கோவிட்-19 ஊரடங்கு இரத்த வங்கிகளில் மேலும் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது

கோவிட்-19 ஊரடங்கு இரத்த வங்கிகளில் மேலும் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது
X

மும்பை: “நான் கடந்த இரு தினங்களாக தொலைபேசியில் சிலருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அதன் பிறகு எனக்கு தூக்கமே வரவில்லை; சரியான உணவை எடுத்துக் கொள்ள முடியவில்லை,” என்று, கொல்கத்தாவை சேர்ந்த சமூக ஊடக நிர்வாகியான 27 வயது ஸ்ரேயா மித்ரா கூறினார். தலசீமியா என்ற இரத்தக்குறைபாடு உள்ள மித்ராவின் உடல், குறைந்தளவே ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது; ஒவ்வொரு 14-16 நாட்களுக்கு ஒருமுறை அவருக்கு இரத்தமாற்றம் தேவைப்படுகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி இரத்தமாற்றத்திற்குத் தேவையான ஒரு யூனிட் ரத்தத்தை (500-600 மில்லி) ஏற்பாடு செய்ய, தமக்கு நான்கு நாட்கள் பிடித்ததாக அவர் கூறினார்.

"கடந்த 26 ஆண்டுகளாக இதை நான் மேற்கொண்டு வருகிறேன்" என்றார் மித்ரா. தற்போது ஊரடங்கால் அவரது நிலைமை மோசமாக்கியுள்ளது. அவரது பகுதியில் உள்ள ரத்த வங்கி மையம், ஊரங்கு காரணமாக தங்களால் இரத்த மாற்றம் செய்ய இயலாது என்று தெரிவித்துவிட்டது. அதே நேரம் அந்த மையம் அவசர இரத்த தான முகாமை நடத்தியது; சில நன்கொடையாளர்களே இரத்த தானத்திற்கு முன்வந்ததாக, இந்தியா ஸ்பெண்டிடம் மித்ரா தெரிவித்தார்.

ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 1% இரத்தம் என்பது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் இரத்தத் தேவைகளின் மதிப்பீடாகும். இதன்படி பார்த்தால் இந்தியாவுக்கு இன்னமும் ஆண்டுக்கு 1.9 மில்லியன் யூனிட் அளவுக்கு இரத்தம் பற்றாக்குறையில் இருப்பதாக, ஜூன் 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. நிபுணர்கள் கூறுகையில், இந்தியாவில் இரத்த வங்கிகளை நிர்வகிக்கும் அமைப்பு இல்லை; மேலும் பலர் தங்களது குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் தவிர, பொதுவாக இரத்ததானம் செய்வதில்லை என்றனர்.

ஊரடங்கால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. மருத்துவமனைகள் குறைவான ஊழியர்களுடன் செயல்படுகின்றன. மக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவமனை அல்லது கிளினிக்கில் கோவிட் -19 சிகிச்சை போன்ற பயத்தால், இரத்ததானத்திற்கு குறைந்த அளவில் தான் நன்கொடையாளர்கள் முன்வருவதை, எங்கள் ஆய்வு கண்டறிந்துள்ளது.

கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாள் ஊரடங்கு தொடங்கும் முன்பே, மார்ச் 23ம் தேதி இரத்தப்பற்றாக்குறை இருப்பதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் அறிவித்ததோடு, மக்கள் தாமாக முன்வந்து இரத்த நன்கொடை வழங்குமாறு வேண்டுகோளும் விடுத்தார். ஊரடங்குக்கு பிறகு மேற்கு வங்கம், ஒடிசாவில் இதேபோன்ற சூழலே நிலவுகிறது.

நடமாட்டத்தை நிறுத்திய தன்னார்வலர்கள்

பொது சுகாதார நிபுணரான ராஜீவ் சிபர், தமது 12 வயது மகனுக்கு இரத்த நன்கொடையாளரை ஏற்பாடு செய்ய, கடந்த சில நாட்களாக முயற்சித்து வருகிறார். அவரது மகனுக்கு தலசீமியா உள்ளது; ஹீமோகுளோபின் அளவை பொறுத்து ஒவ்வொரு 15 -18 நாட்களுக்கு ஒருமுறை இரத்தமாற்றம் தேவைப்படுகிறது என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார்.

