புகையிலையை கைவிட கோவிட்19 முடக்கம் சிறந்த தருணம்

புகையிலையை கைவிட கோவிட்19  முடக்கம் சிறந்த தருணம்
X

மும்பை: கோவிட்-19 பரவலை தடுக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் முழு முடக்கத்தின் போது புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பது, உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோராக உள்ள இந்தியாவில், புகையிலை நுகர்வை குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆறு வாரங்களுக்கும் மேலாக புகையிலை இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயம் மற்றும் புகையிலை பயன்பாடு அதிகம் உள்ள சமூகத்தில் நடமாடுவதில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், அதை நுகர்வோர், இப்பழக்கத்தை கைவிடுவது இனி எளிதாக இருக்கும்.

ஏறக்குறைய 26.7 கோடி பேர், அல்லது 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள 29% இந்தியர்கள், தற்போது ஏதேனும் ஒரு வடிவத்தில் புகையிலை பயன்படுத்தி வருவதாக, உலக வயது வந்தோருக்கான புகையிலை ஆய்வு- கேட்ஸ் (GATS) இந்தியா 2016-17 அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் 19.9 கோடி புகையிலை உபயோகிப்போர், அதை மென்று தங்கள் ஈறு மற்றும் பற்களுக்கு இடையே பல்வேறு வடிவில் அடக்கி வைத்து பயன்படுத்துகின்றனர்; கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, அந்த எண்ணிக்கையில் பாதி (9.9 கோடி) பேர் புகைபிடிக்கின்றனர்.

தற்போதைய கொரொனா தொற்று பீதிக்கு மத்தியில், ஏப்ரல் 15, 2020 அன்று அரசு பிறப்பித்த உத்தரவில், சுகாதார காரணங்களுக்காக "மதுபானம், குட்கா, புகையிலை போன்றவற்றை" விற்பனை செய்வதற்கு "தீவிர தடை" அமலானது. அதற்கு, இந்த இரண்டு காரணங்கள் முக்கியமானவை என்று, சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்:

  • கோவிட்19 முதலில் நுரையீரலின் செயல்பாட்டை பாதிக்கிறது என்பதால், புகைபிடிக்கும் பழக்கம் உள்ள நோயாளிகளுக்கு, புகைபிடிக்காதவர்களை விட தீவிர சிகிச்சை மற்றும் சுவாசக்காற்று தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இருதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சுவாச நோய் அல்லது புற்றுநோய் போன்ற கொமொர்பிடிடிஸ் நோயாளிகளுக்கு இடையே இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது; அவர்களில் சிலர் நேரடியாக புகைப்பழக்கத்துடன் தொடர்புடையவர்கள். இந்தியாவில், ஏப்ரல் 18 அன்று இறந்த 480 பேரில், 83% பேருக்கு கொமொர்பிடிட்டிகள் இருந்தனர்.
  • மெல்லக்கூடிய புகையிலையின் பயன்பாடு உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது; இதனால் துப்ப வேண்டும் எண்ணத்தை தூண்டுவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விளக்கம் அளித்துள்ளது. "பொது இடங்களில் துப்புவது கோவிட்19 வைரஸ் பரவுவதை அதிகரிக்கும்" என்று அது கூறியது.

பொது இடங்களில் துப்புவது அரசால் தடை செய்யப்பட்டு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, "கோவிட்19 தொற்றால் ஏற்படும் தீங்கை குறைக்க, இந்நேரத்தில் புகையிலை பயன்பாட்டை கைவிட்டு வெளியேறுவது மிக முக்கியமானது". புகையிலையில் இருந்து வெளியேற விரும்பும் பயனர்கள், உடனடியாக நுரையீரல் மற்றும் இருதய செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம், நோய்த்தொற்று ஏற்பட்டால் கொமொர்பிட் நிலைமைகளை நிர்வகிக்க சிறந்த இடத்திற்கு முன்னேற்றம் காண்பார்கள்.

