இந்தியாவின் கோவிட்19 தடுப்பூசி சோதனை பங்கேற்பாளர்கள், தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக அதிருப்தி

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கான பங்கேற்பாளர்கள், ரூ.750 தொகைக்கு, பின்தங்கிய பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர், பரிசோதனையில் பங்கேற்கப்போவதுகூட அவர்களுக்கு தெரியாது என்பதை எங்கள் களஆய்வு அறிக்கை காட்டுகிறது. இப்பரிசோதனையில் ஒரு பலி ஏற்பட்டுள்ளதோடு, பல பங்கேற்பாளர்களுக்கு உடல் நலக்குறைபாடு என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் கோவிட்19 தடுப்பூசி சோதனை பங்கேற்பாளர்கள், தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக அதிருப்தி
X

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி மருத்துவப் பரிசோதனை நடைபெறும் 26 இடங்களில், போபாலில் உள்ள மக்கள் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். புகைப்பட உதவி: அனு பூயான்

போபால்: ஜனவரி மாத குளிரில், பிற்பகல் நேரத்தில், போபாலில் உள்ள தனது பக்கத்து வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்தார், எழுபத்து நான்கு வயது மன்சிங் பரிஹார். அவர், சில காலமாக காய்ச்சல் மற்றும் உடல்வலியால் அவதிப்பட்டு வந்தார். இது தெரியாமல், கடந்த டிசம்பரில் அவர் கோவிட்19 தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றார். தனக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும், அது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் அவர் கருதினார்.

இந்தியாஸ்பெண்ட் உடனான இந்த நேர்காணல் வரை, அவருக்கு ஊசி வழங்கப்பட்ட மருத்துவமனையை அவர் அழைக்கவில்லை; மருத்துவ பரிசோதனை ஏற்பாட்டாளர்கள் மற்றும் புலனாய்வாளர்கள், பங்கேற்பாளர்களின் உடல்நலம் குறித்த பதிவுகளை சரிபார்த்து வைத்திருக்க வேண்டும். அவர் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துப் பேசச் சொன்னார், ஆனால் காசநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்ததால், கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக அவரது மகனுக்கு தொலைபேசியில் அழைக்கக்கூட வழியில்லை. தொலைபேசியில் அழைக்க அதில் கட்டணம் இல்லாததால், தடுப்பூசி பரிசோதனையைத் தொடர்ந்து பரிஹார் தனது உடல்நிலை குறித்து மருத்துவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தனக்கும் மருத்துவமனையில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்றார்.

"டிசம்பர் மாதத்தில் இப்பகுதிக்கு வந்த ஒரு வாகனம், ஒலிபெருக்கியில் செய்த விளம்பரத்தில் கோவிட்19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர், ரூ.750-ஐ பெற்றுக் கொண்டு அருகில் உள்ள மக்கள் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்று அதை எடுத்துக் கொள்ளலாம் என்றது. எனக்கு பணம் தேவைப்பட்டது," என்றார் பரிஹார். கரீப் நகர் மற்றும் வடக்கு போபாலில் ஒரியா பாஸ்தி ஆகிய பகுதிகளில் மக்களை இந்தியாஸ்பெண்ட் பேட்டி கண்டதில் கிட்டத்தட்ட ஒரு டஜன் மக்கள் இதே நிகழ்வுகளை விவரித்தனர்.


போபாலின் கரீப் நகரில் வசிக்கும் மன்சிங் பரிஹார் (74). கடந்த டிசம்பரில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றார். புகைப்பட உதவி: அனு பூயான்.

பரிஹார் குறிப்பிடும் தடுப்பூசி கோவாக்சின் ஆகும், இது இந்தியாவில், அதன் மருத்துவப் பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, கட்டுப்பாட்டுடன் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றாகும். சுதேசி தடுப்பூசியை பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் என்ற அரசு நிறுவனமும் இணைந்து உருவாக்கி வருகின்றன.

