கோட்டா குழந்தை மரணங்கள்: முதன்மை, இரண்டாம் நிலை பராமரிப்பு மற்றும் மிகைப்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை பராமரிப்பு

கோட்டா குழந்தை மரணங்கள்: முதன்மை, இரண்டாம் நிலை பராமரிப்பு மற்றும்  மிகைப்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை பராமரிப்பு
X

கோட்டாவின் ஜே கே லோன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு குழந்தைக்கு சிகிச்சை தந்த மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள். இது, 2019 டிசம்பரில் 101 குழந்தைகளின் மரணத்தை கண்ட இடமாகும்.

கோட்டா, ராஜஸ்தான்: 22 வயதான ருக்சார் பானு, தனது முதல் குழந்தையை 2019 டிசம்பர் 16இல் பெற்றார். அழகுடனும் ஆரோக்கியமான 2.7 கிலோ எடையுடனும் பிறந்த அந்த குழந்தைக்கு, டிசம்பர் 29இல் காய்ச்சல் அதிகரித்தது. தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து தெற்கே 240 கி.மீ தொலைவில் உள்ள கோட்டா நகரில் இருக்கும் ஜே கே லோன் மருத்துவமனைக்கு, குழந்தையுடன் சென்றார் அந்த புதிய தாய். சில மணி நேரம் கழித்து, இரண்டே வார வயதுள்ள அந்த அழகு குழந்தை இறந்துபோனதாக கூறினார்கள்.

"குழந்தை ஆரோக்கியமாகத்தான் என்னுடன் இருந்தது. நாங்கள் குழந்தையை வீட்டிற்கு வந்ததும் நன்றாக கவனித்தோம்; அதுவும் நன்றாகவே இருந்தது" என்று இல்லத்தரசி ருக்ஷார் பானு கண்ணீருடன் கூறினார். அவரது கணவர் அசிம் உசேன், 27, சம்பல் ஆற்றில் மூழ்கித்தேடும் பணியில் நாளொன்றுக்கு ரூ. 270 சம்பாதிக்கிறார். ருக்ஸார் பானு, தன்னிடம் அதிக பணம் இருந்திருந்தால், அந்த அழகு குழந்தை வாழ்ந்திருக்கும் என்று உறுதியாக கூறினார். ஆனால் அந்த ஏழைக்குடும்பத்தால் தனியார் மருத்துவ சிகிச்சையை தர முடியவில்லை.

கடந்த 2019 டிசம்பரில் ஜே கே லோன் மருத்துவமனையில் இறந்த 101 குழந்தைகளில், அந்த அழகு குழந்தையும் ஒன்று. கோட்டாவில் நிகழ்ந்த குழந்தை இறப்புகள், தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்திருந்தாலும், குழந்தைகள் இறப்பு என்பது நாட்டின் பிற பகுதிகளிலும் வழக்கமாக பதிவாகி வருவதாக, 2020 ஜனவரி 9 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. சுகாதார உள்கட்டமைப்பு, பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு, கர்ப்பிணியின் உடல்நலம் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு ஆகியவற்றின் மோசமான தரமே, குழந்தைகளுக்கு ஆபத்தாய் போய் முடிகிறது என்று எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.

கோட்டாவில், ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை சுகாதார மையங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புகள் இல்லாததை நாங்கள் கண்டோம். இதன் விளைவாக, மூன்றாம் நிலை மையங்களுக்கு பெரும்பாலானவர்கள் வருகிறார்கள். இம்மையங்கள் தங்களது திறனைத் தாண்டி பணியை மேற்கொள்கின்றன. பெரும்பாலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு குழந்தை பிரசவம் நடக்கிறது; பிறந்த குழந்தை எடை குறைவாக உள்ளது. மேலும், குளிர்காலத்தில் குறைந்த வெப்பநிலை என்ற அபாயம் அதிகரித்து, குழந்தைகள் இறப்புக்கு காரணமாகிறது.

