கோவிட்19 தொடர்புடைய மருந்து கழிவுகளால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

கோவிட்19 தொடர்புடைய மருந்து கழிவுகளால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
X

மும்பை: கோவிட்19 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ள மருத்துவக்கழிவுகளை கையாளும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, அந்நோய் பரவுவதற்கான ஆபத்து உள்ளதாக, மருத்துவ நிபுணர்கள் மற்றும் கழிவு மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பயன்படுத்தி எரிந்த முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கைதுடைக்கும் தாள்கள் போன்றவை, கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகளாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்புடைய மருத்துவக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை, சமீபத்திய சில செய்திகள் விளக்குகின்றன:

  • புனேவில், வீட்டு குப்பைகளில் நோயாளிகளால் கொட்டப்பட்ட முகக்கவச கழிவுகள், குப்பை சேகரிப்போரால் எடுக்கப்பட்டு வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 23, 2020 செய்தி தெரிவித்துள்ளது. "வெளி பயணம் செய்தவர்கள் அல்லது கோவிட் 19 அறிகுறிகள் தென்பட்டவர்கள் என இந்த மாவட்டம் முழுவதும் வீட்டுத்தனிமையில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள், வீடுகளில் இருக்கும் சூழலில், அவர்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் மற்றும் மருத்துவக் கழிவுகளை சேகரிப்பதற்கும் அகற்றுவதற்கும் எந்த வழிமுறையும் இல்லை" என்று அந்த செய்தி கூறியுள்ளது.
  • தானேயில், சேகரித்து வைத்த 1,00,000-க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை உலர வைக்கும் போது ஒருவர் பிடிபட்டார்; அவற்றை சந்தையில் மறுவிற்பனை செய்ய முடியும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், மார்ச் 12, 2020 செய்தி வெளியிட்டிருந்தது.
  • டெல்லியின் ஷரன் விஹார் பகுதியில் திறந்த நிலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 1, 2020 செய்தி தெரிவித்துள்ளது. பயன்படுத்தி வீசப்பட்ட முகக்கவசங்கள், உடைக்கவசம், தொப்பிகள் மற்றும் ஊசிகள் அங்கு காணப்பட்டன.

"பொதுமக்கள் பயன்படுத்தி வீசும் முகக்கவசங்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நோய்த்தொற்றுக்கான ஆதாரமாக இருக்கக்கூடும் என்று, புனேவில் உள்ள பைரம்ஜி ஜீஜ்பாய் அரசு மருத்துவக்கல்லூரியின் முன்னாள் டீன் மற்றும் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் ரேணு பரத்வாஜ் கூறினார். “இவை வைரஸ்கள் பெருக்கக்கூடிய ஹாட் ஸ்பாட் மையங்களாக இருக்கலாம். அவற்றில் நுண்ணுயிரிகள் உள்ளன. கழிவுகளை எறிவதற்கு முன்பு அவற்றின் மீது சானிடிசர்கள் தெளிக்க வேண்டும் அல்லது காகிதப்பைகளில் அவற்றை போட வேண்டும். கழுவப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறுபயன்பாட்டு துணியிலான முகக்கவசங்களை பயன்படுத்துவதே சிறந்த தீர்வாகும்” என்றார்.

முகக்கவசங்கள், சானிடிசர்கள் மற்றும் பிற பாதுகாப்பு அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை, 2020 பிப்ரவரியில் கொரோனா நோய் பரவலின் ஆரம்ப கட்டத்தில் இந்தியாவில் அதிகரித்தது. இது மார்ச் நடுப்பகுதியில் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. ஆனால் பாதுகாப்பு கருவிகளின் இந்த அதிகரித்து வரும் பயன்பாடு, அதன் கழிவுகளை சுகாதாரமாக, பாதுகாப்பாக அகற்ற வேண்டிய விதிகளால் முறையாக வழிநடத்தப்படவில்லை என்று பரத்வாஜ் சுட்டிக்காட்டினார். அசுத்தமான கழிவுகள் பெரும்பாலும் வீட்டின் அருகே குப்பைத்தொட்டிகளில் வீசப்படுவதால், அதை எடுக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் என்று அவர் கூறினார்.

