ஊரடங்கில் கறுப்புச்சந்தைகள் பெருகும் நிலையில் உயிர் காக்கும் மருந்துகளை பெற குடும்பங்கள் போராடுகின்றன

Update: 2020-07-18 00:30 GMT

புதுடெல்லி: ஒடிசாவில் உள்ள ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், நாடு முழுவதும் சுங்க மற்றும் விமான அதிகாரிகள், சுகாதார அமைச்சக அதிகாரிகள், மருந்து நிறுவன நிர்வாகிகள், பொது சுகாதார ஆர்வலர்கள் மற்றும் கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர். இவர்கள் எல்லாம், குழந்தைகளது வலிப்பு நோயை தடுக்க உதவும் முக்கிய மருந்தான விகாபட்ரின் கொள்முதல் செய்வதற்காக, மார்ச் 2020 இல் இந்தியாவில் கோவிட் -19 தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து அயராது பாடுபட்டு வரும் முக்கிய கதாநாயகர்கள்.

விகாபட்ரின் 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையாக இந்தியாவின் கறுப்புச்சந்தையில் வாங்கப்பட்டு விற்கப்பட்டாலும், கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு ஆகியன, ஏற்கனவே ஆபத்தில் உள்ள இந்த கட்டமைப்பை தகர்த்திருப்பதை, இந்தியா ஸ்பெண்ட் விசாரணை கண்டறிந்துள்ளது. தொற்றுநோய்க்கு முன்பாக கறுப்புச் சந்தையில் இருந்து விகாபட்ரின் பெறுவது, இப்போது உள்ளதைவிட எளிதானது மற்றும் மலிவானது என்று குடும்பத்தினர் சிலர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.இந்த மருந்து இந்தியாவில் - கிரானுல்ஸ் இந்தியாவின் டாக்டர் ரெட்டி மற்றும் இஸ்ரேலிய நிறுவனமான தேவா ஆகியவற்றால் - தயாரிக்கப்பட்டாலும், இது ஏற்றுமதிக்கானது மட்டுமே. ஏனெனில் இந்தியாவில் இதை விற்க எந்த நிறுவனத்திற்கும் உரிமம் இல்லை. இந்தியாவில் இந்த மருந்து தேவைப்படும் எவரும் அதை பெற வேறொரு வழியில் தான் சுற்றிச் செல்ல வேண்டும்.

மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய இந்தியாவின் ஊரடங்கு, அனைத்து மருந்துகளின் இறக்குமதியையும் கடுமையாக பாதித்தது. மருந்து இருப்பு இல்லாததால் நோயாளிகள் மற்றும் கறுப்புச்சந்தை விற்பனையாளர்கள் கூட, விகாபட்ரின் தேர்வை கைவிடத் தொடங்கினர். இந்திய விற்பனையாளர்களிடம் எஞ்சியிருக்கும் இருப்பு, குறிப்பிடப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டது. எனவே, இந்திய நோயாளிகள் தனித்தனியாக சிறிய அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளனர்; இருப்பினும் அது பலருக்கும் விலை அதிகமாக இருந்தது; அவர்களால் மருந்தை பெற முடியவில்லை.

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் சுகாதார மருந்துகளின் விலை தொடர்பான எங்கள் கட்டுரைத் தொடரின் இந்த ஐந்தாவது பகுதியில், கை கால் வலிப்புள்ள குழந்தைகளுக்கான கோவிட் அல்லாத இந்த மருந்தின் விலை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதை இந்தியா ஸ்பெண்ட் ஆராய்கிறது. முந்தைய கட்டுரையில் கோவிட் -19 தொற்றுக்கு பரிசோதனையாக பயன்படுத்தப்படும் டோசிலிசுமாப் மருந்து விலை எவ்வாறு உயர்ந்துள்ளது மற்றும் கறுப்புச்சந்தையில் மருந்து எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது என்பதைப் பார்த்தோம். இத்தொடர் கோவிட் -19 மற்றும் பிற நோய்களுக்கு, தொற்றுநோய் பரவல் காலத்தில் மருத்துவமனை சிகிச்சை செலவு பற்றியும் கண்காணித்துள்ளது. (தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்).