ஊரடங்கிற்பு முன்பு, சிபர் தமது முந்தைய பணியிடங்களில் இருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் இரத்த நன்கொடை கேட்பது வழக்கம். ஆனால் மக்கள் இப்போது மருத்துவமனைக்கு வர பயப்படுவதாக அவர் கூறுகிறார்.

கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தால் மக்கள் இரத்த வங்கிகளுக்கு, குறிப்பாக மருத்துவமனைகளுக்குள் இருக்கும் இரத்த வங்கிகளுக்கு செல்ல விரும்பவில்லை என்று, நோயியல் நிபுணரும், மும்பை இரத்த வங்கிகளின் கூட்டமைப்பின் தலைவருமான ஜரின் பருச்சா கூறினார்.

ஊரங்கு உத்தரவானது, போக்குவரத்து இயக்கத்தை தடைசெய்திருக்கிறது. எனவே ஒரு மருத்துவமனை அல்லது இரத்த வங்கியில் இருந்து வெகு தொலைவில் வாழும் வழக்கமான நன்கொடையாளர்கள் நேரில் சென்று நன்கொடை அளிக்க முடியாது; அதே நேரம், அருகில் இருக்கும் புதிய நன்கொடையாளர்களை கண்டுபிடிப்பதும் ஒரு சவாலாகும் என்று, மும்பையின் கிங் எட்வர்ட் மெமோரியல் (கேஇஎம்) மருத்துவமனையின் சமூக சேவகர் கவிதா சசானே கூறினார்.

மகனுக்கு இரத்த மாற்றம் தேவைப்படும் சிபர், காஜியாபாத்தில் உள்ள இந்திராபுரத்தில் (இது டெல்லி-என்.சி.ஆரில் உள்ளது; ஆனால் உத்தரபிரதேச மாநில எல்லைக்கு உட்பட்டது) இருந்து ஒரு நன்கொடையாளர் வரத் தயாராக இருந்ததாக கூறினார். "எனினும், தொடர் போலீஸ் சோதனை மற்றும் பொது போக்குவரத்து இல்லாததால், மக்கள் மாநில எல்லைகளை கடப்பது மிகவும் கடினம்," என்றார் அவர்.

தானம் வழங்க பொதுமக்கள் வரும்போது கூட, யார் இரத்த தானம் செய்கிறார்கள் என்பதில் மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நன்கொடையாளர்களிடம், அவர்களின் பயண விவரம், சென்ற இடங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் அல்லது வெளிநாடு சென்ற எவருடனும் தொடர்பில் உள்ளனரா என்று கேட்க வேண்டும் என்று பருச்சா கூறினார்.

அடுத்த பிரச்சினை, ஊழியர்களின் பற்றாக்குறை என்று மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையின் சசேன் கூறினார். "ஒரு நன்கொடையாளரை கண்டுபிடித்துவிட்டாலும், மருத்துவ பணியாளரை அழைக்க முடிவதில்லை", பலரும் நாலசோபரா அல்லது விரார் பகுதியில் இருக்கிறார்கள்; இது, மருத்துவமனையில் இருந்து ஒருமணி நேர பயண தூரத்தில் உள்ளதாக, அவர் கூறினார்.

"நோயாளியின் ஆரோக்கியமான உறவினர்களிடம் அந்த நோயாளிக்காக இரத்த தானம் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று சசேன் கூறினார். "ஆனால் ஊரடங்கால் மருத்துவமனைகளை சுற்றியுள்ள கேண்டீன் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன; சாப்பிடாத நிலையில், நோயாளியின் உறவினர்களிடம் இருந்து இரத்தத்தை எடுத்துக்கொள்வது நல்ல நடைமுறை அல்ல" என்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் நிறுத்திவைப்பு

பெரும்பாலான அரசு மருத்துவமனைகள், குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை நிறுத்தி வைத்திருந்தாலும், இரத்த பற்றாக்குறை உள்ளது. "தலசீமியா, அப்லாஸ்டிக் அனீமியா மற்றும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எங்களிடம் உள்ளனர். அத்தியாவசியமற்ற அனைத்து அறுவை சிகிச்சைகளையும் குறைத்தாலும், தினமும் இரத்தம் தேவைப்படுகிறது," என்று சசேன் கூறினார்.

