தொற்றுபரவலின் போது கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு சுகாதாரம் எவ்வாறு தடைபடுகிறது

தொற்றுபரவலின் போது கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு சுகாதாரம் எவ்வாறு தடைபடுகிறது
X

முதுகெலும்பு தசைக்குறைபாட்டை கொண்டுள்ள தன்வி விஜ், பிறர் உதவி இல்லாமல் நகர இயலாது. படுக்கையில் இருந்து வெளியே வரவும், சக்கர நாற்காலியில் செல்வதற்கும், தூக்கிவிட உதவும் ஒரு சிறப்பு சாதனத்தை வாங்க அவர் விரும்பினார்; ஆனால் ஊரடங்கு நடைமுறை, அவரது திட்டத்தை முறியடித்துவிட்டது. அவருக்கு, அத்தகைய மாற்று ஏற்பாடுகளை பெருவது மிகவும் விலை உயர்ந்த ஒன்றாகும்.

புதுடெல்லி: 22 வயதான தன்வி விஜ், முதுகெலும்பு தசைநார் வகை-2 மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரை முற்றிலும் அசையாமல் முடக்கிவிட்டது. இந்த ஆண்டு, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால், படுக்கையில் இருந்து எழுந்து சக்கர நாற்காலியில் அமர உதவும் ஒரு சாதனத்தை வாங்கித்தர, அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

ஆனால் கோவிட்-19 முழு முடக்கத்தை விதிக்க அரசு முடிவு செய்ததோடு, அனைத்து விமான சேவைகளையும் அது ரத்து செய்தது. இது, அவரது குடும்பத்தினரின் ஏற்பாடுகளை பாதித்தது. மும்பையில் உள்ள விற்பனையாளரை சந்திக்க அவரது தந்தையால் செல்ல முடியவில்லை; அந்த சாதனத்தை டெல்லிக்கு வரவழைத்து, தன்விக்கு வழங்கப்பட்டது. இதற்கு சுமார் ரூ.60,000 வரை செலவானது.

"முழு முடக்கத்தால், நாங்கள் டெல்லியில் உள்ள விற்பனையாளரிடம் அந்த சாதனத்தை வாங்க வேண்டியிருந்தது; ஆனால் அதை அப்படியே பயன்படுத்த முடியாது; அதற்கேற்ப எனது படுக்கை, மெத்தை மற்றும் சக்கர நாற்காலியில் மீண்டும் சில மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது; அப்போதுதான் அவை அனைத்தும் அந்த சாதனத்துடன் ஒத்துப்போகின்றன" என்று தன்வி கூறினார். இந்த செயல்பாடுகளால் விஜ் குடும்பத்திற்கு சுமார் ரூ. 1.5 லட்சம் செலவானது; இது மும்பையில் இருந்து அந்த சாதனத்தை வாங்குவதைவிட இரண்டு மடங்கு அதிக செலவாகும்.

கோவிட் 19 தொற்றுநோய் இந்தியாவில் சுகாதார செலவுகளை எவ்வாறு சிதைத்துள்ளது என்பது குறித்து, இந்தியா ஸ்பெண் கட்டுரை வெளியிட்டு வருகிறது. இந்த தொடரின் முதல் பகுதியில், கோவிட் -19 சிகிச்சையின் அதிக செலவு குறித்து நாங்கள் வெளியிட்டு இருந்தோம். இரண்டாவதாக, சுகாதார ஊழியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஒரு நோயாளியின் மருத்துவமனை கட்டணங்களில் ஒருநாளைக்கு ரூ.10,000 வரை எவ்வாறு சேர்க்கப்படுகிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டோம்.

இத்தொடரின் மூன்றாம் பாகத்தில், கோவிட்-19 உடன் தொடர்பில்லாத நாள்பட்ட நோய் உள்ளவர்கள், தொற்றுநோய் காலத்தில் குறைந்த விலையில் சுகாதாரச்சேவையை அணுக எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கவிருக்கிறோம். இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும், இதுவரை நாட்டில் 12,000 க்கும் அதிகமான உயிர்களை பலி கொண்ட, கோவிட் தொற்று ஒன்றையே மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது; இரண்டு மாதங்கள் வரை நீடித்து வரும் முழுமுடக்கம், கோவிட் அல்லாத பிறநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் சுகாதாரச் செலவுகளை எவ்வாறு மாற்றி இருக்கிறது?

