‘ஆய்வாளர்கள் குறைவு, பதிவுகள் இல்லை, மோசமான தொடர்பு இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறைக்கு கேடு’
புதுடெல்லி: "உலகத்திற்கான மருந்தகம்" என்ற கருத்து சிக்கல்களால் சூழப்பட்டுள்ளதாக, புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. மத்திய, மாநில அரசுகள் போதிய எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை கொண்டிருக்கவில்லை. போலி மருந்து உற்பத்தியாளர்களின் பதிவுகள் அல்லது அதுபற்றிய தரவுகள் இல்லை. ஒட்டுமொத்த திறன் பற்றாக்குறையானது விதிமீறுவோருக்கு சீரற்ற தண்டனை தராதது போன்றவற்றை விட்டுச் செல்கிறது.
‘இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை: சி.டி.எஸ்.கோ மற்றும் எஸ்.டி.ஆர்.ஏக்களின் வேலை மற்றும் செயல்திறன்’ என்ற அறிக்கை, மூன்று தகவல் உரிமை (ஆர்டிஐ) விண்ணப்பங்கள் மூலம் பெறப்பட்ட முதன்மை ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் அரசு வலைத்தளங்களில் கிடைக்கும் சுற்றறிக்கைகள், கூட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது. வழக்கறிஞர்கள் ஸ்ரீ அக்னிஹோத்ரி மற்றும் சுமதி சந்திரசேகரன் ஆகியோர், ஒன்பது மாத முயற்சியின் முடிவுகளை தொகுத்து, தங்கள் அறிக்கையை இலாப நோக்கற்ற தாக்கூர் அறக்கட்டளை இணையதளத்தில் 2019 அக்டோபரில் வெளியிட்டனர்.
பொதுவாக, உற்பத்தியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மருந்துத் தொழில் துறையானது, 2017இல் 33 பில்லியன் டாலர் (ரூ. 2.3 லட்சம் கோடி) மதிப்பை கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் 11-12% வளர்ச்சியடைந்தால், 2030 ஆம் ஆண்டில் இத்தொழில், 120-130 பில்லியன் டாலராக (ரூ.8.5 லட்சம் கோடி) வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, தி எகனாமிக் டைம்ஸ் 2019 ஜூன் செய்தி தெரிவித்தது.
நாட்டின் மருத்து தயாரிப்பாளர்கள் உலகம் முழுவதும் அதை வாங்குபவர்களை கண்டறிகின்றனர். இந்தியன் பார்மாசுட்டிகல் அலையன்ஸ் மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெக்கின்சியின் அறிக்கைபடி, இந்தியா உலகில் மருந்து விற்பனையில் மூன்றாவது இடத்திலும், மதிப்பில் பத்தாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்த கவலைகளால் அதன் வளர்ச்சி தடைபட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் வரை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யு.எஸ்.எஃப்.டி.ஏ) அனுப்பிய 38 நோட்டீஸ்களில் 13 இந்திய மருந்து நிறுவனங்களுக்கானது. மருந்தின் தரம், மருந்து மூலப்பொருள் மாசுபாடு, தரவு மேலாண்மை மற்றும் தூய்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக, டவுன் டூ எர்த் ஆகஸ்ட் 2019 இல் செய்தி வெளியிட்டது.
இந்த பிரச்சனை உள்நாட்டிலேயே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 2018 இல் இருந்து, பிரதம மந்திரி பாரதிய ஜனாயுஷாதி பரியோஜனா - பி.எம்.பி.ஜே.பி (PMBJP) இன் கீழ் குறைந்த விலையில் பொதுவான மருந்துகளை வழங்கும் 18 மருந்து நிறுவனங்களின் 25 தொகுதிகள் தரமற்றவை என்று, இந்திய பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் (பிபிபிஐ) கண்டறிந்ததாக, தி இந்து பிஸினஸ்லைன், 2019 ஜூன் செய்தி கூறியது. பி.எம்.பி.ஜே.பி என்பது அதன் விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் அரசு திட்டமாகும்.