ஒவ்வொரு நாளும் 150-170 கொடையாளர்கள் தேவைப்படும் நிலையில், 10-15 நன்கொடையாளர்கள் மட்டுமே வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

இதேபோன்ற நிலை மற்ற மருத்துவமனைகளிலும் உள்ளது. உதாரணமாக, புதுடில்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை. அங்கு, அவரது மகன் வழக்கமாக இரத்த மாற்றம் செய்யச் செல்வார். அங்கு ஊரடங்குக்கு முன்பு 200-250 வரை வந்த நிலையில் தற்போது தினமும் 10 நன்கொடையாளர்களே வருகிறார்கள் என்றார். "மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் (நோயாளிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்) குறைந்தது ஐந்து - ஆறு நன்கொடையாளர்களை பெற வேண்டுமென்று கோரியுள்ளது," என்று அவர் கூறினார்.

வழக்கமாக, மும்பையின் ஜாம்ஷெட்ஜி ஜீஜாபாய் மருத்துவமனையில் ஒரு மாத காலத்திற்கு தேவையான இரத்தம் இருக்கும். அங்கு தற்போது 12 நாட்களுக்கு மட்டுமே என்றளவில் குறைந்துவிட்டதாக, மருத்துவமனையின் சுகாதார சேவைகள் இயக்குநர் சாதனா தயாடே, மார்ச் 26 அன்று தெரிவித்தார்.

தற்போது நிலைமை மோசமாக உள்ளது. ஏனெனில் மகாராஷ்டிராவில் 2020 ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட இரத்த தான முகாம்கள் எதுவும் நடக்கவில்லை. இதற்கு, கோவிட்-19 பரவும் என்ற அச்சமே காரணம் என்று தயாடே கூறினார். சிறப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தற்போது அவசரகால நன்கொடை முகாம்கள் நடைபெறுவதாக, அவர் கூறினார்.

சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக எந்த நேரத்திலும் ஐந்து பேர் மட்டுமே பங்கேற்கும் இரத்ததான முகாம்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக மும்பை இரத்த வங்கிகளின் கூட்டமைப்பின் பருச்சா தெரிவித்தார். இந்த முகாம், சானிடிசர்களை வழங்கும்; கழிவுகளை கவனமாக அப்புறப்படுத்துகிறது; இங்கு, அனைத்து தொற்று பரவல் கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கப்படுகிறது.

நீண்ட கால தீர்வுகள்

இந்தியாவில் இரத்ததானம் என்பது, ஒரு சீசனை போன்றது. விடுமுறை காலங்களில் குறைவான இரத்ததானங்களே நடைபெறுவதாக, டெல்லியை சேர்ந்த பொது கொள்கை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான சேஸ் இந்தியாவில் சுகாதாரப் பயிற்சிக்கான முன்னணி சூர்யபிரப சதாசிவன் தெரிவித்தார். இந்தியாவில் இரத்த தானம் செய்வதில் பெரும்பாலானவை "மாற்று" இரத்த தானம் ஆகும். அதாவது ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரத்த வங்கியில் இருந்து இரத்த மாற்றத்தை செய்து கொண்டால், அவர்கள் அதே அளவில் வேறு ஒருவரிடம் தானம் செய்யுமாறு கேட்டு பெற்றுத்தர வேண்டும் என்று அவர் கூறினார். "இந்தியாவில், நன்கொடைக்கு நன்கொடை கலாச்சாரம் இல்லை," என்ற அவர், "இரத்த தானம் கேட்கப்படும் போது மட்டுமே இது நடக்கும்" என்றார்.

இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்துவதற்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்,இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சதாசிவன் கூறினார். இது ஒரு கலாச்சார மாற்றத்தை உருவாக்குகிறது மற்றும் ஆரம்பத்தில் நன்கொடை அளிக்க மக்களை நம்ப வைக்கிறது, ஊழியர்களுக்கு இரத்த தானம் செய்ய நிறுவனங்கள் பணமற்ற சலுகைகளை வழங்க முடியும் என்று அவர் விளக்கினார்.