சார்ஸ்-கோவ்-2 நோய்த்தொற்று ஒட்டிக் கொள்ளுமோ என்ற பீதியில் பலரும் வழக்கமான சிகிச்சைக்கு வரவோ அல்லது அதை அணுகவோ விரும்பவில்லை. எனினும், சுகாதார அணுகலை பெற முடிந்தவர்கள், கோவிட் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து மருத்துவச் செலவுகள் உயர்ந்துள்ளதை உணர்கின்றனர். செலவுகள் சிக்கலான வழிகளில் எகிரிவிட்டன- அதாவது, சிகிச்சையின் செலவு மட்டுமல்ல, மருந்துகளின் விலைகள் மற்றும் மறைமுகச்செலவுகளும் அதிகரித்துள்ளதை எங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.

அத்தியாவசிய கோவிட் அல்லாத சுகாதாரச்சேவைகளை அணுகுவதற்கான வழிகாட்டுதல் ஆவணத்தை, இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கோவிட் -19 தொற்றில் கவனம் செலுத்தி வந்த போதும், “பிற சுகாதாரச்சூழலில் நிலவும் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு அதிகரிப்பை குறைக்க வேண்டியது” அவசியம் என்று அந்த ஆவணம் கூறுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இது 2014-15 எபோலா வைரஸ் பரவலை மேற்கோள் காட்டியுள்ளது. அப்போது, “அம்மை, மலேரியா, எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சுகாதார அணுகலைப் பராமரிக்கக்கூடிய வழிகளை, அது பட்டியலிட்டுள்ளது.

தாய் மற்றும் குழந்தை சுகாதாரச்சேவைகள், டயாலிசிஸ் சேவைகள், இரத்தமாற்றம் மற்றும் காசநோய் சிகிச்சை ஆகியவற்றை அணுகுவது குறித்து அரசு தனி வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டது. அத்தகைய வழிகாட்டுதல்கள் இருந்தபோதும், நாடு முழுவதும் நாள்பட்ட மற்றும் கோவிட் அல்லாத நோய்கள் உள்ளவர்கள், சுகாதார அணுகலுக்கு போராடி வருவதை எங்கள் கட்டுரை வெளிப்படுத்துகிறது.

மருந்துகள் குறைவு, விலைகள் அதிகரிப்பு

பல நோய்களுக்கு, அணுகல் மற்றும் வழங்கல் குறைந்துவிட்டதால் மருந்துகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்த பெங்களூருவைச் சேர்ந்த சந்தைப்படுத்தல் ஆலோசகர் ஸ்வாட்டி பக்ஷி, தனது குழந்தைக்கு கால்-கை வலிப்பு எதிர்ப்பு மருந்தான விகாபட்ரின் பெறுவதற்கு ஒருவரை சந்தித்தார். வலிப்பு பாதிப்புகளை தடுக்க, மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும். பக்ஷி, இந்தியாவின் பல இடங்களில் மருந்தகங்களை தொடர்பு கொண்டதில், அது மிகவும் குறைவாகவே இருப்பு இருப்பதை கண்டார். மருந்து வைத்திருந்த மருந்தகங்கள், அதை அதிக விலைக்கு விற்றன: அதாவது, பொதுவாக ரூ.450 செலவாகும் 10 விகாபாட்ரின் மாத்திரைகளின் ஒரு தொகுதி, பிப்ரவரி மாதத்தில் ரூ.700 ஆகவும்; ஏப்ரல் மாதத்தில் ரூ. 3,500 ஆகவும் விற்கப்பட்டது. அதே நேரம், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு சனோஃபி இறக்குமதி செய்த ஒரு தொகுதி மருந்துக்கு சுமார் 1,750 ரூபாய் தான் செலவானது.இந்த மருந்தை வாங்க பல இந்திய குடும்பங்கள் சிரமப்படுவதை பக்ஷி உணர்ந்தார். "இது கருப்புச்சந்தையில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது," என்று அவர் கூறினார். வங்கதேசம், துபாய், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் உள்ள நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம், முடிந்தவரை கொஞ்சம் மருந்தாவது அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாக பொதுமக்களில் சிலர் தெரிவித்தனர். அகில இந்திய தன்னார்வலர் வலைப்பின்னல் அமைப்பானது, இந்த மருந்து தேவைப்படும் குடும்பங்கள் சிலவற்று அதை வினியோகித்தது.

