மருத்துவ கருக்கலைப்பு சட்டம், அது மிகத் தேவைப்படும் பெண்களிடம் தோல்வியுறுகிறது

மருத்துவ கருக்கலைப்பு சட்டம், அது மிகத் தேவைப்படும் பெண்களிடம் தோல்வியுறுகிறது
X

மும்பை: 1971ஆம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு (எம்டிபி) சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு செய்வதற்கான கோரிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, பலாத்காரத்துக்கு உள்ளான ஒரு பெண், தம்மை பலாத்காரம் செய்வதவரின் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணை முதலில் ஒரு மருத்துவர் 19வது வாரத்தில் பரிசோதித்தார்; சட்டப்படி அனுமதி இருந்தும், கருக்கலைப்பு செய்ய மருத்துவர் மறுத்துவிட்டார். இது தொடர்பான அந்த பெண்னின் மனு விசாரணைக்கு வந்த நேரத்தில், அவரது கர்ப்பம் 20 வாரம் என்ற வரம்பை கடந்ததால், எம்டிபி சட்டத்தின் கீழ் அவரது கருவை கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு குறித்த அறிக்கை , செப்டம்பர் 28, 2019இல், இந்தியாவில் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமைகளை மேம்படுத்த செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான, புதுடெல்லியை சேர்ந்த பிரதிக்யா-வின் வழக்கறிஞர்கள் அனுபா ரஸ்தோகி மற்றும் ரவுனக் சந்திரசேகர் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2016 முதல் 2019 ஜூலை வரையிலான 82 வழக்குகளில் 17% வழக்குகளில் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியருக்கு கருக்கலைப்பு செய்ய நீதிமன்றங்கள் மறுத்துவிட்டதாக, அந்த அறிக்கை கூறுகிறது. எம்டிபி சட்டம், 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதித்தாலும், 20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்ககோரும் 40 மனுக்கள், ஏப்ரல் 2016 முதல் 2019 ஜூலை வரை நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது, ஏனெனில் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய மறுத்து விட்டனர். இதில் 33 வழக்குகள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்டவை.

"பாதுகாப்பான கருக்கலைப்பு செய்ய பெண்களைஅனுமதிக்காததன் மூலம், நீங்கள் அவர்களுக்கு இரு வாய்ப்புகளுடன் விட்டுவிடுகிறீர்கள்: ஒன்று, மரணம் (பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத கருக்கலைப்பால்), அல்லது தயாராகாத ஒரு கர்ப்பத்தால் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் மற்றும் உணர்ச்சி விளைவுகள்” என்று, புனேவை சேர்ந்த சாமியாக்-கின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பவார் கூறினார்; இந்த அமைப்பு, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகளுக்காக பணியாற்றுகிறது.

காலாவதியான எம்டிபி சட்டத்தில் உரிய தெளிவின்மை, பெண்கள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது, பெண்கள் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்வதற்கான அணுகலை இது கட்டுப்படுத்துகிறது என்று, அறிக்கை கண்டறிந்துள்ளது. மேலும், சட்டங்கள் கருக்கலைப்பை கட்டுப்படுத்தவில்லை என்றாலும், கருவில் குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தையும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சட்ட செயல்முறைகளையும் மேற்கோள்காட்டி, மருத்துவர்கள் கருக்கலைப்பை மறுக்கின்றனர். கருக்கலைப்பு தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளில் தாமதம் மற்றும் கருக்கலைப்பு மீதான களங்கம் ஆகியவை, பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதனால், இந்தியாவில் நிகழும் கருக்கலைப்புகளில் 56% பாதுகாப்பற்றதாக உள்ளது; ஒவ்வொரு நாளும் 10 பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் இறக்கின்றனர் என்று, நவம்பர் 2017 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

உலகளவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளின் விளைவாக, ஆண்டுக்கு 47,000 பெண்கள் இறக்கின்றனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

எம்டிபி சட்டம் தெளிவற்றது, காலாவதியானது

எம்டிபி சட்டத்தின் கீழ், ஒரு கர்ப்பம் தாய்க்கு தீங்கு விளைவிக்கும் என்றாலோ, பலாத்காரத்தால் கர்ப்பமானாலோ, கடும் உடல் அல்லது மன குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் என்றாலோ அல்லது கருத்தடை செயலிழந்தாலோ மட்டுமே கருத்தரிக்கப்பட்ட 20 வாரங்கள் வரை, கருவை கலைக்கலாம்.

