தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்; அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறை

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்; அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறை
X

புதுடில்லி: சைமா ஃபுர்கானின் 60 வயது மாமா, 2020 ஏப்ரலில் கோவிட் -19 தொற்றுடன் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த தனியார் மருத்துவமனையில் 30 நாட்களுக்கு பிறகு, அவரது குடும்பத்திற்கு 122 பக்கங்கள் கொண்ட பில் வழங்கப்பட்டு, ரூ. 16,14,596 வசூலிக்கப்பட்டது.

தரப்பட்ட பில்லில், ஃபுர்கானை மிகவும் பாதித்த விஷயம் என்னவென்றால், அவரது மாமாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்கள் அணிந்திருந்த தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான (பிபிஇ) தொகையாக ஒருநாளைக்கு ரூ. 10,000 வீதம் வசூலிக்கப்பட்டது தான். அவ்வகையில், அந்த குடும்பத்தினர் பாதுகாப்பு உபகரணங்களுக்கு மட்டும் ரூ.2.9 லட்சம் செலுத்தினர், இது அவர்களின் மொத்த பில் தொகையில் 18% ஆகும்.

"நாங்கள் தொகை அதிகமான அந்த பில்லுடன் போராடினோம். என் மாமா ஓய்வு பெறுவதற்கு முன்பு ஓட்டுநராக பணிபுரிந்தார், ஓய்வு பெற்றதில் இருந்து அவர் ஒரு சிறிய வணிகத்தை நடத்த முயன்றார்; அது வெற்றிகரமாக அமையவில்லை”என்று டெல்லியை சேர்ந்த பொது சுகாதார நிபுணர் ஃபுர்கான் கூறுகிறார்.

சர் கங்காராம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர், அங்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கினார்: "ஐ.சி.யு-வில் அனைத்து நர்சிங் ஊழியர்கள், ஐ.சி.யூ.வில் இருப்போர், ஆலோசகர்கள், பரிந்துரைகள், வார்ட்பாய்ஸ் மற்றும் பலவற்றிற்காக வரும் நிபுணர்களுக்கு லெவல் -3 பி.பி.இ. உபகரணங்கள் தேவைப்படுகிறது" என்று, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். மேலும், மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையால்- அதாவது பலரும் கோவிட்-19 பணியின் உள்ளதால் - சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பலர் கோவிட் -19 வார்டுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் பாதுகாப்பு உபகரணங்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. ஃபுர்கானின் மாமாவும், நடு மூச்சுக்குழலில் துளையிடும் ஒருவகை செயல்முறைக்கு உட்பட்டார்; அதில் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து இருந்ததை, அவர் சுட்டிக்காட்டினார்.

"தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் யூனிட் விலை எனக்குத் தெரியாது," என்று பெயர் வெளியிட விரும்பாத அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறினார், "ஆனால் இது சுமார் 1,500 முதல் ரூ .2,000 வரை இருக்க வேண்டும்… அவை, ஐ.சி.யு-வில் இருந்து வெளியே வந்தவுடன் அகற்றப்பட வேண்டியவை” என்றார்.

மருத்துவமனைகளுக்கு இடையே வேறுபாடுகள்

இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்த நோயாளிகளின் பில்-களில் மருத்துவமனைகளில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதில் வேறுபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. சில மருத்துவமனைகள், நோயாளிக்கு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான விலையில் உபகரணங்களை பயன்படுத்துவது தெரிகிறது, அல்லது மற்ற மருத்துவமனைகளைவிட ஒரு உபகரணத்திற்கு குறைவாக கட்டணம் வசூலிக்கின்றன, இது நோயாளிகளின் செலவுகளைக் குறைப்பதற்கு வழிவகுக்கிறது.

இந்த விசாரணையின் முதல் பகுதியில், இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் சர்ச்சைக்குரிய அதிக கட்டணம், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மேலும் எவ்வாறு சிதைக்கிறது என்று இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்துள்ளது; மத்திய அரசும் நீதிமன்றங்களும் சில விலைகளை ஒழுங்குபடுத்துவதில் இறங்கியுள்ளன, ஆனால், மற்றவை குறித்து அல்ல. இதில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஒழுங்குபடுத்தாத பிரிவில் இடம் பெற்றுள்ளன.

