அசாமில் சுகாதாரப்பணியாளர்கள் இடையே கோவிட்-19 ஏன் இரு வாரங்களில் 59% அதிகரித்தது

அசாமில் சுகாதாரப்பணியாளர்கள் இடையே கோவிட்-19 ஏன் இரு  வாரங்களில் 59% அதிகரித்தது
X

கவுஹாத்தி: மருத்துவமனைகளில் புறநோயாளிகளை பரிசோதிப்பதில் அலட்சியம், ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் அனைத்து நோயாளிகளையும் -- அதாவது அறிகுறியற்ற, லேசான அல்லது கடுமையாக உள்ளவர்கள் -- சுகாதார சிகிச்சைக்கு கண்மூடித்தனமாக அனுமதிப்பது போன்றவை நோயாளிகளின் நீண்டகால வெளிப்பாட்டிற்கு வழிவகுக்கும். மே மாதத்தில் இருந்து அசாமின் சுகாதாரப் பணியாளர்கள் இடையே கோவிட்19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இவையே காரணம். ஆகஸ்ட் மாதத்தில் தொற்று தீவிரமடைந்தது, ஜூலை 28 அன்று 720 என்றிருந்தது, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 1,143 ஆக உயர்ந்துள்ளது - இது 59% உயர்வு - என்று சுகாதார ஊழியர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

அசாமில் முதலாவது கோவிட்19 வழக்கு, மார்ச் 31ல் பதிவானது; ஜூலை 27ம் தேதிக்குள் 720 சுகாதார பணியாளர்களுக்கு மாநிலத்தில் கோவிட் நேர்மறை இருந்ததாக, தேசிய சுகாதாரத்திட்டத்தின் (NHM - என்.எச்.எம்) மாநில இயக்குநர் எஸ். லட்சுமணன், ஜூலை 27இல் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 10 அன்று, பிளாஸ்மா நன்கொடை திட்டத்தில் என்.எச்.எம். அதிகாரிகள் 1,143 சுகாதார ஊழியர்களிடம் கோவிட்19 கண்டறிந்தனர் - இது இரண்டு வாரங்களில் 59% அதிகரிப்பாகும். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு வழக்குகள் - இருவரும் மருத்துவர்கள் - அபாய கட்டத்தில் இருந்தனர்.

^ வடகிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான கவுஹாத்தி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (GMCH) மகப்பேறியல் / பெண்ணோயியல் துறையில் டாக்டர்கள் அதிக பணிப்பளுவுடன் வேலை செய்கிறார்கள், மூன்று மருத்துவர்கள் 10 பேரின் பணியைக் கையாளுவதாக, பெயர் வெளியிட விரும்பாத மகப்பேறியல் மகளிர் மருத்துவ நிபுணர் தெரிவித்தார். ஜூலை 19 அன்று, ஜி.எம்.சி.எச் கண்காணிப்பாளரும் அறுவை சிகிச்சை துறையின் இணை பேராசிரியருமான அபிஜித் சர்மாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது; பின்னர் குணமடைந்தார்.

வைரஸ் தொற்று பாதித்த 1,143 சுகாதார ஊழியர்களில், அதிகபட்ச எண்ணிக்கையாக 298 பேர் டாக்டர்கள் என்று லட்சுமணன் கூறினார். அதை தொடர்ந்து செவிலியர்கள் (162), கிளீனர்கள் (125), ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் (92) உள்ளனர். "மற்ற சுகாதார ஊழியர்கள்" என்ற பிரிவில் ஒன்றாக இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தரவு எண்ட்ரி ஆபரேட்டர்கள், அவசரகால மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆஷா தொழிலாளர்கள் எண்ணிக்கை (311) ஆக பதிவாகியுள்ளது.

இந்திய மருத்துவச்சங்கத்தின் (ஐ.எம்.ஏ) அசாம் பிரிவு, ஜூலை மாதம் "பல சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் நோயால் ஏன் பாதிக்கப்பட்டனர்; அத்துடன் பணி புரியவும் அனுமதிக்கப்பட்டது ஏன்" என்று விசாரணையை கோரியது.