சிறுமியர் எனில், கருக்கலைப்புக்கு பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை; மேலும் திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு காரணமாக, கருத்தடை தோல்வியை மேற்கோள் காட்ட முடியாது.

கருக்கலைப்புக்கான 20 வார வரம்பு என்பது, 1971ஆண்டின் காலாவதியான கருத்தாக்கங்களை அடிப்படையாக கொண்டது, கருக்கலைப்பு என்பது அலோபதி மருத்துவர்களால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையாக கருதப்பட்டது என்று பிரதிக்யா அறிக்கை தெரிவிக்கிறது. மருத்துவ கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் வெற்றிட உறிஞ்சி - கருவை அகற்ற உறிஞ்சியை பயன்படுத்தும் ஒரு நுட்பம் - மூலம் அகற்றுதல் போன்ற மருத்துவத்தின் முன்னேற்றங்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான கருக்கலைப்புகளை அனுமதிக்கிறது.

“கரு பிரசவிக்கும் போது, ஒன்பது மாதங்களில் பெரியதாக இருப்பதால், கர்ப்பிணியின் உடக்கு ஏற்படும் ஆபத்து குறைவாக இருக்கும் ”என்று மகளிர் மருத்துவ நிபுணரும், ஆசிய பாதுகாப்பான கருக்கலைப்பு கூட்டுறவின் இணை நிறுவனருமான சுசித்ரா டால்வி கூறினார். “எனவே, கருக்கலைப்பின் போது பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, இது ஒரு பயிற்சி பெற்ற மற்றும் தகுதியான நபரால் பாதுகாப்பான வழியில் (பிரசவ நேரத்தில் இருப்பதை போன்ற பெரிய ஆபத்து இல்லை!) செய்யப்படுகிறது என்று கருதலாம்" என்றார்.

"கர்ப்பிணியின் உயிரை காப்பாற்ற உடனடி அவசியமானால்" 20 வாரங்களுக்குப் பிறகும் ஒரு கர்ப்பத்தை நிறுத்த முடியும். உடனடி அச்சுறுத்தல் எது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை, இச்சட்டம் மருத்துவரிடம் விட்டு விடுகிறது. இதனால் 20 வாரம் கடந்த பிறகு கருக்கலைப்பு செய்வதில் மருத்துவர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"எம்டிபி சட்டம், தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கேற்ப பொருந்தாததால், அதை புதுப்பித்து திருத்த வேண்டும்" என்று அறிக்கையின் இணை ஆசிரியர் ரஸ்தோகி கூறினார். "20 வாரங்களுக்கு பிறகு கருவில் சில , அசாதாரண நிலை கண்டறியப்படுகிறது. இது விரும்பிய கர்ப்பத்தை, தேவையற்ற ஒன்றாக மாற்றக்கூடும். பெண்ணின் உடல்நிலைக்கு ஆபத்தில் இல்லாதவரை, எந்த கட்டத்திலும் கருக்கலைப்பை அவர் செய்ய முடியும்” என்றார்.

பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் தீவிர தொற்று, எதிர்கால கருவுறாமை, சீழ் பிடித்தல், குடல் காயம், உட்புற காயங்கள் மற்றும் மரணம் கூட ஏற்படலாம் என்று டால்வி கூறினார். வயிறு மசாஜ், மூலிகை கலவையை குடிப்பது மற்றும் யோனியில் குச்சிகளை செருகுவது தேவையற்ற கர்ப்பத்தை நிறுத்த பொதுவான வழிமுறைகள் என்று மருத்துவ இதழான தி லான்செட்-டின் ஜனவரி 2018 கட்டுரை தெரிவித்துள்ளது.

ஜூன் 1, 2016 முதல் 2019 ஏப்ரல் 30ம் தேதி வரை, கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி 194 பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 97 பேர் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் 82 பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள். 88 வழக்குகளில், கரு அசாதாரணமாக இருந்ததாக, கருக்கலைப்புக்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் முன்பே கூறியது போல், கர்ப்பம் 20 வாரங்களை கடந்திருந்ததால், 82 பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியரில் 13 பேருக்கு இந்த கருக்கலைப்பு நடைமுறை மறுக்கப்பட்டது.

