நிதி தலைநகரில் இருந்து கோவிட் தலைநகரான பரிதாபம்: மும்பையில் என்ன தவறு நேர்ந்தது

நிதி தலைநகரில் இருந்து கோவிட் தலைநகரான பரிதாபம்: மும்பையில் என்ன தவறு நேர்ந்தது
X

நவி மும்பை: மங்கலான முகமூடி, ரப்பர் கையுறை மற்றும் கை கழுவும் கிருமி நாசினி பாட்டிலுடன், மும்பையின் பிரஹன்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) சுகாதாரப்பணியாளர் நிகில்*, 40 வயது, குடியிருப்பாளர்கள் மற்றும் வயதானவர்களை பரிசோதிக்க, நகரின் குடிசைப்பகுதிக்கு 2020 ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்டார். எட்டு மணி நேர ஷிப்டிற்கு பதில், நிகில் 12 மணி நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார். செல்லும் வழியில் எங்கோ, தன்னை அறியாமல் சார்ஸ் கோவ்-2 (கோவிட் -19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) நோயை தனது குடும்பத்தினர் இருவருக்கு பரப்பிவிட்டார். இப்போது நகரின் தற்காலிக கோவிட்-19 மையங்கள் ஒன்றில், அவர் மீண்டு வருகிறார்.

தமது முதலாளிகள் தலையிட்டு சொல்லும் வரை, தமக்கு கோவிட் -19 பரிசோதனை மறுக்கப்பட்டதாக நிகில் கூறினார். தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் ஒரு படுக்கையை பெறுவதற்கும் கூட, அவர் அதையே செய்ய வேண்டியிருந்தது. அவரது பரிசோதனை முடிவுகள் நேர்மறை என்று வந்ததும், அவரையோ, குடும்பத்தினரையோ கோவிட் -19 சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி தரப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். அவர் இப்போது, மும்பையின் சுகாதாரத்துறை பணியாளர்களுடன் அரசு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தமது பெயரை வெளியிட விரும்பாத அவர், இந்தியா ஸ்பெண்டிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையை - இது, இந்தியாவின் 20% கோவிட் வழக்குகளை கொண்டுள்ளது- மிக மோசமாக பாதித்த நகரமாக மாற்றிய சில தவறான செயல்களை, நிகிலின் இந்த விவகாரம் புலப்படுத்துகிறது. குடிசைப் பகுதிகளில் கண்காணிப்பை தொடங்குவதில் அரசின் தாமதம், நிகில் போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கே போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது போன்றவை, பெரும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சோதனையின் அளவுகோல்கள் பெரும்பாலும் பரிசோதனையை கட்டுப்படுத்துவதற்காக மாற்றப்பட்டன. குறிப்பாக அறிகுறியற்ற நோயாளிகள் பெருகியது, ஏற்கனவே அதிக நோயாளிகளின் சுமைகளுடன் போராடி வந்த பொது சுகாதார அமைப்பை சீக்கிரமே மூழ்கச் செய்தது. இந்த சவால்களுக்கு மத்தியில், உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் - பி.எம்.சி மாநகராட்சி ஆணையாளர் மாற்றப்பட்டார், மேலும் நகரத்திற்கு இரண்டு புதிய கூடுதல் நகராட்சி ஆணையர்கள் வந்தனர். இதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை.

ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளதால், நகரத்தின் கோவிட்-19 சிகிச்சை மையங்கள் (தனியார் உட்பட) படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு இடமின்றி இருக்கலாம் அல்லது தீவிர வழக்குகள் இல்லாமலோ அல்லது சுகாதார ஊழியர்கள் இல்லாமலோ போகலாம். அதிக கட்டணம் வசூலித்தல், ஏழை நோயாளிகளை திருப்பி அனுப்புதல் மற்றும் பிற நோய்கள் உள்ளவர்களை கைவிடுவது போன்ற குற்றச்சாட்டுகளில் தனியார் மருத்துவமனைகள் சிக்கியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வேறு எந்த நகரத்திலும் அல்லது வேறு மாநிலத்திலும் இல்லாதபடி, மும்பையில் அதிக கோவிட்-19 வழக்குகள் உள்ளன. மகாராஷ்டிராவின் 85,975 வழக்குகளில் 57% மும்பையில் உள்ளன. டெல்லிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது செல்வந்த நகரத்தில், இவ்விஷயங்கள் எவ்வாறு தவறாக நடந்தன என்பதை காணலாம்.

