மகப்பேறு நன்மை: தமிழ்நாடு, ஒடிசாவிடம் இருந்து மத்திய அரசு என்ன கற்க வேண்டும்?
புதுடெல்லி: நாட்டில் தகுதியான பெண்களில் 88% பேர், 2018-19இல் மத்திய அரசின் மகப்பேறு நன்மைகள் திட்டத்தில் சலுகைகள் பெறவில்லை என, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்.டி.ஐ) பெறப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் செயல்படுத்தப்படும் மாநில மகப்பேறு நலத்திட்டங்களின்படி செய்தால், பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY - பிஎம்எம்விஒய்) திட்டத்திற்கு இன்னும் பல பெண்கள் தகுதி பெற முடியும்.
ஆறு மாநில ஆய்வில், ஒடிசாவில் அனைத்து மகப்பேறு பெண்களிலும் 67% பேர், மம்தா எனப்படும் மாநில மகப்பேறு திட்டத்தில் பலன் அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2017 இல் அறிமுகமான பி.எம்.எம்.வி.ஒய். திட்டத்திற்கு பதிலாக ஒடிசா அரசு தனது மம்தா திட்டத்தை தொடர முடிவு செய்தது. ஏனெனில் மாநில திட்டமே சிறப்பாக செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில், மகப்பேறு நலன்கள் என்ற கருத்தை முன்வைத்து, 1987இல் தொடங்கப்பட்டதுதான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் (DMMBS - டி.எம்.எம்.பி.எஸ்). இதில், 76% பெண்கள் மகப்பேறு நன்மை அடைந்தனர்; மேலும் 95.3% பேர் இத்திட்டம் பற்றி அறிந்திருந்ததாக 2019இன் வெவ்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியா முன்னேற்றம் கண்டிருந்தாலும், தாய் மற்றும் பிறந்த சிசு இறப்பு விகிதங்களுக்கான நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்.டி.ஜி) எட்டவில்லை. 2015-17 ஆம் ஆண்டுக்கு இடையே நாட்டில் ஒவ்வொரு 1,00,000 கர்ப்பிணிகளில் 12-17 பெண்கள் கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்கு பின் இறந்தனர்; இது, எஸ்டிஜி தாய்வழி இறப்பு விகிதமான (எம்எம்ஆர்) 1,00,000 பிரசவங்களுக்கு 70 என்ற இலக்கை விட மிக அதிகம். 2018இல் நாட்டின் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் (பிறந்து முதல் 28 நாட்களில் இறத்தல்) 1,000 பிரசவங்களுக்கு 22.7 ஆக இருந்தது என, யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது. இதில் எஸ்.டி.ஜி இலக்கு 1,000 பிரசவங்களுக்கு 12 என்பதாகும்.
இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் (முதல் ஆண்டில் ஒரு குழந்தையின் இறப்பு) 1,000 பிரசவங்களுக்கு 33 என்றுள்ளது. இது உலகளாவிய சராசரியான 29.4 ஐ விட அதிகம். அண்டை நாடுகளான நேபாளம் (28), பங்களாதேஷ் (27), பூட்டான் (26) , இலங்கை (8), சீனா (8) ஆகியவற்றை விடவும் அதிகம் என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜூன் அறிக்கை தெரிவித்தது.
இறப்பு விகிதங்களைக் குறைக்க கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் உதவி (விழிப்புணர்வு, ஊட்டச்சத்து, ஓய்வு, சுகாதார அணுகல், மருந்துகள் ) முக்கியமானவை. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களின் நிலையை ஆய்வு செய்வதற்காக, ஆறு மாநில ஜாச்சா-பச்சா கணக்கெடுப்பு (ஜேஏபிஎஸ்) 2019 ஜூனில் நடத்தப்பட்டது.
