ஏன் அப்ஸானா பானுவின் வாழ்க்கையை மாற்றுவது உ.பி. மற்றும் இந்தியாவை உயர்த்தும்

ஏன் அப்ஸானா பானுவின் வாழ்க்கையை மாற்றுவது உ.பி. மற்றும் இந்தியாவை உயர்த்தும்
X

உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், 10 ஆம் வகுப்புக்கு மேல் படித்த 16% பெண்களில், 12 ஆம் வகுப்பு வரை படித்த அப்சனா பானுவும் ஒருவர். எனினும் அவர், தாய்-சேய் சுகாதாரத்தேவைகளை அறியாத எடை குறைந்த குழந்தையின் எடை குறைந்த தாய். அப்சானா பானுவும், அவரது 2.6 கிலோ குழந்தையும், இம்மாநிலத்தில் வளரிளம் பருவத்தினர், பாலியல் சுகாதார சேவைகளின் தோல்விக்கான குறியீடாக உள்ளனர்.

சீதாபூர், உத்தரபிரதேசம்: அப்சனா பானுவுக்கு வயது 18, மற்றும் அவரது 5’7 உருவம் பலவீனமானமாக இருக்க, மென்மையான எலும்புகள் கொண்ட மூன்று நாள் வயது குழந்தை தொட்டிலில் இருந்தது. இக்கட்டத்தில் அந்த குழந்தை 3.3 கிலோ என்ற ஆரோக்கிய நிலைக்கு பதிலாக 2.6 கிலோ எடை கொண்டிருந்தது.

அப்சனா பானுவின் நிலைமை, பல லட்சக்கணக்கான இந்திய தாய்மார்களையும் குழந்தைகளையும், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட, ஏழ்மையான மாநிலங்களில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கல்வியின்மை மற்றும் போதுமான அளவுக்கு சம்பாதிக்க இயலாது போன்றவை, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதாக, பல ஆய்வுகளின் முடிவு தெரிவிக்கிறது.

அப்சனா பானு திருமணம் செய்து கொண்டபோது அவருக்கு வயது 18; அவர் கர்ப்பம் ஆன போது எடை குறைவாக இருந்தார். கர்ப்பமடைந்து எட்டாவது மாதத்தில் 51 கிலோ எடை கொண்ட அவருக்கு, ஒன்பதாவதுமாதத்தில் மேலும் 200 கிராம் மற்றுமே எடை அதிகரித்து; எடை குறைந்த குழந்தையின் விளைவுகளை அவர் தெரியாததால், அதுபற்றி அவர் அதிகம் யோசிக்கவில்லை.

கிராமப்புறமான சீதாபூரில் சராசரிக்கும் மேலான கல்வியாக, 12 ஆம் வகுப்பு வரை அப்சனா பானு படித்தார். அங்கு 16.4% க்கும் அதிகமான பெண்கள் 10ஆம் வகுப்பு கூட படித்திருக்கவில்லை. இது உ.பி.யில் 32.9% மற்றும் நாடு முழுவதும் 35.7% என்ற விகிதம் கொண்டுள்ளது. ஆனால் அரசின் சுகாதார அமைப்பு வழங்க வேண்டிய கவனம் அல்லது ஆலோசனையை, அவர் ஒருபோதும் பெறவில்லை.

உத்தரபிரதேசத்தின்-உ.பி. (UP) சராசரி 21% உடன் ஒப்பிடும்போது, திருமணமான பெண்களில் 36% இளம் பருவத்தினர் உள்ள சீதாபூருக்கு இது மிகவும் முக்கியமானது என, 2015-16 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) - அல்லது என்.எப்.எச்.எஸ். 4 - தரவுகள் கூறுகின்றன; உத்திரப்பிரதேசம், தனிநபர் வருமானத்தில் தேசிய அளவில் 27% உள்ளது; இந்தியாவின் அதிக மக்கள் தொகை மற்றும் மூன்றாவது ஏழ்மையான மாநிலம் ஆகும்.

44 லட்சம் மக்கள் தொகை உள்ள சீதாபூர், உத்தரபிரதேசத்தில் உள்ள 25 "அதிக முன்னுரிமை தர வேண்டிய மாவட்டங்களில்" ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது;, மேலும் இந்தியா முழுவதும் குழந்தைத் திருமணம் மற்றும் இளம் பருவ கர்ப்பம் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய 184 மாவட்டங்களில் ஒன்றாகும்.