ஏப்ரல் 2020 இல் நிமோனியா மற்றும் கோவிட் -19 உடன் தனியாரான நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 வயது மும்பை நபரின் வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அவர், 13 நாட்களுக்கு பிறகு இறந்தார். குடும்பத்தினருக்கு தரப்பட்ட பில் தொகை, ரூ.16,44,714 ஆகும்.சர்கங்காராம் மருத்துவமனையின் பில்லில் ஃபுர்கான் கவனித்ததைப் போலவே, அந்த நோயாளிக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணத்திற்கு ஒருநாளைக்கு, உயிரி மருத்துவ கழிவுகளை அகற்றுவது போன்ற பிற தினசரி கோவிட்-19 கட்டணங்கள் தவிர, ரூ. 8,900 வீதம் வசூலிக்கப்பட்டது. அந்த நோயாளிக்கு எத்தனை உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டது என்றோ அல்லது ஒன்றின் விலை என்னவென்றோ எதுவும் இல்லை.

இருப்பினும், மும்பையில் மற்றொரு பில் சற்று வித்தியாசமாக இருந்தது. கோவிட்-19 சோதனையில் நேர்மறை என்று தெரிந்த வயதான கணவர் மற்றும் மனைவி இருவரும், மே 2020இல் கருணா அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கே, பாதுகாப்பு உபகரணங்கள் என்ற பெயரில் அவர்களிடம் இருந்து தினசரி கட்டணம் பெறப்படவில்லை. ஆனால் பயன்படுத்தியதற்கான உபகரணங்களுக்கு மட்டும் கட்டணம் பெறப்பட்டது. அதாவது, நோயாளிகளுக்கு ஒருநாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு, அதிகபட்சமாக நான்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.) பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பிபிஇ கிட்டிற்கும் ரூ.1,500 என்ற கட்டணம் அந்த நோயாளிக்கு விதிக்கப்பட்டது.

எனவே, மருத்துவமனையில் நான்கு நாள் தங்குவதற்கு, 77 வயதான அவருக்கு பிபிஇ கட்டணமாக ஒருநாளைக்கு ரூ. 3,750 வசூலிக்கப்பட்டது மற்றும் அவரது 65 வயதான மனைவிக்கு ஒருநாளைக்கு ரூ.6,000 வசூலிக்கப்பட்டது. இது, அவர்கள் மீதான உண்மையான பிபிஇ-க்கள் எண்ணிக்கையின் அடிப்படையிலானது.

தனியார் துறையில் பிபிஇ நியாயமாக பயன்படுத்தப்பட்டு, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) சுகாதாரப் பணியாளர்களை சார்ஸ்- கோவ்- 2 வைரஸ் பாதிப்புக்குள்ளாக்குவதில் இருந்தும், கோவிட்-19ஐ பரவலில் இருந்தும் பாதுகாக்கிறது. மருத்துவர்கள் மட்டுமல்ல, செவிலியர்கள், வார்டு ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள் மற்றும் கோவிட் -19 பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பலரால் பிபிஇ அணியப்படுகிறது. பிபிஇ முழு உடல் மற்றும் கையுறைகள், முகமூடிகள், கண்ணாடி, முகக் கவசங்கள், சுவாசக் கருவிகள், ஷூ கவர்கள் மற்றும் தலை கவர்கள் போன்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. சார்ஸ் -கோவ்- 2 வைரஸுக்கு தொழிலாளி எந்த அளவிலான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பதை பொறுத்து ஒரு சுகாதார ஊழியர் இந்த கூறுகள் அனைத்தையும் அணிவார், அல்லது சிலவற்றை மட்டுமே அணிவார். இந்திய அரசு பிபிஇ-க்களின் "நியாயமான பயன்பாட்டிற்கான" வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, பிபிஇ சுகாதார ஊழியர்கள் எந்த வகையான ஆபத்தை எதிர்கொள்ளலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் அணிய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

பிபிஇ மீதான தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தில் உள்ள முரண்பாடுகளை புரிந்து கொள்ள, தமிழகத்தில் பொது மருத்துவமனை செலுத்தும் தொகையை நாம் கவனிக்க வேண்டும். மார்ச் 2020 இல், தமிழக அரசு பிபிஇ கிட்களை தலா 362 ரூபாய்க்கு (ஒவ்வொன்றும் ஒரு என்.95 முகக்கவசம் மற்றும் மூன்று அடுக்கு முகக்கவசம் உட்பட) வினியோகஸ்தர்களிடம் இருந்து வாங்கியது.

