நீண்டகால முடக்கத்தால் மாறிய ரசனைகள் கைவினைக் கலைஞர்களை பாதிக்கலாம்

Update: 2020-05-15 00:30 GMT

ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள ஜவுளி ஹேண்ட்-பிளாக் அச்சிடும் மையங்கள் உள்ள சங்கனேர் பகுதியில், நாடு தழுவிய முடக்கத்தின் போது பணியின்றி அமர்ந்திருந்த கைவினைஞர்கள். கோவிட்-19க்கு பிந்தைய உலகால் மாறியுள்ள விருப்பங்கள், ஊரடங்கிற்கு பிறகு வர்த்தக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் நீண்ட காலத்திற்கு அது தொழில்துறையை பாதிக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

நொய்டா: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள ஹேண்ட்-பிளாக் அச்சிடும் பணிக்கு பெயர்போன ஜவுளித்துறை புறநகர் பகுதியான சங்கனெர், அதன் வழக்கமான பணிகளாலும் வண்ணங்களால் பிரகாசித்து கொண்டிருருந்தது. அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் உள்ள முதன்மை சந்தைகளில் தற்போது நுகர்வு ரசனை மாறி உள்ளதாகவும், வாங்கும் திறன் குறைந்துவிட்டதாகவும் சங்கனேரியில் உள்ள ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்; எனவே, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினாலும் இதன் தாக்கம் நீண்ட காலத்திற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் (இவற்றில் பெரும்பாலானவை கோவிட் -19 தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன) 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஹேண்ட்-பிளாக் எனப்படும் கையால் அச்சிடப்பட்ட ஜவுளிகளின் மொத்த ஏற்றுமதியில், 30% பங்கைக் கொண்டிருந்ததாக, கைவினைப்பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்ட தரவு தெரிவிக்கிறது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இத்துறை வெளிவர முயன்று கொண்டிருக்கையில், தொற்று நோயின் தாக்கத்தால் - 2018-19 நிதியாண்டில் ஏற்றுமதி 36% குறைந்துள்ளது; ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மேற்கூறிய நாடுகளில் 2017-18 ஆம் ஆண்டுடன் தொடர்புடைய காலத்துடன் ஒப்பிடும்போது இது குறைவு என்று, ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜஸ்தான் கைவினைப்பொருள் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (Forhex - ஃபோர்ஹெக்ஸ்) அதிகாரிகள் தெரிவித்தனர்.

“2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், இந்தியாவில் கைவினைப்பொருள் ஜவுளி உற்பத்தி செலவு 10% அதிகரித்துள்ளது; அதே நேரத்தில், பங்களாதேஷ் தங்களது தயாரிப்புகளின் விலையை குறைத்து மிகவும் போட்டித்தன்மையை ஏற்படுத்தியது; இதனால் வெளிநாட்டு வாங்குவோர் எங்களை விட இரண்டாமவரையே தேர்வு செய்தனர், ” என்று, போடார் அசோசியேட்ஸ் செயலாளரும், ஃபோஹெஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினருமான அதுல் போடார் கூறினார்.

விருப்பங்களில் மாற்றம்

அத்துடன், ராஜஸ்தானின் கையால் அச்சிடப்பட்ட ஜவுளி ஏற்றுமதிக்கான ரூ.1,000 கோடி (132 மில்லியன் டாலர்) மதிப்புள்ள ஆர்டர்கள் தயாரித்து, ஏற்றுமதிக்காக கப்பலுக்கு அனுப்பப்படும் சூழலில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அவை ரத்து செய்யப்பட்டன. "ஏராளமான ஆர்டர்கள் பெறப்பட்டு, அதற்கான பொருட்களை வாங்கி பணிகள் நடைபெற்று வந்தன. அந்த ஆர்டர்களும் கூட நிறுத்தப்பட்டுள்ளன,” என்றார் போடார். "வாங்குபவர் (பையர்) தனது ஆர்டரை பெறுவாரா இல்லையா என்பது குறித்தும் எங்களுக்கு எவ்வித உத்தரவாதமும் தரப்படவில்லை” என்றார்.