ஆனால், இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பத்தை சரிசெய்யும் திட்டமான, ராஷ்டிரிய கிஷோர் ஸ்வஸ்த்யா காரியக்ரம் - ஆர்.கே.எஸ்.கே (RKSK) என்ற ஐந்து ஆண்டுகளே நிரம்பிய தேசிய இளைஞர் சுகாதார திட்டம், சீதாபூருக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் -என்.எச்.எம் (NHM) 1% நிதியுதவியை வழங்கியது; இதனால் ஓராண்டிற்குள் அதாவது 2016-17 இல் 3% வீழ்ச்சியடைந்தது.

இந்த நிதியில், மூன்றில் ஒரு பங்கு ஒருபோதும் செலவிடப்படவில்லை என்று, என்.எச்.எம். நிதி-2019 பகுப்பாய்வு செய்த புதுடெல்லியை சேர்ந்த அக்கவுன்டபிலிட்டி இனிஷியேட்டிவ் ஆய்வு தெரிவிக்கிறது. சில முன்னேற்றங்கள் இருந்தன; அவற்றை நாங்கள் பின்னர் விளக்குகிறோம்.

Source: Accountability Initiative, 2019 ((Data shared with IndiaSpend)

இளம்பருவ பாலியல் ஆரோக்கியம் குறித்த கவனத்தை விரிவுபடுத்துதல் மற்றும் அந்த தேவைகளை பரந்த சுகாதார திட்டங்கள் மற்றும் விளைவு மாற்றங்களில் இணைப்பது போன்ற அதன் நோக்கங்களை பூர்த்தி செய்ய ஆர்.கே.எஸ்.கே தவறியது என்று, அரசு செய்தித்தொடர்பாளரே ஒப்புக் கொண்டுள்ளார்.

"திட்டத்தின் உள்ளார்ந்த சிக்கல் என்னவென்றால், ஆர்.கே.எஸ்.கே, குறைந்த முன்னுரிமை கூறுகளாக என்.எச்.எம்மில் காணப்படுகிறது," என்று, சீதாபூரின் என்.எச்.எம். மாவட்ட திட்ட மேலாளர் சுஜித் வர்மா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "நிறுவன விநியோகங்கள், தொழுநோய், காசநோய் திட்டங்கள் போன்ற கோரிக்கைகளை ஆர்.கே.எஸ்.கே உணரவில்லை" என்ற அவர், ஒரு மருத்துவமனையில் விவாதிக்க போதுமானதாக பருவ வயது சுகாதார பிரச்சினைகளை சமூகம் கருதுவதில்லை, என்றார்.

ஆஷா (ASHA - அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்) மற்றும் சக கல்வியாளர்கள் கையாளக்கூடிய, சமூகத்தில் இருந்து தோன்றும் ஒரு கோரிக்கையை வளர்க்க வேண்டும்," என்றார் வர்மா.

‘கோரிக்கையை’ உருவாக்குதல்

அப்சனா பானு மற்றும் சீதாபூர் விவகாரத்தில், கோரிக்கை வெளிப்படையாக நிறைவேறவில்லை. வர்மா கூறியது போல், தேவையை உருவாக்குதல் பரந்த தாக்கங்களைக் கொண்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதை "முக்கியமான" 1,000 நாள் சாளரம் ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் தொடக்கத்தில் இருந்து அந்த குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் வரை - என்று வல்லுநர்கள் அழைக்கின்றனர்; இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 15-46 பில்லியன் டாலர் (ரூ.1.03 லட்சம் கோடி முதல் ரூ .3.17 லட்சம் கோடி வரை) உயர்த்த முடியும் என்று, உலகளாவிய ஆலோசனை அமைப்பான சேவ் தி சில்ரன் 2013 அறிக்கை தெரிவிக்கிறது. இது இந்தியாவின் 2018-19 சுகாதார வரவு செலவுத் திட்டத்தின் ஆறு மடங்கு அளவு.

குழந்தை திருமணம் மற்றும் ஆரம்பகால கர்ப்பம் அதிகமுள்ள சீதாபூரில் வசிக்கும் பல பெண்களின் பிரதிநிதியாக அப்சனா பானுவி நிலை உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்: சீதாரில்15-19 வயதுக்கு இடைப்பட்ட 7.3% பெண்கள் ஏற்கனவே தாய்மார்களாக உள்ளதாக, என்.எப்.எச்.எஸ்.-4 தரவுகள் கூறுகின்றன. இதில், உ.பி.யின் சராசரி பாதியாகவும் (3.8%); இந்தியாவின் சராசரியை விட (7.9%) சற்று குறைந்தும் உள்ளது என்றாலும், சீதாபூரில் 35.5% பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர்; இது, உ.பி.யின் சராசரி 21% மற்றும் இந்திய சராசரி 27% ஐ விட அதிகமாக உள்ளது.