கணக்கீடு செய்வதற்கான அடிப்படையாக ரூ.362ஐ நாம் பயன்படுத்தினால், ஒரு நோயாளியிடம் பிபிஇ-க்கான ஒருநாள் கட்டணமாக ரூ.10,000 தொகை பெறும் (சர் கங்கா ராம் மருத்துவமனை போல) தொகை கொண்டு ஒப்பிட்டால், ஒரு நோயாளிக்கு ஒருநாளைக்கு 27 பிபிஇ கருவிகளுக்கு கட்டணம் வசூலிக்கிறது.

இருப்பினும், ஒரு நோயாளிக்கு பயன்படுத்தப்படும் பிபிஇ எண்ணிக்கை மற்றும் பிபிஇ ஒரு யூனிட்டிற்கான செலவு குறித்து மருத்துவமனைகளிடம் வெளிப்படை தன்மை இல்லாதபோது, நோயாளிகளுக்கு அவர்களின் கவனிப்புக்கு பிபிஇ எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, எந்த விகிதத்தில் கட்டணம் விதிக்கப்பட்டது என்பதை அறிய வழி இல்லை. பிபிஇ-இன் நியாயமான பயன்பாடு குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் உண்மையிலேயே பின்பற்றப்படுகிறதா என்பதை அவர்களால் அளவிட முடியாது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) 2020 ஜூன் 4 அன்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது, தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கு “நியாயமான கட்டணத் தீர்வை" வழங்கியது. நோயாளி ஒரு தனிமை வார்டில் இருக்கிறாரா அல்லது ஐ.சி.யுவில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து ஒருநாளைக்கு ஒருவருக்கு மூன்று அல்லது நான்கு பிபிஇ கருவிகள் தேவை என்று அவர்களின் மாதிரி கூறுகிறது.

இப்போது, ஒரு நோயாளிக்கு ஒருநாளைக்கு தேவைப்படும் அதிகபட்ச எண்ணிக்கையிலான பிபிஇ கருவிகளை, எப்.ஐ.சி.சி.ஐ.- இன் மதிப்பீட்டைப் பயன்படுத்தி, ஒரு நோயாளிக்கு பிபிஇக்கு ஒருநாளைக்கு ரூ.10,000 என்ற பிளாட் கட்டண விகிதம் விதிக்கப்படுவதால், பயன்படுத்தப்படும் ஒரு கிட்டுக்கு அவர்கள் ரூ.2,500 செலுத்தலாம்.

இந்த இரண்டு முனை புள்ளிகளை (தமிழ்நாட்டின் உதாரணம் மற்றும் எப்.ஐ.சி.சி.ஐ. மாதிரி) அடிப்படையாகக் கொண்ட கணக்கீடுகள், தனியாரில் உள்ள நோயாளிகளுக்கு பிபிஇ ஒவ்வொரு யூனிட்டிற்கும் அதிக விலை நிர்ணயம் செய்வதாகவோ அல்லது ஒரு நோயாளிக்கு அதிக எண்ணிக்கையிலான பிபிஇ கிட்களைப் பயன்படுத்துவதையோ குறிக்கிறது. எந்த வகையிலும், தாங்கள் எதைச் செலுத்துகிறோம் என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் நோயாளிகள் மிகப்பெரிய பில் தொகையை கையாளுகிறார்கள்.

நோயாளிகளுக்கு எவ்வளவு பிபிஇ பயன்படுத்த வேண்டும், எந்த விலையில்?

“நான் ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு 170 பிபிஇ கிட்களை நன்கொடையாக வழங்கினேன். அவற்றை, ஒரு கிட் 520 ரூபாய் என்று வாங்கினேன்,” என்று தேசிய தலைநகரை சேர்ந்த மருந்து தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவு விஞ்ஞானி ஜெயந்த் சிங் கூறினார். அதிகளவு பிபிஇ தயாரிக்கப்படுவதால், அந்த விற்பனையாளரால் கிட் தலா ரூ.250 க்கு விற்க முடிந்தது என்றார்.