பிப்ரவரி 2018 இல், மாநில மருந்துக்கட்டுப்பாட்டாளர்களால் நடத்தப்பட்ட தரப்பரிசோதனையில் மருந்துகள் தேர்ச்சி பெறாததால் கர்நாடகாவில் இத்திட்டத்தின் கீழ் நான்கு தொகுதி மருந்துகளை பணியகம் திரும்பப் பெற்றது. மேலும் 47,000 மாதிரி மருந்துகளில் 3.16% தரமற்றவை என்றும்; 2017 இல் நாடு தழுவிய மருந்து கணக்கெடுப்பில் 0.02% போலியானவை என்றும் கண்டறியப்பட்டது.
இந்த சில சிக்கல்களுக்கு வழிவகுத்த காரணிகளை, வழக்கறிஞர்களின் ஆராய்ச்சி எடுத்துக் காட்டுகிறது. அக்னிஹோத்ரி மற்றும் சந்திரசேகரன் ஆகியோர், சட்டத்தை பலவீனமாக அமல்படுத்துவதை கண்டறிந்தனர். இதனால் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த ஒழுங்குமுறை அதிகாரி, ஒரு மருந்து போலியானது எனக் கண்டறியப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்க அனுமதிக்கும் கடினமான சட்டங்கள் இந்தியா உள்ளன என்று கூறி, அதை எதிர்த்தார்."வேறு எந்த நாடும் இவ்வகை தண்டனையை அனுமதிக்காது," என்ற அவர் "மருந்துகள் தரம் திறம்பட கட்டுப்படுத்துவதை உறுதிப்படுத்த நாங்கள் இயன்றளவு செய்கிறோம்" என்றார்.
பரந்த களம்; சில அடி வீரர்கள்
வலுவான சட்டம் என்பது மட்டுமே திறனாக அதை அமல்படுத்திவிடாது. மருந்து உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை முதன்மையாக கட்டுப்படுத்துவது, மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டம் -1940 இன் விதிகளின் கீழ் மாநில அதிகாரிகளின் பொறுப்பாகும். மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ), மருந்து உரிமங்களை கவனிக்கிறது. மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதோடு, புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது மற்றும் மருத்துவ பரிசோதனைகளை ஒழுங்குபடுத்துகிறது. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) இன் கீழ், டி.சி.ஜி.ஐ செயல்படுகிறது. இது மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டி.டி.ஏ.பி.) மற்றும் மருந்து ஆலோசனைக் குழு (டி.சி.சி) ஆகியவற்றால் அறிவுறுத்தப்படுகிறது.
சுகாதாரம் சரிபார்ப்பு இணையதளம் சார்பில், டி.சி.ஜி.ஐ உடனான நேர்காணலுக்கு நேரம் கேட்டது; மேலும் சி.டி.எஸ்.சி.ஓ.விடம் கேள்வி கேட்டு அக்டோபர் 2019 இல் மின்னஞ்சல் அனுப்பியது; எனினும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
மாநில மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகள் (எஸ்.டி.ஆர்.ஏக்கள்) மருந்து ஒழுங்குமுறை மற்றும் அந்தந்த மாநில சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரிகின்றனர். மருந்து ஆய்வாளர்கள் மருந்து உற்பத்தியாளர்களை நிர்வகிக்கும் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு இறுதியில் பொறுப்பான கால் வீரர்கள்.
மேம்பட்ட மருந்து ஒழுங்குமுறைக்கான பரிந்துரைகளை வழங்கிய மல்ஷேகர் குழு வகுத்த வழிமுறைகளின்படி, ஒவ்வொரு 50 உற்பத்தி பிரிவுகளுக்கும் ஒரு மருந்து ஆய்வாளர் மற்றும் 200 விநியோக சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒருவர் இருக்க வேண்டும்.
பெரும்பாலான மாநிலங்களில் மருந்து ஆய்வாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. உதாரணமாக, குஜராத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்து ஆய்வாளர்களின் எண்ணிக்கையில் பாதியும், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் மூன்றில் ஒரு பகுதியுமே நிரப்பட்டிருந்தன. முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அனுமதிக்கப்பட்ட 84 பதவிகளில் 13 (15%) காலியாக இருந்தன. இமாச்சலப் பிரதேசம் 22 (27%) பதவிகளில் ஆறு இடங்கள், கர்நாடகா 28 ல் 15 (53%); திரிபுராவில் 23 (26%) பதவிகள் காலியாக இருந்தன.
