பெங்களூரு: நீரிழிவு நோயுடன் வாழும் ஒவ்வொரு இரண்டு இந்தியர்களில் ஒருவருக்கு (47%), அவர்களின் நிலை பற்றி தெரியாது; மேலும் கால் பகுதியினர் (24%) மட்டுமே, நோயை கட்டுக்குள் கொண்டு வருவதாக, மே 2019 ஆய்வு கண்டறிந்துள்ளது. மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது குறைந்த வீட்டுச் சொத்து மற்றும் குறைந்த கல்வி நிலைகளை கொண்ட கிராமப்புற ஆண்கள், இதில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
‘இந்திய மாநிலங்களில் நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான சுகாதார அமைப்பு செயல்திறனில் மாறுபாடு: 15 முதல் 49 வயதுடையவர்களின் குறுக்கு வெட்டு ஆய்வு’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, இந்திய பொது சுகாதார அறக்கட்டளை - பி.எச்.எப்.ஐ. (PHFI), சென்னையில் உள்ள மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை - எம்.டி.ஆர்.எஃப் (MDRF), ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2015-16 இன் இரண்டாம் தரவுகளை பகுப்பாய்வு செய்து, மேற்கொள்ளப்பட்டது. இதில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட 647,451 பெண்கள் மற்றும் 101,668 ஆண்கள் அடங்குவர்; மேலும் புள்ளிவிவர முறைகள் மற்றும் கணக்கெடுப்பு வடிவமைப்பு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி ஆண் மற்றும் பெண் பங்கேற்பு சீரானதாக கொண்டுள்ளது.
"இந்தியா போன்ற வளரும் நாடுகளில், தாய்-சேய் சுகாதாரத்தில் இருந்து, அதிகரித்து வரும் சுமையாக உள்ள தொற்றாத நோய்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்," என்று பி.எச்.எப்.ஐ. உதவி பேராசிரியர் மற்றும் ஆய்வின் இணை ஆசிரியரான ஆஷிஷ் அவஸ்தி தெரிவித்தார். இது பி.எம்.சி மெடிசின் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. "வளர்ந்த நாடுகளைப் போலவே, நம்முடைய இரத்த-குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்க வழக்கமான சுகாதார பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். இங்கே, நாம் புதிய நிறுவனத்தில் சேரும் போது மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம்; அவர்கள் சுகாதார சான்றிதழைக் கேட்கிறார்கள்" என்றார் அவர்.
கடந்த 2017 நிலவரப்படி, இந்தியாவில் 7.29 கோடி நீரிழிவு நோயாளிகள் இருந்தனர் - இது, சீனாவுக்கு அடுத்த (11.43 கோடி எண்ணிக்கை என்று, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் நீரிழிவு அட்லஸ்-2017 தெரிவிக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா தனது அண்டை நாடுகளை முந்திக் கொண்டு, உலகின் நீரிழிவு தலைநகராக மாறக்கூடும் என்று, டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நீரிழிவு நோய் துறை தலைவரும், இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான விஸ்வநாதன் மோகன் தெரிவித்தார். 2045 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 13.43 கோடி பேர் நீரிழிவு நோயுடன் வாழ்வார்கள் என்ற சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் மதிப்பீட்டின்படி, இது அமைந்துள்ளது.
"இந்த நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுநீரக நோயாக உருவாகின்றனர், இதற்கு மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலிசிஸ் தேவைப்படுகிறது," என்றார் மோகன். "குறைந்தது 3-4 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாக கற்பனை செய்து பாருங்கள். மாற்று சிகிச்சைக்கு நம்மிடம் போதிய நன்கொடையாளர்கள் இல்லை; டயாலிசிஸ் மேற்கொள்ள ஆண்டுக்கு குறைந்தது ரூ. 3 லட்சம் செலவாகிறது. இது நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு தாங்க முடியாத செலவு ” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிராமப்புற ஆண்களுக்கு அதிக பாதிப்பு
குறைந்த கல்வி மற்றும் குறைவான வீட்டுச் சொத்துகள் உடைய கிராமப்புற ஆண்களுக்கும், அதிக பாதிப்புடன் தொடர்பு இருப்பது, ஆய்வு கண்டறியப்பட்டது. இதில், பெண்களின் நிலை சிறப்பாக உள்ளது. பெண்களுக்கு, பிரசவத்துக்கு முந்தைய பராமரிப்பு, கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான வழக்கமான பரிசோதனைகள், இதற்கு காரணமாக இருக்கலாம்.