கணக்கெடுப்பு
அபிவிருத்தி பொருளாதார வல்லுனர்களான ஜீன் ட்ரெஸ் மற்றும் ரீட்டிகா கெரா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்கள், கர்ப்ப கால பெண்கள் 706 பேர் (342 கர்ப்பிணி, 364 தாய்மார்கள்) அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தர். அவர்கள் சத்தான உணவு (முட்டை, மீன் மற்றும் பால்) வழக்கத்தை விட அதிகம் சாப்பிட்டார்களா? சுகாதார சேவைகளுக்கான அணுகலுக்கு அவர்களுக்கு கூடுதல் ஓய்வு கிடைத்ததா? கர்ப்ப காலத்தில் மருத்துவர்களை சந்தித்தார்களா? கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது நிதிப் பொறுப்புகளை சுமக்கிறார்களா என்று ஆய்வில் கேட்டறியப்பட்டது.
இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் தலா ஒரு மாவட்டத்தில், தலா 60 அங்கன்வாடிகளில் (குழந்தை பராமரிப்பு மையம்) பெண்கள் பேட்டி காணப்பட்டனர். இந்த ஆறில், ஐந்து மாநிலங்கள் (ஒடிசா தவிர) பி.எம்.எம்.வி.ஒய்.- கீழ் பெண்களுக்கு மகப்பேறு நன்மைகளை வழங்குகின்றன. இத்திட்டம் கர்ப்பிணிளுக்கு ஊதிய இழப்புக்கு ரூ.5,000 நிபந்தனை இழப்பீடாக வழங்குகிறது; இதனால் அவர்கள் குழந்தையை பிரசவிப்பதற்கு முன்பும் பின்பும் போதுமான ஓய்வு எடுக்க முடியும். முதல் பிரசவத்துக்கு மட்டுமே மூன்று தவணைகளில் பெண்களுக்கு மத்திய அரசு இந்த நன்மையை அளிக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம், தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
மாநிலங்களில் பரந்த குடைகள்
மத்திய அரசின் திட்டத்தில் விலக்கு, தரவு குறைபாடுகள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் -2013 ஐ மீறுவதாக உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
உதாரணத்திற்கு, இந்தியாவில் கருவுறுதல் விகிதம் (குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை) 2.2 ஆகும். இதனால், பி.எம்.எம்.வி.ஒய். திட்டம் பெரும்பாலான கர்ப்பிணிகளை இந்த நிபந்தனையுடன் விலக்கி வைக்கிறது. ஏனெனில் இது முதல் குழந்தைக்கு மட்டுமே நன்மை கிடைக்கும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த கட்டுப்பாட்டால், இந்தியாவில் 55% கர்ப்பிணிகள் பி.எம்.எம்.வி.ஒய். திட்டத்தில் பயன்பெற முடியவில்லை என, ஜாச்சா பச்சா கணக்கெடுப்பு மதிப்பிட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் ஐந்தில், கர்ப்பிணிகளில் 92% பேர் பி.எம்.எம்.வி.ஒய்- கீழ் பயனடையவில்லை என்று ஜாச்சா பச்சா கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. நாடு முழுவதும், 2018-19 ஆம் ஆண்டில் 12% பெண்களே ரூ.5000 தொகையை மூன்று தவணைகளையும் பெற்றுள்ளதாக, ஆராய்ச்சியாளர்களின் ஆர்.டி.ஐ. கேள்விக்கு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதே காலகட்டத்தில் தகுதியான பெண்களில் பாதி பேர், குறைந்தபட்சம் ஒரு தவணையாவது இத்திட்டத்தில் நிதி பெற்றதாக அமைச்சகம், ஆர்.டி.ஐ. பதிலில் கூறி இருக்கிறது. இந்தியாவில் ஆண்டு மதிப்பீடான 2.7 கோடி பிரசவங்களுக்கு, 2017-18 ஆம் ஆண்டில் பி.எம்.எம்.வி.ஒய். கீழ் 25% (67 லட்சம்) பெண்கள் ஏதேனும் மகப்பேறு சலுகைகளையும் பெற்றதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
Source: Jaccha Baccha Survey, 2019
Note: Figures in percentage
ஒடிசாவில் கூடுதல் பலன்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அங்கு இரண்டு பிரசவங்களுக்கு கர்ப்பிணிகள் சலுகை பெறலாம். குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுவினர் ஒவ்வொரு பிரசவத்தின் போது நிதி உதவி பெற உரிமை உள்ளவர்கள். "பழங்குடியினரின் மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில் அவர்களை காக்க, மாநிலத்திற்கு இது முக்கியமானது" என்று மம்தா திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் ராஸ்மிதா சஹா கூறினார்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மம்தா திட்டத்தில் ஒவ்வொரு பிரசவத்திற்கும் ரூ. 5 ஆயிரம் நிபந்தனை பணச்சலுகை பெறுகிறார்கள். மூன்று பேறுகால பெண்களில் இருவர், சில பலன்களை அனுபவித்துள்ளனர். நான்கு பெண்களில் மூன்று பேர், 2019இல், மம்தா திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதி உதவியை பெற்றதாக, ஜாச்சா பச்சா கணக்கெடுப்பு கூறுகிறது.