அரசால் நடத்தப்படும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பிபிஇ கிட்களை எதிர்கொள்ளும் பற்றாக்குறை பற்றி கேள்விப்பட்ட பின்னர் அவர் அவற்றை அதிகாரிகளிடம் வழங்கியதாக, இந்தியா ஸ்பெண்டிடம் சிங் கூறினார். அவரை பொறுத்தவரை சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகிகள் தலா சுமார் 1,200 ரூபாய்க்கு பிபிஇ கிட்களை வாங்குவதாக அவரிடம் கூறி இருக்கிறார்கள். ஆனால் சிங்கின் வினியோகஸ்தர்கள் வழங்குவதை விட ஒவ்வொரு கிட்டிலும் மிகக் குறைவான பொருட்களை பெறுகிறார்கள்.

தமிழக அரசு பிபிஇ கிட்களை (ரூ. 362) வாங்கிய விலைக்கும், ஒவ்வொரு கிட் (ரூ .520) வாங்கியதாக சிங் கூறிய விலைக்கும் இடையே ஒரு பரந்த வேறுபாடு உள்ளது தெளிவாகிறது மற்றும் சில தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் அதற்கு கட்டணத்தை வசூலிக்கின்றன என்பது, அவற்றின் பில்களை பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

"பிபிஇ நியாயமாக தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் நியாயமாக கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் இத்தகைய தொற்றுநோய் பரவல் நேரத்தில் கூட தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இருந்து பணம் சம்பாதிக்க ஒரு வழியாக இதை வைத்திருப்பதாக தெரிகிறது,” என்றார் சிங்; அவரது ஏழு வயது மகள், ஃபோர்டிஸ் மருத்துவமனையில் டெங்கு நோயால் 2017ம் ஆண்டு இறந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளின் பில்லிங் மீது அரசின் கட்டுப்பாடு தேவை என்று அவர் கோருகிறார். இந்த சிகிச்சைக்காக அவரது குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் கட்டணத்தை செலவிட்டது.

பிபிஇ சுற்றியுள்ள தற்போதைய சர்ச்சைகள் குறித்து அவர் கூறினார்: "நோயாளிகளுக்கு பிபிஇ உண்மையில் எவ்வளவு பயன்படுத்தப்பட வேண்டும் - கட்டணங்கள் எவ்வளவு இருக்க வேண்டும்? என்பது குறித்து அரசு ஒரு மதிப்பீட்டை வெளியிட வேண்டும்” என்றார்.

பிபிஇ-இன் நியாயமான பயன்பாட்டிற்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சில சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு முகக்கவசம் மற்றும் கையுறைகள் தேவைப்பட்டாலும், மற்றவர்களுக்கு அதாவது தீவிர சிகிச்சை பிரிவுகளில் அல்லது இறந்த உடல்களைக் கையாள்பவர்கள் போன்றோருக்கு முழு பிபிஇ தேவை என்பதை விளக்குகின்றன. வழிகாட்டுதல்களில், ஆஷா தொழிலாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவமனைகளில் இருந்து துணிகளை சலவை செய்பவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்கள், லேசான, குறைந்த, மிதமான அல்லது அதிக கோவிட்19 ஆபத்து இருக்கும் வகைப்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அந்த பயன்பாடு “ நியாயமாக ” ஆக இருக்க எத்தனை பிபிஇ கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த கருவிகளுக்கு நோயாளிகளிடம் இருந்து என்ன விலை வசூலிக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களில் கூறப்படவில்லை.

பொதுத்துறையில் பிபிஇ பற்றாக்குறை எதை விளக்குகிறது?

இந்தியாவில் பிபிஇ குறித்த மற்றொரு முக்கியமான அம்சம், தனியார் துறைக்கு இடையிலான வெளிப்படையான முரண்பாடு என்னவென்றால், தனியார் மருத்துவமனைகளில் பிபிஇ-க்காக நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வரை வசூலிப்பது, அதே நேரம் அரசு பொது மருத்துவமனைகளில் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை, ஆனால், அளவு மற்றும் தரம் இரண்டின் அடிப்படையில் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடுகிறது.கடந்த சில மாதங்களாக, அரசின் பொது மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்களிடம் இருந்து எதிர்ப்புக்கள் மற்றும் புகார்கள், பற்றாக்குறை மற்றும் மோசமான பிபிஇ கருவிகள் குறித்து பல செய்திகள் வந்துள்ளன.