"புகையிலை நுகர்வு தீங்கு தருவது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், இதுபோன்ற தருணங்களில் இதுபற்றிய பேச்சைக் கேட்பதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்" என்று ஐ.சி.எம்.ஆரின் புற்றுநோய் ஆராய்ச்சி கூட்டமைப்பின் இந்திய பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி ரவி மெஹ்ரோத்ரா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "தடை நடைமுறையில் இருப்பதால், புகையிலை இல்லாமல் 2-3 வாரங்கள் வரை மக்களால் சமாளிக்க முடிந்தால், இதை ஏன் என்றென்றுமாக தொடரக் கூடாது?" என்றார் அவர்.

கேட்ஸ் (GATS) அறிக்கையின்படி, சுமார் 55% புகைப்பிடிப்பவர்களும், கிட்டத்தட்ட 50% புகைபிடிக்காத புகையிலை பயனர்களும் இப்பழக்கத்தை விட்டு வெளியேற ஆர்வமாக உள்ளனர் அல்லது அவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளனர். வெளியேற ஆர்வமுள்ளவர்களுக்கு, ஊரடங்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம் என்று மெஹ்ரோத்ரா கூறினார். "பலமுறை, புகையிலை பொருட்களின் பயன்பாடு, குறிப்பாக புகைபிடித்தல், நண்பர்கள் மற்றும் சக புகையிலை பயனர்களுக்கு இடையே ஒரு சமூக நடவடிக்கையாகும்" என்று அவர் சுட்டிக் காட்டினார். "சமூக விலகல் காரணமாக மக்கள் இப்போது தனிமையில் இருக்கிறார்கள், [பழக்கத்தை தகர்க்க] இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்" என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் சுகாதார பிரச்சினைகளால் இந்தியாவில் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் (இது, அருணாச்சல பிரதேசத்தின் மக்கள் தொகையை விட அதிகம்) இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக கேட்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அவற்றில், 10 லட்சம் இறப்புகள் புகைபிடிப்பதற்கும், மீதமுள்ளவை புகைபிடிக்காத புகையிலை பொருட்களின் பயன்பாடு காரணமாக இருக்கலாம்.

‘கைவிடுவதற்கு பெரும் வாய்ப்பு ஏற்படுத்தி உதவலாம்’

"புகைபிடிப்பதை கைவிடுவதற்கான சிறந்த தருணம் இது" என்று புகையிலை கட்டுப்பாட்டு இயக்குனர் கன் குவான் கூறியதாக, பாரிஸை தலைமையிடமாக கொண்ட, காசநோய் மற்றும் நுரையீரல் நோய் குறித்த ஆலோசனை அமைப்பான தி யூனியன், ஏப்ரல் 6, 2020 இல் வெளியிட்ட அறிக்கையில்தெரிவித்தது. "இந்த அவசர உண்மையை தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்துவதற்கும் பெரிய இடைநிறுத்த முயற்சிகளுக்கு உதவுவதற்கும் நாடுகளுக்கு தார்மீக கட்டாயம் உள்ளது" என்றார்.

இந்தியாவில் புகையிலை பயன்படுத்துபவர்கள் இடையே போதை அளவு அதிகமாக உள்ளது: தினமும் இதை உட்கொள்பவர்களில் 59% பேர் எழுந்த 30 நிமிடங்களுக்குள்ளும், முதல் ஒருமணி நேரத்திற்குள் 78% பேர் அருந்துகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு 10 பெரியவர்களில் ஒருவர் புகைபிடிப்பவர், அவர்களில் 80% (8.01 கோடி) பேர் ஒவ்வொரு நாளும் புகைபிடிக்கின்றனர், எப்பவாவது புகை பிடிப்பவர்கள் 1.94 கோடி ஆவார்கள்.

நாம் முன்பு குறிப்பிட்டது போல், இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் புகையிலை பொருட்கள், புகைபிடிக்கப்படாத வகையை சேர்ந்தவை; 10.41 கோடி பயனர்களை கொண்ட ஒரு புகையிலை-லைம் கலவையான கைனி மற்றும் 6.36 கோடி பயனர்களை கொண்ட புகையிலை- லைம்- பாக்கு கலவையான குட்கா ஆகியன, பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று, கேட்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது. இதை தொடர்ந்து புகையிலையுடன் வெற்றிலை (பான்), வாய்வழி பயன்பாட்டிற்கான தயாரிப்புகள் மற்றும் பான் மசாலா - புகையிலை, பாக்கு, சுண்ணாம்பு மற்றும் பிற சுவையூட்டும் கலவையாகும்.