கடந்த 2011-12 மற்றும் 2018-19 க்கு இடையில், சுமார் 37 லட்சம் பெண்கள் மம்தா திட்டத்தில் பயனடைந்ததாக, மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018-19இல் மட்டும் கிட்டத்தட்ட 5,00,000 பெண்கள் ரூ.251.71 கோடியை பெற்றதாக அமைச்சகம கூறியது.
தமிழ்நாட்டில் உள்ள டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டம் (டி.எம்.எம்.பி.எஸ்) முடிந்தவரை அதிக பெண்களை சேர்க்கும் பரந்த குடையாக உள்ளது. இது, இரு பிரசவங்களுக்கு நிதிப்பலனை தருகிறது. ஒவ்வொரு பிரசவத்தின் போதும் ரூ. 2,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து தொகுப்பு மற்றும் ஐந்து தவணைகளில் பெண்கள் ரூ.18,000 ரொக்கத்தை பெறுகிறார்கள். இத்திட்டம் 30 ஆண்டுக்கு மேலாக உள்ள நிலையில், பிரசவத்தின் போது வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.300 ஆக இருந்தது தற்போது ரூ.18,000 என உயர்ந்துள்ளது.
இத்திட்டம் 1987இல் தொடங்கப்பட்டபோது, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் என்றளவில் தான் இருந்தது. 2006இல் இந்த திட்டம், வறுமைக் கோட்டுக்குக்கீழே (ஆண்டு வீட்டு வருமானம் ரூ. 24,000-க்கும் குறைவாக உள்ளவர்கள்) உள்ள அனைத்து பெண்களையும் உள்ளடக்கியது.
தற்போது டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டமானது ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே’ என்ற அளவுகோலுக்கு அப்பால், பருவகால தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்களின் தலைவர்களாக இருக்கும் பெண்கள் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முடியாத பெண்களை உள்ளடக்கி இருக்கிறது. பெண்கள் தங்கள் குடும்ப தொழில், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் கூட இதில் தகுதியுடையவர்களாக முடியும்.
டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் குடை மிகவும் விரிவானது. ஆம், இலங்கை அகதி பெண்களும் மகப்பேறு சலுகைகளை இத்திட்டத்தில் பெற தகுதியுடையவர்கள். இத்தகைய கொள்கை மாற்றங்களால், ஒவ்வொரு ஆண்டும் சராசரி 6,00,000 பெண்கள் இத்திட்டத்தில் பயனடைவதாக, தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2017-18 நிலவரப்படி, சுமார் 47 லட்சம் கர்ப்பிணிகள் இத்திட்டத்தில் ரூ. 4,337 கோடி மதிப்பில் நிதி உதவி பெற்றுள்ளனர். கடந்த 1912ஆம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரில் இத்திட்டம் செயல்படுகிறது.
"ஒடிசாவில் பி.எம்.எம்.வி.ஒய். திட்டத்தில் பெண்களுக்கு நன்மைகளை பெற பல்வேறு நிபந்தனைகளை உள்ளன. ஆனால் அவர்கள் மம்தா திட்டத்தில் அத்தகைய உதவியை எளிதாக பெறுகின்றனர் என்பதை பல்வேறு தரப்பினருடன் உரையாடியதில் நாங்கள் உணர்ந்தோம்," என்று சஹா கூறினார். “பி.எம்.எம்.வி.ஒய் மற்றும் மம்தா ஆகிய இரு திட்டங்களையும் செயல்படுத்துவது முன்னணி தொழிலாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்; காகித வேலைகளை அதிகரிக்கும். எனவே நெறிப்படுத்தப்பட்ட, எளிமையான திட்டத்தை நாங்கள் விரும்பினோம்” என்றார் அவர்.