கோவிட் 19 நோயாளிகளின் சிகிச்சை, நோயறிதல் மற்றும் தனிமைப்படுத்தலின் போது உருவாகும் கழிவுகளை கையாளுதல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றுவது குறித்த வழிகாட்டுதல்களை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) 2020 மார்ச் 18 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வார்டுகள் கழிவுகளை பிரிக்க தனித்தனி வண்ண-குறியிடப்பட்ட தொட்டிகளை பராமரிக்க வேண்டும். ‘கோவிட்19’ என்று பெயரிடப்பட்ட ஒரு பிரத்யேக தொட்டி, ஒரு தனியான தற்காலிக சேமிப்பு அறையில் வைக்கப்பட வேண்டும்; அது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களால் மட்டுமே கையாளப்பட வேண்டும். இந்த வார்டுகளில் துப்புரவுத் தொழிலாளர்களை உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மைக்கு தனித்தனியாக நிறுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உருவாகும் கழிவுகள் குறித்த பதிவு விவரங்களையும் வாரியம் கோரியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கும், சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் வீடுகளின் கழிவுகள், உயிரி மருத்துவக்கழிவுகளை மஞ்சள் வண்ண பைகளில் சேகரிக்க சிபிசிபி அறிவுறுத்தியது; இவை அடங்கிய தொட்டிகளை, அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

பெரும்பாலான மருத்துவமனைகள், உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மை (பி.எம்.டபிள்யூ.எம்) விதிகள் 2016ஐ பின்பற்றுகின்றன; குறிப்பாக, கோவிட் 19 தொற்றுக்கு பிறகு இன்னும் கடுமையாக கடைபிடிக்கின்றன். ஆனால், இது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை கையாள்வதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விழிப்புணர்வு உள்ளது. இது, திடக்கழிவு / துப்புரவுத் தொழிலாளர்களை பெரிய அபாயங்களுக்கு உட்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

கோவிட் 19 தொடர்பான கழிவுகளை குறிப்பாக முகக்கவசம், கையுறைகள் போன்றவற்றை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது" என்று அபாயகரமான மருத்துவக்கழிவு மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிற்காக செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க்-ன் இணை இயக்குனர் சதீஷ் சின்ஹா கூறினார். இந்த கழிவுகளை எடுப்பவர்கள், குழந்தைகள் அல்லது தெருக்களில் வாழும் ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவர் என்றும் அவர் கூறினார்.

கொரோனா பாதிப்பு உள்ளவர்களால் வெளிப்படும் மருத்துவக்கழிவு, பொது குப்பைத்தொட்டியை அடையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று, ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் இந்திய சுற்றுச்சூழல் விஞ்ஞானி கிஷோர் வான்கடே கூறினார்.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) பயன்படுத்துவது குறித்த அரசு ஆவணத்தின்படி, கொரோனா வைரஸானது நேரடியாக தொடுதல் மற்றும் அசுத்தமான மேற்பரப்புகள், பொருள்கள் மூலம் பரவுகிறது. அடிக்கடி தொட்ட மேற்பரப்புகளையும், துணியையும் சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் மிதமான ஆபத்தில் உள்ளனர்; அவர்கள் என்-95 வகை முககவசங்கள் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.

கழிவுகளை பிரிப்பதற்கான அடிப்படை விதிகளை பின்பற்றுவது என்பது, இந்தியாவில் இன்னும் குறைவாகவே உள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள்- 2016ன் படி, கழிவு உற்பத்திக்கூறுகளை, அதன் மூலத்தில் இருந்து பிரித்து அங்கீகரிக்கப்பட்ட கழிவுகளை எடுப்பவர்கள் அல்லது சேகரிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் வீடுகளும் மற்றும் சமூகங்களும் இந்த விதிகளுக்கு இணங்காத நிகழ்வுகள் உள்ளன.