திருமண நிலை மற்றும் வயதை பொருட்படுத்தாமல் கருத்தரித்த 12 வாரங்கள் வரை, அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்வும் வகையில் எம்டிபி சட்டத்தில் திருத்த வேண்டும் என்று ரஸ்தோகி கூறினார். சட்டபூர்வமான கருக்கலைப்பின் வரம்பு, 24 வாரங்கள் என நீட்டிக்க வேண்டும். அந்த கட்டம் வரை கருக்கலைப்பு செய்வது பாதுகாப்பானது. பலாத்காரம் மற்றும் கரு அசாதாரண நிலை போன்றவற்றில் இந்த வரம்பு பொருந்தாது என்ற ரஸ்தோகி, இச்சட்டத்தில் திருத்தம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதுவரை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படாத, 2014ஆம் ஆண்டின் வரைவு மசோதா, பலாத்கார வழக்குகளில் கருக்கலைப்பு செய்ய 24 வாரங்கள் வரை அனுமதிக்கவும், கருவில் அசாதாரண சூழல் இருந்தால் வரம்பை முழுவதுமாக அகற்றவும் முன்மொழிவதாக, இந்தியா ஸ்பெண்ட் நவம்பர் 2017 கட்டுரை தெரிவித்திருந்தது.

இளம் வயது பிரசவத்தின் விளைவுகள் புறக்கணிக்கப்பட்டன

இச்சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு செய்வதற்கான சரியான காரணங்களாக கர்ப்பிணியின் உடல் ஆரோக்கியம் கருதப்பட்டாலும், மனநலம் மற்றும் தேவையற்ற கர்ப்பத்தின்- குறிப்பாக பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பியவரின்- சமூக பொருளாதார தாக்கங்கள் இதில் கருதப்படுவதில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருக்கலைப்பு செய்வதை மறுப்பது என்பது மனித உரிமை மீறல் என்று ஐ.நா. சபை அறிவித்து உள்ளது.

இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்புகள், ஒரு இளம் பெண்ணின் ஆரோக்கியத்திற்கு பிரசவத்தால் ஏற்படும் தீங்கை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. உலகளவில் 15 முதல் 19 வயதுள்ள சிறுமியருக்கு பிரசவத்தால் ஏற்படும் சிக்கல்கள் தான், மரணத்திற்கு முக்கிய காரணம் என்று, பிப்ரவரி 2018 உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்தது.

“உடல் மிகவும் சிறியதாக இருப்பதால் இளம் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் அபாயங்கள் அதிகம். சுகப்பிரசவம் என்பது சாத்தியமில்லை,” என்று டால்வி கூறினார். “கருக்கலைப்பு நிச்சயமாக பிரசவத்தை விட சிறந்தது. வன்கொடுமை காரணமாக, அந்த வயது கர்ப்பமானது அவர்களுக்கு மனநல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்” என்றார்.

கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது என்பது மிகச்சிலருக்கே தெரியும் என்று சாம்யாக் அமைப்பின் பவார் கூறினார். உதாரணமாக, 2012 பயோமெட் (BioMed) மைய ஆய்வின்படி, பீகார், ஜார்க்கண்டில் பாதிக்கும் குறைவான பெண்களே கருக்கலைப்பு சட்டபூர்வமானது என்பதை அறிந்திருந்தனர்.

மிகக்குறைந்த மகளிர் மருத்துவ வல்லுநர்கள்

ஒரு வருட பயிற்சி முடித்த மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறியல் நிபுணரால் அல்லது குறைந்தது 25 கருக்கலைப்புகளுக்கு மற்றொருவருக்கு உதவியவர் மட்டுமே கருக்கலைப்பை செய்ய முடியும் என்று, மத்திய சுகாதார அமைச்சகத்தின் 2003 வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. இத்தேவைகளை பூர்த்தி செய்த பிறகு, ஒரு மகளிர் மருத்துவ நிபுணர், முதல் மூன்று மாதங்கள் வரை மட்டுமே (கருத்தரித்த 12 வாரங்கள் வரை) கருக்கலைப்பு செய்ய முடியும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

12 முதல் 20 வாரங்களுக்கு இடையில் கருக்கலைப்பு செய்வதற்கு, பதிவு செய்யப்பட்ட இரண்டு மருத்துவ பயிற்சியாளர்கள் கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட வேண்டும்.