மத்திய ஒழுங்குமுறை அமைப்பிலும் போதிய எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்கள் இல்லை. சி.டி.எஸ்.சி.ஓ.வில் உள்ள 287 பதவிகளில் 64 இடங்கள் காலியாக (22%) இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
திறன் இல்லாமை, செயல்முறை
எஸ்.டி.ஆர்.ஏ-க்களின் கீழ் பணிபுரியும் மருந்து ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை முடிக்க எதிர்பார்க்கப்படும் கால அவகாசம் இல்லை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. ஒரு மருந்து அல்லது பிராண்ட் தரமற்றதாகக் கண்டறியப்பட்டவுடன், மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டம் -1940 விதிகளின்படி எஞ்சிய மீதமுள்ள அனைத்து பங்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று Monthly Index of Medical Specialities மருத்துவ வழிகாட்டியை மாதாந்திரம் திருத்தும் சந்திரா எம் குல்ஹாட்டி கூறினார். சி.டி.எஸ்.சி.ஓ.வுக்கு மருந்துகளை திரும்ப பெறச்செய்யும் அதிகாரம் உள்ளது. எனினும் மருந்து சந்தையில் வெளியிடப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகே பெரும்பாலும் கண்டறியப்படுவதால் இது மிகவும் அரிதாகவே பயனுள்ளதாக இருக்கும்.
"அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரத்தில், பெரும்பாலான மருந்து இருப்புகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன" என்று மின்னஞ்சலில் குல்ஹாட்டி கூறினார். "சில்லறை மருந்துகள் இருப்பு பெரும்பாலும் செயல்படுத்தப்படாததால் திரும்பப் பெறப்படுவதில்லை. போதிய கள ஆய்வாளர்கள், ஊழலுக்கு உதவுவதும் பிரச்சினையை அதிகரிக்கின்றன” என்றார்.
மேலும், சி.டி.எஸ்.சி.ஓ.வுக்கு உண்மையான தடையை அமல்படுத்தும் திறன் இல்லை என்று அறிக்கை குறிப்பிட்டது: "தற்போது, திரும்ப அழைக்கும் உத்தரவை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான அமைப்பு எதுவும் இல்லை" என்றது. குறைபாடுள்ள மருந்துகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்வதற்காக, பிரத்யேக உதவி மருந்து கட்டுப்பாட்டாளரை ஒதுக்கவும், மாநில அளவில் புலனாய்வு செல்களை உருவாக்கவும், ஜூலை 2018 முன்மொழிவில் கோரப்பட்டிருந்தது.
இந்த திறன் இல்லாமை சமீபத்தில் ரானிடிடின் எனப்படும் நெஞ்செரிச்சல் மருந்தைப் போலவே பொறுப்பைத் திசைதிருப்ப வழிவகுக்கும். செப்டம்பர் 13, 2019 அன்று, ரானிடிடினில் பூர்வாங்க பரிசோதனைகள் புற்றுநோயுடன் இணைக்கப்பட்ட ஒரு அசுத்தமான என்-நைட்ரோசோடிமெதிலாமைன் (என்.டி.எம்.ஏ) இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக யு.எஸ்.எஃப்.டி.ஏ அறிவித்தது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, யு.எஸ்.எஃப்.டி.ஏ மற்றும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம், மருந்துகளை சந்தையில் இருந்து அகற்றுமாறு கனடா மற்றும் பிரெஞ்சு கட்டுப்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டபோதும், மருந்தின் பாதுகாப்பு விவரங்களைப் படிப்பதாக தெரிவித்தனர்.
இந்தியாவில், டி.சி.ஜி.ஐ.யின் தலைவரான வி ஜி சோமானி, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மருந்து உற்பத்தியாளர்களின் பொறுப்பு என்பதை உறுதிப்படுத்தினார். செப்டம்பர் கடைசி வாரத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு அவர் பிறப்பித்த உத்தரவில்,ரானிடிடைன் செயலில் உள்ள மருந்து பொருட்களின் மருந்து உற்பத்தியாளர்கள் "தங்களின் தயாரிப்புகளை சரிபார்க்கவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று டி.சி.ஜி.ஐ கேட்டுக் கொண்டது.