"ஊரடங்கின் போது விமான சேவை மற்றும் இறக்குமதிகள் நிறுத்தப்பட்டதால், இந்த மருந்து இந்தியாவில் தீர்ந்துவிட்டது" என்று பக்ஷி கூறினார். “இந்த மருந்து இந்தியாவில் ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றாலும், அது ஏற்றுமதிக்கு மட்டுமே அனுப்பப்பட்டது. இங்குள்ள குடும்பங்கள் தொற்றுநோய் பரவலின் போது, அதை அதிகவிலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்றார்.

டோசிலிசுமாப் என்ற மருந்து, ரோச் என்ற மருந்து நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜெனென்டெக் ஆகியவற்றால் மட்டுமே வழங்கப்படுகிறது. இது சில நேரங்களில் கோவிட்-19 நோயாளிகளிடம் காணப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான செயல்பாட்டை சமாளிக்க உதவுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல ஆவணங்கள், இது இந்தியாவில் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கிறது. இதில் கோவிட்-19க்கான மிகச்சமீபத்திய மருத்துவ மேலாண்மை நெறிமுறை உட்பட, இது இந்தியாவில் ஆஃப்-லேபிளை (அங்கீகரிக்கப்படாத அறிகுறிகளுக்கு) பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.

இருப்பினும், டெல்லி தொழிலதிபர் ராஜீவ் தவான், அகமதாபாத்தில் உள்ள, கோவிட் பாசிடிவ் கண்டறியப்பட்ட தனது 65 வயது மாமாவுக்கு அதை வழங்க முயன்றார். அப்போது, வினியோகஸ்தர்கள் ஒரு குப்பிக்கு ரூ.32,000 முதல் ரூ .1.4 லட்சம் வரை வசூலிப்பதை அறிந்தார். "விற்பனையாளர்கள் இந்த ஊசியை பல்வேறு விலையில் வழங்குவதற்காக என்னை தொடர்பு கொண்டிருந்தனர் - அதன் பொருள் ஊசி கிடைக்கவில்லை என்று தோன்றினாலும், இது கறுப்பு சந்தையில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது," என்று தவான் கூறினார்.

அந்த ஊசியின் மூன்று குப்பிகளை அவரது குடும்பம் வாங்க வேண்டியிருந்தது; முதலாவதற்கு ரூ.25,000 செலுத்தப்பட்டது; இரண்டாம் முறை வாங்குகும் போது ரூ. 42,000, பின்னர் மூன்றாவது முறை ரூ.32,000 செலுத்தி பெற்றுள்ளனர்.

‘இப்போது மருந்துகளை வாங்க முடியாது’

கிதிகா கன்னாவும் அவரது கணவரும் தங்களுக்கு தேவையான பல மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டனர். ஏனெனில் கோவிட் தொற்று பரவல் காலத்தில், அவற்றின் அபரிமிதமான விலை அதிகரிப்பால் அவர்களால் வாங்க முடியாத சூழல். கன்னாவுக்கு மூட்டு-இடுப்பு தசைநார் சிதைவு உள்ளது மற்றும் பிறர் உதவி இல்லாமல் நகர முடியாது. அவரது கணவர் சமீபத்தில்தான் புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார். அவர்கள் இருவருமே, நோய்கள், வலி மற்றும் பிற மருந்துகளின் பக்கவிளைவுகளை நிர்வகிக்க, தினமும் பல மருந்துகளை சார்ந்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது கணவர் தனது வேலையை இழந்தார்; இதனால், அந்த மருந்துகளை அவரது குடும்பத்தால் வாங்க முடியாது.

பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கிடிகா கன்னா மற்றும் அவரது கணவர். இவர்கள் இருவரும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு தினமும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும், ஆனால் ஊரடங்கால் இனி தள்ளுபடி விலையில் மருந்துகளை வாங்க முடியாது. அவர்கள் இருவரும் இப்போது தங்கள் செலவுகளை குறைக்க, மருந்துகள் வாங்குவதை தான் நிறுத்த வேண்டியுள்ளது.