சோதனைகளில் முறைகேடுகள் நடந்ததாக வெளியான தகவல்களுக்கு பிறகு, எங்களது நிருபர் போபாலுக்கு சென்று நகரத்தின் குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்தார். பலரும், மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக தாங்கள் இருந்தது தெரியவில்லை எனவும், அதற்கு பதிலாக தங்களுக்கு உண்மையான கோவிட்19 தடுப்பூசி வழங்கப்பட்டதாக நம்பியதாகவும் கூறினார். பெரும்பாலானவர்களுக்கு, அவர்கள் தடுப்பூசிக்கு ஒப்புக்கொண்டதற்கு பணம் தான் காரணம். அவர்களில் பலர் கல்வி பயிலாதவர்கள் என்றும், தாங்கள் கையெழுத்திட்ட படிவங்களில் என்ன இருந்தது என்று படிக்க முடியவில்லை என்றும் கூறினர்.

பக்கவிளைவுகள் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை அல்லது மரணம் அல்லது உடல் செயலிழப்பு போன்ற கடும் வீழ்ச்சிகளுக்கு ஈடுசெய்யப்படலாம் என்றும் அங்கு வசிப்பவர்கள் குற்றம்சாட்டினர். அனைத்து உடல் நல பாதிப்புகளும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தாலும், நமது விசாரணையில் பலரிடம் மொபைல் போன்கள் இல்லை, அது இருந்தால்தான்அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்க முடியும். வேறு எந்த வழியிலும் தங்களை அவர்களை தொடர்பு கொள்ளவில்லை என்றனர்.

நோய் மற்றும் உயிரிழப்பு

ஜனவரி 7ஆம் தேதி, பாரத் பயோடெக் 26 இடங்களில் 25,800 தன்னார்வலர்களை வெற்றிகரமாக நியமித்ததாக அறிவித்தது, அவர்களின் மருத்துவ பரிசோதனையின் முக்கியமான மூன்றாம் கட்டத்தில் பங்கேற்கபவர்கள். சோதனைகளின் முதல் இரண்டு கட்டங்களில் சுமார் 800 பங்கேற்பாளர்கள் இருந்தனர்.

கோவாக்சின் சோதனை, போபாலில் உள்ள மக்கள் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகிறது, இது கரீப் நகர் மற்றும் ஒரியா பாஸ்திக்கு அருகில் அமைந்துள்ளது, அங்கு நூற்றுக்கணக்கான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் -- அவர்களில் பலர் 1984 போபால் விஷவாயுக்கசிவு பாதிப்பு என்ற சோகத்தில் இருந்து தப்பி-- வாழ்கின்றனர். தொற்றுநோயால் ஆண்டு முழுவதும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலையில் உள்ளனர், மேலும் பல ஆண்கள் 2020 ஆம் ஆண்டு முழுவதும் வேலைகள் மற்றும் வருமானங்கள் இல்லாமல் உள்ளனர் என்று குடியிருப்பாளர்கள், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர். கழிவுநீர் மோசமாக உள்ளது மற்றும் 1984 கசிவில் இருந்து தண்ணீர் மாசுபட்டுள்ளது என்று குடியிருப்பாளர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போபாலின் மற்றொரு பகுதியில், ஒரு பெயரைப் பயன்படுத்தும் வைஜெயந்தி, தொலைக்காட்சி கேமராக்கள் மற்றும் நிருபர்கள் அவரது ஒற்றை அறை வாடகை வீட்டிற்குள் நுழைந்த தருணத்தில் அழுதவாறு இருந்தார். அவரது கணவர் தீபக் மராவி, கோவிட்19 பரிசோதனையில் பங்கேற்ற ஒன்பது நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார். ஜனவரி மாதம் பிரேத பரிசோதனை அறிக்கையை அவர் பெற்றார், "விஷம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால்" அவர் இறந்திருக்கலாம் என்று கூறினார்.

