கைதிகளை விட டெல்லி சிறை ஊழியர்களிடையே வேகமாக பரவும் கோவிட்19

கைதிகளை விட டெல்லி சிறை ஊழியர்களிடையே வேகமாக பரவும் கோவிட்19
X

புதுடெல்லி: நாட்டின் தேசிய தலைநகரில் உள்ள மூன்று சிறை வளாகங்களில் - திகார், மண்டோலி மற்றும் ரோகிணி - ஆகஸ்ட் 30ம் தேதி வரை உறுதிப்படுத்தப்பட்ட 240 கோவிட்19 வழக்குகளில் 175 (72.9%) பேர் சிறை ஊழியர்கள், எஞ்சியவர்கள் (65 அல்லது 27.1%) கைதிகள் ஆவர். ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான 58 நாட்களில் கைதிகளிடையே கோவிட் வழக்குகள் 22.6% அதிகரித்துள்ளன, அதே நேரம் சிறை ஊழியர்கள் இடையே 108.3% அதிகரித்துள்ளது என்று டெல்லி சிறைத்துறை இயக்குனர் சந்தீப் கோயல் தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் போக்கிற்கு நேர்மாறாக உள்ளது, அதாவது மற்ற இடங்களில் பெரும்பாலான கோவிட்19 வழக்குகள் கைதிகளிடையே தான் அதிகம் பதிவாகியுள்ளன.

உதாரணமாக மகாராஷ்டிராவில், ஆகஸ்ட் 18 வரை, 1,043 கைதிகள் மற்றும் 302 சிறை ஊழியர்களுக்கு கோவிட்19 நேர்மறை கண்டறியப்பட்டது. "கைதிகளை விட பாதிக்கப்பட்ட சிறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஒரே நகரம் டெல்லி" மட்டுமே என்று திகார் சிறைச்சாலையின் முன்னாள் சட்ட ஆலோசகர் சுனில் குப்தா கூறினார். "ஊழியர்களின் குடியிருப்புகளில் இருந்து தொற்று பரவியது போல் தெரிகிறது" என்றார் அவர்.

புதிதாக வெளியிடப்பட்ட தரவுகளின்படி இந்தியாவில் அதிக மக்கள் கூட்டம் உள்ள டெல்லி சிறைகளில், மொத்த கோவிட்19 வழக்குகளின் எண்ணிக்கை 75.18% அதிகரித்து 137 என்றிருந்தது, ஆகஸ்ட் 30 வரையிலான 58 நாட்களில் 240 ஆக அதிகரித்துள்ளது என்று தரவு காட்டுகிறது. "மார்ச் 6 ஆம் தேதி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்ட போதும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சிலின் வழிகாட்டுதல்களின்படி தேவையான முன்னெச்சரிக்கைகள் தொடங்கப்பட்டன" என்று சிறைச்சாலை துறை இயக்குனர் கோயல் கூறினார். கைதிகள் மத்தியில் முதலாவது கோவிட்19 வழக்கு, மே 12 அன்று கண்டறியப்படும் முன்பே, ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு தீவிர நிலையான இயக்க நடைமுறை செயல்படுத்தப்பட்டது.

"தேசிய அளவில் கொரோனா வைரஸ் இரட்டிப்பு விகிதம், 60 நாட்களுக்கு மேல் உள்ளது; ஆனால் சிறைச்சாலைகளுக்குள் நிலைமை மிக சிறப்பாக இருக்கும், ஏனெனில் பரவலைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவது அங்கு எளிது," என்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஷார்தா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச்சில் மருத்துவப் பேராசிரியரும், டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளருமான ஏ.கே. கட்பாயில் தெரிவித்தார்.