பாலினம், வயது-குழு மற்றும் வீட்டுச்சொத்து அடிப்படையில் நீரிழிவு நோய்
Source: BMC Medicine
கிராமப்புற ஏழைகள் மத்தியில் காணப்படும் இந்த போக்கு கவலை தருகிறது. ஏனெனில் நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களுக்கு உயர்தர பராமரிப்பிற்கான மிகக் குறைந்த அணுகலே, அவர்களுக்கு உள்ளது. மேலும் அவர்களுக்கு அதிகமான மருத்துவ செலவுகள் ஆகும் சூழலே அதிகம் என்று ஆய்வு கூறியது. இவர்களில் பலர், விவசாயிகள் என்பதால் தங்களது வாழ்வாதாரத்திற்கு சம்பாதிக்க, தங்களது உடல் ஆரோக்கியத்தையே நம்பியுள்ளனர்.
மருத்துவ செலவினங்களுக்கு பாக்கெட்டில் இருந்து பணம் செலவிடுவதால் (OOP), 2011-12ஆம் ஆண்டில் 5.5 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்ட் என்று ஜூலை 19, 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
47% நோயாளிகள் "கவனிப்பு இழந்தனர்"; தொடர் கண்காணிப்பு இல்லாத பலர்
இந்தியாவில் நீரிழிவு நோய் பரவுவதை “கவனிப்பு அடுக்குகள்” (cascade of care) என்ற மாதிரி மூலம் ஆய்வு செய்தது: நீண்டகால நோயாளிகளின் நிலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் முன்பு, தொடர் கவனிப்பு நடவடிக்கைகளுக்கு - கண்காணித்தல், நோயறிதல், சிகிச்சை - ஆட்படுத்தப்பட்டனர். இந்த அணுகுமுறை ஒரு சுகாதார அமைப்பில் நோயாளிகள் தங்கள் நோயை நிர்வகிக்க இழந்த படிகளை நிறுவ உதவுகிறது.
கணக்கெடுக்கப்பட்ட 729,829 பேரில், 3.3% (19,453) பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 52.5% (10,213) பேர் தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதை அறிந்திருந்தனர், 40.5% பேர் அதற்கான சிகிச்சையை நாடினர், 24.8% பேர் மட்டுமே கட்டுப்பாட்டில் இருந்தனர். மீதமுள்ள 75.2% நோயாளிகள் "கவனிப்பு இழந்து இருந்தனர்".
கீழேயுள்ள படம் காட்டுவது போல், 47% நோயாளிகள் விழிப்புணர்வு நிலையிலும், 11% பேர் சிகிச்சை அளவிலும், மேலும் 17% நோயாளிகள் கவனிப்பை தேடியிருந்த நிலையில், நோயை கட்டுப்படுத்த தவறி இருந்தனர்.
Source: BMC Medicine
"47% பேர் தங்கள் நீரிழிவு நோயைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றால், அறியப்பட்ட ஒவ்வொரு நீரிழிவு நோயாளிகளில் குறைந்தது ஒருவர் அது பற்றி தெரியாதவர் என்று உள்ளது" என்று மோகன் கூறினார். "இது ஒரு அமைதியான வெளியே தெரியாத நோயாகும்; எனவே, அவர்கள் அவதிப்படுவதை மக்கள் அறிய மாட்டார்கள்" என்றார் அவர்.