நெரிசலான குடிசைப்பகுதிகளில் தாமதமான கண்காணிப்பு

கடந்த 2011மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மிகச்சிறிய மாவட்டமான மும்பையில், ஒவ்வொரு சதுர கி.மீ. பரப்பில் 365 பேர் வாழ்கின்றனர். இதில் 42% குடும்பங்கள் நகரின் மத்தியில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளில் பெரும்பாலும் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.நகரத்தின் நெரிசல் மிகுந்த குடிசைப்பகுதிகளை ஆய்வு செய்ய நிகில் போன்ற சுகாதாரப் பணியாளர்களை, அரசு மிகவும் தாமதமாகவே கேட்டுக் கொண்டது என்று மகாராஷ்டிரா அரசின் தொற்றுநோயியல் நிபுணரும் தொழில்நுட்ப ஆலோசகருமான சுபாஷ் சலுங்கே கூறினார். இப்போது ஹாட்ஸ்பாட்களாக நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு சுகாதாரப்பணியாளர்களை பாதுகாப்பின்றி அனுப்பியது ஒரு பிழையாக இருந்திருக்கலாம் என்று சலுங்கே ஒப்புக் கொண்டார்.

மாநகராட்சி ஆணையர் இக்பால் சாஹல், நிர்வாக சுகாதார அதிகாரி பத்மஜா கேஸ்கர் மற்றும் பி.எம்.சி யின் துணை நிர்வாக சுகாதார அதிகாரி தக்ஷா ஷா ஆகியோரை, இந்தியா ஸ்பெண்ட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி கருத்து கேட்டது. அவர்களின் பதில் கிடைத்தால், இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

சமூக பரவல், ஆனால் வரையறுக்கப்பட்ட சோதனை

தேசிய அரசு தரவுகளை பொறுத்து உலக சுகாதார அமைப்பு (WHO), ஏப்ரல் 9, 2020 அன்று, கோவிட் -19 சமூக பரவலைக் கொண்ட நாடுகளின் குழுவில் இந்தியாவை சேர்த்தது (ஒரு சமூகத்தில் முதன்மை நோய்த்தொற்றின் ஆதாரம் தெரியாதவை); ஆனால் இந்தியாவின் உயரிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நாட்டில் சமூகப் பரவல் இருப்பதை இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால் நிகில் போன்ற நோயாளிகளின் போக்கு, சமூக பரவலுக்கான கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. "நான் எப்போது, யாரால் நோய்த்தொற்றுக்கு ஆளானேன் என்று எனக்கு தெரியாது" என்று நிகில், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஜூன் 3, 2020 முதல், கடைகளை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதித்தது. பிளம்பர்கள் மற்றும் எலக்ட்ரீசியன் போன்ற சுயதொழில் செய்பவர்கள் மீண்டும் வேலையைத் தொடங்கவும், குடியிருப்பாளர்கள் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் போன்ற உடல் சார்ந்த செயல்பாடுகளுக்காக வெளியில் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபோதும், நகரின் சுகாதார அமைப்பு அதிகமாக இருந்தபோதும், இது மேற்கொள்ளப்பட்டது. பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு குடியிருப்புவாசிகள் உலா வந்தால், அதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கவலைப்படுகிறார்கள்.

ஊரடங்கு தளர்த்தப்படுவதால், மருத்துவர்கள் ஒரு முக்கிய போக்கை எடுத்துக்காட்டுகின்றனர்: கோவிட் -19 நோயாளிகள், கிளஸ்டர்கள் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் மட்டுமல்ல, நகரம் முழுவதும் இருந்து வருகிறார்கள்."வரும் அனைத்து கர்ப்பிணிகளும் லேசான அறிகுறி அல்லது அறிகுறியற்றவர்கள்" என்று மும்பையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசால் நடத்தப்படும் காமா மற்றும் அல்பெஸ் மருத்துவமனையின் இணை பேராசிரியரும், தாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயல்படும் அர்மான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான அபர்ணா ஹெக்டே கூறினார். "அவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து மட்டுமல்ல நகரம் முழுவதும் இருந்து வருகிறார்கள் - அதாவது சமூகத்தில் பரவுவது வெளிப்படையாகவே தெரிகிறது" என்றார்.