தொற்றுநோய் உள்ள இத்தருணத்தில், புகைபிடிக்காத பொருட்களின் பயன்பாடு சிக்கலானது, ஏனெனில் இது நாங்கள் சொன்னது போல் துப்புவதற்கான தூண்டுதலை அதிகரிக்கிறது. "புகையிலை மெல்லுதல் பாக்டீரியாவை கொண்டிருக்கும் துப்புதலுக்கு வழிவகுக்கிறது" என்று மும்பையின் டாடா மெமோரியல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறை, தலை மற்றும் கழுத்து சேவைகள் பிரிவு பேராசிரியர் பங்கஜ் சதுர்வேதி விளக்கினார். “கோவிட்19க்கான பரிசோதனைகளை செய்யும்போது கூட, உமிழ்நீரில் உள்ள வைரஸை கொண்டிருக்கும் தொண்டையில் இருந்து துணியால் சேகரிக்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நபர் துப்பும்போது, முழு வைரஸும் அந்த உமிழ்நீரில் ஏற்றப்பட்டு நீர்த்துளிகள் காற்றில் வீசப்படுகின்றன. இது சுற்றுவட்டப் பகுதிகளில் முழு மக்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் புகையிலைக்கான சுகாதார செலவினங்களை பொறுத்தவரை அரசு கருவூலத்திற்கு கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி (13 பில்லியன் டாலர்) இழப்பு உண்டாகிறது. இச்செலவினம், இளைஞர்கள் மத்தியில் மரணத்தைத் தடுக்கக்கூடிய பணியில் முதலிடத்தில் உள்ளது என்று சதுர்வேதி கூறினார். புகையிலை மீதான தடையை, கொரோனா தொற்றுநோய்க்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என்றார்.

"அடுத்த இரண்டு - மூன்று வாரங்களில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த கூடுதல் விழிப்புணர்வும், சிறந்த தீர்வும் தேவை; ஏனென்றால், அதை தவிர்க்கவும், திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகளை கடக்கவும் முடியும் என்பதை மக்கள் உணர்ந்தவுடன், அவர்கள் அதை மீண்டும் தங்கள் வாழ்க்கையில் நுழைய விடமாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

புகைப்பவர்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி அடங்குதல்

"சீனாவில் சமீபத்திய ஒரு ஆய்வில், புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, புகைபிடித்த மக்களிடையே நோய் முன்னேற்றத்தின் முரண்பாடுகள் (மரணம் உட்பட) 14 மடங்கு அதிகம் என்று காட்டியது" என்று மெஹ்ரோத்ரா கூறினார். “அவர்களுக்கு நிமோனியா உருவாகும் அபாயமும் உள்ளது. நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், கோவிட்19 அல்லது காசநோய் போன்ற சுவாச நோய்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தை இது அதிகரிக்கிறது” என்றார்.

புகைபிடிப்பவர்களுக்கு விரல்கள் (மற்றும் அசுத்தமான சிகரெட்டுகள்) உதடுகளுடன் தொடர்பு கொள்வதால், தொற்று வைரஸ் கையிலில் இருந்து வாய்க்கு எளிதில் பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

"பல வழிகளில் புகைபிடித்தல் கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் பரவலை தூண்டுகிறது" என்று சதுர்வேதி கூறினார். "அவர்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; ஏனெனில் சுவாச அமைப்பில் அவற்றின் பாதுகாப்பு குறைவாக உள்ளது, நோய்க்கிருமிகள், பாக்டீரியாக்கள் அல்லது எந்த வைரஸுக்கும் ஆளாகக்கூடும். புகைபிடிப்பதால் மூச்சுக்குழல் சளியால் தடைபடுவதால், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி அடக்கப்படுகிறது”என்றார்.