கவுஹாத்தியில் பற்றாக்குறை பணியாளர்கள் கொண்ட கோவிட் 19 மருத்துவமனைகளில் சுகாதாரப்பணியாளர்களிடம் நாங்கள் பேசியதில் , அதிக வேலை மற்றும் தொற்றுநோயைக் குறைப்பதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறினர்; இதுபற்றி பின்னர் விவரிக்கிறோம். தரமற்ற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் குழப்பமான நிர்வாக முடிவுகள் குறித்தும் அவர்கள் புகார் கூறினர்; அது மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

ஜூலை வரை, ஜி.எம்.சி.எச். இல் ஆலோசனைக்கு முன்னர் வெளிநோயாளிகள் பரிசோதிக்கப்படவில்லை என்று இந்தியா ஸ்பெண்டிடம் பேசிய மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணர் கூறினார். நகரத்தில் சமூகப்பரவல் ஏற்பட்டும் மற்றும் ஜி.எம்.சி.எச். இன் பிரத்யேக கோவிட்19 மருத்துவமனையாக வகைப்படுத்தப்பட்ட போதும், இப்போக்கு இருந்தது. "இப்போது நாங்கள் நோயாளிகளை பரிசோதித்து வருகிறோம், ஆனால் யாராவது சுறுசுறுப்பாக இயங்கினால் ஆர்டி-பி.சி.ஆரின் சோதனை முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்க முடியாது" என்று மருத்துவர் கூறினார். "நோயாளியின் நிலையை அறியாமல் நாங்கள் சுமார் 20 பிரசவங்களைச் செய்துள்ளோம் அல்லது எதிர்மறை அதிவேக சோதனை முடிவுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்" என்றார்.

பாதிக்கப்பட்ட 298 மருத்துவர்களில், 128 (43%) பேர் கம்ரூப் மெட்ரோ பகுதியை சேர்ந்தவர்கள் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் மொத்தம் 166 சுகாதார ஊழியர்கள் கோவிட் நேர்மறை சோதனை செய்துள்ளனர், அவர்களில் 66 பேர் அரசுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது கம்ரூப் மெட்ரோ பகுதி சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் கணேஷ் சைக்கியாவின் கூற்றாகும்.

கம்ரூப் மெட்ரோ பகுதி வடகிழக்கில் மிகப்பெரிய வணிக மாவட்டமாகும்; இதில் கவுஹாத்தி மற்றும் மாநில தலைநகர் திஸ்பூர் ஆகியன அடங்கும். அத்துடன், இப்பகுதிக்கான மருத்துவ மையமாகவும் உள்ளன. மே மாதத்தில் இருந்து வடகிழக்கு பகுதிக்கு வெளியே குடியேறியவர்கள் மீண்டும் திரும்பி வரத்தொடங்கியதும், ஊரடங்கு முதலில் தளர்த்தப்பட்ட பிறகு, மே 8 ஆம் தேதி நான்கு என்றிருந்தது, ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் 16,105 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், ஜி.எம்.சி.எச். இல் உள்ள சூப்பர்ஸ்பெஷாலிட்டி கோவிட் -19 வார்டில் பணியாற்றிய உட்சுரப்பியல் துறையின் பதிவாளர் சமிரான் தாஸ், கோவிட் பணியில் இருந்தபோது நான்கு மருத்துவர்கள் மட்டுமே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். "மீதமுள்ளவர்கள் மருத்துவமனைகளில் உள்ள பொதுவார்டுகள் வாயிலாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து எங்கள் நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு ஆன்டிஜென் சோதனைகளை கட்டாயமாக்கினோம், ”என்று அவர் கூறினார்.

தேசிய அளவில் நேர்மறை சோதனை செய்த சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் கடைசி தொகுப்பு - மே 23 வரை 1,073 பேர் - ஜூன் மாதத்தில் இந்தியன் ஜோர்னல் ஆப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. அதே மாதத்தில், டெல்லியின் முக்கிய மருத்துவமனைகளில் 1,200-க்கும் மேற்பட்ட சுகாதாரப்பணியாளர்கள் மார்ச் மாதத்தில் இருந்து நேர்மறை கண்டறியப்பட்டதாக, நியூஸ் 18 தரவு தெரிவித்தது.