நிகில் போன்றவர்கள் -- கோவிட்19 பரிசோதனைக்கு அவரது முதலாளி தலையிட வேண்டியிருந்தது -- பொதுத்துறையில் சிகிச்சை பெறுவது என்பது கடினமான ஒன்றாகும்.

ஏப்ரல் 12, 2020 அன்று உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் அறிகுறியற்றவர்களுக்கு சோதனையை மும்பை நகரம் நிறுத்திவிட்டதால் எண்ணிக்கை அதிகரித்தன. இதன் பொருள், அறிகுறிகள் இல்லாமல் அல்லது லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து நோய்த்தொற்றை மேலும் பரப்புகிறார்கள். நகரத்தின் சோதனை அளவுகோல்கள் பலமுறை மாற்றப்பட்டன. இது தற்போது உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் அறிகுறியற்ற தொடர்புகளை பரிசோதித்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக, 2020 ஜனவரி 30 முதல், ஏப்ரல் 30ம் தேதி வரை, மகாராஷ்டிரா நேர்மறையான ஒருவருடன் தொடர்புடைய 2.3 பேரை மட்டுமே பரிசோதித்தது, இது இந்தியாவின் சராசரியான 6 என்பதைவிடவும் குறைவாக இருந்தது. கர்நாடகாவோ, ஒரு நோயாளியுடன் தொடர்புடைய 47.4 பேரை பரிசோதித்தது என்று இந்தியா ஸ்பெண்ட் 2020 ஜூன் 2 கட்டுரை தெரிவித்தது.

அறிகுறியற்ற தொடர்புகளை சோதிக்காதது எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பங்களித்ததாக, தாம் கருதவில்லை என்று சலுங்கே கூறினார், ஆனால் பொது சுகாதார செய்திகளுக்கும், ஊரடங்கு விதிகளுக்கும், செவிசாய்க்காதவர்கள்தான், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காட்டுகின்றன.

வசதியுடன் பொது மருத்துவமனைகள், கையகப்படுத்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள்

ஊரடங்கால், குறிப்பாக மும்பை போன்ற நெரிசல் மிகுந்த நகரத்தில், கோவிட்-19 தொற்று பரவாது என்று அர்த்தமல்ல; இந்தியா ஸ்பெண்ட் முன்னர் கூறியபடி, சுகாதார அமைப்புகளை தயார்ப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கினால், பரவல் வீதம் குறையும் என்பதே இதன் பொருள்.மும்பையில், "நிலைமை சீராகத் தொடங்குவதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன், எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று மகாராஷ்டிரா அரசின் ஆலோசகர் சலுங்கே கூறினார். "வழக்குகளின் எண்ணிக்கையைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சிக்கலான அல்லது அரை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை நான் மிகவும் உண்ணிப்போடு கவனிப்பேன்” என்றார்.

"பெரும்பாலான கோவிட்-19 நோயாளிகள் அறிகுறியற்றவர்கள் அல்லது லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளனர்" என்று ஹெட்ஜ் கூறினார். "பிறகு 5 - 6% பேர் ஆக்ஸிஜன் தேவை அல்லது ஐ.சி.யூ பராமரிப்பு தேவைப்படுவோர். இந்த 6%ஐ கூட கையாளும் வசதிகள் எங்களிடம் இல்லை; இது, பொது சுகாதார அமைப்பில் நீண்டகால நிதியுதவியின் விளைவாகும்,” என்று அவர் கூறினார்.