டெல்லி சிறைகளில் விசித்திரமான வழக்கு

தொற்றுநோய் கண்டறியப்பட்ட பெரும்பாலான பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் கைதிகளை சரிபார்ப்பதில் ஈடுபட்டு வந்த இளநிலை அதிகாரிகள், அதுவே அவர்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கியது. "இந்த ஊழியர்கள் சிறை வளாகத்தில் பாதுகாப்பு, சமையல், பராமரிப்பு, துப்புரவு மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டனர்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். "வைரஸ் பரவும் அபாயம் இருந்தபோதும், ஆரம்பத்தில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது சக ஊழியர்களிடம் இருந்து விலகி இருக்கவோ அவர்கள் கேட்கப்படவில்லை" என்றார்.

கண்டறியப்பட்ட முதல் வழக்கு ஒரு கைதி என்றாலும், அவர்களுக்கு சிறை ஊழியரிடம் இருந்து நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற கோயல், "பலர் வெளியில் இருந்து சிறை வளாகத்திற்கு வருவதால் நோய்த்தொற்றின் மூலத்தை அடையாளம் காண முடியாது" என்றார்.

ஊழியர்கள் தங்களது குடியிருப்புகளில் ‘சாதாரண’ வாழ்க்கையை நடத்தி வந்தனர், குடும்பங்களுடன் கலந்து இருந்தும் சிறை வளாகத்திற்கு வெளியே பயணம் செய்தும் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் விளைவாக, தொற்று ஏற்பட்டவுடன் சிறை ஊழியர்கள் மத்தியில் வழக்குகள் வேகமாக பரவின. சிறைச்சாலையின் பாதுகாப்பை கவனிக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை (TSP) பணியாளர்கள் மத்தியில் ஜூன் மாதத்திற்குள் வழக்குகள் அதிகரித்து வந்தன. பரிசோதனையில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை பணியாளர்கள் இடையே 80 வழக்குகள் என்றிருந்தது, ஆகஸ்ட் 30 க்குள் 240 வழக்குகளாக அதிகரித்தன.

"20-30 தமிழ்நாடு சிறப்பு காவல்துறையினர் ஒரே குடியிருப்பில் வாழ்ந்ததால், சமூக இடைவெளி என்பது கடினமாகி, இந்த நோய் பரவியது" என்று கோயல் கூறினார். சராசரியாக, ஒவ்வொரு குடியிருப்பும் சுமார் 1,140 சதுர அடி என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "நாங்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை அதிகாரிகளை விரிவாக பரிசோதனை செய்தோம். அவர்கள் அனைவரும் இப்போது மீண்டுவிட்டனர், ”என்றார் கோயல்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலர், திகார் சிறைச்சாலையின் புதிய, உயரமான குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. "புதிய குடியிருப்பு வளாகம் பல மாடி கட்டிடத்தில் இருக்கும்போது பழைய குடியிருப்பு வளாகத்தில் வரிசை வீடுகள் உள்ளன. பல மாடி [கட்டிடங்களில்] வசிக்கும் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், ஏனெனில் அவர்களிடம் வெளிப்பாடு அதிகமாக உள்ளது,” என்று திகார் சிறையின் முன்னாள் சட்ட ஆலோசகர் குப்தா கூறினார்.

கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து பணியாளர்களையும் தனிமைப்படுத்த சிறப்பு செல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக, சிறைத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் ஆண்களுக்கு இரண்டு சிறைகளிலும், வளரிளம் பருவத்தினர், பெண்களுக்கு எஞ்சியவை அமைக்கப்பட்டன. "மார்ச் மாதத்தில் கைதிகளுக்கான தொற்று பரிசோதனை இயக்கம் தொடங்கப்பட்டு பலர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் காலியாக இருந்த சில செல்கள், பாதிக்கப்பட்ட சிறை ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக பயன்படுத்தப்பட்டன,” என்று அந்த அதிகாரி கூறினார். ஜூன் மாதத்திற்குள், சமூக இடைவெளியை கடைபிடிக்க, குடியிருப்புகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதாக, அதிகாரி மேலும் கூறினார்.