பானு, தனது அழகு மகளின் மரணத்திற்கு ஜே கே லோன் மருத்துவமனையே காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்.

காய்ச்சல் காரணமாக, அந்த குழந்தை சுமார் 12 மணி நேரம் உணவு எடுத்துக்கொள்ளவில்லை அல்லது மலத்தை வெளியேற்றவில்லை. அவரது குடும்பத்தினர் 2019 டிசம்பர் 29 ஆம் தேதி காலை, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (என்.ஐ.சி.யு) அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குள் அந்த குழந்தை இறந்தது. "குழந்தை மரணத்துக்கான காரணத்தை கூட மருத்துவர்கள் கூறவில்லை" என்று ருக்சார் பானு கூறினார். “அவர்கள் எதுவும் பேசவில்லை. குழந்தையை எங்களிடம் தந்துவிட்டு கொண்டு செல்லும்படி கூறினார்கள்” என்றார்.

22 வயது ருக்சார் பானு, டிசம்பர் 16, 2019இல் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார். இரண்டு வாரங்களுக்கு பிறகு, காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க ஜே கே லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த குழந்த, தான் பிறந்த மருத்துவமனையிலேயே இறந்தது. அதே மாதத்தில் அந்த மருத்துவமனையில் இறந்த 101 குழந்தைகளில் அதுவும் ஒன்று.

மூன்றாம் நிலை பராமரிப்பு மையமாக இருப்பதால், ஜே கே லோன் மருத்துவமனை கோட்டா, பூண்டியில் (40 கி.மீ தூரத்தில்) இருந்து பரிந்துரைகளைப் பெறுகிறது; ராஜஸ்தானில் சித்தோர் (180 கி.மீ தூரம்) மற்றும் மத்திய பிரதேசத்தின் மாவட்டங்களான சிவ்புரி, மந்த்சூர் ஆகிய இடங்களில் இருந்தும் சிகிச்சைக்கு வருவதாக, கோட்டா மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி பூபேந்திர சிங் தன்வாரை, நாங்கள் புதுடில்லியில் சந்தித்தபோது, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்; இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவை எடை குறைவு உள்ள [குழந்தைகள்] மற்றும் ஏற்கனவே "ஆபத்தான" நிலையில் உள்ள குழந்தைகள் என்று அவர் மேலும் கூறினார்.

2019 டிசம்பரில் 101 குழந்தைகளை பலி கொண்ட கோட்டாவில் உள்ள ஜே கே லோன் மருத்துவமனை இதுதான். இங்கு வருகை தந்த உண்மை கண்டறியும் குழு, மோசமான உள்கட்டமைப்பு, “பரிதாபகரமான” சுகாதாரம் மற்றும் மருத்துவமனையில் அதிக கூட்டம் இருப்பதைக் கண்டறிந்தது.

ஜனவரி 6, 2020 அன்று ஜே.கே. லோன் மருத்துவமனைக்கு இந்தியா ஸ்பெண்ட் குழு சென்றபோது, மருத்துவமனையின் குழந்தை மருத்துவத்தலைவர் (இடைநீக்கம் செய்யப்பட்டவர்) அமிர்தலால் பைர்வா, கோட்டா மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜய் சர்தானா மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ் துலாரா ஆகியோரிடம் பேச முற்பட்டோம். அவர்கள் யாருமே எங்களுடன் பேச மறுத்துவிட்டனர்.

நாங்கள் செல்வதற்கு முன்பாக, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று மரணங்கள் குறித்து விசாரித்தனர்.

மருத்துவமனையில் 77 குழந்தைகளின் மரணம் பதிவானதை அடுத்து, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) உண்மை கண்டறியும் குழு, 2019 டிசம்பர் 29இல், மருத்துவமனைக்கு விஜயம் செய்தது. அவர்களின் ஆரம்ப அறிக்கையின்படி, துப்புரவு ஒரு "பரிதாபகரமான நிலையில்" இருப்பதையும், மோசமான உள்கட்டமைப்பையும் அவர்கள் கண்டறிந்தனர்: "இங்கே ஜன்னல்களில் கண்ணாடி இல்லை; கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் சிகிச்சை பெற்ற குழந்தைகள் மோசமான வானிலை தாக்கத்தால் (sic) பாதிக்கப்பட்டனர்".