டி.சி.ஜி.ஐ பின்னர் மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் ரனிடிடினின் முக்கிய உற்பத்தியாளர்களிடம் இருந்து மாதிரிகளை சோதனைக்காக கொல்கத்தாவின் மத்திய மருந்து ஆய்வகத்திற்கு அனுப்ப கேட்டுக் கொண்டது.
நாட்டின் மருந்து விற்பனையில் கள்ளச்சந்தை எதிர்ப்பு நடவடிக்கைகள் தேவை; இதில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை என்று நகுல் பாஸ்ரிச்சா கூறினார்; இவர், உலகளவில் கள்ளச்சந்தை எதிர்ப்பு தொழிற்துறை தீர்வுகளை வழங்கும் இலாப நோக்கற்ற சங்கமான Authentication Solutions Providers’ Association ஐ வழி நடத்துகிறார். கள்ள எதிர்ப்புத் தீர்வை (எஸ்எம்எஸ் அடிப்படையிலான அங்கீகாரக் குறியீட்டைக் கொண்ட ஒவ்வொரு நுகர்வோர் பேக்கிற்கும் ஒரு தனித்துவமான குறியீட்டை பயன்படுத்துதல்) இணைத்துக்கொள்ள சிறந்த 300 இந்திய மருந்து பிராண்டுகளுக்கு, 2018இன் டிடிஏபி பரிந்துரைத்தது; இது தன்னார்வத் தொண்டு செய்வதன் மூலம் பாய்ச்சப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்."இது தன்னார்வமாக இருப்பதால், தத்தெடுப்பு எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இல்லை" என்றார் அவர்.
சீரற்ற தண்டனை நடவடிக்கை
மருந்து ஆய்வாளருக்கு ஒரு மருந்தை ‘போலி’ அல்லது ‘தரமற்றது’ என்று கூறும் அதிகாரம் உள்ளது -இது, குற்றவியல் நோக்கத்தை உள்ளடக்கியது. இணங்கத் தவறினால், வழக்கு தொடர்வது, மருந்தை திரும்பப்பெறுவதற்கான உத்தரவை பிறப்பிப்பது அல்லது அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வது மாநில மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பொறுப்பாகும்.
கீழ்படியாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது, மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் விருப்பமாகும். சில சந்தர்ப்பங்களில், ‘தரமற்ற’ மருந்துகளுக்கும், ‘மோசமான’ மருந்துகளுக்கும் இதே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது.
இணங்க மறுக்கும் தரமற்ற மருந்து தரும் உற்பத்தியாளர்கள் பற்றிய தகவல்களின் பதிவு அல்லது விவரங்களை அத்துடன், ஆய்வாளர்கள் அல்லது எஸ்.டி.ஆர்.ஏக்கள் பராமரிக்க தேவையில்லை என்று அறிக்கை குறிப்பிட்டது. ஒரு உற்பத்தியாளர் அல்லது சில்லறை விற்பனையாளருக்கு எதிரான துறைசார் நடவடிக்கைகள் பற்றிய பதிவு அல்லது தரவுகளும் இல்லை.
பதிவுகள் இல்லாததால், இணங்காத வழக்குகள் மீது எப்போதாவது தான் விசாரணை நடத்த வழிவகுக்கும் என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆர்டிஐ பதில்களில் காட்டியுள்ளபடி, தரவுகள் இல்லாததால் மீண்டும் குற்றவாளிகளை அடையாளம் காண்பது கடினம். ஏப்ரல் 2015 முதல் 2019 ஜனவரி வரையிலான நான்கு ஆண்டுகளில், இணங்க்காதது தொடர்பான 141 நிகழ்வுகளுக்கு மிசோரம் நான்கு வழக்குகளை (2.8%) மட்டுமே விசாரித்தது.இது ஒடிசா 876 நிகழ்வுகளுக்கு ஆறு (0.6%), ஜார்க்கண்ட்டில் 1,723 நிகழ்வுகளுக்கு ஏழு (0.4%) என்று பதிவாகியுள்ளது.