கூட்டு முயற்சி

ஏப்ரல் மாதத்தில், விகாபாட்ரின் பற்றாக்குறை குறித்து செய்திகள் வரத் தொடங்கின. ஒடிசாவின் மூத்த காவல்துறை அதிகாரியான அருண் போத்ரா இதை கேள்விப்பட்டதும், மே 9 அன்று "வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு ஒரு அவசர கோரிக்கை" என்று, அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், இந்தியாவில் குழந்தைகள் விகாபட்ரின் இல்லாமல் போராடுகிறார்கள்; எனவே தாயகம் திரும்புவோர் சட்டப்பூர்வமாக அவற்றை இங்கு வாங்கி வர வேண்டும் என்று கூறினார். "நாங்கள் விமான நிலையம் வந்து பணத்தை கொடுத்து அந்த மருந்துகளை வாங்கிக் கொள்கிறோம்; தேவைப்படுபவர்களுக்கு அவற்றை வழங்குவோம்" என்று ட்வீட் செய்தார். அத்துடன் அவர், சென்னையில் உள்ள சுகாதார ஆர்வலர் வைஷ்ணவி ஜெயக்குமாருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்; அவருக்கு அனுப்பிய டிவிட்டில் "அவர்களுக்கு உதவ நாம் அனைவருக்கும் முயற்சி செய்யலாமே" என்று பகிர்ந்தார்.

போத்ராவின் ட்வீட், அகில இந்திய அளவில் ஒருங்கிணைப்பை தூண்டியது; துயரில் இருக்கும் குடும்பங்களுக்கு தாராளமாக உதவ நன்கொடையாளர்களும் இணைந்தனர். அவருக்கு, உலகெங்கிலும் பல தரப்பட்டவர்களிடம் இருந்து மின்னஞ்சல்கள் வந்தன. அதில் சிலர், இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு விகாபட்ரின் நன்கொடை வழங்க முன்வந்தனர். "புவனேஷ்வரில் உள்ள எனது அலுவலகத்திற்கு ஒருசில மருந்துகள் வந்தன; எனது குழு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதை அனுப்பியது" என்று போத்ரா கூறினார். "மற்றவை வெவ்வேறு விமான நிலையங்களுக்கு வந்தன; வைஷ்ணவி ஜெயக்குமார் போன்ற செயற்பாட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து, அதை உரியவர்களுக்கு சேர்ப்பிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்" என்றார்.

பெங்களூரைச் சேர்ந்த ஷங்கர் ராமனின் ஏழு வயது மகளுக்கு பெருமூளை வாதம் உள்ளது; வலிப்பு தாக்கங்களை தவிர்க்க தினமும் விகாபட்ரின் தேவைப்படுகிறது. அவர், போத்ராவின் ட்வீட்டை பார்த்தார்; அப்போது அவரிடம் எட்டு விகாபட்ரின் தீர்ந்துவிட்ட நிலையில் போத்ராவை தொடர்பு கொண்டார். இரண்டு மாத்திரை அட்டைகளை மட்டுமே அவரால் ஒரு குடும்பத்திற்கு வழங்கும் நிலையில் இருந்தார். சென்னையில் ஒரு குடும்பத்திற்கு அது தேவைப்பட்டது. பின்னர், பெங்களூரில் உள்ள மற்றொரு குடும்பத்தினர் அதைக் கேட்டனர்; இருப்பதை பகிர்ந்து தர ராமன் ஒப்புக்கொண்டார். "அந்த இரவின் பிற்பகுதியில், பெங்களூரு காவல்துறையினர் எனது இல்லத்தில் இருந்து விகாபட்ரின் நான்கு அட்டைகளை சேகரித்து சென்றனர்" என்று ராமன் கூறினார். "துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ, பொழுதுபோக்கு பைக் நெட்வொர்க் அழைக்கப்பட்டது; அவர்களில் சிலர் அன்றிரவு சென்னைக்குச் சென்று இரண்டு மருந்து அட்டைகளை வழங்கினர்" என்றார்.