சில நோயாளிகள் நீரிழிவு நோய் இருப்பதை கண்டறிந்தாலும் சிகிச்சையைப் பெறுவதில்லை என்று குறிப்பிட்டார் மோகன்; இது நவம்பர் 2018 டயாபெடாலஜி என்ற மருத்துவ இதழின் தலையங்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தது.
“சுட்டிக்காட்டப்படும்போது சிகிச்சையைத் தொடங்க அல்லது தீவிரப்படுத்த தவறியது, மருத்துவ மந்தநிலை என்ற சுகாதார வழங்குநர்களின் தோல்வி” என்று மோகன் கூறினார். “நோயாளிகளும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் ஒரு நோயாளிக்கு அதிக சர்க்கரை அளவு இருக்கலாம் மற்றும் இன்சுலின் எடுக்கத் தொடங்குமாறு நாங்கள் அவர்களுக்கு பரிந்துரைக்கலாம். ஆனால், குடும்பத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளை சாக்காக வைத்து அவர்களை அதிக இனிப்பு உட்கொள்ள வழிவகுக்கிறது. அளவைக் குறைக்க சில மாதங்கள் கேட்கிறார்கள்; ஆனால் தாமதமாகும்போது, குறைந்தது ஒரு வருடத்திற்கு கூட அது மாறாது.
வாட்ஸ்அப் மூலம் போலிச் செய்திகளை பரப்புவதும் நோயாளிகளை தவறாக வழிநடத்தும் போக்கிற்கு, ஒரு காரணியாகும் என்று மோகன் கூறினார்.
கோவாவில் அதிக பாதிப்பு, கேரளாவில் விழிப்புணர்வு அதிகம்
ஆய்வு மதிப்பீடு செய்த 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில், கோவாவில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக (8.6%) உள்ளது; அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (8.3%) மற்றும் கேரளா (7.5%).
தென் மாநிலங்களில் அதிக பாதிப்பு உள்ளது: ஆந்திரா (6.6%), கர்நாடகா (4.6%), தமிழ்நாடு (6.8%), தெலுங்கானா (4.8%). இது வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில், உத்தரபிரதேசத்தில் 2.4%, ராஜஸ்தான் 1.8%, பீகார் 3% என்று உள்ளது.
Source: BMC Medicine
தென் மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காரணமாக இது இருக்கலாம் என்று மோகன் கூறினார். “அவர்களின் உணவில் அதிக கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உள்ளது. அவர்கள் கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களை வாங்க முடியும். அவர்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள், ஆனால் குறைவாக உடற்பயிற்சி செய்கிறார்கள், ”என்று அவர் கூறினார்.
இந்த நிலை குறித்து கேரளாவில் அதிக விழிப்புணர்வு உள்ளது - அதாவது 10 நோயாளிகளில் ஏழு பேர் தங்கள் நிலை குறித்து அறிந்திருந்தனர். ஆயினும்கூட, கோவா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அடுத்ததாக, இது நீரிழிவு நோயால் நாடு தழுவிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
Source: BMC Medicine
“உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கவழக்கங்களில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று திருவனந்தபுரத்தை சேர்ந்த நீரிழிவு நோய் நிபுணர் ஜோதிதேவ் கேசவதேவ் கூறினார். “ துபாய் அல்லது பிற வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பல ஏழைகளுக்கு வலுவான மத்திய கிழக்கு செல்வாக்கு காரணமாக, கேரளாவில் கிராமப்புற-நகர்ப்புற பிளவு கூட இல்லை. அனைத்து ‘ஏழைகளும்’ சிவப்பு இறைச்சி மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்கிறார்கள்” என்றார்.
இருப்பினும், அறிந்த நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை - இது, கேசவதேவின் கூற்றுப்படி, நோயாளிகள் மாற்று மருந்துகளைத் தேடுவதும், சிக்கல்கள் எழுந்த பின்னரே நவீன மருத்துவத்தை அணுகுவதும் ஆகும்.