எளிய நடைமுறை ; பலன்கள் பரிமாற்றம்
தமிழ்நாடு மற்றும் ஒடிசா இரண்டிலும் உள்ள மகப்பேறு நலத்திட்டங்கள், மத்திய அரசின் பி.எம்.எம்.வி.ஒய். திட்டம் போல் இல்லாமல் எளிய நடைமுறைகள் மற்றும் சிறு நிபந்தனைகளையே கொண்டுள்ளன.
உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்ய, பயனாளிகள் தங்களது அடையாளச்சான்று, தகுதியை நிரூபிக்க மூன்று, நான்கு ஆவணங்களை வழங்கினால் போதும். தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்களில் 207 பெண்களிடம், 2010 ஆய்வில், 6% க்கும் குறைவான பெண்களே, முத்துலட்சுமி திட்டத்தில் விண்ணப்பம் அல்லது திட்ட பலன் பெறுவதில் சிரமத்தை சந்தித்ததாக கூறினர். பிரசவத்திற்கு பிறகு முதல் ஆறு மாதங்களுக்குள் பணத்தைப் பெற்றதாக, அதே ஆய்வில் 86% பெண்கள் தெரிவித்தனர்.
பி.எம்.எம்.வி.ஒய். திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில், ஐந்தில் ஒரு பங்கு அல்லது ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 116 பெண்கள், ஆதார்-அங்கீகார சிக்கல்களை சந்திப்பதாக ஜாச்சா பச்சா கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது; இத்திட்டம் பெண்ணின் திருமண நிலையை பொருட்படுத்தாமல் பெற்றோரின் ஆதார் இரண்டையும் கேட்டு கட்டாயப்படுத்துகிறது. 15% பெண்கள் வங்கி தொடர்பான பிரச்சினைகளை குறிப்பிட்டாலும், ஆதார் மற்றும் பிற ஆவணங்கள் பொருந்தவில்லை என விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
ஒடிசாவில், ஆதார்-அங்கீகார சிக்கல்கள் இருந்தபோதும் பெண்கள் தங்கள் பணத்தை பெற்றதாக, ஜாச்சா பச்சா கணக்கெடுப்பு கண்டறிந்தது. “கர்ப்பிணிகளை காப்பதே மம்தா திட்டத்தின் நோக்கம். இது பெண்ணின் திருமண நிலை குறித்து கவலைப்படவில்லை” என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் சஹா கூறினார்.
தொகை வழங்குவதற்கான தவணைகளின் எண்ணிக்கையையும் குறைத்த ஒடிசா அரசு, அதன் செயல்முறையை எளிதாக்கியது. மம்தா திட்டத்தில் ரூ. 5,000 நான்கு தவணைகளில் வழங்கப்பட்டது. இது இப்போது பிரசவத்திற்கு பிறகு 12 மாத காலத்தில், இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.
பி.எம்.எம்.வி.ஒய். கீழ் சலுகைகளைப் பெற, பெண்கள் 23 பக்க படிவத்தை மூன்று முறை நிரப்பினால் தான் (மூன்று தவணைகளில் தலா ரூ.5,000) வழங்கப்படுகிறது.
இருப்பினும், மத்திய அரசின் பி.எம்.எம்.வி.ஒய் மற்றும் ஒடிசாவின் மம்தா திட்டங்கள் இரண்டுமே, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் -2013 இன் நிபந்தனைகளை மீறுவதாக கெரா தெரிவித்துள்ளது. முதல் இரண்டு பிரசவங்களுக்கு கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 வழங்க வேண்டுமென்று இச்சட்டம் கூறுகிறது. ஆனால், பி.எம்.எம்.வி.ஒய் மற்றும் மம்தா திட்டங்களில் ரூ.1,000 குறைவாக தரப்படுகிறது. மத்திய அரசின் திட்டமும் குறுகியதாக, முதல் குழந்தைக்கான பலன்களை கட்டுப்படுத்துகிறது.
