மேம்பட்ட பராமரிப்புக்காக அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை கண்காணிக்க உதவும் ஹரியானா இணையதளம்

மேம்பட்ட பராமரிப்புக்காக அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை கண்காணிக்க உதவும் ஹரியானா இணையதளம்
X

ஒவ்வொரு மாதம் 9ம் தேதி, கர்ப்பிணிகள் ஹரியானாவின் குருகிராம் மாவட்டம் வஜிராபாத் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வருகின்றனர்; அங்கு அவர்களுக்கு, பிரதமரின் சுரக்ஷித் மத்ரித்வ அபியான் (பிரதமரின் தாய்மை பாதுகாப்பு திட்டம்) கீழ் பிரசவத்துக்கு முந்தைய கர்ப்பகால பராமாரிப்பு மேற்கொள்ளப்படுகின்றன.

வஜிராபாத், ஹரியானா: ஹரியானாவின் குருகிராம் மாவட்டம் வஜிராபாத் ஒன்றிய ஆரம்ப சுகாதார மையத்தில், சுட்டெரிக்கும் உச்சி வெயிலில் கர்ப்பிணிகளின் நீண்ட வரிசையில் ஒருவராக, ராஜ்வந்தி தேவி, 38 துணிச்சலோடு நின்றார். இந்த வரிசை, ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதி வழக்கமாக இருக்கக்கூடியது. இங்கு கர்ப்பிணிகளுக்கு, குறிப்பாக அதிக ஆபத்து அறிகுறி உள்ளவர்களுக்கு பிரதமரின் சுரக்ஷித் மத்ரித்வ அபியான் (பிரதமரின் தாய்மை பாதுகாப்பு திட்டம் - பி.எம்.எஸ்.எம்.ஏ) கீழ் சுகாதார மையத்தில் சேவைகளை வழங்கப்படுகிறது.

இரண்டு சிறுமிகளின் தாயான ராஜ்வந்தி தேவி, மூன்றாம் முறையாக கர்ப்பமானார். இது எந்த நிலையில் இருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. சுகாதார மையத்திற்கு அவர் வருவது இதுவே முதல்முறை. அவர் ஆறு மாத கர்ப்பிணி என்று அங்கு பரிசோதித்து சொன்னபோது ஆச்சரியப்பட்டார். அவரது உடல்நிலை ஆபத்தான சூழலில் இருப்பதாக, சுகாதார மைய ஊழியர்கள் தெரிவித்தனர். ஏனெனில் லேசாக இரத்தசோகை கொண்ட அவரது ஹீமோகுளோபின் அளவு 8.8 கிராம் / டி.எல். என்றிருந்தது; இயல்பாக பெண்களுக்கு இது 12-16 கிராம் / டி.எல். என்றிருக்க வேண்டும். அவரது இரண்டாவது குழந்தை சிசேரியனில் பிறந்ததால் ஆபத்து வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

அவரது கர்ப்பம், ஹரியானா அரசின் அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளை கண்காணிக்கும் இணையதளத்தில் (அரசால் நவம்பர் 2017 இல் தொடங்கப்பட்டது) மூலம் பரிசோதிக்கப்படும். தேவையான கர்ப்பத்துக்கு முந்தைய அனைத்து பரிசோதனைகள் மற்றும் சுகாதார மைய அல்லது மாவட்ட மருத்துவமனை நிபுணர்களின் பரிந்துரைகளை அவர் பெறுகிறாரா என்பதை, இது உறுதிப்படுத்திக் கொள்ளும். இத்திட்டத்தின் கீழ் குருகிராம் 2,750, ஜாஜ்ஜர் மாவட்டம் 3,526 அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை பதிவு செய்துள்ளது.

ஹரியானாவில் இது பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் (எம்.எம்.ஆர்) குறைக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். கடந்தகால நடவடிக்கைகளால், நாட்டின் 12வது மிகக்குறைந்த பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை ஹரியானா பெறுவதற்கு உதவியது. இங்கு 2014-16 ஆம் ஆண்டில் 1,00,000 பிரசவங்களுக்கு 101 தாய் இறப்பு என்றிருந்தது 2015-17இல் 98 ஆக குறைந்துள்ளது என, மாதிரி பதிவு அமைப்பு (SRS) தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், 2015-17ல் இந்திய சராசரி 122 ஆக இருந்தது.