கிராமப்புற இந்தியாவில் மகளிர் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மகப்பேறியல் நிபுணர்களின் பற்றாக்குறை 75% என்றளவில் உள்ளது. சுகாதார மையங்களில் 85% சிறப்பு நிபுணர் பதவிகள் (5,624 இல் 4,757) காலியாக உள்ளதாக, ஆராய்ச்சி நிறுவனமான அக்கவுன்டபிலிட்டி இனிஷியேடிவ் அமைப்பிடம் இருந்து தேசிய சுகாதார இயக்கம் குறித்த 2019-20 அறிக்கை தெரிவிக்கிறது.

கருக்கலைப்பு செய்யும் தகுதி வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மாவட்ட துணை மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என பவார் பரிந்துரைக்கிறார். அத்துடன், ஆயுர்வேத, யுனானி, இயற்கை மருத்துவம், சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் மாவட்ட துணை மருத்துவமனைகளுக்கு செல்லும் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கலாம். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக கலந்தாலோசிக்க முடியும் என்று பவார் கூறினார். இப்பயிற்சியாளர்கள் உரிய பயிற்சி பெற வேண்டும்.

மருத்துவர்களுக்கு தெரியாது

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) 19வது பிரிவு, ஒரு சிறுமி கர்ப்பமாக இருப்பின் அதுபற்றி காவல்துறையில் தெரிவிக்க, அவரது ஒப்புதல் தேவை என்பதை எவரும் அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க, சிறாருக்கு சிகிச்சை தர, கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுக்கிறார்கள் என்பதை பிரதிக்யா அறிக்கையின் ஆசிரியர்கள் கண்டறிந்தனர்.

போக்ஸோ சட்டமானது, விருப்ப உடலுறவு மற்றும் பலாத்காரத்திற்கு இடையில் வேறுபடுவதில்லை என்பதால், ஒவ்வொரு வயதுக்குட்பட்ட கர்ப்பமும் ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறது.

"போக்ஸோ சட்டத்தின் கெடுபிடிகளுக்கு மருத்துவர்கள் அஞ்சி, கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு பெண்களை சட்டத்திற்கு புறம்பாக -அதாவது எழுத்துப்பூர்வ பத்திரம் தாக்கல் செய்தல் போன்ற சட்டத்தில் இல்லாத- நடைமுறைகளுக்கு உட்படுத்துகிறார்கள்," என்று பவார் கூறினார்.இதனால், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, ஏற்கனவே குற்றவியல் விசாரணையில் உள்ளவர்கள், தங்களது கர்ப்பம் குறித்து புகார் தர தயங்குகிறார்கள் என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிதல் தடுப்பு சட்டம் -1994 (பிசிபிஎன்டிடி)-ஐ, மருத்துவர்கள் மேற்கோள்காட்டி, கருக்கலைப்பு செய்ய மறுக்கின்றனர். நாட்டில் பாலின விகிதம் குறைந்து வரக்காரணம் என்று கருதி, கருவில் பாலினத்தை அறித்து அதை கலைப்பதை தடுக்க, பிசிபிஎன்டிடி சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தாயிடம் கூட தெரிவிக்கக்கூடாது.

பிசிபிஎன்டிடி சட்டத்தில் எந்தவொரு பிரிவும், கருக்கலைப்பை தடை செய்யவில்லை, ஆயினும் மருத்துவர்கள் அதற்கு மறுக்கிறார்கள், குறிப்பாக இரண்டாவது மூன்று மாதங்களுக்கு பிறகு கலைப்பு எனில், பிசிபிஎன்டிடி சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படலாம் என்று அஞ்சுகின்றனர் என்று புதுடெல்லியை சேர்ந்த பெண்ணிய மனித உரிமை அமைப்பான கிரியா-வின் செப்டம்பர் 2019 அறிக்கை தெரிவிக்கிறது.

நீதிமன்ற தாமதம்

இதேபோல், எம்டிபி சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக இருந்தால் கருக்கலைப்பு செய்ய மருத்துவக்குழுவின் ஒப்புதல் தேவையில்லை. ஆனால் நீதிமன்றங்கள் பெரும்பாலும் பெண்ணின் சொந்த மருத்துவ நிபுணரின் ஆலோசனையை புறக்கணித்து, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மகப்பேறு மருத்துவர் கொண்ட மருத்துவக் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. ஒரு கர்ப்பத்தால் ஏற்படும் நீண்டகால விளைவுகளை, இக்குழுக்கள் கருத்தில் கொள்ளாது, மேலும் பெண்ணின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பை அனுமதிக்கின்றன என்று பிரதிக்யா அறிக்கை கூறுகிறது