Inspections & Prosecutions By State Drug Regulatory Authorities | ||||
---|---|---|---|---|
State / UT | inspections | Non-compliant | Prosecutions | Prosecutions (As % of non-compliant cases) |
Jammu and Kashmir | 27,520 | 0 | 0 | 0% |
Jharkhand | 8,966 | 1723 | 7 | 0.4% |
Uttar Pradesh | 907 | 0 | 0 | 0% |
Odisha | 6,260 | 876 | 6 | 0.6% |
Mizoram | 1,205 | 141 | 4 | 2.8% |
Telangana | 16,575 | 3,853 | 0 | 0% |
Uttarakhand | 1,858 | 0 | 0 | 0% |
Andaman and Nicobar | 120 | 0 | 0 | 0% |
Daman and Diu | 407 | 19 | 0 | 0% |
Source: Drug Regulation in India: The Working and Performance of CDSCO and SDRAs report, 2019
குற்றம் புரியும் மருந்து நிறுவனங்களின் தரவுகள் இருந்தால், அவர்கள் வழக்குத் தொடரும்போது கடும் தண்டனைகளை சந்திக்க நேரிடும். மாறாக, குற்றவாளிகள் குறிப்பாக மீண்டும் தவறு புரிவோர், தண்டனையில் இருந்து தப்பிக்க முடிகிறது.
தகவல் வெற்றிடம்
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சிறிய அளவிலான தகவல் பகிர்வு என்பது, ஒரு ‘தகவல் சமச்சீரற்ற தன்மைக்கு’ வழிவகுக்கிறது என்று அறிக்கை குறிப்பிட்டது. "மத்திய அரசு அதிகாரிகள் வைத்திருக்கும் தகவல்கள், கொள்கையை செயல்படுத்த எதிர்பார்க்கப்படும் மாநில மட்டத்தில் உள்ள அதிகாரிகளுடன் போதுமான அளவு பகிரப்படுவதோ அல்லது தொடர்புகொள்வதாகவோ தெரியவில்லை" என்று அறிக்கை குறிப்பிட்டது. "இது நடவடிக்கையின் அளவையும் தரத்தையும் பாதிக்கிறது. இதன் விளைவாக ஒட்டுமொத்த மருந்துத்துறைக்கும் பாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது" என்கிறது அறிக்கை.
தகவல் பகிர்வு இல்லாததன் விளைவாக, இந்தியாவில் ஆபத்து அடிப்படையிலான ஒழுங்குமுறை கட்டமைப்பு (இது, முந்தைய இணக்கம், தயாரிப்பு ஆபத்து மற்றும் உற்பத்தி தளத்தின் வகை போன்ற பல காரணிகள் கருதப்படுகின்றன., மேலும் அதிக ஆபத்து உள்ளவை முன்னுரிமையின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுகின்றன) செயல்படுத்த இயலாது என்றார் சந்திரசேகரன்.
இதனால்தான் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு வலையமைப்பு மிகவும் முக்கியமானதாகிறது. "தகவல்தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, பொறுப்புகள் மற்றும் பொறுப்பு ஏற்கும் கட்டமைப்பையும் தெளிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும்" என்று சந்திரசேகரன் கூறினார். "இதற்கு கணிசமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது" என்றார் அவர்.
இந்தியாவின் போதைப்பொருள் ஒழுங்குமுறை முறையின் சிக்கல் போதிய மனித வளங்கள் அல்லது தகவல் பகிர்வு பற்றியது அல்ல, மாறாக சட்டத்தை செயல்படுத்துவது பற்றியது என்று மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) முன்னாள் தலைவர் மகேஷ் ஜகாடே கூறினார்.
இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறையின் சிக்கல், போதிய மனித வளங்கள் அல்லது தகவல் பகிர்வு பற்றியது அல்ல; மாறாக சட்டத்தை செயல்படுத்துவது பற்றியது என்று மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) முன்னாள் தலைவர் மகேஷ் ஜகாடே கூறினார். எஃப்.டி.ஏ கமிஷனராக, ஜாகேட் தான் 2011 இல் ஜான்சன் அண்ட் ஜான்சனின் இடுப்பு பகுதிக்குள் வைக்கும் கருவிகளில் தவறு இருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கு எதிராக போராடினார். "சட்டத்தை செயல்படுத்துவதில் மனநிறைவு இருக்கிறது, சில எஸ்.டி.ஆர்.ஏக்கள் கூட ஊழல் நிறைந்ததாக இருக்கலாம்" என்றார் அவர்.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் / சுகாதாரம் சரிபார்ப்பு இணையதளத்தின் சிறப்பு நிருபர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.