அரசியல் விருப்பம் மற்றும் அங்கன்வாகளின் பங்கு
மம்தா திட்டத்தின் சிறந்த செயல்பாடுகள்ளுக்கு பின்னால் பெரிய அரசியல் விருப்பமும் இருந்ததாக, உணவு உரிமை பிரச்சாரக்குழுவின் ஒடிசா பிரிவை சேர்ந்த சமீத் பாண்டா கூறினார்.
தொகுதி மட்டத்தில் உள்ள ஜான்ச் (சரிபார்ப்பு) மற்றும் மம்தா குழுக்கள் (10 கிராமங்கள் ஒரு தொகுதியாக உள்ளன) திட்டத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்தன. மம்தாவின் வெற்றிக்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் ஒத்துழைப்பு முக்கிய காரணமாகும்.
மத்திய அரசின் பி.எம்.எம்.வி.ஒய். திட்டம் போலல்லாமல், மம்தா திட்டத்தில் ஒவ்வொரு அங்கன்வாடி தொழிலாளிக்கும் ஒவ்வொரு மம்தா பயனாளியால் ரூ.200 ஊக்கத்தொகை கிடைக்கிறது. அங்கன்வாடி ஊழியர் மற்றும் வார்டு உறுப்பினர் (ஊராட்சி உள்ளூர் பிரதிநிதி) இருவரின் கூட்டு வங்கி கணக்கில், உணவுப் பொருட்களுக்காக மாநில அரசிடம் இருந்து நேரடி நிதியை பெறுகின்றனர்.
கடந்த 1975 முதல், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ் - அரசின் துணை ஊட்டச்சத்து திட்டம்) கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வீட்டு உணவுப் பொருளை வழங்குகிறது. அத்துடன் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சூடான, சமைத்த உணவை வழங்குகிறது.
உத்தரப்பிரதேச அங்கன்வாடிகளில் வழங்கப்படும் கலவை சாதத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் விரும்பவில்லை என்று ஜாச்சா பச்சா கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, தாய்மார்கள், குழந்தைகள் வீட்டிற்கு உணவு எடுத்துச் செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒடிசாவில் உள்ள அங்கன்வாடிகளில் மதிய உணவில் முட்டை தரப்படுகிறது.
“சுய உதவிக்குழுக்கள் [ஒடிசாவில்] பெண்களுக்கு அதிகாரம் மற்றும் கல்வி கற்க வழிவகுத்தன,” என்று அபிவிருத்தி ஆலோசகர் குழுவான ஐபிஇ குளோபலின் இணை இயக்குநர் நேஹா சைகல் கூறினார். "அவர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள். பல சுய உதவிக்குழுக்கள் அங்கன்வாடி மையங்களுக்கும் வீட்டுக்கு உணவுப்பொருள் தயாரித்து வழங்குகின்றன” என்றார்.
இரு திட்டங்களின் கதை
“உத்தரப்பிரதேசத்தின் திட்டம் தனித்து தாமதமாக உள்ள நிலையில், ஒடிசாவின் மம்தா திட்டம் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்படுகிறது,” என்று கணக்கெடுப்பு கூறியது. இரு மாநிலங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த நிலையில் உள்ள வேறுபாடுகளை, அது சுட்டிக்காட்டுகிறது.
ஒடிசாவின் கணக்கெடுப்பு முடிவுகள், முந்தைய ஆய்வின் முடிவுகளை எதிரொலித்தன. மகப்பேறு நலன்கள், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு போதுமான ஓய்வு, குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிடவும் உதவியுள்ளதாக, மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமான கஞ்சாமில் மம்தாவின் தாக்கம் குறித்த ஆய்வு 2018 இல் கண்டறியப்பட்டது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது 97% பெண்கள் தாங்கள் அதிகாரம் மற்றும் சுதந்திர உணர்வை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.
(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.