"எங்கள் மருந்துகளை டெல்லியில் உள்ள பாகிரத் பேலஸில் இருந்து மொத்தமாக தள்ளுபடி விலையில் வாங்குவோம்; அது மருந்து பொருட்களுக்கான மொத்த சந்தையைக் கொண்டுள்ளது" என்று கீதிகா கன்னா கூறினார். “இப்போது பொதுமுடக்கத்தால் எங்களால் மருந்து சந்தைக்கு செல்ல முடியவில்லை; உள்ளூர் மருந்தகங்களில் சிலவற்றை வாங்குகிறோம். இங்கே, இது அதிகபட்ச சில்லறை விலையில் விற்கப்படுகிறது, எந்த தள்ளுபடியும் கிடைக்காது” என்றார்.

அவரது கணவரோ, மருந்துகளை உட்கொள்வதையே நிறுத்திவிட்டார், செலவுகளைக் குறைக்க, கன்னா தனது மனைவியை மாற்று நாட்களில் மட்டுமே சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார்.

மருத்துவமனை பராமரிப்புக்கு விலையுயர்ந்த மாற்றுகள்

அனுபா மகாஜனின் மாதாந்திர சுகாதாரச் செலவுகள் மூன்று மடங்காக - ரூ.50,000 என்று இருந்தது, ரூ .1.5 லட்சம் வரை - அதிகரித்துள்ளன; தொற்றுநோய் பரவல் காலத்தில் அவரால் எந்த மருத்துவமனையையும் அணுக முடியவில்லை.

மகாஜனுக்கு வலி உண்டாக்கும் சிக்கலான நோய் உள்ளது, அதாவது புற்றுநோயால் உண்டாகும் வலியைக் காட்டிலும் அது இடைவிடாது தொடர்ந்து வலியை ஏற்படுத்துகிறது. அவரது உடல், இனி வாய்வழி வலி மருந்து நிவாரணிகளை ஏற்காத நிலையில், அவசர சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்தாக வேண்டும். அவருடைய நோயின் வலி மற்றும் பிற அறிகுறிகளைச் சமாளிக்க கேட்டமைன் மருந்து உட்செலுத்துதல்களையும் அவர் எடுத்தாக வேண்டும்.

அனுபா மகாஜன் புற்றுநோயால் ஏற்பட்டதை விட அதிக அளவில் வலியை அனுபவிக்கிறார். அவருக்கு வழக்கமான பராமரிப்புக்கு மருத்துவமனை அணுகல் என்பது அவசியம்; ஆனால் கோவிட் தொற்று பரவலால், வீட்டுக்கு வரும் வகையில் செவிலியரை நியமிக்க வேண்டியிருந்தது. இதனால், அவரது மாதாந்திர மருத்துவச்செலவுகள் அதிகரித்தன.

"முழு ஊரடங்கு எனது முழு சுகாதார அமைப்பையும் உடைத்துவிட்டது" என்று மகாஜன் கூறினார். சிகிச்சையின்றி, அவரது கால்களில் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கக்தொடங்கி இருந்தது. அவரது பேச்சு பலவீனப்பட்டு இருந்தது. ஊரடங்கின் போது அவர் வலியில் இருந்து விடுபட்ட தருணங்கள் இருந்தன. "என் உடலில் தசைப்பிடிப்பு வலியை சமாளித்தவாறே, நான் இப்போது உங்களுடன் பேசுகிறேன்," என்று அவர் தொலைபேசியில் கூறினார்.

கோவிட் தொற்றுநோய் பரவலால், அவரால் மருத்துவமனையை அணுக முடியவில்லை. எனவே, வீட்டிற்கு வந்து கவனிக்க, ஒரு செவிலியரை பணியமர்த்தி இருக்கிறார். மனநலச் செலவுகளும் உள்ளன. "இந்த அமர்வுகள் இப்போது ஆன்லைனில் இருந்தாலும் எனது வழக்கமான உளவியலாளர் ஒரு அமர்வுக்கு ரூ. 2,000 வசூலிக்கிறார்" என்று மகாஜன் கூறினார். "நான் அவருடனான எனது அமர்வுகளை நிறுத்தலாமா என்று பரிசீலித்து வருவதாக அவரிடம் சொல்ல வேண்டியிருந்தது; ஏனென்றால் எனது சுகாதாரத்தின் மற்ற அம்சங்களுக்காகவும் நான் பணம் செலுத்த வேண்டி இருக்கிறது" என்றார்.