ஹரியானா சுகாதார அமைச்சகம் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை, 100,000 பிரசவங்களுக்கு 70 ஆகக் குறைக்க இலக்கை நிர்ணயித்துள்ளது. அதிக ஆபத்துள்ள கர்ப்ப காலத்திற்கான இணையதளம், அதை பதிவு செய்ய உதவுகிறது. ஆபத்துள்ள கர்ப்பங்களை சிறப்பாகக் கண்காணிக்க உதவுகிறது. பெண்கள் ஒருபோதும் பரிசோதனையை தவறவிடாமல் கவனித்து, அவர்களின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணிக்கிறது.

"பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் மற்றும் இறந்த சிசு பிறத்தல் ஆகியவற்றைக் குறைப்பதே இதன் குறிக்கோள். ஏனெனில் அதிக பிரசவகால ஆபத்துள்ள கர்ப்பிணிகளுக்கு, நோய்த்தன்மை மற்றும் இறப்புக்கு அதிக வாய்ப்புள்ளது” என்று ஹரியானாவின் தேசிய சுகாதார இயக்க (என்.எச்.எம்) தாய்மார்களின் சுகாதாரத்திற்கான துணை இயக்குநர் அல்கா கார்க் கூறினார்.

கடந்த 2016 மற்றும் 2018-க்கு இடையில் பிரதமரின் தாய்மை பாதுகாப்பு திட்டம் (பி.எம்.எஸ்.எம்.ஏ) கீழ் அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கொண்ட ஐந்து லட்சம் பெண்களை கண்டறிந்த மற்ற இந்திய மாநிலங்களுக்கு, ஹரியானாவின் இணையதள சேவை அனுபவம் நல்ல பாடமாக இருக்கும். அதிக ஆபத்துள்ள கர்ப்பினிகளுக்கு பிரசவம், பிறப்பு குறைபாடுகள், முன்கூட்டிய பிரசவம், மோசமான பிரசவம் மற்றும் குழந்தை மற்றும் தாயின் இறப்பு போன்ற சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. "கர்ப்ப காலத்தில் ஆபத்து காரணிகளை சரியான நேரத்தில் கண்டறிவதால், பிரசவத்தின்போது ஏற்படும் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை களைந்து இறப்புகளை தடுக்கலாம்" என்று பி.எம்.எஸ்.எம்.ஏ வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.

குருக்ராம் மாவட்டத்திற்கு இந்தியா ஸ்பெண்ட் குழு சென்ற தருணத்தில், இத்திட்டம் ஏற்கனவே முடிவுகளை காட்டிக் கொண்டிருந்ததை உணர்த்தியது. பிரசவத்துக்கு முந்தைய பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்பட்ட ஆபத்துள்ளவர்களின் விகிதம், 2013-14 ஆம் ஆண்டில் 6.91% ஆக இருந்து, 2017-18 ஆம் ஆண்டில் 14.35% ஆக அதிகரித்துள்ளது என்று என்.எச்.எம். ஹரியானாவின் தரவு காட்டுகிறது.

முன்னதாக, அடிமட்ட சுகாதார ஊழியர்கள் கர்ப்பிணிப் பெண்களை பரிசோதிப்பார்கள்; ஆனால் அப்போது அதிக ஆபத்துள்ளவற்றில் கவனம் செலுத்தப்படுவதில்லை. இப்போது, அதிக ஆபத்துள்ள கர்ப்பிணி தனது மாதாந்திர பரிசோதனைகளை தவறவிட்டால், அதுபற்றி அமைப்புக்கு தெரிவிக்கிறது. சுகாதாரப்பணியாளர்கள் அவர் வீட்டிற்கு சென்று சுகாதார மையத்திற்கு அவரை அழைத்து வருகிறார்கள் என்று 57 வயது வஜிராபாத் ஆரம்ப சுகாதார மையத்தின் சுகாதார மேற்பார்வையாளர் ஷீலாதேவி கூறினார்.

அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை நிர்வகிப்பது, இணையதளம் உட்பட ஹரியானாவின் கொள்கைகளை நிதி ஆயோக் 2018 ஜனவரியில் ஆய்வு செய்து, , பிரசவத்துக்கு முந்தைய பராமரிப்பில் இது ஒரு ‘சிறந்த நடைமுறை’ என்று அடையாளம் கண்டது.

இருப்பினும், கவனிப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், சேவைகள் ஒன்பதாம் தேதி மட்டுமல்ல, மாதம் முழுவதும் கிடைக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள், பயனாளிகள் மற்றும் மருத்துவர்கள் கூறினார்.

அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை கண்காணித்தல்

அதிக ஆபத்துள்ள கர்ப்ப நிகழ்வுகளுக்கு, 7 கிராம் / டி.எல்-க்கும் குறைவான ஹீமோகுளோபின் அளவு கொண்ட கடும் இரத்தசோகை உள்ள பெண்கள், கர்ப்பத்தில் உயர் இரத்த அழுத்தக் கோளாறு (140/90 எம்.எம்.ஹெச்.ஜியை விட அதிக இரத்த அழுத்தம் இருப்பது), எச்.ஐ.வி. அல்லது சிபிலிஸ், கர்ப்பகால நீரிழிவு, சிசேரியன் முந்தைய நிலை, பிரசவம், கருக்கலைப்பு, முன்கூட்டிய பிரசவம், தடைபட்ட உழைப்பு மற்றும் இரட்டை கர்ப்பம் போன்றவை காரணமாகிறது.

ஆபத்தில் இருப்பது கண்டறியப்பட்டதும், ராஜ்வந்தி தேவிக்கு அதிக ஆபத்துள்ள கர்ப்பத்தை குறிக்கும் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இப்போது கீழ்மட்ட சுகாதாரப் பணியாளர்கள் (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA), துணை மருத்துவ செவிலியர்கள் -ANM), கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்குவதோடு பிரசவம் முடியும் வரை தீவிரமாக கண்காணிக்கப்பார்கள்.

அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கண்டறியப்பட்ட பெண்ணுக்கு ‘உயர் ஆபத்து’ என்ற முத்திரையுடன் சிவப்பு நிற கர்ப்பகால அட்டை வழங்கப்படுகிறது. அவர், ஹரியானாவின் கர்ப்பகால கண்காணிப்பு இணையதளம் மூலம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறார்.

பி.எம்.எஸ்.எம்.ஏ என்பது, 2000ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட வந்தே மாதரம் என்ற திட்டத்தின் விரிவாக்கம் ஆகும். "கடந்த இரு ஆண்டுகளில் பிரசவத்தின் தாய்மார்கள் இறப்பு, வெளிச்செல்லும் சுகாதார சேவைகளின் விரிவாக்கம் மற்றும் அதிக ஏ.என்.எம்-கள் சேர்ப்பு ஆகிய விஷயங்கள் மிகவும் மேம்பட்டுள்ளன" என்று உலகளாவிய மக்கள் சுகாதார இயக்கம் (PHM) இந்திய கிளையான ஜன் ஸ்வஸ்திய அபியானின் தேசிய இணை அமைப்பாளர் சுலக்ஷனா நந்தி கூறினார்.

பி.எம்.எஸ்.எம்.ஏ- இன் கீழ் ஜூலை 2016 முதல் ஜனவரி 2018 வரை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் கர்ப்பகால கவனிப்பை பெற்றதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"அனைத்து அரசு மருத்துவமனைகளும், மாவட்டத்தில் உள்ள அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளைத் தொகுக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒருமுறை அனைத்து விவரங்களுடனும் இந்த இணையதளம் புதுப்பிக்கப்படுகிறது" என்று ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தின் இஸ்லாம்பூர் சுகாதார மைய ஏ.என்.எம். ஆன 44 வயது நீலம் சவுதாரி கூறினார்.

"அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை அடையாளம் காண, இந்த இணையதளம் ஹரியானாவின் ஒரு கண்டுபிடிப்பு" என்று, அம்மாநில தேசிய சுகாதார இயக்கத்தின் கார்க் கூறினார். "எங்களிடம் 100% பெயர் அடிப்படையிலான இணையதளம் உள்ளது, அங்கு ஒவ்வொரு பெண்ணின் கர்ப்ப வரலாறும், அவருக்கு குழந்தை பிறக்கும் வரை உன்னிப்பாக கண்காணிக்கப்படும்" என்றார்.

குருக்ராமில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களில், 647 முன்பு சிசேரியன் பிரசவங்களாக இருந்தவை, 179 கடும் இரத்த சோகை, 187 உயர் இரத்த அழுத்தம், 211 பலமுறை கர்ப்பம் காரணமாக இருந்தன என்று இந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

குருகிராம் மற்றும் ஜாஜ்ஜர் மாவட்ட அளவிலான தரவை, அதிக ஆபத்துள்ள கர்ப்பத்திற்கான இணையதளத்தில் இருந்து, இந்தியா ஸ்பெண்ட் பெற்றது. அக்டோபர் மாதத்தில் பலமுறை மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் செய்தும் கூட ஹரியானாவின் தேசிய சுகாதார இயக்கம் மாநிலம் முழுமைக்கான தரவை பகிரவில்லை. தரவுகள் பெறப்பட்டால் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

கலந்தாலோசனை

பி.எம்.எஸ்.எம்.ஏ.-வின் முக்கிய கூறு, தேவைப்படும் தாய்மார்களுக்கு ஆலோசனை தருவதாகும். "பிரசவத்துக்கு முன்புள்ள இடைவெளியில் பயிற்சி செய்ய அவர்களிடம் கூறுகிறோம்," என்ற ஷீலா தேவி "அதிக ஆபத்துள்ளது அல்லது சிசேரியன் எனில், அடுத்த குழந்தைக்கு குறைந்தபட்சம் மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்" என்றார்.

