கையையும் பாதிக்காது, எனவே இந்த நபர்கள் காப்பீட்டுக்காக பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால் ஆட்டோ-இம்யூன் எனப்படும் தன்னுடல் தாக்குதல் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு… இது எங்கள் தொழில்துறையால்  எடுத்துக்கொள்வது கடினமான ஆபத்து. எனவே, மாற்றுத்திறன் குறைபாடு உள்ள அனைவரையும் ஒன்றாக இணைக்கக்கூடாது, ”என்று அவர் மேலும் கூறினார்.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு காப்பீட்டு நிர்வாகி, விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் உதாரணத்தை மேற்கோள் காட்டினார். “அவருக்கு பேச்சு, நடையை தடுமாறச்செய்யும் மூளை தண்டுவட பாதிப்பு நோய் இருந்தது. 1805ம் ஆண்டில் டிராஃபல்கர் போரில் நெப்போலியனுக்கு எதிராக பிரிட்டிஷாரை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற பிரிட்டிஷ் ஜெனரல் லார்ட் நெல்சனின் கதையை, அவர் நினைவு கூர்ந்தார்.  "நெல்சன் பார்வையற்றவர் என்று கூறப்பட்டது. தோல்விக்கு பயந்து அவரது படைகள் அவரிடம் வந்தபோது, ​​அவர் தனது தொலைநோக்கியை வைத்து, முன்னால் இருந்ததை யூகித்து வீரர்களை வழிநடத்தியதாக கதை நீள்கிறது... பார்வைக்குறைபாடு போன்ற மாற்றுத்திறன், ஒருநபரின் செயல்திறனுக்கு தடையாக இருக்க தேவையில்லை, அத்துடன் அவர்களை [காப்பீட்டில் இருந்து] எந்த வகையிலும் விலக்க வேண்டியதில்லை” என்றார்.

"மாற்றுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு பாரபட்சமின்றி சுகாதாரக்காப்பீடு வழங்கப்பட வேண்டும்" என்று ஸ்டார் ஹெல்த் மற்றும் அதனுடன் இணைந்த காப்பீட்டின் நிர்வாக இயக்குனர் எஸ். பிரகாஷ் கூறினார். ஆனால், இந்தியாவில் உள்ள வணிகம் பெரும்பாலும் மாற்றுத்திறன்  உள்ளவர்களை “மருத்துவ அறிவுடன்” அணுகுவதில்லை, இதனால் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் ஆரோக்கியமற்றவர்களாகவே கருதுகிறது. "காப்பீட்டாளர்களின் மனதில் இருக்கும் இந்த பயம் பெரும்பாலும் சரியானதல்ல" என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பாலிசிகளை காப்பீட்டு நிறுவனங்கள் தீவிரமாக மறுக்கவில்லை என்று புனே தேசிய காப்பீட்டு அகாடமியின் இயக்குனர் ஜி.சீனிவாசன் தெரிவித்தார். "ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளரும் இதை தெளிவுபடுத்தியுள்ளதால் அவர்கள் இதைச் செய்கிறார்கள் என்றால், அதுவும் சரியானதல்ல. ஆரம்ப கட்டத்தில் சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் மக்கள் நிறுவனங்களில் புகார் அளிப்பதால் அல்ல. எனவே மக்கள் அழுத்தம் கொடுத்து காப்பீட்டைப் பெற முயற்சிக்க வேண்டும்” என்றார். 

தனக்கு காப்பீட்டை மறுத்த ஒவ்வொரு நிறுவனம் தொடர்பாக, முத்தையன் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் குறையாக முறையிட்டார். காப்பீட்டு நிறுவனங்களுக்கும் நேரடியாக புகார் தெரிவித்தார். ஆனால், அவருக்கு எதுவும் இதுவரை நடக்கவில்லை. அவர் சோர்ந்து போனார், இருப்பினும்  கடைசி முயற்சியாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய விரும்புவதாக, அவர் தெரிவித்தார்.

"ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் மாற்றுத்திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு காப்பீடு தர மறுக்கின்றன என்றால், நாம் அனைவரும் காப்பீடு வாங்க ஒவ்வொரு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டுமா?" என்று முத்தையன் கேட்கிறார்.