மருத்துவமனையின் 15 வென்டிலேட்டர்களில், ஒன்பது மட்டுமே செயல்பட்டன. ஆண்டு பராமரிப்பு குறித்த பதிவுகள் எதுவும் இல்லை. ஜே.கே. லோன் மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகள் - மருத்துவர்கள் அல்ல - இறப்புகளுக்கு காரணம் என்று கோட்டாவின் சி.எம்.ஓ.தன்வார் கூறினார், மருத்துவமனை சுகாதாரத்துறையின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை; மாறாக, மாநில மருத்துவ கல்வித்துறையின் கீழ் உள்ளது. "அவர்கள் கோரினால் மட்டுமே நாங்கள் [மாநில சுகாதாரத்துறை] அவர்களுக்கு ஆதரவளிக்க முடியும் - அவர்களுக்கு நிதி, செவிலியர்கள் கேட்டால் கொடுக்க முடியும். எனது பதிவுகளின்படி, அவர்கள் பயன்படுத்தாத நிதி ரூ.1.8 கோடி, ”என்று அவர் எங்களிடம் கூறினார்.

குழந்தை மரணம் “நாள்பட்ட, மெதுவாக நகரும் சோகம்”

கடந்த 2014 மற்றும் 2019 க்கு இடையில், ஜே கே லோன் மருத்துவமனையில் குழந்தை / குழந்தை மரணங்கள், மொத்த சேர்க்கைகளில் 5-8% வரை நிலையாக இருப்பதை மருத்துவமனை பதிவுகள் காட்டுகின்றன.

Source: J K Lon Hospital records accessed by IndiaSpend through sources

"ஒரு மாவட்ட மருத்துவமனையில் 7-10% இறப்பு விகிதம் [100 சேர்க்கைகளுக்கு இறப்பு] சாதாரணமானது" என்று தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் தொடர்பாக செயல்படும் இலாப நோக்கற்ற அமைப்பான மம்தாவின் நிர்வாக இயக்குநரும், குழந்தைகள் மருத்துவருமான சுனில் மெஹ்ரா கூறினார்.

ஏனெனில், மாவட்ட மருத்துவமனைகள் அதிக கூட்டம் இருந்தாலும் நோயாளிகளை திருப்பிவிட முடியாது என்று மெஹ்ரா கூறினார். இது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு மையங்களை போலின்றி, நோயாளிகள் அதிக நெரிசலில் அல்லது குறைந்த உபகரணங்கள் இருந்தால் மட்டுமே மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பலாம். நோயாளிகளுக்கு இடையே சிறந்த கவனிப்பு ஒரு மாவட்ட மருத்துவமனையில் மட்டுமே கிடைக்கும் என்ற கருத்தும் உள்ளது. இது அனைத்து நோயாளிகளையும் மாவட்ட மருத்துவமனையை நோக்கி வரச் செய்கிறது - இது அவர்களை சமாளிக்க முடியாமல் திணறச் செய்யல்லாம் என்றார்.

ராஜஸ்தானின் மருத்துவக் கல்வி இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்களின்படி, 372 படுக்கைகள் கொண்ட ஜே கே லோன் மருத்துவமனையின் சராசரி நோயாளிகள் வருகை 220% ஆகும். அதாவது, ஒவ்வொரு படுக்கையை குறைந்தது இரு நோயாளிகள் பகிர்ந்து கொள்கிறார்கள். "திடீரென நிகழ்ந்த சோகம் என நாம் அதை [கோட்டாவில் குழந்தை இறப்புகளை] உருவாக்குவது சந்தேகத்திற்குரியது. இது நாள்பட்ட, மெதுவாக நகரும் சோகம்” என்று புதுடெல்லியை சேர்ந்த ஹெல்த் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் ஓமன் குரியன் கூறினார். மருத்துவமனை மோசமான உபகரணங்களுடன் இருந்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன; ஆனால் அது டிசம்பரில் மட்டுமே நடக்கவில்லை; எப்போதுமே அப்படித்தான் இருந்தது; மேலும் பல இறப்புகள் தவிர்க்கக்கூடியவை என்று அவர் கூறினார்.