"தடுப்பூசி என் கணவருக்கு விஷமாகிவிட்டது" என்று வைஜெயந்தி, ஜனவரி 9ஆம் தேதி இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். தடுப்பூசி சோதனைக் குழுவில் இருந்த யாரும், அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.

மரவி தனது மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்றதை பயோடெக் னிறுவனம் ஜனவரி 9 செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியது. இறப்பு குறித்த ஆரம்பகட்ட மதிப்பாய்வு "மரணத்திற்கும் ஆய்வுருவுக்கும் தொடர்பில்லை" என்று சுட்டிக்காட்டியுள்ளது, இது "முழுமையாக ஆராயப்பட்டது" மற்றும் "தடுப்பூசி அல்லது மருந்துப்போலி என்ற பிரச்சனை தொடர்பானது அல்ல" என்று கண்டறியப்பட்டது. நிறுவனம் தன்னார்வலருக்கு ஆய்வு தடுப்பூசி அல்லது மருந்துப்போலி கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று நிறுவனம் கூறியது.

மராவியும், பரிஹாரும் பாரத் பயோடெக்கின் மருத்துவப் பரிசோதனைக்கு தங்கள் குடும்பங்களுக்கு தெரிவிக்காமல் கையெழுத்திட்டனர், அவர்கள் நோய்வாய்ப்பட்ட பிறகே இது தெரியவந்தது. மராவியின் மனைவி வைஜெயந்தி மற்றும் பரிஹார் இருவரும் தாங்கள் கையெழுத்திட்ட ஒப்புதல் படிவத்தின் நகல் கிடைக்கவில்லை என்று கூறினர்.

"அதே நாளில் தடுப்பூசி பெற மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருந்தனர். எல்லோரும் என்னைப் போன்ற ஏழைகள். ஊசி போடுவதற்கு அங்கு எந்த வசதியான மனிதர்களையும் என்னால் பார்க்க முடியவில்லை" என்றார் பரிஹார். இப்போது, இந்த மாதத்தில் வரவிருக்கும் இரண்டாவது தடுப்பூசி எடுக்க, அவர் திரும்பவும் செல்ல விரும்பவில்லை.


பாரத் பயோடெக்கின் கோவாக்சின் பரிசோதனையில் பலர் பங்கேற்றுள்ள போபால் அருகேயுள்ள கரீப் நகர். புகைப்பட உதவி: அனு பூயான்.

நிறுவனத்தின் கூற்றும், மக்களின் அனுபவங்களும்

போபாலில் பல பரிசோதனை பங்கேற்பாளர்கள் இந்தியாஸ்பெண்டிடம் கூறுகையில், உண்மையான தடுப்பூசிதான் தங்களுக்கு வழங்கப்படுவதாக நினைத்ததாகவும், மருத்துவப் பரிசோதனைக்கு கையெழுத்திட்டதை அறிந்திருக்கவில்லை என்றும் அவர்கள் கூறினார். "நான் கல்வியறிவற்றவன், அதனால் அவர்கள் எனக்குக் காட்டிய எந்த ஆவணங்களையும் என்னால் படிக்க முடியவில்லை ... ஆனால் நான் அவற்றில் கையெழுத்திட்டேன்," என்று, விசாரணையில் பங்கேற்றவர்களில் ஒருவரான கரீப் நகரில் வசிக்கும் ராம் சிங் அஹிர்வால் கூறினார். மற்றவர்களும் இதே போன்ற கதைகளை விவரித்தனர்.

ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து தங்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை என்றும், பரிசோதனைக்கு பிறகு, உடல்நலக்குறைவு பாதிப்புகளை பின்தொடர்ந்து கண்காணிக்கவில்லை, பதிவு செய்யப்படவில்லை அல்லது சிகிச்சையளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தியாவின் மருத்துவப் பரிசோதனை விதிகள் மருத்துவச் சோதனை பங்கேற்பாளர்களிடம் இருந்து எவ்வாறு தகவலறிந்த ஒப்புதல் எடுக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன, இதில் படிக்கவும் எழுதவும் முடியாதவர்கள் அல்லது 'பாதிக்கப்படக்கூடிய பொருளாக' இருக்கலாம். பங்கேற்பாளர்களுக்கு படிக்கவும் எழுதவும் இயலாது, முழு தகவலறிந்த ஒப்புதல் செயல்பாட்டின் போது ஒரு 'பக்கச்சார்பற்ற சாட்சி' ஆஜராகி ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும். 'பாதிக்கப்படக்கூடிய பொருளாக' இருக்கும் போது தகவலறிந்து, ஒப்புதல் செயல்முறையின் ஆடியோ-வீடியோ பதிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் விதிகள் குறிப்பிடுகின்றன.

"அறையில் ஒரு வீடியோ கிராபர் இருந்தார், அவர் தகவலறிந்த சம்மதத்தின் ஆடியோ - வீடியோ பதிவுகளை எடுத்தார்," என்று, மக்கள் பல்கலைக்கழக டீன் ஏ.கே. தீட்சித் தெரிவித்தார். ஆனால் இந்தியாஸ்பெண்ட் நிருபர் பேட்டி கண்ட பலரும் விசாரணையில் எந்த ஆடியோ-வீடியோ பதிவையும் காணவில்லை என்று கூறினார். "முழு செயல்முறையையும் ஆடியோ அல்லது வீடியோவில் யாரும் பதிவு செய்வதை நான் காணவில்லை" என்று அஹிர்வால் கூறினார்.

மரவியின் மரணம் தவிர, பாரத் பயோடெக் அறிக்கை இந்த பிரச்சினைகள் பலவற்றையும் நிவர்த்தி செய்தது.

பரிசோதனையில் பங்கேற்பது வரையறையுடன் சேர்க்கும் அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்றும், பங்கேற்பாளர்களின் உடல்நலம் பரிசோதனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு மதிப்பிடப்பட்டது என்றும் அது கூறியது.

மரணம் அல்லது செயல்பாடின்மை காரணமான அனைத்து பாதகமான நிகழ்வுகள் மற்றும் கடுமையான பாதகமான நிகழ்வுகள் (SAEs) இந்திய சட்டத்தின்படி நெறிமுறைக் குழுக்கள் மற்றும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்களின் நெறிமுறையின்படி, பங்கேற்பாளர்கள் அனைவருமே பரிசோதனைக்கு பிறகு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று அது கூறியது.

ஆனால், பரிஹார் போன்ற பலருக்கு, மருத்துவமனையைத் தொடர்புகொள்வதற்கும், பரிசோதனைக்கு பிறகு அவர்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து யாரும் கேட்கவோ, சிகிச்சைக்கு செலவிட பணமும் இல்லை, மற்றவர்களுக்கு அவ்வாறு செய்ய மொபைல்போன் இல்லை.

பரிசோதனை பங்கேற்பாளர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.750 செலுத்துவது குறித்து, இந்தியாவின் குட்ஸ் கிளினிக்கல் மருத்துவ நடைமுறை வழிகாட்டுதலின் கீழ் இது அனுமதிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனைகள் நடத்தப்படும் நிறுவனங்களில் உள்ள அறநெறி குழுக்களால் இந்த தொகை தீர்மானிக்கப்பட்டது.

பணப்பட்டுவாடா "மிகப் பெரியதாக" இருக்கக்கூடாது என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன, இது பங்கேற்பாளர்களை "அவர்களின் சிறந்த தீர்ப்புக்கு (தூண்டுதலுக்கு) எதிராக" திசை திருப்பி, பரிசோதனையில் பங்கேற்க வைக்கிறது. இது குறித்து, பாரத் பயோடெக் அவர்கள் ரூ.750 செலுத்துவது "தூண்டும் செயல் அல்ல" என்றார்.