ஆகஸ்ட் 7 அன்று நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், மகாராஷ்டிரா சுகாதார ஊழியர்கள் இடையே நோய்த்தொற்று விகிதம் - 21% - தேசிய சராசரியான 7% ஐ விட மிக அதிகம் என்று மகாராஷ்டிரா அரசிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அகர்வாலின் மதிப்பீடுகளுக்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆகஸ்ட் இறுதிக்குள், கவுஹாத்தியில் 30,000 வழக்குகளும், முழு மாநிலத்தில் 65,000 வழக்குகளும் இருக்கும் என்று மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜூலை நடுப்பகுதியில் தெரிவித்தார். இருப்பினும், ஆகஸ்ட் 8 ஆம் தேதி 15.9 நாட்கள் இரட்டிப்பாகும் என்று கூறப்படுகிறது, மாநிலத்தில் வழக்குகள் 57,714 ஆக உயர்ந்தபோது, கோவிட் 19 எண்ணிக்கை ஆகஸ்ட் 24 க்குள் 110,000 ஐ கடக்கக்கூடும்.

வரவிருக்கும் நெருக்கடியை கவனத்தில் கொண்டு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி, சர்மா வீட்டில் தனிமைப்படுத்த விரும்பும் நோயாளிகளுக்கு இலவச மருந்துகள், துடிப்பு கண்டறியும் ஆக்சிமீட்டர்களை அறிவித்தார். வீட்டு தனிமைப்படுத்தலை ஊக்குவிக்காத மாநிலக் கொள்கையில் இது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது - ஜூலை 1 அறிவிப்பில், வீட்டு தனிமைப்படுத்தலைத் தேர்ந்தெடுக்கும் ஒரு நோயாளி ஒரு பராமரிப்பாளர், ஒரு துடிப்பு ஆக்சிமீட்டர் மற்றும் அவசர நிலையை கையாள ஒரு தனியார் வாகனம் ஆகியவற்றை செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. எந்தவொரு சுகாதார விளைவுகளுக்கும் அரசு பொறுப்பேற்காது என்ற உறுதிமொழியையும் நோயாளி வழங்க வேண்டியிருந்தது.

கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் மூன்று வாரங்கள் கடும் ஊரடங்கு இருந்த போதும், தினசரி அறிவிக்கப்பட்ட தொற்று வழக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க சரிவைக் காணவில்லை.

ஊரடங்கை எளிதாக்கும் முதல் கட்டத்தில், ஜூலை 20 முதல் அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் 30-50% என்றளவில் மீண்டும் இயங்கக் தொடங்கின. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவரப்படி, அசாமில் 15,900 வழக்குகள் செயல்பாட்டில் இருந்தன, அத்துடன் ஏப்ரல் மாதத்தில் தொற்றுநோய் முதன்முதலில் மாநிலத்தைத் தாக்கியதில் இருந்து இதுவரை 121 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 4,720 செயலில் உள்ள வழக்குகளும், 46 இறப்புகளும் கம்ரூப் மெட்ரோ பகுதியில் பதிவாகியுள்ளன.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி, மாநிலத்தின் அதிகபட்ச ஒருநாள் தொற்று பாதிப்பாக 4,593 வழக்குகள் பதிவாகின. அதிகபட்ச சோதனைகள் - 143,109 - நடத்தப்பட்டதில் 632 (மாநிலத்தில் மிக உயர்ந்ததாக) கம்ரூப் மெட்ரோ பகுதியில் புதிய வழக்குகள் கண்டறியப்பட்டன. மீட்பு வீதம் (65.3%) தேசிய சராசரியை விட இங்கு (70.77%) குறைவாக உள்ளது. இருப்பினும், மாநிலத்தின் இறப்பு விகிதம் 0.23% என்பது, தேசிய சராசரியில் பத்தில் ஒரு பங்கு (1.96%). சரிசெய்யப்பட்ட வழக்கு இறப்பு விகிதம் அல்லது அறியப்பட்ட விளைவுகளுடன் 100 கோவிட்19 வழக்குகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை, தேசிய சராசரியான 2.7% உடன் ஒப்பிடும்போது இன்னும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் - 0.36% ஆக உள்ளது.