"மாதாந்திர பரிசோதனையை அவர்கள் தவறவிட்டால், ஆஷாக்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் அல்லது அவர்கள் ஏன் வரவில்லை என்பதை அறிய அவர்களை இங்கே அழைக்கிறோம்," என்றார் அவர். "அதிக ஆபத்துள்ள கர்ப்ப காலத்திற்கான இணையதளம், ஒவ்வொரு பெண்ணின் பதிவையும் வைத்திருப்பது மிக உதவியாக இருக்கும்" என்றார் அவர். அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படும் பிரசவங்களுக்கு, அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள், மாவட்ட மருத்துவமனை அல்லது சிறப்பு சேவைகளை வழங்கும் சமூக சுகாதார மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. "கடந்த மாதம் பி.எம்.எஸ்.எம்.ஏ திட்ட பரிசோதனையில் உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒருவரை கண்டோம். அந்த பெண்ணுக்கு 220/190 மிமீஹெச்ஜி இரத்த அழுத்தம் இருந்தது. உடனடியாக ஆஷா உதவியுடன் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்." என்று சவுதாரி கூறினார்.

கர்ப்பகால பராமரிப்பு

ராஜ்வந்தி தேவியைப் போலவே, பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் சரியான பிரசவத்துக்கு முந்தைய கவனிப்பை பெறுவதில்லை. 2015-16 ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட 15-49 வயதுடைய பெண்களில் பாதி (51%) பேர் மட்டுமே, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தவாறு பிரசவத்துக்கு முந்தைய பராமரிப்புக்கான வருகைகளை கொண்டிருந்ததாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு- 4 (NFHS 4) தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 17% பெண்கள் கர்ப்ப காலத்தில் பிரசவத்துக்கு முந்தைய கண்காணிப்பை பெறவில்லை.

ஆனால், பிரசவத்துக்கு முந்தைய பராமரிப்புக்கு பி.எம்.எஸ்.எம்.ஏ சிறந்த வழி என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வதில்லை. பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது; அவர்களில் சிலர் மருத்துவரை சந்திக்க முடிவதில்லை. ஒரே நாளில் பல பெண்கள் வருவதால், கவனிப்பின் தரம் மோசமாக உள்ளது என்று ஜன் ஸ்வஸ்திய அபியானின் நந்தி கூறினார்.

"இத்திட்டம் மற்றொரு பிரச்சாரம்," என்ற அவர், "கர்ப்பிணிகள் அனைவரையும் மாதத்தில் ஒருநாள் ஒரே இடத்திற்கு வரச்சொல்லி காத்திருக்க சொல்வதால் உண்மையான உயர் ஆபத்து கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. ஒவ்வொரு மாதம் 9ஆம் தேதிக்கு அதிக பெண்களை சேர்த்தாக வேண்டும் என்பதில்மட்டுமே குறியாக இருப்பதால், தினமும் வழங்கப்பட வேண்டிய சேவைகள் தரப்படாததை கண்டிருக்கிறேன்” என்றார்.

இரும்புச்சத்து, போலிக் மாத்திரைகள் குறைவாக எடுத்துக் கொள்ளுதல்

ராஜ்வந்தி தேவிக்கு அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கண்டறியப்பட்டபோது, அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டது. இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளை வழக்கமான அளவுகளில் உட்கொள்ளவும் கூறப்பட்டது. கர்ப்ப காலத்தில் இரத்த சோகை இருப்பது, பிரசவத்தில் தாய் இறப்பு, குறைப்பிரசவம் மற்றும் குழந்தை இறப்புக்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்று, செப்டம்பர் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

"என்னிடம் இரும்புச்சத்து மாத்திரைகள் உள்ளன; நான் அவற்றை சாப்பிடுவதில்லை" என்ற ராஜ்வந்தி தேவி, இது எனக்கு குமட்டலை ஏற்படுத்துகிறது. அதன்பின், எந்த வேலைகளையும் என்னால் செய்ய முடியாது" என்றார்.