இருப்பினும், இந்தியாஸ்பெண்ட் பேட்டி கண்டவர்களில் பலர் ரூ. 750 என்பது தங்களுக்கு இரண்டு நாள் ஊதியத்திற்கு சமம் என்றும், பரிஹாரை போலவே, ஊசி போடுவதற்கு இந்த பணம் ஒரு நல்ல காரணம் என்றும் அவர்கள் கூறினர்.

தகவல் தொடர்பு துண்டிப்பு

கோவாக்சின் பரிசோதனையாளர்கள், தடுப்பூசி போட்டவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது பரிஹாருக்கு மட்டுமே நேரவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்ட தச்சு தொழிலாளி ஜெய்ராம், இந்தியாஸ்பெண்டிடம் கூறுகையில், ஊசி போட்ட பிறகு கொஞ்சம் வலி மற்றும் பலவீனத்தை உணர்ந்ததாக கூறினார், ஆனால் இதுபற்றி கேட்டரிய பரிசோதனை புலனாய்வாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனெனில் அவர் தடுப்பூசி போடப்பட்டதும் தொலைபேசியை இழந்தார். விசாரணையில் பங்கேற்ற அவரது நண்பர் அஹிர்வால், பின்தொடர்ந்து வந்த அழைப்பை பெற்று வந்தார். விசாரணையாளர்களிடம், அவருடன் அனைவரும் நன்றாக இருப்பதாக ஜெய் ராமும் கூறினார். எனவே ஜெய் ராமிற்கு ஏற்பட்ட பாதகமான சம்பவம் விசாரணையில் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 1984 போபால் எரிவாயு கசிவு பேரழிவுக்கான இழப்பீடு வழங்கல் முறை குறித்து அஹிர்வால் இன்னும் ஆச்சரியப்படுகையில், அவர் இப்போது பங்கேற்ற மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்தும் சந்தேகம் உள்ளது. "இது ஒரு பரிசோதனை என்று எனக்குத் தெரியவில்லை. தடுப்பூசி பரிசோதனை பற்றி அங்குள்ள மருத்துவர்கள் எதுவும் விளக்கவில்லை, ஆனால் அவர்களில் இருவர் இந்த தடுப்பூசியை முதலில் விலங்குகளுக்கும் இப்போது மனிதர்களுக்கும் கொடுப்பது பற்றி விவாதித்ததை நான் கேள்விப்பட்டேன், "என்று அஹிர்வால் கூறினார்.

போபாலில் நடந்த கோவாக்சின் மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்பாளர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து பாரத பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐ.சி.எம்.ஆர்) ஆகியவற்றிடம் இந்தியாஸ்பெண்ட் விரிவான கேள்விகளை அனுப்பியுள்ளது. அவர்கள் பதிலளிக்கும் போது இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

அதே சோதனை, வெவ்வேறு நகரம்

மும்பையில், ஒரே பெயரை கொண்டிருக்கும் 22 வயதான ரோனக், பாரத் பயோடெக்கின் 3 ஆம் கட்ட பரிசோதனைகளை சியோன் மருத்துவமனையில் 2020 டிசம்பரில் பங்கேற்றார். போபாலில் காணப்பட்டது போன்ற குழப்பமான சூழ்நிலையைப் போலல்லாமல், அவருக்கு "ஒரு நல்ல அனுபவம் இருந்தது" என்று அவர் ஜனவரி மாதம் இந்தியாஸ்பெண்டிடம் தொலைபேசியில் தெரிவித்தார். ஒரு பெரு மாநகரில் படிக்கும் கல்லூரி மாணவர் ரொனக்கின், சமூக-பொருளாதார நிலையானது, போபாலில் உள்ள குடிசைப்பகுதி மக்களை போல் அல்லாமல் மிகவும் வித்தியாசமானது.