வீடுகளில் உருவாகும் உயிரி மருத்துவக்கழிவுகளை தனித்தனியாக அகற்றுவதன் அவசியம் குறித்து இன்னும் குறைந்தளவே விழிப்புணர்வு உள்ளது. கழிவு மேலாண்மை அமைப்புகளில் இனி கோவிட் 19 தொடர்பான விதிகளையும் சேர்க்க வேண்டும் என்று, நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

2020 ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 5,194 கோவிட் 19 நோயாளிகள் பதிவாகி உள்ளதாக, ஹெல்த்செக் தரவுத்தளமான கொரோனா வைரஸ் மானிட்டர் தெரிவித்துள்ளது. 402 நோயாளிகள் (7.4%) குணமடைந்துள்ள நிலையில், 149 (2.9%) பேர் இறந்துள்ளனர். ஏப்ரல் 7, 2020 அன்று இரவு 9 மணி வரை, இந்தியா 114,015 மாதிரிகளை பரிசோதித்தது; அதில் 4,616 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நோயாளியும் பல முறை சோதிக்கப்படுகிறார்கள்.

ஆபத்தில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள்

"கொரொனா வைரஸால் சுகாதாரப்பணியாளர்களின் உடல்நலம் தொடர்பான தொற்று, பல நாடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது" என்று பிபிஇ பயன்பாடு குறித்த அரசின் ஆவணம் தெரிவித்துள்ளது. "கோவிட்19 நோய்த்தொற்றுக்கு அதிக ஆபத்தில் உள்ளவர்கள் சந்தேக நபர் / உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் 19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அல்லது அத்தகைய நோயாளிகளை பராமரிப்பவர்கள்" என்று அது கூறுகிறது.

ஆனால் முன்னணி சுகாதார ஊழியர்களைப் போலவே துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் பிபிஇ வழங்கப்பட வேண்டும் என்று டாக்ஸிக் லிங்க்ஸ் (Toxic Links) சேர்ந்த சின்ஹா பரிந்துரைத்தார்.

"கோவிட்19 நோயாளிகளை கையாளும் மருத்துவ வல்லுநர்கள், காவல்துறை மற்றும் சமூக சுகாதாரப் பணியாளர்கள் போலவே, துப்புரவுத் தொழிலாளர்களும் மிகவும் ஆபத்தில் உள்ளனர்," என்று மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸில் சமூக விலக்கு மற்றும் உள்ளடக்கிய கொள்கைகள் பற்றிய ஆய்வு மையத்தின் ஆசிரிய உறுப்பினர் ஷைலேஷ்குமார் தரோகர் கூறினார். "டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்; ஆனால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அவ்வாறு இல்லை. இது அவர்களை பாதிக்கக்கூடியவர்களாக ஆக்குகிறது" என்றார் அவர்.

வீடுகளில் பயன்படுத்தி எறியப்படும் முகக்கவசங்கள் கலந்த வீட்டு கழிவுகளை அகற்றுவது குறித்து, சென்னையில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் கவலையை வெளிபடுத்தியதை, அண்மையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 24, 2020 அன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியின்படி, மறுசுழற்சி பொருட்களை சேகரித்து, அதில் இருந்து வாழ்வாதாரத்திற்கான பொருட்களை எடுத்து சம்பாதிக்கும் இத்தகைய சேகரிப்போர் மற்றும் கழிவு அள்ளுவோரும் கொரோனா ஆபத்தில் உள்ளனர். "இவ்வாறு பொருட்களை சேகரிப்பது தான் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாகும்; அதனால் தாஹ்ன் இத்துறை மிக அதிக சேகரிப்பு விகிதங்களை அடைய முடிகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கழிவு மேலாண்மை சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்திறனும் அதிகரிக்கிறது" என்று மார்ச் 6, 2020 அன்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.