குழந்தை திருமணங்களை 51% என்றளவுக்கு குறைக்க இந்தியாவுக்கு 19 ஆண்டுகள் பிடித்தன என்று, சேவ் தி சில்ரன் அமைப்பின் உலகளாவிய குழந்தை பருவ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறைய, கிராமப்புறங்களில் இளம்பருவ ஆரோக்கியத்திற்கு உடனடி கவனம் தேவை. போதுமான தரவு இல்லாமல், இது கடினமாக இருக்கலாம்.

"வளரிளம் பருவத்தினர் (10-14 வயது) குறித்து போதுமான தகவல்கள் இல்லை; மேலும் வளரிளம் மற்றும் இளம் பருவத்தினரின் வித்தியாசத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்,” என்று உலகளாவிய ஆராய்ச்சி அமைப்பான பாபுலேஷன் கவுன்சில் அமைப்பின் இந்திய இயக்குனர் நிரஞ்சன் சாகுர்த்தி தெரிவித்தார். "இனப்பெருக்க ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த இளம் பருவத்தினர் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பது குறித்து ஒரு தெளிவு பெறலாம்" என்றார் அவர்.

அப்சனா பானோவின் கல்வியானது, பாலியல் அல்லது சுகாதார பிரச்சினைகள் குறித்த அறிவு பெறும் வகையில் அவளை தயார்படுத்தவில்லை. அவர் ஒரு மதரஸா அல்லது இஸ்லாமிய பள்ளியில் படித்தார்; மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 90 கி.மீ வடக்கே உள்ள பார்செண்டி கிராமத்தில் இருக்கும் அவரது மண் மற்றும் வைக்கோல் வேயப்பட்ட குடிசை வீட்டிற்கு இதுவரை எந்த சுகாதார ஊழியரும் அல்லது சுகாதார திட்டமோ வரவில்லை. அவர்கள் நினைத்தால் - உண்மையில் இந்தியாவின் வளமான மாநிலங்களில் ஒன்றான கேரளாவை போல் மாற்றச் செய்ய முடியும்.

அப்சனா பானுவின் கணவர் முகமது கரீம், 21, தனது மனைவிக்கு அறிவுரை கூறும் நிலையில் இல்லை: அவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார் மற்றும் "டேப்லெட் தயாரிக்கும் நிறுவனத்தில்" சிறிது நேரம் பணியாற்றி, அதை வைத்து ஈட்டினார்.

கர்ப்பத்திற்கு முன்பு, அப்சனா பானு அங்கன்வாடி - அல்லது அரசு சுகாதார மையத்திற்கு - ஒருமுறை மட்டுமே சென்றுள்ளார். அவர் முதன்முதலில் பார்வையிட்டது கர்ப்பமாகி ஆறாவது மாதத்தில் தான். இது பரிந்துரைக்கப்பட்டதை விட மூன்று மாதங்கள் தாமதம்; அவருக்கு போட வேண்டிய இரண்டுக்கு பதிலாக ஒரு டெட்டனஸ் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது. அவருக்கு இரும்பு மற்றும் கால்சியம் மாத்திரைகள் வழங்கப்பட்டன; ஆனால் அவை வயிற்றுப்போக்கு காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டதாக அவர் கூறினார்.

அதன் பிறகு, அப்சனா பானு மீண்டும் ஒருபோதும் அங்கன்வாடி மையத்திற்கு செல்லவில்லை.

ஊட்டச்சத்து குறைபாடு சுழற்சி

எடை குறைந்த தாய்மார்களின் குழந்தைகள் இருப்பதால், அப்சானா பானோவின் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடையதாக வளர ஒவ்வொரு வாய்ப்பும் உள்ளது; மேலும் அவர் குறைவாக கல்வி கற்றவராகவும், உற்பத்தி திறன் மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

இந்தியாவின் குழந்தை பருவ இறப்புகளில் பாதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும், மேலும் அவை சிறு வயதிலேயே பாதிக்கப்பட்டால், உணர்ச்சி, அறிவாற்றல், சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை பாதிக்கும் நீண்டகால விளைவுகள் இருக்கலாம். அதிக படித்த பெண்களைக் கொண்ட மாநிலங்கள் ஆரோக்கியமான குழந்தைகளைக் கொண்டிருந்தன என்று என்.எப்.எச்.எஸ் -4 தரவை பகுப்பாய்வு செய்து, மார்ச் 2017இல் இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்தது.