மும்பையில் 76 வயதான ஒருவர், டயாலிசிஸின் ஒரு அமர்வுக்கு சுமார் ரூ .39,000 செலுத்த வேண்டியிருந்தது, அத்துடன் ஆம்புலன்சிற்கு ரூ.10,000 கூடுதலாக செலுத்த வேண்டும் என்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை முன்பு குறிப்பிட்டிருந்தது. தொற்றுநோய்க்கு முன்னர் ஒரு அமர்வுக்கு அவர் செலுத்திய ரூ. 2,500 என்பதைவிட இது, 15 மடங்கு அதிகம்.

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அரசின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் இருந்தபோதும், அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதையே, இந்தியா ஸ்பெண்ட் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. "வழக்கமான டயாலிசிஸில் உள்ள நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்ட அட்டவணையை கடைபிடிக்க வேண்டும்; அவசரகால டயாலிசிஸை தவிர்ப்பதற்காக அவர்களின் டயாலிசிஸ் அமர்வுகளைத் தவறவிடக்கூடாது" என்று டயாலிசிஸிஸ் சிகிச்சைக்கான வழிகாட்டுதல் கூறுகிறது. நோயாளிகளுக்கு டயாலிசிஸ் வசதிகளை அடைவதற்கு போக்குவரத்தை ஏற்பாடு செய்யுமாறு இந்த ஆவணம் சுகாதார அதிகாரிகளை அறிவுறுத்துகிறது.

உலகளவில் கோவிட் அல்லாத நோயாளிகள் தவிப்பு

"தொற்றுநோய் காலத்தில் சுகாதாரச்சேவையை தாமதமாக அணுகுவதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றாலோ அல்லது கோவிட் அல்லாத நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சுகாதார நிலைமைகள் மோசமடைந்திருக்கும்" என்று டெல்லியை சேர்ந்த பொது சுகாதார நிபுணர் சோனாலி வைத் கூறினார். "அவர்கள் கடைசி கட்டத்தில் சுகாதாரச் சேவையை அணுகும்போது, செலவுகள் அதிகமாக இருக்கும்; ஏனென்றால், நோயின் தன்மை மோசமடைந்திருக்கும் " என்றார். உதாரணமாக ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், ஊரங்கின்போது வழக்கமான சுகாதார பரிசோதனைகளை பெற முடியாத ஒரு நீரிழிவு நோயாளிக்கு கோவிட்-19 பரவினால், தீவிர சிகிச்சை தேவைப்படுவதோடு, அவரது சுகாதாரச் செலவினங்களையும் அது அதிகரிக்கும் என்றார்.

"அணுகல் சிக்கலை நம்மால் 100% தீர்க்க முடியாமல் போயிருக்கலாம், அரசுகள் இதுபற்றி தன்னிச்சையாக இருந்திருக்கலாம்: ஆனால், கோவிட் நெருக்கடி மற்றும் வழக்கமான சுகாதாரத்துக்கு இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும்,” என்றார் வைத்.தொற்றுநோய் பரவல் காலத்தில், முக்கியமான பிற சுகாதாரத்துக்கான அணுகல் இல்லாதது இந்தியாவில் மட்டுமே நிகழ்வது கிடையாது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் புரோ-பப்ளிகா அமைப்பு, முக்கிய பெருநகரங்களில் இருந்து இறப்புகள் குறித்த தரவை கோரியது; அதில், வீட்டில் இறக்கும் மக்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு இருப்பதை அது கண்டது. சிகிச்சை பெறாத கோவிட் -19 நோயாளிகள் அல்லது சுகாதாரச்சேவையை அணுக முடியாத பிற நோய்கள் உள்ளவர்கள், இந்த விசாரணையில் கண்டறியப்பட்டனர். தி நியூயார்க் டைம்ஸ் இதழின் செய்தி, கோவிட் அல்லாத நோயாளிகளை “தொற்றுநோயின் மறைக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள்” என்று குறிப்பிட்டது.

“கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, பிற தொற்றாநோய்களுக்கான தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன”, குறிப்பாக குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் பாதிப்பு அதிகம் என்று, உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இது, ஜூன் மாதத்தில் கோவிட் அல்லாத நோய்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. "புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிகிச்சை தேவைப்படும் பலர், கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து தங்களுக்கு தேவையான சுகாதாரச்சேவைகள் மற்றும் மருந்துகளை பெறவில்லை" என்று, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். "கோவிட்-19 உடன் போராடிய போதும், தொற்றாதநோய்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்ய நாடுகள் புதுமையான வழிகளைக் கண்டுபிடிப்பது மிக முக்கியம்" என்று அவர் கூறினார்.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story