இந்தியாவின் முன்னணி பொது மருத்துவமனையான டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) செவிலியர்கள், தொற்றுநோய்களின் போது தாங்கள் பணி புரியும் சூழலை கண்டித்து, ஜூன் 3, 2020இல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். எய்ம்ஸில் குறைந்தது 300 சுகாதாரப்பணியாளர்களுக்கு கோவிட் -19 நேர்மறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. எய்ம்ஸ் மருத்துவமனையில் பிபிஇ பற்றாக்குறை மற்றும் மோசமான தரம் ஆகியவை, அதில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

"தற்போதைய தொற்றுநோய் பரவல் சூழ்நிலையில், பிபிஇ பற்றி நாங்கள் பல அதிகாரிகளுக்கு எழுதியுள்ளோம்," என்று, மும்பையின் நர்சிங் மற்றும் துணை மருத்துவப்பணியாளர்கள் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் ரஞ்சனா அதாவலே கூறுகிறார். "முதல் சில மாதங்களில், நாங்கள் பற்றாக்குறையுடன் போராடினோம். இப்போது அதிகமான பிபிஇ கிடைக்கிறது, ஆனால் மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளின் கோவிட் வார்டுகளில் மட்டுமே கிடைக்கிறது. கோவிட் அல்லாத வார்டு பகுதிகளில், பிபிஇ மிகவும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வழங்கப்படுகிறது” என்றார்.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நடந்த செய்தியாளர் சந்திப்புகளில், சுகாதார அமைச்சகத்தின் பிரதிநிதி, நாட்டில் பிபிஇ-க்கு பற்றாக்குறை இல்லை என்று அடிக்கடி கூறி வந்தார், இருப்பினும் பி.பி.இ. “தேவையற்ற” முறையில் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மருத்துவமனைகளை அவர் கேட்டுக் கொண்டார்.

மே 30, 2020 அன்று, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு 96 லட்சம் பிபிஇ யூனிட்டுகள் மற்றும் 1.19 கோடி என்95 முகக்கவசங்களை வழங்கியதாக மத்திய அரசு கூறியது. மே 25, 2020 அன்று, நாட்டில் தினமும் 3,00,000 க்கும் மேற்பட்ட பிபிஇ கவசங்கள் மற்றும் என்95 முகக்கவசங்கள் தயாரிக்கப்படுவதாக அரசு கூறியது. நாட்டில் 300-க்கும் மேற்பட்ட பிபிஇ உற்பத்தியாளர்கள் இருந்தனர் மற்றும் ஒன்பது ஆய்வகங்கள் இருந்தன, பிபிஇ முழு கவச உடைகள் உருவாக்க விரும்புவோர் மாதிரிகளை அரசுக்கு அனுப்பலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 8, 2020 அன்று, சுகாதாரத் தொழிலாளர்களுக்கு பிபிஇ கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆயினும்கூட, பிபிஇ கருவிகளை வழங்குவதில் களத்தில் ஏதோ தவறாக உள்ளது: பொதுத்துறை செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் செய்ததைப் போல, தனியார் துறையில் உள்ள சுகாதாரத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பிபிஇ பற்றாக்குறை அல்லது மோசமான தரம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை.

தனியார் துறையில் பிபிஇ கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியுமா?

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் தனியார் சுகாதார சேவைகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில், ஜெயந்த் சிங்கின் மகள் மரணம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு ஊடக அழுத்தம் மற்றும் செயல்பாட்டைத் தூண்டியது மற்றும் அரசு தனியார் மருத்துவமனை பில்லிங் நடைமுறைகளை விசாரிக்கத் தொடங்கியது.

இந்தியாவின் மருந்து விலை கட்டுப்பாட்டாளரான, தேசிய மருந்து விலை ஆணையம் (NPPA), 2017 மற்றும் 2018 க்கு இடையில் இருதய ஸ்டெண்ட் மற்றும் முழங்கால் மூட்டு உறுப்பு போன்ற சில மருத்துவ சாதனங்களின் விலையை குறைத்தது.