மருத்துவமனையின் உள்ளே: அழுக்கு அறைகள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் படுக்கைகளை பகிர்ந்து கொள்கின்றன

மருத்துவமனைக்கு இந்தியா ஸ்பெண்ட் குழு சென்றபோது, மகப்பேறு வார்டில் கழுவும் அறை மிக அழுக்காக இருப்பதைக் கண்டோம். மருமகளின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த 54 வயது ஜைனாப் பீ கூறினார்: “யாரும் அவற்றை [வாஷ்ரூம்களை] சுத்தம் செய்யவில்லை. “நாங்கள் பல முறை நர்ஸிடம் கூறியுள்ளோம். வாஷ்ரூமில் தண்ணீர் இல்லை. எங்களுக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்”.

மருத்துவமனை அதன் திறனைத் தாண்டி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, நோயாளிகள் எங்களிடம் கூறினர். "அவர்கள் வழக்கமாக இரண்டு குழந்தைகளை வெதவெதப்புக்கான இயந்திரத்தில் வைத்திருக்கிறார்கள்," என்று ஜே கே லோன் மருத்துவமனையில் ஒன்றரை வருடம் கிளீனராக பணிபுரிந்த பகவதி (அவர் இந்த பெயரை பயன்படுத்துகிறார்) குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட கருவி, வெப்பமாக்கக்கூடியது. "இடம் குறைவாக இருந்தால், அவர்கள் மூன்று குழந்தைகளையும் வைத்துவிடுகிறார்கள்" என்றார்.

இரண்டு முதல் மூன்று குழந்தைகளுக்கு ஒரே படுக்கையும், "ஒரு பாட்டில் மூலம் நான்கு பேருக்கு" வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி மருத்துவம், குளுக்கோஸ் போன்றவற்றின் நிர்வாகத்தின் செயல்பாட்டை அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனைக்கு இந்தியா ஸ்பெண்ட் குழு சென்றபோது, 32 படுக்கைகள் கொண்ட குழந்தை பிறந்த பராமரிப்பு வார்டில், ஒரு படுக்கைக்கு ஒரு குழந்தை மட்டுமே இருந்தது. அனுமதிக்கப்பட்ட 32 குழந்தைகளில், 12 பேருக்கு நிமோனியா இருந்தது. நாங்கள் சந்தித்த பல குழந்தைகள் எடை குறைந்தவர்கள். "நன்கு செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தால், மக்கள் ஆரம்ப கால பராமரிப்பு அங்கு வருவதன் மூலம் குழந்தைகள் பிழைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று புதுடெல்லியை சேர்ந்த மருத்துவர் மற்றும் பொது சுகாதார நிபுணர் சந்திரகாந்த் லஹாரியா கூறினார்.