போபாலில் இந்த பரிசோதனை எவ்வாறு நடத்தப்பட்டது என்பது போலல்லாமல், மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனையில் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டவர்களுடன், குறைந்தது 10 நிமிடங்கள் செலவழித்தார்கள், இந்த செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார்கள். அவர்களிடம் பரிசோதனையாளரை கேள்விகளைக் கேட்க அனுமதித்து, அவருக்கு இருந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்கள். இருப்பினும், போபாலில் பலரைப் போலவே, அவரும் கையெழுத்திடுவதற்கு முன்பு படிவத்தை முழுமையாகப் படிக்கவில்லை. இருப்பினும், வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான ஒப்புதல் படிவத்தின் நகல் அவருக்கு வழங்கப்பட்டது.

போபாலில் பங்கேற்றவர்களைப் போலவே, அவருக்கும் பரிசோதனையில் பங்கேற்றதற்காக பணம் (ரூ. 1,500) வழங்கப்பட்டது. ஆனால் பதிவு பெறுவதற்கு முன்பு பணம் செலுத்துவது குறித்து அவருக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் தனது சொந்த விருப்பப்படி சென்று, இரண்டாவது முறை எடுத்த பிறகு அவருக்கு பணம் வழங்கப்படும் என்பதை அறிந்தார். இது போபாலில் இருந்த நடைமுறைக்கு முரணானது, இதில் பங்கேற்பாளர்கள் தங்களை சேர்ப்பதற்கான தூண்டிலாக முதலில் பணம் தரப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

"பாரத் பயோடெக் அல்லது அதன் பரிசோதனைகளைச் செய்யும் ஏதேனும் ஏஜென்சிகள், பெரிய நகரத்தின் வசதியான பகுதியில் வாகனங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு, மக்களுக்கு 750 ரூபாய் [வருகைக்கு] வழங்குவதாகவும், இது ஒரு தடுப்பூசிக்காகக் கூறப்படுவதாகவும் நான் சந்தேகிக்கிறேன்" என்று ரச்னா திங்க்ரா கூறினார், இவர் போபால் விஷவாயுக்கசிவு சோகத்தில் இருந்து தப்பியவர்களுடன் பணியாற்றி வருகிறார். போபால் சோகத்தில் இருந்து தப்பியவர்கள் ஏராளமானோர் வசிக்கும் பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார். "1984 ஆம் ஆண்டில் விஷவாயுக் கசிவில் இருந்து தப்பியவர்களுக்கு, ஏற்கனவே அவர்களின் உடல்நிலைதான் சமரசமாக்கப்பட்டது," என்று அவர் கூறினார், விசாரணையின் முன் பங்கேற்பாளர்களின் உடல்நலம் மதிப்பிடப்பட்டது என்று கூறி நிறுவனம் மறுத்துவிட்டது.

"அந்த நபர்களுக்குத்தான் இப்போது, அவர்களுக்கு தெரியாமல் அல்லது அனுமதியின்றி கோவாக்சின் பரிசோதனை மருந்துகளை வழங்குகிறார்கள்," என்று திங்க்ரா கூறினார். "தடுப்பூசிக்கு பிறகு அவர்களில் பலரும் பின்தொடரப்படவில்லை அல்லது கண்காணிக்கப்படவில்லை, அவற்றின் பாதகமான நிகழ்வுகள் பதிவு செய்யப்படவில்லை அல்லது சிகிச்சையளிக்கப்படவில்லை" என்றார்.