குழந்தை மற்றும் தாய்வழி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்தியாவில் ஏற்படும் நோய் சுமை, கடந்த 1990 முதல் குறைந்து வருகிறது; 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த நோய் சுமைகளில் 15% ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருந்தது என்று, லாப நோக்கற்ற, அரசு சாராத சுயேட்சையான மருத்துவ முகமையான இந்தியா: ஹெல்த் ஆஃப் தி நேஷன் ஸ்டேட்ஸ் தயாரித்த அறிக்கை தெரிவிக்கிறது.

தேசிய அளவில், 2015-16 ஆம் ஆண்டில் குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு விகிதத்தில், 9.6 சதவிகிதம் குறைப்பு இருந்தது. இதில், உ.பி.யின் முன்னேற்ற விகிதம், 10.5 புள்ளிகளாக இருந்தது என்பது, என்.எப்.எச்.எஸ். தரவுகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ததில் தெரியவருகிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட, உலகின் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் (46.6 மில்லியன்) உள்ள இந்தியா, உலக சுகாதார அமைப்பின் (WHO) 2025 உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை அடையக்கூடிய பாதையில் இல்லை என்று, 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது.

என்.எப்.எச்.எஸ் -4 தரவுகள் படி, இரண்டு வயதுக்குட்பட்ட இந்திய குழந்தைகளில், 90.4% பேர் போதுமான உணவைப் பெறவில்லை. 6-23 மாத வயதுடைய குழந்தைகளில் சுமார் 18% இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டனர், மேலும் இந்த வயதினரில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இரத்த சோகை கொண்டவர்கள். சுமார் 54% பேர் வைட்டமின்- ஏ நிறைந்த உணவுகளை உட்கொள்கின்றன; குழந்தை பருவத்தில் இச்சத்து இல்லாது போனால் பார்வைக்குறைபாடு ஏற்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக இருக்கும்.

இந்த சூழ்நிலையை தீர்க்க, அரசின் சுகாதார சேவைகள், இப்பிரச்சினையின் வேருக்கு செல்ல வேண்டும்: அதாவது தாய்மார்களிடம். ஆனால், தாய்மார்கள் இளம் பருவத்தினராக இருக்கும்போது அதை நிவர்த்தி செய்வது எளிதல்ல என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இளம்பருவ ஆரோக்கியம் ஏன் முக்கியமானது

இளம் வயதினரின் ஆரோக்கியம், சுகாதார தலையீடுகளுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டம் என்று, நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

“நோய் சுமைகளில் 33% க்கும் அதிகமானவை மற்றும் பெரியவர்களிடையே கிட்டத்தட்ட 60% அகால மரணங்கள் நடத்தைகள் அல்லது நிபந்தனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்; இது இளமை பருவத்தில் தொடங்குகிறது அல்லது நிகழ்கிறது, ” என்று, உலக சுகாதார அமைப்பின் 2002 அறிக்கை கூறுகிறது.

இளம் பருவ பெண்கள் மற்றும் இளம் பெண்களின் ஆரோக்கியம் குழந்தைகளின் பிறப்பு எடை மற்றும் குழந்தை உயிர்வாழ்வோடு இணைக்கப்பட்டுள்ளது. பருவ வயதுடைய பெண்கள், கர்ப்பம் மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு மிகவும் பாதிக்கப்படுகின்றனர்; மேலும், இதில் முன்கூட்டியே பிரசவம் மற்றும் எடை குறைந்த குழந்தைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இளம் பருவ தாய்மார்களில் அதிக தாய் மற்றும் குழந்தை இறப்பு மற்றும் சிறியது. ஆனால் மொத்த கருவுறுதல் வீதம் -டி.எப்.ஆர் (TFR)அல்லது ஒரு பெண்ணின் குழந்தைகளின் எண்ணிக்கையில் இளம் பருவத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது.

உ.பி.யின் டி.எஃப்.ஆர் 3.1 ஆகும், இது கேரளாவில் 1.8, தமிழ்நாட்டில் 1.6 மற்றும் மேற்கு வங்கத்தில் 1.6 உடன் ஒப்பிடும்போது, மாற்று விகிதமான 2.1 உடன் ஒப்பிடும்போது, மக்கள்தொகை அப்படியே உள்ளது.

இந்த தகவல்கள் இளம்பருவ ஆரோக்கியத்தை ஒட்டுமொத்த தாய்வழி மற்றும் குழந்தை ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை விளக்குகின்றன என்று, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 2014 இளம்பருவ-சுகாதார உத்தி குறித்த கட்டுரை கூறுகிறது.