"நான் ட்வீட்டைப் பார்த்தேன்; அந்த மருந்து எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியும்; எனவே உதவ விரும்பினேன்" என்ற ராமன் “ஒரு குழந்தைக்கு இந்த மருந்து இல்லாதது எவ்வளவு மோசமானது என்பதை அறிவேன். ஊரடங்கு எவ்வளவு காலம் நீடிக்கும் என்றோ, விகாபட்ரின் பற்றாக்குறை தொடருமா என்பதும் தெரியாது” என்று குறிப்பிட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, சென்னையில் உள்ள மற்றொரு குடும்பம் விகாபட்ரின் இரண்டு அட்டைகளை நன்கொடையாக பெற விரும்பியது; இம்முறை அது பெங்களூருவில் உள்ள ஒரு குடும்பத்திற்கும் தேவைப்பட்டது. ஆனால் ஊரடங்கின் போது அதை எவ்வாறு பெறுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரக ஆணையர் ஜானி வர்கீஸுக்கு, அன்று வேலைநாளின் கடைசி தினமாக இருந்தது; மருந்தை சேகரிக்க எந்த ஊழியர்களும் இல்லை. எனவே, வர்கீஸ் தானே மருந்தை எடுத்துக் கொண்டு, தபால் நிலையத்திற்குச் சென்று பெங்களூருவில் உள்ள குடும்பத்திற்கு இரு அட்டைகளை அனுப்பி வைத்தார்."கோவிட் தொற்று பரவலின் போது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தெரிவிக்க மார்ச் மாதத்தில் தமிழக அரசு ஒரு ஹெல்ப்லைனை வசதியை ஏற்பாடு செய்தது," என்ற வர்கீஸ், "விகாபட்ரின் பற்றாக்குறை பற்றி எங்களுக்கு அதில் அழைப்புகள் வந்தன; இந்த சிக்கலை ஆராயத் தொடங்கினோம்" என்றார்.

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ விமானங்கள் வாயிலாக, இம்மருந்துகளை அரசால் பெற முடிந்தது. இந்த மருந்தின் 8,000 மாத்திரைகளுக்கான ஆர்டர்களை தமிழக அரசு அனுப்பியதாக குறிப்பிட்ட வர்கீஸ், அவற்றில் 3,500 மாத்திரைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன; தற்போது 2,500 கையிருப்பில் உள்ளது என்றார். "நாங்கள் இதை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்குகிறோம்," என்றார் அவர்.

தொற்றால் விலை அதிகரிப்பு

விகாபட்ரின் மருந்தை அரசு வாங்கியுள்ளது ;அதை இலவசமாக பெறும் அதிர்ஷ்டம் தமிழ்நாட்டின் குடும்பங்களுக்கு கிடைத்தது. இருப்பினும், நாட்டின் பிற பகுதிகளில், விகாபட்ரின் அதிக விலை கொடுத்து மக்கள் போராடுகின்றனர்.கால்-கை வலிப்பு உள்ள குழந்தைகள் ஒருநாளைக்கு ஒன்று முதல் ஆறு விகாபாட்ரின் மாத்திரைகள் என, பல ஆண்டுகளுக்கு உட்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது வயது, எடை மற்றும் நோயின் தீவிரத்தை பொறுத்து, சில நோயாளிகளுக்கு மாதத்திற்கு 30 முதல் 180 மாத்திரைகள் வரை தேவைப்படுகிறது.

இந்த மருந்தை இந்தியாவில் சந்தைப்படுத்தவும் விற்கவும் எந்த நிறுவனத்திற்கும் உரிமம் இல்லை என்றாலும், தொற்றுநோய்க்கு முன்னர் உள்ளூர் மருந்தாளர்களிடம் இருந்து வாங்குவது மிகவும் எளிதானது என்று அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அங்கூர் மணியர் கூறினார். அவரின் ஏழு வயது மகள் கால் கை வலிப்பு உள்ளது. அவர் ஆறு ஆண்டுகளாக விகாபட்ரின் எடுத்து வருகிறார்.

“கோவிட் தொற்றுநோய்க்கு முன்பு, 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை விகாபட்ரின் சுமார் 700 ரூபாய்க்கு வாங்க முடிந்தது. மார்ச் மாதத்திற்குள், விற்பனையாளர்கள் ஒரு அட்டை கொண்ட மாத்திரைகளிய ரூ.3,000 வரை விற்றார்கள்,” என்ற மணியர், விகாபட்ரினுக்கு இப்படி ஒரு "தட்டுப்பாட்டு" ஏற்படுத்துவார்கள் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றார். கறுப்புச் சந்தையில் தொற்றுநோய்க்கு முன்னர் இந்த மருந்தை வாங்குவது எளிதானது மற்றும் மலிவானது என்றார் அவர். "கோவிட் தொற்றுநோய், இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தி இருக்கிறது" என்றார் அவர்.

ஏற்கனவே, டோசிலிசுமாப் மருந்துக்கு கோவிட்-19 நோயாளிகள் கறுப்புச் சந்தையில் அதிக விலை கொடுக்க வாங்க சிரமப்படுகிறார்கள் என்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. இருப்பினும், விகாபட்ரின் சட்டப்பூர்வமாக வாங்குவதை விட நோயாளிகள் அதை அதிக விலைக்கே கண்டறிந்துள்ளனர்.