'மருத்துவ சோதனை முறை'

இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைகள் மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் -1940, மற்றும் புதிய மருந்துகள் & மருத்துவப்பரிசோதனை விதிகள்- 2019 ஆகியவற்றின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு கட்டுப்பாட்டுடன் அவசர ஒப்புதலை அளிக்கும் செய்திக்குறிப்பை, ஜனவரி 3 ம் தேதி, இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் வெளியிட்டார், ஆனால் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் "மருத்துவ பரிசோதனை முறையில்" நிர்வகிக்கப்படும் என்று கூறினார். "மருத்துவ பரிசோதனை முறையில்" தடுப்பூசிகளை வழங்க இந்திய சட்டத்தில் எந்த இடமும் இல்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, "மருத்துவ பரிசோதனை முறை" என்பது இந்த இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்பவர்கள் தங்களது ஒப்புதல் அளிக்க வேண்டும் மற்றும் பின்பற்றப்பட வேண்டும் என்று, ஐ.சி.எம்.ஆர் தலைவர் தெளிவுபடுத்தினார். இந்த விஷயத்தில் இந்தியா கடும் விதிமுறைகளைக் கொண்டிருந்தாலும், எந்தவொரு மோசமான பாதகமான நிகழ்வுகளுக்கும் விசாரணையில், பங்கேற்பாளர்கள் இழப்பீட்டை பெறுவார்களா என்பதை அவர் கூறவில்லை.

பங்கேற்பாளரின் வயது, இணை நோய்கள் மற்றும் நோய்களின் காலம், பிறவி குறைபாடு மற்றும் பரிசோதனையில் இருந்து கடுமையான பாதகமான விளைவுகளில் இருந்து மீளக்கூடியவரா என்பது போன்ற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் வழிமுறை அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்படுகிறது. இறப்புகளுக்கான அடிப்படை இழப்பீடு ரூ. 8 லட்சம் ($ 10,902) ஆகும்.

வெளிநாட்டில்,கோவிட்-19 தடுப்பூசிக்கான சில முக்கிய மருத்துவ பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டு, பரிசோதனையில் பங்கேற்பாளர்களுக்கு இறப்பு அல்லது பிற பாதகமான நிகழ்வுகள் குறித்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, ஒரு பங்கேற்பாளர் பாதகமான எதிர்விளைவை தெரிவித்த பிறகு, அஸ்ட்ராஜெனெகா அதன் அடுத்தகட்ட சோதனையை பாதுகாப்பு மதிப்பாய்வுக்கென இடைநிறுத்தியது. கடந்த அக்டோபரில், பங்கேற்றவர்களில் ஒருவரை நிபுணர் குழு விசாரிக்கும் வரை, கோவிட்19 தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனையை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உள்ளிட்டவை தற்காலிகமாக நிறுத்தின. இதில் ஜனவரி மாதம் நார்வே அரசும் ஃபைசரின் கோவிட்19 தடுப்பூசியை எடுத்துக் கொண்ட இரண்டு பேரின் மரணம் குறித்த விசாரணையைத் தொடங்கியது.

இங்கிலாந்தில் இதே தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மோசமான எதிர்வினை உண்டானதை அடுத்து, இங்கே இந்தியாவில், அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசிக்கு பரிசோதனை செய்ய ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துமாறு சீரம் நிறுவனத்தை, மருந்து கட்டுப்பாட்டாளர் கேட்டுக்கொண்டார்.

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் போலல்லாமல், கோவிட்-19 தடுப்பூசி முன்வரிசைக்கார்கள் அனைவரும் தங்கள் மருத்துவ நெறிமுறைகள் மற்றும் ஒப்புதல் படிவங்களை பொதுவில் கிடைக்கச் செய்துள்ளனர். (மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜான்சென், ஃபைசர், நோவோவாக்ஸ், கன்சினோ மற்றும் மாடர்னா, அஸ்ட்ராசீகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜான்சென் ஆகியவற்றிற்கான ஒப்புதல் படிவங்களை பார்க்கவும்).

