ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் சூழலில் ஊட்டச்சத்து திட்டங்கள் 19% குறைவான நிதியை பெறுகின்றன

ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் சூழலில் ஊட்டச்சத்து திட்டங்கள் 19% குறைவான நிதியை பெறுகின்றன
X

புதுடெல்லி: இந்தியாவில் ஊட்டச்சத்து பிரச்சனைகளை பாதிக்கும் நிதி வள பற்றாக்குறைக்கு, பட்ஜெட் 2020 தீர்வை தரவில்லை என்று பட்ஜெட் குறித்த தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது. இந்தியாவில் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு அதிகளவில் நீடிப்பதால், ஊட்டச்சத்துக்கான பொது ஏற்பாடு முக்கியமானது.

முக்கியமான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைத்துள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (எம்.டபிள்யூ.சி.டி) இந்த நீண்டகால நிதியுதவி காரணமாக, இந்த ஒதுக்கீடுகள் அதன் உண்மையான தேவைகளை பிரதிபலிக்காது என்பதை தரவு காட்டுகிறது. அத்துடன், முக்கியமான ஊட்டச்சத்து முயற்சிகளை வழங்கும் முன்னணி தொழிலாளர்களுக்கு இழப்பீடுகளை மேம்படுத்த இந்த ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை.

சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (எம்.டபிள்யூ.சி.டி) மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளின் (ஐசிடிஎஸ்) ஐந்து முக்கிய ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களுக்கு ரூ. 27,057 கோடி (8 3.8 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அங்கன்வாடி சேவைகள் திட்டம் (முன்பு முக்கிய ஐ.சி.டி.எஸ்), போஷான் அபியான் (முன்னர் தேசிய ஊட்டச்சத்து இயக்கம்), ராஜீவ் காந்தி தேசிய கிரெச் திட்டம், பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (தாய்மார்களுக்கானதிட்டம்) மற்றும் வளரிளம் பருவ சிறுமிகளுக்கான திட்டம் ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் மூன்று வகை மக்கள்தொகை குழுக்களிடையே நேரடி ஊட்டச்சத்து குறுக்கீடுகளை உறுதி செய்கின்றன, அவை: 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்,வளரிளம் பரும பெண்கள், மற்றும் கர்ப்பிணி -பாலூட்டும் தாய்மார்கள்.

இந்த ஆண்டு ஒதுக்கீடு முந்தைய ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகள் அல்லது பிஇ-இல் (நெருங்கிவரும் நிதியாண்டுக்கு அரசு ஒதுக்கும் தொகை) இருந்து 3.7% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த உயர்வு கடந்த கால நிதிகள் மற்றும் சேவை வழங்கலுக்கான மனிதவளத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் போதுமானதாக இல்லை.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது பொதுவாக ஒரு பன்முகப் பிரச்சினை என்று புரிந்து கொள்ளப்படுகிறது, இது உணவு, சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் உள்ள காரணிகளின் கலவையில் வேரூன்றி உள்ளது, இது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்புடைய பகுதிகள் உணவு பாதுகாப்பு, சுகாதார சேவைகளுக்கான அணுகல், சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற போதுமான நிதிகளையும் பெற வேண்டும்.

இதை வைத்து, மொத்தம் ரூ.2,76,885 கோடி (38.8 பில்லியன் டாலர்) இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டம், தேசிய சுகாதார பணி, உணவு மானியத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம், தேசிய கிராமப்புற குடிநீர் பணி மற்றும் பிறவற்றை ‘ஊட்டச்சத்து உணர்திறன்’ என வகைப்படுத்தலாம். இது முந்தைய ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில் இருந்து (BE) 19% சரிவைக் குறிக்கிறது.