விதிமுறைகள் - சிவப்புநாடா இடையே சிக்குதல்

பெற்றோர் போன்ற தளர்வான அமைப்பினர், சுகாதார ஆர்வலர்கள் மற்றும் போத்ரா போன்றவர்கள் இந்தியாவைச் சுற்றியுள்ள மக்களுடன் ஒருங்கிணைந்து, விகாபட்ரின் அட்டைகளை விநியோகிக்க பணியாற்றி வருகின்றனர். “மேக் இன் இந்தியா”திட்டம் பற்றி அரசு நிறைய பேசுகிறது,” என்று இந்த நெட்வொர்க்குடன் பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர் ஸ்வாட்டி பக்ஷி கூறினார். "ஒருவேளை இந்த மருந்து இங்கே தயாரிக்கப்பட்டிருந்தாலும், இந்திய நோயாளிகளால் அதை பெற முடியாது; ஏனெனில் எந்தவொரு நிறுவனத்திற்கும் அதை விற்க உரிமம் கிடைக்கவில்லை" என்றார்.

விகாபட்ரின் பற்றாக்குறையை உணர்ந்த நெட்வொர்க்கில் உள்ள குடும்பங்கள் சனோபியை அணுகி, சப்ரில் மருந்தை இந்திய நோயாளிகளுக்கு விற்க ஒரு வழியை கண்டறியும்படி கேட்டுக் கொண்டன. சப்ரில் மருந்து பிரான்சில் தயாரிக்கப்படுகிறது; இந்தியாவில் அல்ல.சனோஃபி நிறுவன செய்தித் தொடர்பாளர் இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், சப்ரில் பெற தங்களால் முடிந்தவரை முயற்சி செய்வதாக குறிப்பிட்டார். "இந்தியாவில் இதை நேரடியாக விற்க எங்களுக்கு உரிமம் இல்லை; ஆனால் நோயாளிகளுக்கு உதவ விரும்புகிறோம்; ஒவ்வொரு நோயாளியும் சமர்ப்பித்த இறக்குமதிக்கான விண்ணப்பங்களின் அடிப்படையில் சிங்கப்பூரில் இருந்து சப்ரீலை இறக்குமதி செய்யக்கூடிய ஒரு விநியோகஸ்தரை நாங்கள் இந்தியாவில் கண்டறிந்தோம். இந்தியாவுக்கு வந்த மருந்துகளை நாங்கள் மானிய விலையில் வழங்கினோம்” என்றார்.

இந்த ஏற்பாட்டின்படி, இரண்டு சரக்குப்பொதிகளில் சனோபி மருந்து 300 அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது ஒரு அட்டை ரூ.1,750-க்கு விற்கப்படுகிறது.இருப்பினும் சில நோயாளிகளது பெற்றோர், இந்த மருந்தை தொற்றுநோய் காலத்தில் இந்திய நோயாளிகள் பெறக்கூடியதாகவும், மலிவு விலையிலும் கிடைக்கும் வகையில் சனோஃபி மருந்து இல்லை என்றனர். "இந்த வலை அமைப்பில் உள்ள ஒரு குடும்பம் சப்ரிலை மலேசியாவில் இருந்து அட்டை ஒன்றுக்கு சுமார் 900 ரூபாய் என இறக்குமதி செய்தது; இதில் மருந்து விலை, இறக்குமதி வரி மற்றும் கூரியர் கட்டணங்கள் அடங்கும்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத பெற்றோர் கூறினார். "சனோஃபி மருந்து தயாரிக்கப்படும் பிரான்சில் கூட, இந்த மருந்து ஆறு அட்டைகளுக்கு சுமார் ரூ. 3,800 அல்லது ஒரு அட்டை ரூ. 333 என்று கிடைக்கிறது. இங்குள்ள பல பெற்றோர்கள் ஒரு அட்டைக்கு ரூ.1,750 செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கூறினர்” என்றார்.