உ.பி.யில் ஆர்.கே.எஸ்.கே: உன்னத நோக்கங்கள், மெதுவான செலவினம்

கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆர்.கே.எஸ்.கே திட்டம், இளம்பருவ ஆரோக்கியம் தொடர்பான முன்னுரிமைகளை அரசு சுகாதார மையத்தில் வைக்கும் முதல் திட்டமாகும்.

பின்னர் ஆர்.கே.எஸ்.கே திட்டம், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் இருந்து ஊட்டச்சத்து, தொற்றுநோய் அல்லாதவை மற்றும் பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றை விரிவுபடுத்தியது; பின்னர் அதன் கவனத்தை குணப்படுத்துவதில் இருந்து இளம் பருவத்தினரை தங்கள் சொந்த சூழலில் சென்றடைய நோக்கமாக மாற்றிக் கொண்டுள்ளது.

இந்த நோக்கங்கள் சீதாபூரில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை; ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 முதல் 19 வயது வரையிலான சிறப்புப் பயிற்சி பெற்ற பதின்ம வயதினர் “சம கல்வியாளர்கள்” என்று அழைக்கப்படுபவர்களின் பயிற்சி, மற்ற 24 “உயர் முன்னுரிமை மாவட்டங்கள்” போலவே இங்கும் திட்டமிடப்பட்டது. இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் சுகாதார மையம் மற்றும் இளம் பருவ ஆலோசகர் இருக்க வேண்டும்.

உண்மையில், ஆர்.கே.எஸ்.கே மற்றும் என்.எச்.எம் இரண்டுமே, தங்களுக்கு கிடைக்கும் பணத்தை கூட செலவிட போராட வேண்டியுள்ளது.

கடந்த 2017-18இல், உ.பி.யில் பாதிக்கும் மேற்பட்ட (55%) என்.எச்.எம் நிதிகள் பயன்படுத்தப்பட்டன; இது, 2016-17 ஆம் ஆண்டில் 45% என்பதை விட முன்னேற்றம் என்றாலும், நாம் ஏற்கனவே சொன்னது போல், என்.எம்.எச் செலவினத்தின் விகிதம் ஆர்.கே.எஸ்.கே செலவு, 2016-17ல் 3% ஆக இருந்தது, 2017-18 இல் 1% ஆக குறைந்தது.

ஆர்.கே.எஸ்.கே திட்டத்திற்காக, 2018-19ல் சீதாப்பூர் ரூ .1.72 கோடி வழங்கப்பட்டது; இது, 2017-18ல் வழங்கப்பட்ட ரூ .1.42 கோடி என்பதில் இருந்து 21% அதிகரிப்பு ஆகும். இந்த நிதிகளின் பயன்பாடு 2017-18 ஆம் ஆண்டில் 41% என்பது, 2018-19 இல் 45% ஆக அதிகரித்துள்ளது.

Source: Accountability Initiative, 2019 (Data shared with IndiaSpend)

"சீதாபூர் ஒரு தெளிவான குறைந்த பயன்பாட்டு நிலையை பிரதிபலிக்கிறது; பணம் ஒதுக்கப்பட்ட போதும் கூட, மாவட்டங்கள் தங்களுக்கான முழுத் தொகையையும் பெறவில்லை,” என்று, பாலியல் சுகாதார பிரச்சினைகள் தொடர்பான ஆராய்ச்சியாளரும், அரசுடன் பணியாற்றி வரும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்தார். "நிதிகள் பொதுவாக கடைசி இரண்டு காலாண்டுகளில் மட்டுமே விடுவிக்கப்படுகின்றன; அதனால் தான் பெரும்பாலான நிதி பயன்படுத்தப்படாமல் போகின்றன" என்றார் அவர்.

இளம் பருவ சுகாதார சேவைகளுக்கான தேவையின்மை பிரச்சனையில், ஆர்.கே.எஸ்.கே.யின் பெரும்பாலான செலவுகள் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மேலும் ஆஷாக்கள் மற்றும் சக கல்வியாளர்கள் போன்ற முன்னணி தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க செலவிடப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மீண்டும் பார்செண்டிற்கு திரும்புவோம். இங்கு, அப்சானா பானு தனது கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக கூறினார்; அவரை காதலித்து பானு கரம் பிடித்தார். ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள் நிறைந்த ஒரு சமூகத்தில், இதுபோன்ற பதின்பருவத்தினருக்கு காதல் என்பது ஒரு அரிதான உச்சம். அவர் மேலும் படிக்க விரும்பினாள். ஆனால், தனக்கு ஒரு குழந்தை இருப்பதால் இப்போது அவள் அதை எப்படி செய்வாள்? இதற்கு அப்சனா பானு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார்.

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story