பணியாளர்கள் பற்றாக்குறை, மோசமான உள்கட்டமைப்பு

முதன்மை பராமரிப்பு மையங்கள் திறனற்று உள்ளன; சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் மூடப்படுகின்றன; மருத்துவர்கள் அடிக்கடி இல்லாததுடன், உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்பதை, ஒரு சமூக சுகாதார மையம் (சி.எச்.சி), இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (பி.எச்.சி) மற்றும் கோட்டாவைச் சுற்றியுள்ள இரண்டு சுகாதார துணை மையங்களிய நாங்கள் பார்வையிட்டதில் தெரிய வந்தது. இவற்றில், டிகோட் பகுதி சி.எச்.சிக்கு மட்டுமே ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவர் இருந்தார். தத்தேட் பகுதி சுகாதார துணை மையத்திலும், சிம்லியா மற்றும் கோடல்யாஹேரியில் உள்ள பி.எச்.சிகளிலும் ஆயுஷ் மருத்துவர்கள் இருந்தனர். ஜலிபுராவில் உள்ள துணை சுகாதார மையம் மூடப்பட்டது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், ஒவ்வொரு பிரசவ மையத்திலும் (பி.எச்.சி) பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு பகுதி இருக்க வேண்டும்; முதல் பரிந்துரை அலகுகள் (சி.எச்.சி) புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான அலகுகளைக் கொண்டிருக்க வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைக்கான சிறப்புப் பராமரிப்பு அலகுகள் இருக்க வேண்டும்.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் சேவைகளில் அரவணைப்பு, தாய்ப்பாலூட்டுதலின் ஆரம்பம், புதிதாகப் பிறந்த குழந்தையை எடைபோடுதல் மற்றும் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்ப பராமரிப்பு உள்ளிட்ட மறுசீரமைப்பு ஆகியன அடங்கும். "வெறுமனே, நோய்த்தொற்றுகள் அல்லது அபாய கட்டத்தில் உள்ள குழந்தைகள் மட்டுமே ஜே கே லோன் போன்ற மூன்றாம் நிலை மருத்துவ மையங்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்" என்று மம்டாவை சேர்ந்த மெஹ்ரா கூறினார். தற்போது, குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகளும் (2.5 கிலோவிற்கு குறைவாக பிறந்தவர்கள்) முதன்மை மற்றும் இரண்டாம் நிலை அளவில் கையாளப்படும்போது மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

"குறைப்பிரசவம், பலவீனமாக பிறந்த குழந்தைகள் அல்லது குறைந்த எடையுடன் பிரசவித்த குழந்தைகள் இருந்தால், நாங்கள் பெரும்பாலும் நோயாளியை கோட்டாவில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனைக்கு அனுப்புகிறோம்" என்று டிகோட் சி.எச்.சிக்கு பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி சாஹிப்லால் மீனா கூறினார். இந்த போக்கு கோட்டாவுடன் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. ராஜஸ்தானில் 95% (561) சி.எச்.சிக்கள், செயல்பாட்டு தொழிலாளர் அறை கொண்டிருந்தாலும், பாதிக்கும் குறைவானவற்றில் (288) மட்டுமே புதிதாகபிறந்த குழந்தைகளுக்கான செயல்பாட்டு நிலைப்படுத்தும் அலகுகள் உள்ளன. மேலும், இதில், 18% (107) மையங்களில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு அறைகள் இல்லை.

கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்கள்-2018 இன்படி, மாநிலத்தில் உள்ள ஒரு துணை சுதாதார மையம், பி.எச்.சி அல்லது சி.எச்.சி-யில் கூட இந்திய பொது சுகாதார தர விதிமுறைகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை.

மேலும், நிதி திறம்பட செலவிடப்படுவதில்லை. ராஜஸ்தானில் நிதி பயன்பாடு பொதுவாக குறைவாகவே உள்ளது என்று டெல்லியை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மையமான அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் இயக்குனர் அவனி கபூர் தெரிவித்தார்.

ராஜஸ்தானில், அரசின் தரவுகள்படி, வசதி அடிப்படையில் புதிதாக பிறந்த குழந்தைகள் பராமரிப்புக்கு [கடிகாரச் சுற்றில் திறமையான பணியாளர்களால் மருத்துவ பராமரிப்பு வழங்கப்படுகிறது], ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் 23% மட்டுமே செலவிடப்பட்டது," என்றார் கபூர். "இது தாமதமான நிதி விடுவிப்புக்கு நிர்வாக சிக்கல்களில் தொடங்கி சிக்கலான ஒப்பந்த செயல்முறைகள் வரை பல காரணங்களால் இருக்கலாம்" என்றார் அவர்.

மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்கள் ஏன் அதிக இறப்புகளை காண்கின்றன

“கோட்டா ஒரு மாவட்ட மருத்துவமனை மட்டுமல்ல; இது ஒரு பிராந்திய மருத்துவமனை. ஹடோடி பிராந்தியத்தை சேர்ந்த அனைத்து நோயாளிகளும் கோட்டாவிற்கு பரிந்துரைக்கப்படுகின்றனர், ”என்று ஹடோடி பிராந்தியத்தில் உள்ள குழந்தை நல மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் விவேக் குப்தா கூறினார். ராஜஸ்தானில் கோட்டா, பரன், பூண்டி, ஜல்வார் மாவட்டங்கள் நான்கு கலாச்சார பகுதிகளில் ஒன்றாகும். இந்த நான்கு மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வயதுக்குட்பட்ட சுமார் 3,500 குழந்தைகள் இறக்கின்றன. இத்தகைய மாவட்ட இறப்புகள் அனைத்தும் கோட்டாவிற்கு மாற்றப்படுகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.

புதிதாக பிறந்த குழந்தைகள், குறைப்பிரசவம் மற்றும் எடை குறைந்த பிரசவக் குழந்தைகள் குறைந்த வெப்பநிலை நோயால் பாதிக்கப்படுகின்றனர் - அங்கு உடல் அதை உருவாக்கக்கூடியதை விட வேகமாக வெப்பத்தை இழக்கிறது. மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் செல்லும்போது, அதற்கு தேவைப்படும் வெப்பநிலையை உறவினர்களால் ஏற்படுத்தி நிர்வகிக்க முடியாது, இதுவே குறைந்த வெப்பநிலைக்கு வழிவகுக்கிறது என்று கோட்டாவின் சி.எம்.ஓ தன்வார், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

அதே மருத்துவமனையினுள் பிரசவ அறையில் இருந்து என்.ஐ.சி.வுக்கு கொண்டு செல்லப்படும் புதிதாக பிறந்த குழந்தை, அங்குள்ள வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருப்பதால், குறைந்த வெப்பநிலையால் பாதிக்கப்படும். இது இறப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று குஜராத்தின் பிரமுகுவாமி மருத்துவக் கல்லூரியின் இணை டீன் மற்றும் குழந்தை மருத்துவ பேராசிரியர் சோமசேகர் நிம்பல்கர் தெரிவித்தார். குஜராத். "எங்கள் மருத்துவமனைகளில், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் ஆட்டோ ரிக்‌ஷாக்களில் 30 கி.மீ.க்கு மேல் பயணம் செய்கிறார்கள். இதனால் பெரும்பாலும் கடும் குறைந்தபட்ச வெப்பநிலை ஏற்படுகிறது. வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக உள்ளது. குழந்தை உயிர்வாழும் வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கிறது" என்றார். "நோயாளியை பெரிய மையத்திற்கு மாற்றுவதற்கு முன் சமூக மட்டத்தில் போதுமான மையங்கள் இருந்தால், பிரச இறப்பு குறைவு என்பது கணிசமாக மேம்படுகிறது" என்று மம்தா அமைப்பின் சின்ஹா கூறினார். உத்தரபிரதேசத்தில் உள்ள சி.எச்.சி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்ட என்செபாலிடிஸ் சிகிச்சை மையங்களையும், என்செபலிடிஸ் தொடர்பான மரணங்களைத் தடுக்கவும் அவர் இதை குறிப்பிடுகிறார்.

மேலும், சில அதிநவீன தனியார் மருத்துவமனைகள் குறைபிரசவ குழந்தைகள் மற்றும் 1.5 கிலோ எடையுடன் பிறக்கும் குழந்தைகள் கூட உயிர் பிழைக்க அரசு மருத்துவமனைகளில் போராடும் நிலையில், 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியும் என்று நிம்பல்கர் கூறினார்.