மருந்துக்காக போராடி வேண்டியதை இந்தியா ஸ்பெண்டிற்கு அனுப்பிய மின் அஞ்சலில் சனோபி ஒப்புக் கொண்டார். "நாங்கள் மானிய விலையில் வழங்குகிறோம்; இருப்பினும், இது கறுப்புச்சந்தையில் கிடைப்பதைவிட அதிகமாக உள்ளது. அதேநேரம் தங்கள் குழந்தை குறைந்தபட்சம் ஒரு உண்மையான மருந்தை உட்கொள்கிறார்கள் என்று பெற்றோர்கள் உறுதி செய்து திருப்தி அடைய முடியும்… எவ்வாறாயினும், முன்னோக்கிய வழியாக, இவற்றை ஆதாரமாகக் கொண்டு வருவது தொடர்ந்து கடினமாக இருக்கும்; குறிப்பாக இந்த தேவை எதிர்பார்க்கப்படவில்லை அல்லது எங்களது கண்ணோட்டத்தில் இல்லை. வலைத்தளம் மூலமாகவோ அல்லது நோயாளி குழுக்கள் மூலமாகவோ எங்களை அணுகும் விநியோகஸ்தர் மற்றும் பெற்றோருடன் ஒருங்கிணைக்க தொடர்ந்து முயற்சிப்போம்,”என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எளிய வாய்ப்புகள் இல்லை

இந்திய நோயாளிகள் மருந்து இறக்குமதி செய்ய, இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளருக்கு தனிப்பட்ட இறக்குமதி உரிமங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த அமைப்பு, சொந்த பயன்பாட்டிற்காக ஒரு சிறிய மற்றும் வரையறுக்கப்பட்ட மருந்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. அவசர தேவை உள்ள பல பெற்றோர்களுக்கு இந்த செயல்முறை எளிதானது அல்ல; மேலும் சுங்கவரி மற்றும் கூரியர் கட்டணங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் விலை அதிகமாகிவிடுகிறது.

சிங்கப்பூர், துபாய், வங்கதேசம், கனடா, பிரான்ஸ், மலேசியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் இந்த மருந்தை இங்குள்ள குடும்பங்கள் தேடி வருகின்றன.51 நோயாளிகளுக்கான இறக்குமதி உரிமங்களை நாங்கள் பெற்றுள்ளோம். மேலும் 26 நோயாளிகள் வாங்க முன்வந்துள்ளனர்; அவர்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் ”என்று ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர் ஜெயகுமார் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் ஒருநாளைக்கு எத்தனை மாத்திரைகள் தேவை, எத்தனை மாத்திரைகள் எஞ்சியுள்ளன, அடுத்த நிரப்புதல் எப்போது தேவைப்படும் என்பது உட்பட ஒரு நெருக்கமான தரவை அவர் வைத்திருக்கிறார். பல மாதங்களாக, அவர் இந்த நோயாளிகளைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பி வருகிறார்.

விகாபாட்ரின் தேவைப்படுவோருக்கு கிடைப்பதை உறுதி செய்வதில் குடும்பங்களின் வலைப்பின்னல் சில வெற்றிகளைப் பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்தியாவுக்கு ஒரு மருந்தை இறக்குமதி செய்வதற்கான நோயாளியின் விண்ணப்பத்தை மருந்துக் கட்டுப்பாட்டாளர் அங்கீகரிக்கும்போது, பொதுவாக அது மூன்று நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் தொற்றுநோய்களின் போது, மருந்துக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களை கையால் திருத்தியமைத்து வருகின்றனர்; அது, நோயாளி விகாபாட்ரினை “விண்ணப்பத்தில் பட்டியலிடப்பட்ட மூன்று நாடுகளில் மட்டுமின்றி வேறு எந்த நாட்டில் இருந்தும்” இறக்குமதி செய்யலாம் என்று கூறுகிறது. கையால் எழுதப்பட்ட இந்த குறிப்பைக் கொண்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களையும் இந்தியா ஸ்பெண்ட் மதிப்பாய்வு செய்துள்ளது.

"இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் எங்கள் ஒப்புதல் படிவங்களில் செய்த இத்தகைய கையால் எழுதப்பட்ட மாற்றம் மிகவும் உதவியாகவும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளது" என்று மணியர் கூறினார்.

"இந்தியாவில் விகாபட்ரின் போன்ற மருந்து தேவைப்படும் சில ஆயிரம் நோயாளிகளுக்கு, இதுபோன்ற மாறுவதற்கு போதுமான ஊக்கம் இல்லை என்று ஒரு அரசு அதிகாரி சமீபத்தில் என்னிடம் குறிப்பிட்டார். எங்களை போன்ற குடும்பங்களை பொறுத்தவரை, இந்த மருந்து எல்லாவற்றையும் குறிக்கிறது. ஆனால், அரசு அமைப்பை பொறுத்தவரை, அதிக விலை என்பது பொருட்டல்ல என்பதே சங்கடமான உண்மை,”என்று மணியர் கூறினார்; அவர் பேசிய அந்த அதிகாரி, இந்த மருந்து வாங்க போராடும் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார்.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Load more

Similar News