இந்த "ஆபத்து" சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை, மேலும் அதன் வரையறை எண்ணம்சார்ந்த மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகளால் பாதிக்கப்படலாம் என்று அறிக்கை விளக்கியது. ஒரு குழுவை அமைத்து, அதன் முடிவுக்கு காத்திருக்க செலவிடப்படும் நேரம், கர்ப்பத்தை 20 வார காலத்திற்கு மேல் தள்ளக்கூடும், இது முன்பு நாம் குறிப்பிட்ட சிறுமியர் பாலியல் பலாத்காரத்தில் நேரிட்டுள்ளது.

மற்றொரு உதாரணமாக, பீகாரை சேர்ந்த எச்.ஐ.வி பாசிடிவ் கொண்ட பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர், பாட்னா மருத்துவக் கல்லூரியால் 18 வார கர்ப்பமாக இருந்தபோது கருக்கலைப்பு செய்ய மறுக்கப்பட்டார்; 2017இல் பாட்னா உயர்நீதிமன்றம் தாமதப்படுத்தியதன் விளைவாக, அவர் பிரசவத்திற்கு தள்ளப்பட்டார் என்று தி இந்துஸ்தான் டைம்ஸ் 2017 ஆகஸ்ட் செய்தி தெரிவித்தது.

கருவின் உரிமைகள் மற்றும் தாயின் உரிமைகள்

ஒரு பெண்ணின் நல்வாழ்வுக்கான மருத்துவ நடைமுறையை விட, தேவையற்ற கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறையாக கருக்கலைப்பு செய்வது பெண்ணுக்கு கர்ப்பத்திற்கு எதிராக தூண்டுகிறது என்று பிரதிக்யா அறிக்கை தெரிவித்துள்ளது. "இருப்பினும், கருவின் உரிமைகள் அறிவியலிலோ சட்டத்திலோ ஒரு அடிப்படையைக்கூட காணவில்லை" என்றார்.

"மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கைபடி, எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவும் சமத்துவத்துடனும் பிறந்திருக்கிறார்கள், பிறந்த பிறகே நாம் மனிதர்கள் என்று பொருள் கொள்ளப்படுகிறது" என்று டால்வி கூறினார். “கரு ஒருவரின் உடலுக்குள் இருக்கும் வரை, அந்த நபர் பிறக்கக்கூடிய கருவுக்கு முன்னுரிமை அளிப்பவர். இருப்பினும், பல நாடுகள் நம்பகத்தன்மை என அழைக்கப்படுவதற்கு ஒரு வரம்பை - பெண்ணின் உடலுக்கு வெளியே கரு சுதந்திரமாக வாழக்கூடிய கட்டத்தை நிர்ணயிக்கின்றன. இது வழக்கமாக 28 வாரங்களாக கருதப்படுகிறது, ஆனால் தொழில்நுட்பம் முன்னேறும் போது இது சில இடங்களில் முன்னதாகவே இருக்கலாம். இருப்பினும் ஒரு பெண்ணின் உடலுக்குள் இருக்கும் போது கரு ஒருபோதும் நபராக கருதப்படுவதில்லை” என்றார் அவர்.

ஆனால் எல்லோரும் ஒப்புக்கொள்வதில்லை. சில மருத்துவர்கள் 20 வாரங்களுக்கு பிறகு கருவை கலைப்பதில் தார்மீக மனப்பான்மையைக் கொண்டுள்ளனர் என்று, நவம்பர் 2017 கட்டுரையில் நாம் தெரிவித்தோம்.

கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமை பெண்களுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்ததாக, 2019 செப்டம்பர் இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், 20 வாரத்திற்கு பிறகும் கருக்கலைப்பு செய்லாம் என்று கூறும் எம்டிபி சட்டப்பிரிவு 5-ஐ நீக்க அரசு விரும்பியது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் துணை செயலாளரும் (இனப்பெருக்கம் மற்றும் குழந்தை சுகாதாரம்), செய்தித் தொடர்பாளருமான பாமா நாராயணன், எம்டிபி சட்ட திருத்தங்கள் தொடர்பான எங்களின் பல அழைப்புகள் மற்றும் மின்அஞ்சல்களுக்கு பதிலளிக்கவில்லை. அவர் பதிலளிக்கும் போது இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

(இக்பால், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story