தேசிய சுகாதார இயக்க மாவட்ட மருத்துவமனைகளில் புதிதாகப் பிறந்த பராமரிப்பு பிரிவுகளுக்கு நிதியளிக்கும் அதே வேளையில், ஜே கே லோன் போன்ற மருத்துவக்கல்லூரிகள் மாநில அரசின் நிதியைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். "எம்.சி.ஐ [இந்திய மருத்துவ கவுன்சில்] வழிகாட்டுதல்களுடன் ஊழியர்களின் எண்ணிக்கை இணைக்கப்பட்டுள்ளதால், தேவைக்கேற்ப ஊழியர்கள் அல்லது படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துவ கல்லூரிகளுக்கு நெகிழ்வுதன்மை இல்லை" என்று அவர் கூறினார்.

2018-19இல் அதிக குழந்தைகள் இறப்பை சந்தித்த இரண்டாவது மாநிலம் ராஜஸ்தான்

கடந்த 2018-19 ஆம் ஆண்டில், ராஜஸ்தானில் 24,451 குழந்தைகள் இறப்பு நேரிட்டது. இது மத்திய பிரதேசத்திற்கு அடுத்தபடியாக (25,786) இரண்டாவது இடத்தில் உள்ளது என்று சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (எச்எம்ஐஎஸ்) தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் நாட்டில் பதிவான குழந்தை இறப்புகளில் (190,646) ராஜஸ்தானில் 12.8% ஆகும். ஏப்ரல் மற்றும் டிசம்பர் 2019-க்கு இடையில், ராஜஸ்தானில் குழந்தை இறப்புகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது (17,613); இது மத்திய பிரதேசத்தை விட (22,770) குறைவாக உள்ளது.

சமீபத்திய மாதிரி பதிவு அமைப்பு அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் குழந்தை இறப்பு விகிதத்தில் ஏழாவது இடத்தில் இருந்தது; அதாவது 1,000 பிரசவங்களுக்கு 38 இறப்புகள் ஆகும். அதாவது மத்தியப்பிரதேசம் (47), அசாம் (44), அருணாச்சல பிரதேசம் (42), ஒடிசா (41), உத்தரபிரதேசம் (41) மற்றும் மேகாலயா ( 39) ஆகியவற்றுக்கு அடுத்து இருந்தது. இதில் தேசிய சராசரி 33 ஆக இருந்தது.

நிதி ஆயோக்கின் 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் ஆரோக்கியமான மாநிலங்கள் குறித்த அறிக்கையில் 21 பெரிய மாநிலங்களில் ராஜஸ்தான் 16வது இடத்தில் உள்ளது. பிரசவத்தில் குறைந்த எடை கொண்ட பிறந்த குழந்தைகளின் விகிதத்தில் 40% க்கும் அதிகமான சரிவு, இம்மாநிலத்தில் உள்ளது. இது "கர்ப்பங்களை முன்கூட்டியே பதிவு செய்தல், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை நிர்வகித்தல், எச்எம்ஐஎஸ் தரவை தொடர்ந்து கண்காணித்தல்" போன்ற நடவடிக்கைகளே காரணம் என்று என்ஐடிஐ ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள சுகாதார மையங்களில் பிறக்கும் குழந்தைகளில் ஐந்தில் ஒரு (21.4%) குழந்தையும் குறைந்த எடை கொண்டிருக்கிறது - இது இறப்பு மற்றும் நோயுற்ற தன்மை, மோசமான அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் பிற்கால வாழ்க்கையில் நாள்பட்ட நோய்களின் அதிக ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகையுள்ள தாய்மார்கள் குறைபிரசவத்தில் எடை குறைந்த குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்

பூஜா (அவர், ஒரு பெயரையே பயன்படுத்துகிறார்), 20, 2019 டிசம்பரில் கர்ப்பமாக ஆறாவது மாதத்தில் கடுமையான இரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது.