"மிகச்சிறந்த நேரங்களில் கூட இந்த மருத்துவமனைகள், நோயாளிகளின் எண்ணிக்கையை, அவற்றின் திறனை விட நான்கு மடங்கு கையாளுகின்றன" என்று ஹெக்டே கூறினார். மும்பையின் நான்கு பெரிய பொது மருத்துவமனைகள் -- அதாவது பி.ஒய்.எல் நாயர், லோக்மண்ய திலக் முனிசிபல் பொது மருத்துவமனை (சியோன்), சர் ஜே.ஜே. குரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ் மற்றும் கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை - மகாராஷ்டிரா முழுவதும் இருந்து நோயாளிகள் சிறப்பு பராமரிப்புக்காக இங்கு வருகிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆரம்பத்தில், அரசு அனைத்து நோயாளிகளையும் மருத்துவமனைகளில் சேர்க்க அனுமதித்தது; லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தவர்கள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குணமடையக்கூடும் என்று இந்திய சுகாதார வழங்குநர்கள் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் கிர்தர் கியானி, இந்தியா ஸ்பெண்டிடம் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். மருத்துவமனை படுக்கைகளை நிரப்பியதால் இது சரியானபடி அல்ல என்று அவர் கூறினார்.

மேலும், ஒரு நோயாளி தீவிர சிகிச்சையில் அல்லது வென்டிலேட்டரில் இருந்தால், மீட்பதற்கான சராசரி நேரம் 10-12 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்டது, இது தீவிர நோயாளிகளுக்கு இந்த வசதிகளின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது, இரண்டு தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், ஜூன் 5, 2020 அன்று இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தனர்.பொதுமருத்துவமனைகள் மிகுந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு தனியார் மருத்துவமனைகளில் செயல்பாட்டில் உள்ள 80% படுக்கைகளை, கோவிட் மற்றும் கோவிட் அல்லாத சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ள முடிவு செய்தது. இந்த படுக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளின் செலவுகள் மூடப்பட்டுள்ளன.

"இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, தனியார் துறையில் அரசு சட்டபூர்வமாக இறங்க வேண்டும்" என்று சலூங்கே கூறினார். ஒரு "சிக்கலான சூழ்நிலையில்" தனியார் துறை அவற்றின் கட்டணங்களை அதிகரித்தனர் அல்லது சில சந்தர்ப்பங்களில் தங்களது மருத்துவமனைகளை மூடியனர். வென்டிலேட்டர்கள் மற்றும் பயிற்சி பெற்ற மனிதவளத்துடன் கூடிய அரசு நிறுவனங்களை விட தனியார் சிறந்தவை என்றார்.

நாடு முழுவதும், நகர்ப்புறங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (61%) பெரும்பாலும் வரம்பின்றி தனியார் துறைக்கு திரும்புகின்றனர் என்று, ‘ஆரோக்கியம் - சமூக நுகர்வுக்கான முக்கிய குறிகாட்டிகள்’ (Key indicators of Social Consumption - Health) என்ற 2019 அறிக்கை தெரிவிக்கிறது.

"தோராயமாக, [மும்பையில்] தனியார் மருத்துவமனைகளில் 25,000 படுக்கைகள் உள்ளன. அதாவது, குறைந்தபட்சம் 20,000 படுக்கைகள் இப்போது அரசு வசம் இருக்கும்,” என்றார் கியானி.

அடுத்த நாட்களில், படுக்கைகள் எங்கு கிடைக்கின்றன என்பதை நோயாளிகளுக்குத் தெரிந்து கொள்ள மொபைல்போன் செயலி போன்ற அமைப்புகளை கொண்டிருப்பது முக்கியம் என்று சலுங்கே நம்புகிறார். "மிகவும் சிக்கலான நோயாளிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைகளை அடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

சிகிச்சையளிக்கப்படாத பிற நோய்கள்

2020 மே மாதத்தின் கடைசி வாரத்தில், 44 வயது சாதனா தந்தோருக்கு, மும்பையின் சாண்டாக்ரூஸ் குடிசைப்பகுதியில் வசிக்கும் தனது சகோதரரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர்களது தாயார் அதிக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தார்; ஒவ்வொரு கோடைகாலத்திலும் அதிக வெப்பத்தால் குடிசைப்பகுதி வீட்டில் இருக்க இயலாது.

மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனையான நானாவதி மருத்துவமனையை தொடர்பு கொண்டு தந்தோர் அழைத்தபோது, அங்கு படுக்கைகள் எதுவும் இல்லை என்று அவரிடம் கூறப்பட்டது. "நான் ரூ.1.5 லட்சம் செலுத்த தயாராக இருந்திருந்தால், என் அம்மாவுக்கு ஒரு படுக்கையை நான் பெற முடிந்திருக்கும் என்று அவர்கள் எனக்குத் தெரிவித்தனர்," என்றார்.

கருத்தை அறிவதற்காக, இந்தியா ஸ்பெண்ட் நானாவதி மருத்துவமனையின் கார்ப்பரேட் தகவல் தொடர்பு குழுவை அணுகியுள்ளது. அவர்களது பதில் கிடைத்தால், இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

கோவிட்-19 தொற்றுநோய் உலகெங்கிலும் தொற்றா நோய்களுக்கான (என்.சி.டி) தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை சீர்குலைத்துள்ளது என்று, உலக சுகாதார அமைப்பால், 155 நாடுகளில் மூன்று வார கால ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட நாடுகளில் 53% க்கும் அதிகமானவர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சேவைகள் ஓரளவு பாதித்துள்ளன, நீரிழிவு மற்றும் அது தொடர்புடைய சிக்கல்களுக்கான சிகிச்சைக்கு 49%, புற்றுநோய் சிகிச்சைக்கு 42% மற்றும் இருதய அவசரகால சிகிச்சைகளுக்கு 31% என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொற்றா நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 41 மில்லியன் மக்களைக் கொல்கின்றன மற்றும் உலகளாவிய இறப்புகளில் 71% ஆகும். இவற்றில், 85% க்கும் அதிகமான இறப்புகள் இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் நிகழ்கின்றன.

"கோவிட்-19 உடன் போராடியபோதும், தொற்றாநோய்களுக்கான அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்ய நாடுகள் புதுமையான வழிகளைக் கண்டுபிடிப்பது மிக முக்கியம்" என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். இந்தியாவில், கோவிட்-19 காரணமாக ஏற்கனவே 5,85,000 தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன; மேலும் ஆரம்ப கால தகவல்கள், இது பருவ வயது சிறுமிகளின் ஊட்டச்சத்தையும் பாதிக்கும் என்று தெரிவிப்பதாக, இந்தியா ஸ்பெண்ட் 2020 ஜூன் 1 கட்டுரை தெரிவித்தது.

ஊரடங்கு, இந்தியாவின் தேசிய சுகாதாரத் திட்டத்தில் தலையிட்டது. தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி உள்ளிட்டவை செயல்படுத்துவதை குறைத்தது. பெரும்பாலான ஏழை மக்கள் சுகாதார வசதிகளை அடைய பொது போக்குவரத்தை நம்பியிருப்பதால், நிறுவன விநியோகங்களில் குறுக்கீடு உண்டானது என்று, மே 2020 தி லான்செட் அறிவியல் இதழ் வெளியிட்ட கட்டுரை தெரிவித்தது.

மும்பையை பொறுத்தவரை, தந்தோரின் தாயை போன்ற மற்றவர்கள் சரியான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான சுகாதார உதவிகளை பெறவில்லை.

தந்தோரின் தாயார் ஒரு உள்ளூர் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார்; மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து வெளியேறும்படி அது கேட்டுக் கொண்டது. "அவர்கள் கோவிட்-19ஐ கொண்டிருக்கலாம். அதனால், தங்கள் மருத்துவமனையை மூட வேண்டி இருக்கலாம் என்று அவர்கள் கவலைப்படுவதாக, எங்களிடம் சொன்னார்கள்" என்று தந்தோர் கூறினார். கோவிட்-19 சோதனை நடத்த நர்சிங் ஹோம் மறுத்துவிட்டது. இறுதியில், 61 வயதான அவர் மற்றொரு தனியார் கிளினிக்கில் பரிசோதிக்கப்பட்டார். சில மணி நேரம் கழித்து, கோவிட்-19 சோதனை முடிவுகள் எதிர்மறை என்று வருவதற்கு ஒருநாள் முன்பு, வீட்டில் அவர் காலமானார்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப் பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story