"கேரள மாநிலத்தில் 100% கல்வியறிவு இருந்த போதும், பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் நிரூபிக்கப்படாத சிகிச்சைகள் ஆகியவற்றில் ஆழமான வேரூன்றிய நம்பிக்கை மக்களிடையே உள்ளது," என்று அவர் கூறினார். “[மாநில] அரசும் கூட நீரிழிவு நோய்க்கு நிரூபிக்கப்படாத ஆயுர்வேத சிகிச்சை முறைகளை ஊக்குவிக்கிறது. நவீன மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்; மற்றவற்றில் இல்லை என்று மக்கள் நம்புகிறார்கள்” என்றார்.
அண்டை மாநிலமான தமிழகத்தில், 22 லட்சம் பேர், நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது; இது 6.8% பாதிப்புக்கு வழிவகுக்கிறது.
"மெருகூட்டப்பட்ட அரிசியை அதிக அளவில் உட்கொள்கின்றனர்; அதில் நார்ச்சத்து குறைவாக உள்ளது" என்று சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையின் நீரிழிவு நிபுணர் எஸ்.நல்லபெருமாள் கூறினார்.“இது வேகமாக உறிஞ்சப்பட்டு வேகமாக இன்சுலின் சுரப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் அதிக அளவில் இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், இது கணையம் பலவீனமடைய வழிவகுக்கிறது. மேலும் மைதாவை அதிகமளவில் சேர்த்து, உணவு மேற்கத்திய மயமாகி உள்ளது" என்றார் அவர்.
குறைவான பாதிப்பு உள்ள மாநிலங்கள் மோசமான பராமரிப்பு குறிகாட்டிகளைக் கொண்டிருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, மிசோரமில் 3% நீரிழிவு நோய் உள்ளது; ஆனால் மாநிலத்தில் 40% நோயாளிகள் மட்டுமே தங்களது நிலையை அறிந்திருந்தனர்; 30% சிகிச்சை பெற முயன்றனர் மற்றும் 12.6% பேர் தங்களது அளவைக் கட்டுக்குள் வைத்திருந்தனர்.
இம்மாநிலங்கள் பலவற்றில், பெரும்பாலும் குறைந்த செல்வம் உள்ளவர்கள், சுகாதார அமைப்புகள் தொற்று நோய்கள் மற்றும் தாய்-சேய் சுகாதாரத்தில் தான் - நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்களுக்கு எதிராக - கவனம் செலுத்துவதாக ஆய்வு கூறுகிறது.
கவனிப்பு கோரிய நோயாளிகளில் அதிக சதவீதம் மேகாலயாவில் (61.4%) இருந்தது ஆய்வு கண்டறியப்பட்டது.
Source: BMC Medicine
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் நோயாளிகளில், மேகாலயா அதிக சதவீதத்தை (53.8%) கொண்டிருந்தது.
Source: BMC Medicine
மாசு தொடர்பு - மற்றும் பிற காரணங்கள்
இந்தியர்களிடையே நீரிழிவு நோய் விரைவாக அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணியாக காற்று மாசுபாட்டை, ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. "சமீபத்திய ஆய்வுகள், காற்று மாசுபாடு நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடும், ஏனெனில் இது மரபணு மற்றும் வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது நோயைத் தூண்டக்கூடும்," என்றார் அவஸ்தி.
உயர் ரத்த சர்க்கரை மற்றும் அதிக உடல் எடைக்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டில் 2ஆம் வகை நீரிழிவு இறப்புகளுக்கு, மூன்றாவது முன்னணி ஆபத்து காரணியாக நுண்ணிய துகள்களின் வெளிப்பாடு (பி.எம் 2.5) இருந்தது என்று, ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் -2019 அறிக்கை தெரிவிக்கிறது.