அனைத்து கோவிட்19 நோயாளிகளையும் கண்மூடித்தனமாக அனுமதித்தல்

கோவிட் நோயாளிகளை கையாள்வது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்த வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு ஜூலை 7 ஆம் தேதி ஐ.எம்.ஏ-இன் மாநில பிரிவு அரசுக்கு அறிவுறுத்தியது, இது "மருத்துவ ரீதியாக அமர்த்தப்பட்டவர்களுக்கு" மிக லேசாக / லேசாக மற்றும் மிதமானதாக அல்லது கடுமையாக உள்ள அறிகுறிகளை மட்டுமே மருத்துவமனையில் கவனிக்க பரிந்துரைத்தது.

கடந்த ஜூலையில் அரசு வெளியிட்ட அறிவிப்பு, வீட்டுத் தனிமைப்படுத்தலை ஊக்கப்படுத்துவதை தெளிவுபடுத்தியது, ஏனெனில் வீட்டுப் பராமரிப்பில் இருப்பவர்களைக் கண்காணிக்க போதுமான பணியாளர்கள் இல்லை, அவர்கள் ஆபத்தான கட்டத்தை எட்டினால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போதுமான ஆம்புலன்ஸ்கள் இல்லை. "ஒரு நோயாளி தன்னை தனிமைப்படுத்தினாலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் நகரத்தில் சுற்றித் திரியும் பல நிகழ்வுகளை நாங்கள் கண்டிருக்கிறோம்," என்று அரசு முடிவை விளக்கி ஜி.எம்சி.எச்.-இன் சமிரான் தாஸ் கூறினார்.ஆனால், இந்தியா ஸ்பெண்ட் பேசிய பிற மருத்துவர்கள், கோவிட் பராமரிப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அறிகுறியற்ற மற்றும் லேசான அறிகுறி கொண்ட நபர்களை அனுமதிப்பதன் மூலம் மாநிலத்தின் சுகாதார அமைப்பு அதிக சுமைக்கு உட்பட்டது என்று கூறினார்.

தற்போதைய தொற்று பரவல் விகிதத்தில், கோவிட் பராமரிப்பு படுக்கைகள் விரைவில் தீர்ந்துவிடும் என்று பதஞ்சலி யோக்பீத் மிர்ஸாவில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் கூறினார், கிராமப்புற கம்ரூப்பில் கோவிட்19 பராமரிப்பு மையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் கவுகாத்தியில் இருந்து வழக்குகள் எடுக்கப்படுகின்றன. "கோவிட் பராமரிப்பு மையங்களிலேயே உரிய சமூக இடைவெளி கிடையாது," என்று பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த சரிவும் காணப்படாத போதுதான் மருத்துவர்களின் கோரிக்கைக்கு அரசு இறுதியாக பதில் அளித்துள்ளது என்று ஐ.எம்.ஏ இன் அசாம் பகுதி மாநில செயலாளர் ஹேமங்கா பைஷ்யா தெரிவித்தார். கோவிட் பராமரிப்பு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அவர்கள் தினசரி அடிப்படையில் விரிவாக்க முடியாது. படுக்கைகளை அதிகரித்தாலும் கூட அதை இயக்க மனித சக்தி தேவைப்படும், ”என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஓய்வு மற்றும் சோதனை விதிகள்

ஜூலை 6 ம் தேதி, மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, கோவிட் பணியில் உள்ள மருத்துவக்குழுக்களிடம் தொடர்ச்சியாக 11 நாட்கள் பணிக்கு பிறகு, ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டது, இதில் எதிர்மறை கண்டறியப்பட்டு இருந்தாலும் மூன்று நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வைக்கப்பட்டனர். இம்முடிவுக்கு ஐ.எம்.ஏ எதிர்ப்பு தெரிவித்தது; இது "முன்வரிசைப் பணியாளர்களை மனச்சோர்வடையச் செய்யும்" என்றது.