நல்ல சோதனை தரவு என்பது பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகள் எனப்பொருள்

"மரவியின் மரணம் தடுப்பூசி அல்லது மருந்துப்போலிக்கு தொடர்பில்லாதது என்று தாங்கள் நம்புவதாக, பாரத் பயோடெக்கின் அறிக்கை கூறுகிறது. அவர்கள் தங்கள் விசாரணையின் அடிப்படையையும், இதை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் எந்த உண்மைகளை நம்பியிருக்க வேண்டும் என்பதையும் விளக்க வேண்டும் என்று, போபாலில் உள்ள பயோஎதிக்ஸ் ஆராய்ச்சியாளர் ஆனந்த் பென் கூறினார்.

இந்த மரணத்தைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த தடுப்பூசி எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது என்றும் அவர் கேட்டார்: "இந்தியாவின் நிபுணர் குழு ஜனவரி மாதம் கோவாக்சின் ஒப்புதலுக்கு பரிந்துரைத்தது, ஆனால் மராவியின் மரணம் 2020 டிசம்பரில் நடந்தது. இந்த மரணத்தை நிபுணர் குழு அறிந்திருக்கிறதா, இந்த தடுப்பூசிக்கு அவர்கள் அவசர ஒப்புதல் அளித்தபோது அதை காரணியாக மாற்றியிருக்கிறார்களா என்பதை மருந்து கட்டுப்பாட்டாளர் விளக்க வேண்டும்" என்றார்.

கோவாக்சின் பரிசோதனைகளில் உள்ள ஒழுங்கின்மை, 3 ஆம் கட்டத்தில் வெளிச்சத்துக்கு வருகின்றன. "முதல் கட்டம் மற்றும் 2 ஆகியவற்றில் அடிக்கடி நிகழும் மற்றும் மோசமான பாதகமான விளைவுகளை காண வேண்டும்," இங்கிலாந்து பொது சுகாதார மருத்துவரும், தொற்றுநோயியல் நிபுணருமான ஜம்மி நாகராஜ் ராவ் கூறினார். "ஆனால் 3 வது கட்டத்திலும் பாதுகாப்பை இன்னும் கண்காணிக்க வேண்டும், இது பங்கேற்பாளர்களின் மிகப்பெரிய கூட்டணியைக் கொண்டுள்ளது" என்றார்.

மூன்றாம் கட்டத்தில் பங்கேற்பாளர்களின் ஒரு பெரிய மக்கள் குழுவை கொண்டுள்ளது, இந்த பெரிய எண்ணிக்கை மிக அரிதான பக்கவிளைவுகளையும் எடுக்க உதவுகின்றன என்று ராவ் கூறினார். "பொதுவான பக்க விளைவுகளின் நிகழ்தகவு குறித்து விஞ்ஞானிகள் மிகவும் துல்லியமான மதிப்பீட்டைப் பெறுவார்கள். இந்தத் தரவுகள் அனைத்தும் நன்கு சேகரிக்கப்பட்டால், ஒரு மருந்து அல்லது தடுப்பூசியுடன் கிடைக்கும் தகவல் துண்டுப்பிரசுரத்திற்குள் செல்லும். பரிசோதனைகளின் நல்ல தரவு பக்க விளைவுகள் குறித்து இந்த துண்டுப்பிரசுரங்களில் எச்சரிக்கைகள் வைக்க அனுமதிக்கிறது" என்றார்.

இது, தகவலறிந்து சம்மதத்தை முக்கியமாக்குவதாக ராவ் கூறினார். தகவல் அறிந்த சம்மதத்தைப் பெறுவதற்கான செயல்பாட்டின் போது, ​​பங்கேற்பாளர்கள் பக்க விளைவுகளை தெரிவிக்க வேண்டும் மற்றும் தொடர் கண்காணிப்பிற்கும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "தொடர் கண்காணிப்பு நெறிமுறை மற்றும் நடைமுறை காரணங்களுக்காக இது அவசியம்" என்று ராவ் கூறினார், "தொடர் கண்காணிப்பின் போது அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை பங்கேற்பாளர்களை தவறவிட்டால், அது ஆய்வின் முடிவுகளில் சந்தேகத்தை ஏற்படுத்தும்" என்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:
Next Story