"பரிந்துரைக்கப்பட்ட இரும்பு மாத்திரைகளை பெண்கள் சாப்பிடுவதில்லை" என்று குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மகளிர் மருத்துவ நிபுணர் சந்தன் கச்ரூ, 58, கூறினார்; இவர், பி.எம்.எஸ்.எம்.ஏ. திட்டத்தில் மாதத்திற்கு ஒருநாள் நோயாளிகளை பரிசோதிக்க தன்னார்வலராக வந்தவர். "அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் பெரும்பாலும் நான் இதை பார்த்திருக்கிறேன். தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் இரும்பு மாத்திரைகளை தவறாமல் உட்கொள்கிறார்கள்” என்றார்.

என்.எஃப்.எச்.எஸ் 4 தரவுகளின்படி, 2015-16 இல் ஏழ்மையான பெண்களில் 14.4% மட்டுமே இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளை 100 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர்; இது செல்வந்த பெண்களிடம் 48.2% என்றளவில் இருந்தது.

தனியார் மகளிர் மருத்துவ நிபுணரும், அரசின் பி.எம்.எஸ்.எம்.ஏ. திட்டத்தின் கீழ் தன்னார்வலராக பணிபுரிபவருமான சந்தன் கச்ரூ, 58, கர்ப்பிணி ராஜ்வந்தி தேவி, 38 உடன் உள்ளார். லேசான இரத்த சோகை மற்றும் முன்பு சிசேரியன் செய்திருந்ததால், அவரது கர்ப்பம் அதிக ஆபத்தான வகைப்பாட்டில் உள்ளது. அதிக ஆபத்துள்ள கர்ப்ப நிகழ்வுகளை, ஆன்லைன் இணையதளம் வாயிலாக கண்காணிக்கும் ஒரே மாநிலம் ஹரியானா மட்டுமே.

சிசேரியன்

முந்தைய சிசேரியன் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள கர்ப்ப நிகழ்வுகளின் பெரிய பகுதியை உருவாக்குகின்றன: குருக்ராமில் 24% மற்றும் ஜாஜ்ஜரில் 13% என்று, கர்ப்ப கால இணையதள தரவுகள் கூறுகின்றன.

சிசேரியன் விகிதம் 2005-06ல் 9% ஆக இருந்து 2015-16ல் 17% என, இரு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக சிசேரியன் தனியார் சுகாதார வசதிகளில் (பிரசவங்களில் 41%) பொதுவாக காணப்படுகிறது. இது 2005-06 ஆம் ஆண்டில் 28% ஆக இருந்ததாக என்.எப்.எச்.எஸ்-4 தரவுகள் கூறுகின்றன.

தனியார் துறை ஈடுபாடு

தனியார் துறை மருத்துவர்கள் ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதி பி.எம்.எஸ்.எம்.ஏ திட்டத்தில் தன்னார்வலராக தொண்டு செய்ய, அருகில் உள்ள அரசு சுகாதார மையங்களுக்கு செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதுபோல் 5,799 தன்னார்வ மருத்துவர்கள், இத்திட்டத்தின் கீழ் பங்கேற்க, 2016 ஜூலை முதல் பதிவு செய்ததாக மக்களவையில் (நாடாளுமன்ற கீழவை) அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது.

"இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் (FOGSI) அனைத்து மகளிர் மருத்துவ வல்லுநர்களுக்கும், பி.எம்.எஸ்.எம்.ஏ. திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது" என்று கச்ரூ கூறினார். "சமுதாயத்திற்கு நன்மை புரியும் இந்த திட்டத்தில் பங்கேற்க நானும் முன்வந்தேன்" என்றார் அவர்.

வாஜிராபாத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், தன்னார்வத் தொண்டு சேவையின் மூலம், நான்கு மணி நேரத்தில் மொத்தம் 50 நோயாளிகளை கச்ரூ பரிசோதித்தார். அதில், அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள் 12 கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

"ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவகால சுகாதார சேவைகள் கிடைப்பது உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பின் ஒரு பகுதியாகும். ஒரு தொண்டு நிறுவனத்தை விட, பி.எம்.எஸ்.எம்.ஏ இதை வெளிப்படுத்துகிறது" என்று ஜன் ஸ்வஸ்திய அபியானின் நந்தி கூறினார். “தொலைதூரப் பகுதிகளில் தனியார் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை. பெரும்பாலான தனியார் மகளிர் மருத்துவ வல்லுநர்கள், ஏற்கனவே போதுமான வல்லுனர்கள் உள்ள பெரிய நகரங்களில் தான் தன்னார்வத்தொண்டு செய்கிறார்கள்” என்றார் அவர்.

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story