தேசிய உணவு பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட முக்கியமான உணவு மானியத் திட்டம் இந்தியாவின் 67% மக்களுக்கு (கிராமப்புறங்களில் 75% மற்றும் நகர்ப்புறங்களில் 50%) அதிக மானியத்துடன் கூடிய உணவு பொருட்களை விநியோகிக்கிறது. இந்த திட்டத்திற்கான ஒதுக்கீடு 2019-20 பட்ஜெட் மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது ரூ. 68,650 கோடி (9.6 பில்லியன் டாலர்) அல்லது 37% குறைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் தங்களது இலக்குகளை அடைவதை உறுதி செய்வதில் வலுவான கொள்கைகள் மற்றும் கணினி அளவிலான திறன் மேம்பாடு மிக முக்கியமானது, பல ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன. இதன் பொருள் என்னவென்றால், துறைகளில் உள்ள அனைத்து ஊட்டச்சத்து மைய திட்டங்களுக்கும் போதுமான நிதி வழங்கப்பட வேண்டும்.

குறைந்த நிதியாந்து வளங்களை குறைவாக பயன்படுத்த வழிவகுக்கிறது

அரசின் மிகப்பெரிய ஊட்டச்சத்து திட்டமான அங்கன்வாடி சேவைகள், ஆறு மாதம் முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான துணை ஊட்டச்சத்து திட்டம், கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், பாலர் கல்வி; மற்றும் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து கல்வி போன்ற முக்கியமானதை உள்ளடக்கியது; இது சுகாதார சோதனைகள், தடுப்பூசி மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பரிந்துரைக்கும் சேவைகளையும் உள்ளடக்கியது; ஏனெனில் இவை ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இரத்த சோகை முக்த் பாரத் (இரத்த சோகை இல்லாத இந்தியா திட்டம்), இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் (ஐ.எஃப்.ஏ), மற்றும் வைட்டமின்-ஏ போன்ற குறிப்பிட்ட பிரச்சாரங்களும் இதில் அடங்கும்.

இந்த இரு திட்டங்களை செயல்படுத்தும் தொழிலாளர்கள் ஐ.சி.டி.எஸ்-இன் கீழ் அங்கன்வாடி தொழிலாளர்கள் (ஏ.டபிள்யூ.டபிள்யூ) மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள்; தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) ஆவர்.

அக்டோபர் 2018 இல் திருத்தப்பட்ட இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு பின்வருமாறு: அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.4,500 மற்றும் ஏ.டபிள்யு.எச்.களுக்கு ரூ. 2,250; அத்துடன் 2018 அக்டோபர் முதல், செயல்திறன்-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை மாதம் ரூ.250 தரப்படுகிறது. ஆஷாக்கள் குறிப்பிட்ட பணிகளை முடிக்க கூடுதல் சலுகைகளைப் பெறுகின்றன - மருத்துவமனை பிரசவத்தை உறுதி செய்வதற்கு ரூ.400 மற்றும் ஒரு குழந்தை நோய்த்தடுப்பு மருந்து பெற ரூ.1,200. இந்த தொழிலாளர்கள் பணியாளர் அந்தஸ்தையும், குறைந்தபட்ச ஊதியத்திற்கு இணையான மதிப்பூதியத்தை கோருகின்றனர், அதாவது ஒரு திறமையான தொழிலாளிக்கு ரூ.18,000 ஆகும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் அங்கன்வாடி சேவைகளுக்கான ரூ.20,532 கோடி (2.9 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு (2019-20 பட்ஜெட் மதிப்பீடுகளை விட 3.5% அதிகரிப்பு), நாடு முழுவதும் ஏ.டபிள்யு.டபிள்யு.களுக்கு அதிக இழப்பீடு வழங்க, குறிப்பாக தற்போது அதிக பணவீக்கத்தில் போதுமானதாக இல்லை.

கடந்த 2015-16 முதல் 2018-19 வரை, அங்கன்வாடி சேவைகளுக்கான உண்மையான செலவினம் நெருக்கமாக பொருந்தியது அல்லது ஆண்டின் தொடக்கத்தில் ஒதுக்கப்பட்ட தொகையை மீறியது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கோரிக்கைகளுக்கும் இறுதியில் அதற்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கும் இடையில் இடைவெளிகள் இருப்பதை மனிதவளத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு 2018 மார்ச் மாதம் கவனித்தது.