ஆன்டிஜென் சோதனைகள் குறைந்த உணர்திறன் கொண்டவை மற்றும் முடிவுகளை ஆர்டி-பி.சி.ஆர் உறுதிப்படுத்த வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது. பின்னர் அமைச்சகம் இந்த அறிவிப்பை திருத்தி, ஆர்டி-பி.சி.ஆர் சோதனை முடிவில் எதிர்மறை உறுதி செய்யப்பட்ட பணியாளர்கள் ஏழு நாட்கள் பணி, அதை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு தனிமைப்படுதல் என்று மாற்றியமைக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலைமைகளின் அடிப்படையில் ஐ.எம்.ஏ பல்வேறு வகையான அல்லது சுகாதாரத் தொழிலாளர்களின் தரத்திற்கு இடையில் பாகுபாடு காட்டவில்லை என்றாலும், திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அவசரகால பராமரிப்பு பிரிவுகளில் உள்ள மருத்துவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தாஸ் கூறினார். அவர்கள், "தீவிர நோயாளிகளுக்கு" சிகிச்சை அளிப்பவர்களாக இருந்தனர், கோவிட் பராமரிப்பு மையங்களில் லேசான / அறிகுறியற்ற நோயாளிகளைக் கையாள்வோருக்கு அல்ல.

ஆய்வக ஊழியர்களுக்கு அதிக வேலை

அசாமின் (ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 425 மாதிரிகள்) அதிக எண்ணிக்கையிலான சோதனை மையங்கள் மற்றும் வடகிழக்கில் திறன் இருந்தபோதும், அதன் குறைந்த சோதனை விகிதம் பற்றி, மே மாதத்தில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது. ஜூன் மாதத்தில் அசாம் அரசு கணிசமாக சோதனையை முடுக்கிவிட்டது - ஆகஸ்ட் 13 நிலவரப்படி, அசாமில் 1,573,800 மாதிரிகள் (ஒரு மில்லியன் மக்களுக்கு 45,893) சோதனை செய்யப்பட்டதாக, மாநில கோவிட் அறிக்கை தெரிவிக்கிறது. மாநிலத்தின் நேர்மறை விகிதம் 4.4% தேசிய சராசரியை விட 8.93% ஆக குறைவாக உள்ளது.

அசாம் மாநிலம், 686,305 ஆன்டிஜென் சோதனைகளை நடத்தியுள்ளது, இதில் கம்ரூப் மெட்ரோ பகுதியில் மட்டும் 123,201 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7.08% நேர்மறை கண்டறியப்பட்டவை, இது மாநிலத்தில் 5.19% என்பதை விட அதிகம். ஆர்.டி.- பிசிஆர் (RT-PCR) மற்றும் ட்ருநாட் (TrueNat) சோதனைகளுடன், ஆன்டிஜென் அடிப்படையிலான ஸ்டாண்டர்ட் கியூ கோவிட் -19 ஏஜி பரிசோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தது, அசாமில் சோதனை விகிதத்தை அதிகரிக்க உதவியது.

இருப்பினும், இந்த விரைவான சோதனை விகிதம் ஆய்வகங்களில் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பணி அழுத்தத்தை அதிகரித்துள்ளது என்று, திஸ்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையான ஜி.என்.ஆர்.சி-யின் (முன்பு கவுஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்பட்டது) நரம்பியல் அறுவை சிகிச்சை இயக்குனர் நவானில் பருவா கூறினார். "சோதனையில் அசாம் மிக அதிகபட்ச இடத்தில் இருப்பதாக அரசு கூறுகிறது, ஆனால் அதற்கு ஒரு விலை இருக்கிறது. ஜி.எம்.சி.எச் இன் நுண்ணுயிரியல் துறையில் பலர் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர்,”என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஜி.எம்.சி.எச் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் அதானு போரோ, 36, மே 2020 முதல் ஒன்பது மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிந்து வந்தார், கோவிட்19 தொற்று தொடர்பாக தினமும் நூற்றுக்கணக்கான மாதிரிகளை சேகரித்து சோதனை செய்தார். ஜூலை 18இல், அவருக்கு கோவிட் நேர்மறை உறுதி செய்யப்பட்டது.