இதற்கிடையில், கைதிகள் மத்தியில் வழக்குகள் 22% அதிகரித்துள்ளன - அதாவது ஆகஸ்ட் 30 வரையிலான 58 நாட்களில், 53இல் இருந்து 65 ஆக அதிகரித்தது. கூட்ட நெரிசல் மற்றும் அதன் விளைவாக மோசமான சுகாதார நிலைமைகள் இதற்கு பங்களித்தன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "இந்திய சிறைகளுக்குள் கூட்டம் அதிகமாக இருப்பது நீண்ட காலமாக ஒரு கவலையாக உள்ளது, இந்த மருத்துவ நெருக்கடியில் கைதிகள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவ, இது வழிவகுக்கும்," என்று, சிறை ஆய்வுக்குழுவின் ஒரு பகுதியாக இருந்த டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் சமூக மருத்துவத் தலைவர் ஜுகல் கிஷோர் கூறினார்.

அதே நேரம், சிறைச்சாலைகளுக்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது எளிதானது, ஏனெனில் வெளிப்புற தொடர்பு அங்கு குறைவாக உள்ளது. "பாதிக்கப்பட்ட நபர்கள் ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டால், பரவலை திறம்பட கட்டுப்படுத்தி இருக்க முடியும்" என்று ஷார்தா பல்கலைக்கழகத்தின் கட்பேல் கூறினார். ஆகஸ்ட் 30 வரையிலான 58 நாட்களில் டெல்லி சிறைகளுக்குள் 75% வழக்குகள் அதிகரித்த நிலையில், வழக்குகள் நாடு முழுவதும் 457% அதிகரித்து 649,886 என்றிருந்தது 3,619,174 ஆக அதிகரித்துள்ளது. சானிடிசர்கள் மற்றும் முகக்கவசங்களின் பயன்பாடு இருந்தும் அதிகரித்தது.

முதல் வழக்கு அடையாளம் காணப்பட்ட பின்னர் மே 12 அன்று தொடர்புத் தடமறிதல் தொடங்கப்பட்டது என்று கோயல் கூறினார். "சிறை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் எவரும் ஏதேனும் ஐ.எல்.ஐ [influenza-like illness] அறிகுறிகள் ஏற்பட்டால் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை நாங்கள் செய்துள்ளோம். இந்த ஊழியர்கள் சிறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் தொடர்பு கொண்டிருந்த எவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்/ அல்லது விடுப்பில் அனுப்பப்பட்டனர், ”என்று அவர் கூறினார். "பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் சிறை ஊழியர்கள் அவர்களின் குடும்பங்களின் தேவைக்காக வெளி உலகத்துடன் தொடர்பு கொள்வதற்காக சிறை வளாகத்திற்கு வெளியே பயணம் செய்கின்றன" என்றார்.

ஜூன் முதல் வாரத்தில், சோதனைக்காக திஹாரில் சிறப்பு மருந்தகம் ஒன்று அமைக்கப்பட்டது. "ஜூன் மாதத்தில் விரைவான ஆன்டிஜென் சோதனைகளை நாங்கள் ஆரம்பித்தவுடன், நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது" என்று கோயல் கூறினார். "எந்தவொரு அறிகுறியையும் கண்டறியும் ஒவ்வொரு ஊழியர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நாங்கள் சோதித்து வருகிறோம். 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்களுடன் கூடியவர்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிறப்பு மூத்த குடிமக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுகிறார்கள், ”என்று அவர் கூறினார்.

இந்தியா ஸ்பெண்ட் அணுகிய தரவுகளின்படி, ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் சுமார் 800 கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட 240 வழக்குகளில் பெரும்பாலானவை அறிகுறியற்றவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லி சிறைகளுக்குள் நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்று, ஆகஸ்ட் 5 ம் தேதி இந்தியா ஸ்பெண்ட் உடன் பேசிய கிஷோர் தெரிவித்தார். ஆனால் "அவர்களின் சுகாதார நிலைகளை மேம்படுத்துவதற்கு பெரும் வாய்ப்பாக இது உள்ளது" என்று கூறினார்.