இந்திய புகையிலை பயனர்களில் பாதி பேர் வெளியேற விருப்பம்

சுமார் 55% புகைப்பிடிப்பவர்களும், கிட்டத்தட்ட 50% புகைபிடிக்காத புகையிலை பயனர்களும், நாங்கள் சொன்னது போல், இப்பழக்கத்தில் இருந்து விலகவே ஆர்வம் காட்டுகிறார்கள் அல்லது அவ்வாறு செய்யத் திட்டமிட்டு உள்ளனர் என்று கேட்ஸ் (GATS) அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.

ஐந்து (39%) புகைப்பிடிப்பவர்களில் இருவர் மற்றும் மூன்றில் ஒரு பங்கு (33%) புகைபிடிக்காத புகையிலை பயனர்கள் கடந்த 12 மாதங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டை விட்டு வெளியேற முயன்றதாக, கேட்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

"இந்தியாவில், வயது வந்தோரில் சுமார் 2% பேர் முன்பு ஒவ்வொரு நாளும் புகையிலை புகைப்பிடித்திருந்தனர், ஆனால் இப்போது புகைப்பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்" என்று கேட்ஸ் அறிக்கை கூறியுள்ளது. ஆனால் புகைபிடிக்காத புகையிலை பயன்பாட்டிற்கான வெளியேறும் விகிதம் மிகக் குறைவு - தினசரி புகைபிடிக்காத புகையிலை பயனர்களில் 5.8% புகைப்பிடிப்பவர்களுடன் (16.8%) ஒப்பிடும்போது வெற்றிகரமாக வெளியேறுகிறார்கள்.

புகையிலை தடை செய்வது ஏன் சவாலானது

புகையிலை மீதான நிரந்தர தடையை வல்லுநர்கள் வரவேற்கும் அதே நேரம், அவர்கள் சவால்களையும் கோடிட்டு காட்டுகிறார்கள். "மக்கள் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர், இதை கைவிடுவோருக்கு ஆதரவளிக்க உரிய உள்கட்டமைப்பு வசதி இருப்பது முக்கியம்" என்று மெஹ்ரோத்ரா கூறினார். "புகை பழக்கத்தை கைவிடும் சூழலில், அவர்களுக்கு உதவ பல மருந்துகள், சுவிங்கம் போன்றவை உள்ளன; ஆனால் இவை விலை உயர்ந்தவை. மருத்துவர்களின் ஆலோசனை, மற்ற வாய்ப்பாக இருக்கும், ஆனால் அதுபோன்றவை நடைமுறையில் இருக்காது, எனவே அந்த விஷயத்தில் அவர்களுக்கு அரசின் தொலைபேசி ஆலோசனை சேவைகள் (1800 227787) தேவைப்படும்” என்றார்.

புகையிலை பொருட்கள் மீதான தடை என்பது, பல அமைச்சகங்களை உள்ளடக்கியது என்று சதுர்வேதி சுட்டிக்காட்டினார். "புகையிலை பொருட்களை தடை செய்வது என்பது, சுகாதார அமைச்சகத்தின் கீழ் வருகிறது; ஆனால் பயிர் சாகுபடி விவசாய அமைச்சகத்தின் கீழ் வருகிறது; சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை வர்த்தக அமைச்சகத்தின் கீழ் வருகிறது, பீடி தொழிலாளர்கள் என்பது, தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வருகிறார்கள், குட்கா உற்பத்தி எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்தின் கீழ் வருகிறது, ”என்று அவர் கூறினார். "எனவே முடிவெடுக்கும் போது ஒன்றுடன் ஒன்று மற்றும் பிற அமைச்சகங்கள் [தடையின்] அதிர்ச்சியைக் கையாள தயாராக இருக்க வேண்டும்" என்றார்.

புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கும்போது இரு அம்சங்கள் உள்ளன - தேவை மற்றும் வினியோகம் என்பதை சதுர்வேதி சுட்டிக் காட்டினார்: கோவிட்19 இன் அபாயத்தை புரிந்து கொண்டு, நுகர்வோர் தேவை என்ற அம்சத்தை குறைக்க முடியும். விநியோகம் செய்யும் தரப்பில் முடிவு முற்றிலும் அரசியலாகும். மக்களாகவே இதை கைவிட்டால், நிச்சயமாக எந்த வினியோக கோரிக்கையும் இருக்காது, அதன் விளைவாக வினியோகமும் நிறுத்தப்படும்” என்றார்.

(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story