இந்தியா (2018 இல்) ஒருநாளைக்கு 608 டன் உயிர் மருத்துவக்கழிவுகளை உற்பத்தி செய்தது; அதில் 87% அல்லது 528 டன் சுத்திகரிக்கப்பட்டதாக, 2020 மார்ச் 17 அன்று மாநிலங்களவையில் அரசு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் அரசு விதிகளை மீறிய 27,427 சம்பவங்கள் அல்லது சுகாதார வசதிகள் (HCF) அல்லது பொதுவான உயிரியல் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் வசதிகளுக்கு (CBWTFs) எதிராக, தினமும் சராசரி 75 நிகழ்வுகள் பதிவாகி உள்ளன. இவற்றில், 16,960 எச்.சி.எஃப் / சி.பி.டபிள்யூ.டி.எஃப்-களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் / உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

உயிரி மருத்துவக்கழிவுகளை அகற்றுவது தொடர்பான விதிகளை மீறியதாக அரசால் பெறப்பட்ட புகார்களில், பொதுக்கழிவுகளுடன் மருந்துக்கழிவு கலப்பதால் “வைரஸ் பரவுகிறது” என்ற அச்சம், விவசாய நிலங்களில் மருத்துவக்கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுவது, பயன்பாட்டில் இல்லாத மருந்துகளை எரித்தல் போன்றவையும் அடங்கும்.

நாளொன்றுக்கு உயிரி மருத்துவக்கழிவு உற்பத்தி 2016ம் ஆண்டில் 517 டன் என்று இருந்தது, 2018 இல் 18% அதிகரித்து 608 டன்னாக உயர்ந்தது. தற்போது, இந்தியாவில் 200 பொதுவான உயிர் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலைய வசதிகள் செயல்பாட்டில் உள்ளன; மேலும் 28 நிறுவப்பட்டுள்ளன.

‘தொழிலாளர்கள் பாதுகாப்பு கருவி வைத்திருக்க வேண்டும், கழிவுகளை எரிக்க வேண்டும்’

மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன என்று ஹைதராபாத்தை சேர்ந்த ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் லிமிடெட் (REEL) அதிகாரிகள் தெரிவித்தனர்; இது மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நாடு முழுவதும் 20 அமைப்புகளையும், 350,000 சுகாதார நிறுவனங்களுக்காக 18 நகரங்களில் உள்ள உயிரி மருத்துவக்கழிவுகளை கையாளுகிறது.

"மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம்," என்று ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் லிமிடெட் (REEL) நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் மசூத் மல்லிக் கூறினார். "கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவக்கழிவுகள் இரட்டைப்பைகளில் பெறப்பட்டு, தனித்தனி பிரிக்கப்பட்டு, பிரத்யேக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் அவை இரட்டை சேம்பர் அறைகளில், 1050 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் எரிக்கப்படுகின்றன" என்றார்.

ஊழியர்களுக்கு முழு உடல் கவசம், முகக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், பாதணிகள் மற்றும் பூட் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் உயிரியல் மருத்துவக்கழிவுகளை கையாள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று, மல்லிக் தெரிவித்தார். அவை அனைத்து மேற்பரப்புகளையும் வாகனங்களையும் கிருமி நீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான சிறிய மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாலும், உயிரி மருத்துவக்கழிவுகளின் உற்பத்தியானது, கைவிடப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கை துடைக்கும் தாள்கள் என்று இன்னும் நிறைய கையாள்கிறது என்றார்.

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், வீடுகளில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை துப்புரவுத் தொழிலாளர்கள் நேரடியாக கையாளக்கூடாது என்று, காந்திநகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் பேராசிரியர் தீபக் சக்சேனா கூறினார். "அரசால் ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்; ஆனால் வீட்டுக் கழிவுகளை அகற்றுவதில் இந்த சமூகம் தான் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

Solutions Box

  • Decontaminate waste with sanitisers, put into a separate bag and bin;
  • Use reusable cloth masks that can be washed and reused;
  • For quarantine camps and home care of the suspected patients, the CPCB has advised collection of biomedical waste in yellow bags; bins containing these should be handed over to authorised collectors;
  • Sanitary staff should be provided safety gear such as masks and gloves.

(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story