நீக்குதல் இயக்கம்

சிறை வளாகத்திற்குள் கோவிட்19 பரவாமல் தடுக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர் அதிகாரக்குழுவை அமைக்குமாறு, மார்ச் 23 அன்று அனைத்து மாநிலங்களையும், உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான செயல் திட்டத்துடன் வருமாறு டெல்லியில் உள்ள குழு, சிறைச்சாலைகளின் இயக்குநர் ஜெனரலை கேட்டுக்கொண்டது, அதன்பிறகு கோயல் 24 அம்ச நிலையான இயக்க நடைமுறைகளை குழுவிடம் சமர்ப்பித்தார்.

நாட்டின் 1,350 சிறைச்சாலைகளிலும் நோய் கண்டறிந்து நீக்கும் பணியை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 31, 2019ல் இந்திய சிறைகளில் 478,600 கைதிகள் இருந்தனர், இது அனுமதிக்கப்பட்ட திறனை விட கிட்டத்தட்ட 75,000 அதிகம் என்று, தேசிய குற்ற பதிவு பணியகம் (NCRB - என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள 2019 சிறை புள்ளிவிவர தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் டெல்லியின் சிறைகளில் நீக்குதல் பணி நடந்த போதும் இன்னமும் அதிகம்பேர் உள்ளனர். "மூன்று சிறை வளாகங்களில் 16 சிறைச்சாலைகள் உள்ளன, அங்கு 10,026 பேரே இருக்க முடியும் என்ற நிலையில், உண்மையில் 13,061 [இப்போது வரை] உள்ளனர்" என்று கோயல் கூறினார். நீக்குதல் நடவடிக்கைக்கு முன்பு, டெல்லியின் சிறைகளில் 17,500 கைதிகள் இருந்தனர், அதிகபட்ச திறனை விட இது 75% அதிகம் என்று சிறை தரவு காட்டுகிறது.

இந்தியாவில் சிறைகளின் கொள்திறன் என்பது, டிசம்பர் 31, 2019 நிலவரப்படி சராசரியாக 118.5% என்றளவில் உள்ளது. டெல்லியில் அதிகம் பேர் இருப்பு விகிதம் (174.9%) இருந்தது; அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் (167.9%) மற்றும் உத்தரகண்ட் (159.0%) என்று தேசிய குற்ற பதிவு பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜூலை 31 ஆம் தேதி நிலவரப்படி, 4,439 கைதிகள் டெல்லியின் சிறைகளில் இருந்து இடைக்கால ஜாமீன் அல்லது அவசரகால பரோலில் விடுவிக்கப்பட்டனர். "விடுவிக்கப்பட்டவர்களில், 3,211 பேர் கைதிகளாகவும், 1,165 பேர் அவசரகால பரோலில் விடுவிக்கப்பட்டவர்களாகவும், 63 குற்றவாளிகள் தண்டனையை முடித்துக் கொண்டதற்காகவும் விடுவிக்கப்பட்டனர்" என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்19 எண்ணிக்கைக்கு மத்தியில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், தாங்கள் சிறைச்சாலைக்குள் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்ததாகக் கூறினர். "தொற்றுநோய்களின் போது டெல்லியின் சிறைகள் வெளி உலகத்தை விட பாதுகாப்பானவை" என்று 56 வயதான திவாகர் குப்தா கூறினார். இவர், 2001 முதல் மண்டோலி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்த ஒரு கொலைக்குற்றவாளி, நீக்குதல் நடவடிக்கையின்படி பரோலில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் கூறினார். "குறைந்த நடுத்தர வர்க்க பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை, ஏனெனில் அவர்கள் பாதிக்கப்பட்டால் தேவையான மருத்துவ உதவியை வெளியில் பெற முடியாது" என்றார்.

(ஆச்சார்யா, டெல்லியைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story