கடந்த 2018-19 ஆம் ஆண்டில், அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட மொத்த ஒதுக்கீடு, அது கோரிய தொகையை விட 20% குறைவாக இருந்தது என்று, நிலைக்குழுவின் அறிக்கையின் தரவு காட்டுகிறது. அங்கன்வாடி சேவைகளை பொறுத்தவரை, அந்த ஆண்டு அமைச்சகத்திற்கு ரூ.16,335 கோடி (2.3 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 21,101 கோடி ரூபாய் (2.9 பில்லியன் டாலர்) கோரிக்கையை விட கிட்டத்தட்ட 23% குறைவாகும்.

பல ஆண்டுகளாக நிதியுதவி, ஊட்டச்சத்து சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான முழுவதும் காலியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு தவறியதால், நிதி பயன்பாட்டில் முறையான திறமையின்மைக்கு அது வழிவகுக்கும்.

2019-20 ஆம் ஆண்டில் என்ன தேவைப்படலாம் என்பதற்கான முன்கூட்டியே மதிப்பீடுகளை அரசு மேற்கொண்ட போது, அங்கன்வாடி சேவைகளுக்கான ஒதுக்கீட்டை முந்தைய ஆண்டில் உண்மையில் செலவிட்ட தொகையை விட 18% உயர்த்தியது என்று 2020-21 பட்ஜெட்டின் தரவு காட்டுகிறது.எவ்வாறாயினும், செலவின போக்குகளுடன் ஒத்துப்போவதற்காக நிதியாண்டில் ஆறு மாதங்களுக்குப் பிறகு அரசு அதன் மதிப்பீடுகளை திருத்தியபோது இந்த ஒதுக்கீடு சுமார் 11% (ரூ. 17,705 கோடி அல்லது 2.5 பில்லியன் டாலர்) குறைக்கப்பட்டது. அதாவது, அதிகரித்த நிதியைப் பயன்படுத்த முடியாது என்பதை இது சுட்டிக்காட்டியது.

நிதி பற்றாக்குறை தவிர, பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதும் மிக முக்கியமானது. பட்ஜெட் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் செலவினங்கள், பல ஆய்வுகள் தெரிவித்தபடி, தவிர்க்கப்பட வேண்டும். "செலவினங்களின் அவசரம், குறிப்பாக நிதியாண்டின் இறுதி மாதங்களில், நிதி உரிமையை மீறுவதாக கருதப்படும்," என்று, சரியான நேரத்தில் செலவினம் குறித்த நிதி அமைச்சகத்தின் ஜனவரி 2020 வழிகாட்டுதல்கள் குறிப்பிட்டன.

தொடரும் ஐ.சி.டி.எஸ்ஸில் காலியிடங்கள்

ஊட்டச்சத்து வழங்குவதற்கு தேவையான பணியாளர்களில் ஊழியர்களின் பற்றாக்குறை உள்ளது: 2019 நவம்பரில் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய மதிப்பீடுகள், அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பதவிகளில் 5.63% மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 7.85% என இந்தியா முழுவதும் காலியாக உள்ளன என்பதைக் காட்டுகிறது.

ஏ.டபிள்யு. டபிள்யு.களுக்கான அதிகபட்ச காலியிடங்கள் பீகார் (14.3%) மற்றும் டெல்லி (13.8%), அடுத்தடுத்து மேற்கு வங்கம் (10%), உத்தரப்பிரதேசம் (9.6%) மற்றும் தமிழ்நாடு (8.8%) உள்ளன. அங்கன்வாடி உதவியாளர்களுக்கு நிலைமை மோசமாக உள்ள மாநிலங்கள் - பீகார் (17.5%), மேற்கு வங்கம் (15.7%), உத்தரப்பிரதேசம் (13.4%), தமிழ்நாடு (11%) மற்றும் பஞ்சாப் (8.8%). கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் மிகக்குறைந்த காலியிடங்களை கொண்ட மாநிலங்கள்.

குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர்கள் (சிடிபிஓக்கள்) மற்றும் பெண் மேற்பார்வையாளர்கள் (எல்எஸ்) ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்களின் விகிதம் மிக அதிகம். ஒரு ஒன்றியத்திற்கு அல்லது 125-150 அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் ஒருவர் பொறுப்பாவார். பெண் மேற்பார்வையாளர்கள் 25 பேர் இருப்பர். திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் அவற்றின் கிடைக்கும் தன்மை அவசியம்.

ஆனால், மார்ச் 2019 நிலவரப்படி, 2019 ஜூன் மாதம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர்கள் பதவிகளில் 30% மற்றும் பெண் மேற்பார்வையாளர்கள் பதவிகளில் 28% வரை நாடு முழுவதும் காலியாக உள்ளன. குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர்கள் காலியிடங்கள் ராஜஸ்தானில் (64.5%), மகாராஷ்டிரா (55.2%), மேற்கு வங்கம் (51.9%), கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் (இரண்டும் 49.5%). பெண் மேற்பார்வையாளர்கள்ளை பொருத்தவரை, மேற்கு வங்கம் (67%), பீகார் (48.2%), தமிழ்நாடு (44%), உத்தரபிரதேசம் (43%) மற்றும் திரிபுரா (42.4%) காலி பணியிடங்கள் உள்ளன.

மாநிலங்களுக்கு அதிக சம்பளச்சுமை, மதிப்பூதியம்

ஐ.சி.டி.எஸ் இன் கீழ் சம்பளத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பின் மாற்றம் மனிதவள பற்றாக்குறை எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பதைப் பாதிக்கிறது. குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர்கள் மற்றும் பெண் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட ஐசிடிஎஸ் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பள ஊழியர்களுக்கான மத்திய - மாநிலங்களுக்கு இடையிலான செலவு பகிர்வு விகிதம் 60:40 என்பது, டிசம்பர் 2017 இல் 25:75 ஆக திருத்தப்பட்டது. நிதி பலவீனமான மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஐ.சி.டி.எஸ் பதவிகளுக்கு எதிராக போதுமான எண்ணிக்கையிலான வழக்கமான தொழிலாளர்களை நியமிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

புதிய கட்டண விகிதங்களும் போதுமானதாக இல்லை எனக் கருதப்படுவதால், மாநிலங்கள் ஏ.டபிள்யு.டபிள்யுகள் மற்றும் ஏ.டபிள்யு.எச். களுக்கு கூடுதல் மதிப்பூதியத்தை வழங்குகின்றன: ஹரியானா (ரூ.7,286 - ரூ. 8,429), மத்தியப் பிரதேசம் (ரூ.7,000), தமிழ்நாடு (ரூ.6,750), டெல்லி (ரூ .6,678), தெலுங்கானா (ரூ.6,000), கர்நாடகா (ரூ.5,000) ஆகியவை ஏ.டபிள்யு. டபிள்யு.களுக்கு அதிக கூடுதல் இழப்பீடு வழங்குகின்றன.

அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, தமிழகம் (ரூ. 4,275), ஹரியானா (ரூ .4,215), கோவா (ரூ .3,000-6,000), தெலுங்கானா (ரூ.3,750), டெல்லி (ரூ .3,339) மற்றும் மத்திய பிரதேசம் (ரூ .3,500) ) மதிப்புதியமாக வழங்குகின்றன.

அங்கன்வாடி தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் அதிக பணிச்சுமை கொண்ட அட்டவணைகள் மற்றும் திறனை வலுப்படுத்தாதது ஆகியவை சேவையின் தரத்தை மோசமாக பாதிக்கின்றன. இது மாநிலங்களுக்கு நிதி ஆதரவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு தேவை என்பதைக் குறிக்கிறது.

(பாண்ட் மற்றும் அம்பாஸ்ட் இருவரும், புதுடெல்லி பட்ஜெட் மற்றும் ஆளுமை பொறுப்புக்கூறல் மையத்தின் (சிபிஜிஏ) ஊட்டச்சத்து நிதியளிப்பு பிரிவில் பணியாற்றுகின்றனர். அவர்களை, happy@cbgaindia.org மற்றும் shruti@cbgaindia.org வாயிலாக அணுகலாம்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story