தரவு இல்லை

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011ன் படி, 2.68 கோடி இந்தியர்கள், அல்லது 2.2% பேர் மாற்றுத்திறனாளிகள். பார்வை, காது கேட்கும் திறன், பேச்சு மற்றும் இடம் பெயர முடியாமை, மனநல குறைபாடு, மனநோய், பல்வகை இயலாமை மற்றும் வேறு ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்கள் இதில் அடங்குவர். மாற்றுத்திறனாளிகள், நகர்ப்புறத்தை  (2%) விட ஊனமுற்றோர் கிராமப்புறங்களில் (2.3%) அதிகம்; பெண்களை விட ஆண்களில் அதிகமாக உள்ளதாக (2.4% மற்றும் 1.9%) என்று  தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2018 தெரிவிக்கிறது.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்,  பெரிய அளவிலான தரவை, குறிப்பாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட உரிமைகோரல்களின் எண்ணிக்கை பற்றி வெளியிடுகிறது. ஆனால், எத்தனை காப்பீடுகள்  மறுக்கப்படுகின்றன என்ற விவரத்தை அது வெளிப்படுத்தாது.

கடந்த 2018-19ம் ஆண்டில், 2.068 கோடி சுகாதாரக்காப்பீட்டு பாலிசிகள் விற்கப்பட்டன, 47.2 கோடி மக்கள் இந்தியாவில் சுகாதாரக்காப்பீட்டின் கீழ் உள்ளனர் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தரவு (அட்டவணை 72) தெரிவித்துள்ளது. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் எத்தனை விண்ணப்பங்களைப் பெற்றன, அவை எத்தனை நிராகரித்தன என்பதற்கான விவரம்  எதுவும் கொடுக்கப்படவில்லை.

இந்த தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில், 2019ம் ஆண்டில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மாற்றுத்திறன் குறைபாடு, மனநோய் மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு தங்கள் “எழுத்துறுதி தத்துவத்தை” பகிரங்கப்படுத்துமாறு, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, பல நிறுவனங்கள்  இதுபோன்ற மருத்துவச்சூழலை கொண்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதாகக்கூறி தங்கள் வலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்டுள்ளன.

இந்த தரவுகளை பின்பற்றிக் கொள்ளுமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தங்களை கேட்கவில்லை என்று காப்பீட்டு நிறுவன நிர்வாகிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். இந்த தரவைச் சேகரிக்குமாறு நிறுவனங்களை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டால், இந்த வெறும் தேவை, மாற்றுத்திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கூடுதல் பாலிசிகளை வழங்கச் செய்யக்கூடும், எனவே இதனால் இது அவர்களின் தரவுகளில் காண்பிக்கப்படுவதாக, முத்தையன் கூறினார்.

"எங்களுக்கு காப்பீட்டை வழங்குவதாக அவர்கள் கூறுகின்றனர், ஆனால் எங்களது  விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றன. இது காப்பீட்டு நிறுவனங்களின் தவறான வாக்குறுதியும், போலி விளம்பரமும் அல்லவா? ” என்று, அத்தகைய கட்டுரைகளை முத்தையன்  குறிப்பிடுகிறார். "இது தவறல்ல என்றால், நிறுவனங்கள் அந்தத் தரவை வெளியிட வேண்டும்" என்றார்.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 50 காப்பீட்டு நிறுவனங்களின் குறை தீர்க்கும் அதிகாரிகளை,  இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டு, மாற்றுத்திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முன்பே இருக்கும் நோய்கள் உள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அதில் எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டனர் அல்லது காப்பீடு வழங்கப்பட்டவர்கள் என்ற தகவல்களை கேட்டது. மாற்றுத்திறன் குறைபாடு  உள்ளவர்களைச் சேர்ப்பது குறித்த வழிகாட்டுதல்களுடன் காப்பீட்டு நிறுவனங்களின் இணக்கம் ஏதேனும் இருந்தால், அதன் தணிக்கை குறித்த கேள்விகளுடன் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். அவர்கள் பதிலளிக்கும்போது, இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.

டெர்ம் பாலிசியா ? ஆம்; மருத்துவ பாலிசியா? இல்லை

"மாற்றுத்திறன் உள்ளவர்களை விதிவிலக்கு இல்லாமல் காப்பீட்டில் இணைக்க, அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று 2006 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியாவின் தேசிய கொள்கை அறிவித்தது. அந்தக் கொள்கையின்படி,  குறிப்பிட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) காப்பீட்டை வழங்கியது.

கோவிட் 19 சிகிச்சைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன வகையான காப்பீடு கிடைக்கிறது என்று எல்.ஐ.சி.யில் தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் 35 வயதான பிரபு, அண்மையில் கண்டறிய முயன்றார். எல்.ஐ.சி. தனது பதிலில், கோவிட் -19 காரணமாக மாற்றுத்திறன் நபரின் இறப்பு நிகழ்வை ஈடுசெய்ய, டெர்ம் பாலிசி எனப்படும் காலக்காப்பீட்டை வழங்க முடியும் என்று கூறியது, ஆனால் அதே நபருக்கு ஏதேனும் மருத்துவக்காப்பீட்டை வழங்கினார்களா என்பதை தெளிவுபடுத்தவில்லை.