"கோவிட் பணியில் சுகாதார ஊழியர்களை பரிசோதிக்கும் நடமாடும் குழுவுடன் நான் பயணிக்க தொடங்கியவுடன் எனக்கு காய்ச்சல் அல்லது சளி இல்லை என்றாலும் நான் பலவீனமாக இருப்பதை உணர ஆரம்பித்தேன்," என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். போரோ அறிகுறியில்லாமல் இருந்தார், அவர், சுகாதார ஊழியரான தனது கர்ப்பிணி மனைவி பற்றி கவலையடைந்தார். அசாம் அரசு விதிகளின்படி, மருத்துவமனை வெளியேற்றத்திற்குப் பிறகு ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, அவர் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

போரோ போன்ற ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், சிக்கலான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து ஒருநாளைக்கு ஒன்பது மணிநேரம் என, தொடர்ந்து 10 நாட்கள் வேலை செய்கிறார்கள்; ஒரு நாளைக்கு 100-150 மாதிரிகள் சேகரித்து பரிசோதிக்கின்றனர். 10 நாட்களின் முடிவில், அவை ஆர்டி-பி.சி.ஆரால் சோதிக்கப்படுகின்றன, மேலும் எதிர்மறையான முடிவு வந்தால், ஏழு நாள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும்படி கேட்கப்படுகிறது.

"தொற்றுக்கு தடுப்பூசி வரும் வரை, எங்களுக்கு வேறு வழியில்லை [ஆனால் நீண்ட வேலை நேரத்தை கையாள வேண்டியுள்ளது], எங்களுக்கு பணியாளர் பற்றாக்குறையும் உள்ளது," என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளால் தனியார் துறையில் இருந்து "தருவித்த" பயிற்சி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்களது தனியார் ஆய்வகங்களுக்கு மாதிரிகள் சோதனை செய்வதற்காக திரும்பிச் சென்றுள்ளதாக ஜிஎன்ஆர்சியின் பார்வா கூறினார்.

நகரில் ஒரேநாளில் 5,000 மாதிரிகளை பரிசோதிக்கும் நோக்கத்துடன், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்க அரசு முன்னுரிமை அளித்துள்ளது. "எங்கள் நிர்வாகம், பிற மாவட்டங்களை சேர்ந்த மனிதவளத்துடன், குறிப்பாக ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் எங்களுக்கு உதவுகிறது" என்று மாநில என்.எச்.எம் மாவட்ட திட்ட மேலாளர் ப்ரீத்தி ரேகா தத் கூறினார். மூன்று வாரங்களுக்கு முன்பு, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான 150 காலியிடங்களை மாநில என்.எச்.எம் அறிவித்தது. அனைத்து காலியிடங்களும் நிரப்பப்பட்டு இருப்பதை லட்சுமணன் உறுதிப்படுத்தினார்; மேலும் "முந்தைய மாதங்களில் அதிகமான ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர்" என்றார் அவர்.

தொடர்பு தடமறிதலுக்கு போதிய ஆட்கள் இல்லை

நோயியல் ஆய்வகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பில் ஊழியர்களின் பற்றாக்குறை மட்டுமின்றி, தொடர்புத் தடமறிதல் மற்றும் பரிசோதனைக்குத் தேவையான சுகாதார ஊழியர்களுக்கும் பற்றாக்குறை உள்ளனர். சமூக ஊழியர்கள் அல்லது ஆஷாக்களுடன் ஜி.எம்.சி.எச். மற்றும் என்.எச்.எம். அதிகாரிகளின் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களும் இதில் உள்ளனர்.

ஜூன் மாதத்தில் ஆர்டிகல் -14 மற்றும் பெஹான்பாக்ஸ் வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பில், அசாம் உட்பட நாடு முழுவதும் உள்ள ஆஷா தொழிலாளர்கள் தங்களது மாதாந்திர மதிப்பூதியம் அல்லது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.1000 சரியான நேரத்திற்கு வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தனர். ஆகஸ்ட் 6 ம் தேதி இந்தியா 20 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளை கடந்துவிட்ட நிலையில், 30 லட்சத்திற்கும் அதிகமான சமூதாயத்தொழிலாளர்கள் சிறந்த வருமானம் மற்றும் அரசு ஊக்கத்தொகை மற்றும் இறப்பு நேரிட்டால் அதற்கு காப்பீட்டை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினர்.

கம்ரூப் மெட்ரோ பகுதியில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் வழக்குகள் இருப்பதால், ஒவ்வொரு நோயாளியின் அனைத்து தொடர்புகளையும் கண்டுபிடித்து பரிசோதிப்பதற்கான ஆதார வளங்கள் மாவட்டத்திடம் இல்லை என்று என்.எச்.எம் பிரீதி ரேகா தத்தா கூறினார். ஆரம்பத்தில், ஜூலை மாதத்தில் அசாம் அரசு இளங்கலை மருத்துவ மாணவர்களை கோவிட்19 பணியில், தொடர்புத் தடமறிதலுக்காக அமர்த்தி, பின்னர் அவர்களை பராமரிப்பு மையங்களின் பணிக்கு மாற்றியது.