மருத்துவ பில்களின் ஒரு அங்கமாக, நுகர்பொருட்கள் மற்றும் செலவழிப்பு வகைகளில் பிபிஇ அடங்கும். இவை மருந்துகள் அல்லது மருத்துவ சாதனங்கள் அல்ல, ஆனால் ஒரு மருத்துவமனையில் ஒரு நோயாளியின் சிகிச்சையின் போது கையுறைகள் அல்லது சிரிஞ்ச்கள் போன்ற பெரிய அளவில் பயன்படுத்தப்படும் பொருட்கள், பின்னர் அவை அப்புறப்படுத்தப்படுகின்றன.

2018 ஆம் ஆண்டில், தேசிய மருந்து விலை ஆணையத்தின் (NPPA) ஒரு பகுப்பாய்வு, நோயாளிகளுக்கு விதிக்கப்படும் சில நுகர்பொருட்களில் தனியார் மருத்துவ துறை 1,737% வரை லாபம் ஈட்டுவதாக மதிப்பிட்டு உள்ளது. எடுத்துக்காட்டாக, நரம்பு வழிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் மருத்துவமனைகளால் ரூ.5.77 க்கு வாங்கப்பட்டது, ஆனால் வாடிக்கையாளர்களிடம் அதற்கான தொகையாக ரூ.106 பெறப்பட்டது; இது, 1,737% உயர்வு.

அரசால் பகுப்பாய்வு செய்யப்பட்ட சில தனியார் மருத்துவமனை பில்களில் மருந்துகள், நோயறிதல்கள் மற்றும் சாதனங்கள் 56% ஆகும். இந்தியா ஸ்பெண்ட் மார்ச் 2018 கட்டுரை தெரிவித்தது போல், அறை கட்டணங்கள் மற்றும் நடைமுறைகளின் செலவு ஆகியவை இந்த பில்லில் 23% மட்டுமே ஆகும்.

இந்த பகுப்பாய்வு சில பொருட்களின் தனியார் சுகாதார பில்லிங் "மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தெளிவாக தோல்வியுற்ற சந்தை அமைப்பில் நெறிமுறையற்ற லாபத்தை ஈட்டக்கூடியதாக உள்ளது " என்று இந்த பகுப்பாய்வு காட்டியதாக, தேசிய மருந்து விலை ஆணையம் கூறியது.

இந்தியாவில் தற்போது கோவிட்-19 தொற்றின் பரவல் உள்ள சூழலில், இந்த விசாரணையின் முதல் பகுதியில் கூறியபடி, சுகாதார பணியாளர்களுக்கு தேவையான கை கழுவும் சானிடைசர்கள் மற்றும் அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் போன்ற சில பொருட்களின் விலையை அரசு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், என்.95 முகக்கவசங்கள் மற்றும் பிபிஇ உபகரணங்களின் விலை, ஒழுங்குமுறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை.

பிபிஇ, சானிடைசர்கள், கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் போன்ற மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும் என்று என்.பி.பி.ஏ-வின் முன்னாள் தலைவர் பூபேந்திர சிங், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். ஆனால் மாநிலங்களை பொருத்தவரை தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பாகும் என்பதால், அவர்கள் அந்தந்த மருத்துவ நிறுவன சட்டங்களைப் பயன்படுத்தி நோயறிதலின் விலைகளையும் மருத்துவமனைகளில் ஒட்டுமொத்த சிகிச்சையையும் நிர்ணயிக்க வேண்டும்.

தனியார் / கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க “செலவு தொடர்பான விதிமுறைகள்” கோரி ஒரு மனு மீது 2020 மே மாதம் நடந்த விசாரணையில், மருத்துவமனைகளை நிர்மாணிக்க அரசிடம் இருந்து இலவச நிலத்தைப் பெற்ற தனியார் மருத்துவமனைகள் கோவிட் 19 நோயாளிகளுக்கு ஏன் இலவச சிகிச்சை அளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேட்டது. இதற்கு மத்திய அரசு, ஜூன் 2020 இல் அளித்த பதிலில், தனியார் மருத்துவமனைகளை இலவச சிகிச்சை அளிக்க வேண்டுமென்று கேட, சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்றும், இந்த விஷயம் மாநிலங்களின் கையில் இருப்பதாகவும் கூறியது. இந்த விவகாரம் இன்னும் உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story