பிரபு,  தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி பெற்ற மருத்துவராக உள்ளார், கர்நாடகாவின் கூர்க் பகுதியில் உள்ள தனது நண்பரான 34 வயது பல் மருத்துவருக்கு  வாங்கக்கூடிய காப்பீடு பாலிசி ஏதேனும் உள்ளதா என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனு தாக்கல் செய்தார். பிரபு மற்றும் அவரது நண்பர் இருவரும் உடல் உறுப்பு மாற்றுத்திறன் கொண்டவர்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீடு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழகத்தை சேர்ந்த பிரவுக்கு எல்.ஐ.சி யால் அளிக்கப்பட்ட பதிலின் நகல்.

"கோவிட்  தொற்றுநோயின் போது, ​​எனக்கு ஏதேனும் நேர்ந்தால் என் பெற்றோருக்கு ஏதேனும் காப்பீடு இருக்க வேண்டும் என்று நான் கவலைப்பட்டேன் ... கோவிட் -19 ஒரு ஆபத்தான நோய்" என்று பல் மருத்துவர் கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீட்டு பாலிசிகள் குறித்து அவர் உள்ளூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் விசாரித்தார். “காப்பீட்டுக்காக நான் மைசூருக்கு சென்று மருத்துவப்பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்காக நான் 100 கி.மீ தூரத்திற்கு பயணிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். உண்மையில் எனக்கு  காப்பீடு கிடைப்பதை தடுக்கும் பொருட்டு இதுபோன்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன்” என்றார். அவரது முழு குடும்பமும் காப்பீட்டு பிரச்சினையில் உள்ளது. அவருக்கோ அல்லது வயதான பெற்றோருக்கோ எந்த மருத்துவ காப்பீடும் இல்லை.

அரசு வேலைகள் ஏன் முக்கியம்

மாற்றுத்திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஒரே உத்தரவாத ஆதாரமாக இருப்பது அரசு வேலைகள்: அது, அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இலவச அரசு சுகாதார சேவையை அணுக உதவும். அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியாவில் 4% இடஒதுக்கீடு உள்ளது என்று மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 கூறுகிறது.

அரசு வேலைகள் மற்றும் சுகாதாரப்பாதுகாப்பின் உத்தரவாதம் என்பது மாற்றுத்திறன் உள்ள எத்தனை பேர் நிர்வகித்து வருகிறார்கள் என்று பஞ்சாப் அரசு இளநிலை எழுத்தரான 32 வயது  டேனிஷ் மகாஜன் விளக்கினார்.

ஒரு பொழுதுபோக்காக ஆன்லைன் வானொலி நிலையத்தை நடத்தி வரும் மகாஜன், பார்வை குறைபாடுள்ளவர். அவரது மனைவியும் பார்வையற்றவர்.  கோவிட் தொற்றுநோய் பரவல் பற்றிய கவலையுடன், அவர் மருத்துவக்காப்பீட்டை வாங்க முடிவு செய்து, அக்டோபரில் ஆதித்யா பிர்லா சுகாதாரக் காப்பீடு நிறுவனத்தை அணுகினார். "அவர்கள் எனக்கும், என் மனைவிக்கும் பாலிசி வழங்க மறுத்தனர்- சுகாதார பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர்கள் எங்களிடம் கேட்கவில்லை, நாங்கள் சமர்ப்பித்த ஒரே ஆவணம் எங்களது பார்வைக்குறைபாடு தொடர்பான சான்றிதழ்கள் மட்டுமே… எனக்கு பார்வையில்லைதான், ஆனால் என் உடலின் எஞ்சிய பகுதிகள் அனைத்தும் நன்றாகவெ இருக்கிறது. பிறகு ஏன் எனக்கு மருத்துவக்காப்பீடு பெற முடியாது? ” என்று கேள்வி எழுப்பிய மகாஜனுக்கு முன்னதாக காப்பீடு மறுத்த நிறுவனம் - 2019 இல் எச்.டி.எஃப்.சி எர்கோ.

“எனக்கு அரசிடம் இருந்து சுகாதாரப் பாதுகாப்பு இருப்பதால், நான் இதை அதிகம் பின்பற்றவில்லை. ஆனால், இந்த ஆண்டு உடல்நலக் காப்பீட்டுக் கொள்கை மறுக்கப்படுவது குறித்து மாற்றுத்திறனாளிகளுக்காக நான் ஆணையரிடம் இப்போது புகார் அளித்துள்ளேன்,”என்றார்.

ஆயிரக்கணக்கானவர்களைப் போலவே, அவரும் ஒரு பதிலுக்காகக் காத்திருக்கிறார்.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Load more

Similar News