இந்தியா ஸ்பெண்ட் பேசிய அரசு அதிகாரிகள், தடமறிதல் இப்போது பெரும்பாலும் முதன்மை தொடர்புகளுக்கு என்றளவில் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதை ஒப்புக்கொண்டனர். வழக்குகள் ஒற்றை இலக்கங்களில் இருக்கும்போது விரிவான தடமறிதல் சாத்தியமாகும் என்று கம்ரூப் மெட்ரோ பகுதி துணை ஆணையர் பிஸ்வாஜித் பெகு கூறினார்.

"இப்போது நாங்கள் பல கண்காணிப்பு மையங்களையும், 12 மருத்துவமனைகளையும் திறந்துள்ளோம். எனவே தொடர்புத் தடமறிதல் இப்போது நேர்மறையான நிகழ்வுகளின் பகுதிக்கு என்றளவில் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது, ”என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

மன அழுத்தம், பதட்டம்

உலகளவில் அனைத்து கோவிட்19 நோயாளிகளில் 10% சுகாதார ஊழியர்கள்தான் என்று, ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனம் கூறியது; அத்துடன், "பல சுகாதார ஊழியர்கள் பல மாதங்கள் மிகவும் மன அழுத்த சூழலில் பணிபுரிந்தபின் உடல் மற்றும் உளவியல் சோர்வுக்கு ஆளாகின்றனர்" என்று தெரிவித்தது.

சுகாதார ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வழக்குகள் அவர்கள் இடையே "மன அழுத்தம், பதட்டம் மற்றும் பீதி" உண்டாக்கி, வழக்குகளுக்கு வழிவகுக்கிறது என்று கவுஹாத்தியை சேர்ந்த மனநல மருத்துவர் சங்கீதா தத்தா கூறினார். "பலர் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்; அவர்களால் வைரஸ் வீட்டிற்குள் வந்துவிடக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள்," என்று தத்தா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். வைரஸின் தடம் மாறும் தன்மையைக் கருத்தில் கொண்டு, சுகாதார ஊழியர்கள் "அறியப்படாத அறிகுறி” பற்றி அச்சத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

ஆலோசனைகள் வழங்கல் தவிர, பீதி தாக்குதல்கள் மற்றும் தூக்கமின்மை குறித்து தெரிவிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தன்சா ஆன்சியோலிடிக்ஸ் (பதட்ட எதிர்ப்பு) மற்றும் ஆண்டிடிரஸன் மருந்துகளை பரிந்துரைத்து வருகிறார். "சுகாதார வல்லுநர்கள் சோர்வடைந்து இப்போது எரிந்து கொண்டிருக்கிறார்கள்," என்று தத்தா கூறினார். "கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் கடினமாக உழைத்தும் அதற்கான முடிவுகளைப் பார்க்காதது அவர்களின் மன உறுதியைப் பாதித்துள்ளது" என்றார்.

புதியதாக ஆட்சேர்ப்புகளால், சில வாரங்களுக்கு முன்பு போரோ நடமாடும் பரிசோதனை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு வாரத்திற்குள் தனது பணிக்கு திரும்புவார். வைரஸுக்கு எதிரான போராட்டத்தின் அறியப்படாத காலவரிசை குறித்த அவநம்பிக்கை சில நேரங்களில் அவரை பிடிக்கிறது என்றார். "நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம், ஆனால் இன்னும் எந்த முடிவுகளையும் காணவில்லை," என்று அவர் கூறினார்.

(சிட்ல்ஹோ, அசாமின் கவுஹாத்தியில் வசிக்கும் பத்திரிகையாளர். வட கிழக்கு பிராந்திய விவகாரம் தொடர்பாக பல தேசிய மற்றும் சர்வதேச வெளியீடுகளில் பங்களித்துள்ளார். அவரை ட்விட்டரில் akesmakesyoucakes என்று அணுகலாம்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story