மையப்படுத்தப்பட்ட திட்டமிடல், கழிவுகளை குறைத்தல்

டிசம்பர் 2019 நிலவரப்படி, இந்தியாவில் 3,321 இரத்த வங்கிகள் (ஒரு மில்லியன் மக்களுக்கு 2.45 இரத்த வங்கிகள்) இருந்தன; அத்துடன், 2018-19ம் ஆண்டில் இவை, 12.5 மில்லியன் யூனிட் ரத்தத்தை சேகரித்ததாக, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

இரத்தம் பொதுவாக ஒரு மாதத்தில் காலாவதியாகிறது; சில சந்தர்ப்பங்களில் 45 நாட்களில் என்று பருச்சா கூறினார். பிளாஸ்மாவை ஒரு வருடம் வரையும், இரத்த சிவப்பணுக்களை வெறும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே சேமிக்க முடியும். உதாரணமாக, 2014-15 முதல் 2016-17 வரை, ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான யூனிட் ரத்தம் வீணடிக்கப்பட்டதாக, ஆகஸ்ட் 2017ல் மாநிலங்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்த வங்கிகள் இரத்தத்தை வீணடிப்பதை குறைப்பதற்கான வழிகாட்டுதல்களை தேசிய இரத்தம் மாற்று கவுன்சில் வகுத்துள்ளது. இது உரிமம் பெற்ற இரத்த வங்கிகளுக்கு இடையில் இரத்தத்தை மாற்றுவதற்கான விதிகளை வகுக்கிறது. ஆனால் மையப்படுத்தப்பட்ட வழிமுறை இல்லாததால், ஒவ்வொரு இரத்த வங்கியும் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை என்று சதாசிவன் கூறினார்.

பல்வேறு இரத்த வங்கிகள் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இது இரத்த வங்கிகளில் எந்தவகையான ஒருங்கிணைப்பையும் கடினமாக்குகிறது. எனவே, ஒரு இரத்த வங்கியில் அவர்களுக்கு தேவையானதை விட அதிகமான அலகுகள் இரத்தம் இருந்தாலும், அவை பிற இரத்த வங்கியுடன் அதிகமாக பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாம் என்றார் அவர்.

இரத்தத்தை மாற்றுவதற்கான செயல்முறைக்கு உதவுவதற்காக, இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு கழகம், 2016 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, இரத்த வங்கிகள் இரத்தத்தை பயன்படுத்தாத சூழலில், மற்ற இரத்த வங்கிகளுக்கு மொத்தமாக இரத்தத்தை அனுப்ப அனுமதிக்கிறது என்று பருச்சா கூறினார். ஒரு மையப்படுத்தப்பட்ட இரத்தமாற்ற சேவை, அனைத்து இரத்த சேகரிப்பு மையங்களையும் இணைக்கும்; அத்துடன், இரத்தம் வினியோகம் மற்றும் தேவைக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்புவதற்காக, மையப்படுத்தப்பட்ட ஒரு பேசும் மாதிரியை அவர் பரிந்துரைக்கிறார். இந்த மையம், டிஜிட்டல் கண்காணிப்பு உதவியுடன் இரத்தத்தை வெவ்வேறு சேமிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லும்.

இந்தியாவில் ஏற்கனவே ஒரு ஆன்லைன் தரவுத்தளம், E-RAKTKOSH உள்ளது, இது டிஜிட்டல், மையப்படுத்தப்பட்ட இரத்த இருப்பு மேலாண்மை அமைப்பு மூலம் இரத்த பற்றாக்குறையை குறைக்க முயற்சிக்கிறது; ஆனால் இந்த முறையானது தற்போது விரிவானதாக இல்லை என்று சதாசிவன் கூறினார்.

மீண்டும் மித்ராவின் கதைக்கு திரும்புவோம். கொல்கத்தாவில் உள்ள மித்ரா, ஒருவழியாக 2020 ஏப்ரல் 1ம் தேதி, நன்கொடையாளர் ஒருவரை கண்டறிந்தார். ஆனால், இன்னொரு ஒரு நன்கொடையாளரை தேடுவதற்கான முழு செயல்முறையும் தொடங்கி, ஏப்ரல் 16ம் தேதி தனது அடுத்த இரத்த மாற்றத்திற்கு அவர் தயாராக வேண்டும். அதற்கு ஒருநாள் முன்பாக ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படலாம்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story