“நான் ஜே கே லோன் மருத்துவமனைக்கு சோதனைக்காகச் சென்றேன். அங்குஎனக்கு சோனோகிராஃபி செய்த மருத்துவர்கள், எனக்கு போதுமான ரத்தம் இல்லை என்று சொன்னார்கள், ”என்று பூஜா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "நான் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன், அவர்கள் இரத்தத்தை செலுத்தினர். டிசம்பர் 14 ஆம் தேதி அவர்கள் என்னை விடுவித்தனர். அதன் பிறகு நான் வீட்டிற்கு வந்து திடீரென பிரசவித்தேன்”.

பூஜா குறைபிரசவத்தில் 400 கிராம் எடையுள்ள குழந்தையை பிரசவித்தார். அவர் 5-6 மணி நேரம் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டார், அதன் பிறகு குழந்தை இறந்துவிட்டதாக குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

20 வயது பூஜா கடும் இரத்த சோகைக்கு ஆளானார். கர்ப்பத்தின் ஆறாவது மாதத்தில் குறைப்பிரசவத்தில் குழந்தையை பெற்றார். 400 கிராம் எடை கொண்ட அந்த குழந்தை, பிறந்த சில மணி நேரம் கழித்து இறந்தது.

கடந்த 2015-16இல், ராஜஸ்தானில் 46.6% கர்ப்பிணிகள் இரத்த சோகைக்கு ஆளானார்கள்; கர்ப்பிணிகளில் 38.5% பேருக்கு மட்டுமே குறைந்தது நான்கு பிரசவத்துக்கு முந்தைய பரிசோதனைகள் கிடைத்தன என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2015-16 (NFHS-4) தெரிவித்துள்ளது. தாய்மார்கள் சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு பிரசவங்களுக்கு போதுமான இடைவெளி தராமல் பிரசவிபதால், குழந்தைகள் மிக சீக்கிரமே குறைபிரசவத்தில் எடை குறைவுடன் பிறக்கிறார்கள் என்று, இந்தியா ஸ்பெண்ட் மார்ச் 29, 2018 கட்டுரை தெரிவித்துள்ளது.

ரத்தசோகை உள்ள தாய்மார்களின் குழந்தைகள், இரத்த சோகை இல்லாத தாய்மார்களின் குழந்தைகளை விட ஏழு மடங்கு கடும் இரத்த சோகைக்கு ஆளாக நேரிடும். கடும் இரத்த சோகை தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும்; மேலும் இரத்த சோகையைத் தடுப்பது தாய் மற்றும் குழந்தை இறப்புகளைக் குறைப்பதில் முக்கியமானது.

கல்வி பயின்ற ஒரு தாய்க்கு பிறந்த குழந்தை, கடந்த ஐந்து வயதில் உயிர்வாழ 50% அதிகம்; தாயின் பள்ளிப்படிப்பின் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை இறப்பு நிகழ்தகவு 5-10% குறைகிறது என்று, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் 2011 அறிக்கையை மேற்கோள் காட்டி ஜனவரி 16, 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. நான்கு பெண்களில் ஒருவர் (25.3%) 12ஆம் வகுப்புக்கு மேலான கல்வியும், 24 வயதுடைய பெண்களில் மூன்றில் ஒருவர் (35.4%) 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர்; என்.எஃப்.எச்.எஸ் -4 தரவுகளின்படி, 6.3% பெண்கள், தங்களது வளரிளம் பருவத்திலேயே கர்ப்பமாகிவிடுகின்றனர்.

(திவாரி, இந்தியா ஸ்பெண்ட் மற்றும் சுகாதாரம் சரிபார்ப்பு இணையதளத்தின் முதன்மை நிருபர். ஸ்வகதா யாதவர், இந்தியா ஸ்பெண்ட் மற்றும் சுகாதாரம் சரிபார்ப்பு இணையதள சிறப்பு நிருபர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் மற்றும் சுகாதாரம் சரிபார்ப்பு இணையதள தரவு ஆய்வாளர் ஸ்ரேயா ராமன் பங்களிப்புடன்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story