ஒவ்வொரு பருவத்திலும், ஜவுளித்துறையில் வண்ணம் மற்றும் பொருள் விருப்பத்தேர்வுகள் மாறுகின்றன. "ஜவுளி உற்பத்தி என்பது ஒவ்வொரு பருவத்திலும் [அதன் சுவையை] மாற்றும் ஃபேஷன் உணர்வுள்ள ஒரு தொழிலாகும். பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் தாமதம் வாங்குபவர்கள் (பையர்) தங்களது ஆர்டர்களை ரத்து செய்ய வழிவகுக்கும்" என்று பொடார் கூறினார். "மற்ற சவால் என்னவென்றால், தொற்றுநோய்க்கு பிந்தைய சூழல். ஆடம்பரப் பொருள்களைக் காட்டிலும் மக்கள் எளிய பயன்பாட்டு பொருட்கள் மீதே இனிமேல் நாட்டம் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே அடுத்த ஆறு அல்லது ஏழு மாதங்களில் தயாரிப்பு வரிசைகளும் மாறும்” என்றார்.

"அமெரிக்கர்கள் பொதுவாக மெல்லிய மற்றும் மந்தமான வண்ணங்களை விரும்புகிறார்கள்," என்று அவர் கூறினார். இருப்பினும், வரவிருக்கும் மாதங்களில் அவர்கள் வீட்டுக்குள் அடைபட்டு கிடந்தால், அது அவர்களின் விருப்பங்களில் பிரதிபலிக்கும். அவர்கள் மனநிலையை உயர்த்த, பிரகாசமான மற்றும் வண்ணமயமான ஜவுளிக்காக அவர்கள் செல்லலாம். இப்போது மாறியுள்ள சூழ்நிலையை எதிர்பார்த்து நாங்கள் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு உற்பத்தியில் ஒரு முழு மாற்றம் தேவைப்படும். இது எங்களுக்கு அதிக செலவுகளுக்கு வழிவகுக்கும்” என்றார்.

வெளிநாட்டு வாங்குபவர்களின் (பையர்) செலுத்தும் திறன், இதுவரை இருந்த குறுகிய காலத்தில் இருந்து, இனி நடுத்தர காலம் என்று குறைக்கப்படலாமோ என்று ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர். "அவர்கள் இப்போது எங்களது நிலுவைத் தொகையை செலுத்தும் நிலையில் இல்லை" என்று பொடார் கூறினார். "அவர்கள் பணம் செலுத்துவதற்கு மேலும் அவகாசம் கேட்டு, புதிய தேதிகளை கேட்கிறார்கள். 120 நாட்கள் வரை கட்டணம் செலுத்தும் தேதியை அவர்கள் கோருகிறார்கள். 3-4 மாதங்களுக்கு பிறகும் அவர்கள் கைகளை உயர்த்தினால் சாப்டர் 11 திவால்நிலைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே நாங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

ஜெய்ப்பூருக்கு அருகே உள்ள ஜவுளித்துறை புறநகர் பகுதியான, ஹேண்ட்-பிளாக் அச்சிடும் பணிப்பு புகழ்பெற்ற சங்கனெரில், துணியை வண்ணமிட பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் (இடது); அடுத்து, ஃபேப்ரிக் அச்சிடப்படும் மேசைகள் வெறுமனே (வலது) கிடக்கின்றன.

உற்பத்தியை மறுதொடக்கம் செய்தல்

மறுபுறம், வளர்ந்த நாடுகளில் நான்கு மாத ஊரடங்கிற்கு பிறகு, தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வாங்குவோர் ஏற்றுமதியை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்று ஏற்றுமதியாளர்கள் கூறுகிறார்கள்.

கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களின் முன்புள்ள உடனடி சவால் என்னவென்றால், அடுத்த மாதம் ஊரடங்கை அரசு தளர்த்திய பிறகு, உற்பத்தி செயல்முறைகளை மீண்டும் பழையபடி துவக்குவது ஆகும்; இது வாங்குபவர்களிடம் (பையர்) இருந்து ஆர்டர் உறுதியாகாத நிலையில் மிகவும் கடினம் ஆகும்.

"நாங்கள் [உள்நாட்டு வாங்குபவர்கள்] உற்பத்தியை தொடங்க முயற்சித்தாலும், தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை எவ்வாறு தடுப்பது என்பது மற்றொரு சவால்" என்று ஜெய்ப்பூரை சேர்ந்த மற்றொரு ஏற்றுமதியாளர் விகாஸ் சிங் கூறினார். “எங்களது தொழிலாளர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு சென்றுவிட்டனர். உற்பத்தி நிரந்தர அடிப்படையில் தொடங்குகிறது என்பதை அவர்கள் உறுதியாக நம்பும் வரை, அவர்கள் திரும்பி வரப்போவதில்லை. எனவே தற்போது தொழிற்சாலைகளுக்கு அருகில் தங்கியுள்ள 25-30% தொழிலாளர்கள் மட்டுமே சார்ந்திருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

சங்கனேரின் திரிப்போலியாவில், கைவினைஞர்கள் வாடகைக்கு தங்குமிடம் அமைந்துள்ள தெருக்கள், ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளன.

அனைத்து கடன் தவணை திருப்பிச் செலுத்துதல்களும் (ஈ.எம்.ஐ) ஒத்திவைக்கப்பட்டு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். "இல்லையெனில், தொழிலாளர்களின் சம்பளம் வழங்க உரிமையாளர்களுக்கு பணம் இல்லாமல் போகும்," என்று, சங்கனரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ஷில்பி சன்ஸ்தான் உரிமையாளர் பிரிஜ் பல்லப் உதேவால் கூறினார்.

இதற்கிடையே, தொழில்துறையின் தினக்கூலி தொழிலாளர்களுக்கு (தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும் 100,000 பேரில் உள்ள எண்ணிக்கை) எந்தவொரு வருமானமும் இல்லாமல் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும் என்ற பலவீனமான பயம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. "நெருக்கடி நீடித்தால் நான் பின்வாங்க ஒன்றுமில்லை" என்று ஹேண்ட் பிளாக் அச்சிடும் தொழிலாளி முகமது கலீல் கூறினார்; இவர், உத்தர பிரதேசத்தின் ஃபாரூகாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் மற்றும் அவரது குடும்பத்தின் எட்டு பேரும் சங்கனேரில் வசிக்கின்றனர். “எனது சொந்த ஊரில் எனக்கு எந்த விவசாய நிலமும் கூட இல்லை. பிழைப்புக்கு இந்த வேலையை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன்” என்றார்.

நம்பிக்கை பிறக்கிறது

இருப்பினும் கூட, நீண்ட காலத்திற்கு சில பிரகாசமான வாய்ப்புகள் இருக்கலாம். தொற்றுநோய்க்கு பிந்தைய சந்தைகள் அதிகரிக்கும் போது, ஜவுளி வாங்குபவர்களும் உற்பத்தியாளர்களும் சீனாவில் இருந்து வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை நோக்கி திரும்பக்கூடும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர். ஆயினும், அதுவரை, சங்கனரில் சிக்கியுள்ள 1,00,000 க்கும் மேற்பட்ட கைவினைஞர்களில் பாதி பேர், தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்புவதா அல்லது வேலை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையில் தங்கியிருக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

(பிஷ்ட், டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர். தனிநபர், சமூகம் மற்றும் இரண்டும் எவ்வாறு ஒன்றையொன்று தொடர்பு கொள்கின்றன, ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை பற்றி எழுதி வருபவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Load more

Similar News