தெற்காசியர்கள் பொதுவாக நீரிழிவு நோயை வளர்ப்பதில் முன்னணியில் உள்ளனர். மேலும், உட்கார்ந்து வேலை பார்க்கும் சூழல்களுக்கு மாறுதல், இந்திய நகரங்களில் உடற்பயிற்சிக்கான பசுமையான இடங்கள் இல்லாதது, உணவு முறைகளை மாற்றம், வயதான மக்கள் தொகை மற்றும் குறைந்த எடையுடன் பிறப்பு ஆகியன, இந்தியர்களை வாழ்க்கை முறை நோய்க்கு ஆளாக்குவதாக, ஆய்வு கூறியது.
தென்னிந்தியர்களிடையே நீரிழிவு நோய் அதிகமாக இருப்பதும் ஒரு மரபணு காரணி காரணமாக இருக்கலாம் என்று நல்லபெருமாள் கூறினார். "இங்கிலாந்தில் வாழும் தென்னிந்தியர்களிடமும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன; எனவே இது மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். உலகில் இப்பகுதி நீண்ட காலம் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டது; எனவே நமது மரபணுக்கள் குறைந்த உணவு வளங்களுக்கேற்ப மாறியுள்ளன. ஆனால் இப்போது நாம் அதிகமாக உட்கொள்கிறோம்" என்றார் அவர்.
மேலும் கண்காணிப்பு தேவை
நோயை எதிர்த்துப் போராடுவதற்கும், நீரிழிவு நோயைக் கண்டறிவதை மேம்படுத்துவதற்கும், பெரிய அளவிலான கண்காணிப்பு திட்டங்கள் தேவை என்று ஆய்வு தெரிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் ஹரியானாவில் ஐந்தாண்டு உதய் (UDAY) திட்டம் - நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கவும் நிர்வகிக்கவும் சுகாதார வழங்குநர்கள் மற்றும் சமூக சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிராஜெக்ட் ஹோப் (Project HOPE) முன்முயற்சி - கண்காணிப்பை மேம்படுத்தியது; இதன் விளைவாக விழிப்புணர்வு ஏற்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மற்றொரு கவலை என்னவெனில், நீரிழிவு நோய்க்கான சிகிச்சை தேவை அதிகரிப்பதை, இந்தியாவின் சுகாதார அமைப்பு திறம்பட சமாளிக்க முடியுமா என்பதுதான்.
உதாரணமாக, 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு மூன்றாம் நிலை பராமரிப்பு மையமும் மட்டுமே உள்ளதாக, அவஸ்தி கூறினார். "நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு கூட, மருத்துவமனைகள் வெகு தொலைவில் உள்ளன. விழிப்புணர்வு அதிகரித்தால், மக்கள் சிகிச்சையைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருக்கும்; அவர்களின் பயன் மட்டுப்படுத்தப்படும். சிறந்த சிகிச்சை மற்றும் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உள்கட்டமைப்பு வழங்கப்பட வேண்டும்” என்றார் அவர்.
மேற்கு வங்கத்தில் நீரிழிவு நோய் 4.2% என்று, தேசிய சராசரியை விட அதிகமாக / குறைவாக உள்ள நிலையில், மருத்துவ வசதிகள் தலைநகரிலும், மாவட்ட தலைநகரங்களிலும் குவிந்துள்ளதாக, கொல்கத்தாவில் உள்ள டாக்டர் மோகன்’ஸ் கிளினிக் ஆலோசகர் மருத்துவர் மற்றும் நீரிழிவு மருத்துவரான சுப்ரியா தத்தா தெரிவித்தார். “இது மக்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. சுற்றுவட்டாரங்களில் நல்ல மருத்துவர்கள், அதிக மையங்களை நாம் ஏற்படுத்த வேண்டும். நிர்வாகம் சரியாக இல்லாததால், பல மருத்துவர்கள் இந்த பகுதிகளை விட்டு வெளியேறுவதை இப்போது நாம் காண்கிறோம்” என்றார் அவர்.
(சாகோ, இதழியல் துறை முதுகலை பட்டதாரி; பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியில் இதழியல் துறை உதவி பேராசிரியர். இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.