துர்கா பூஜையின் போது மேற்கு வங்கத்தால் கோவிட்-19 எழுச்சியை தவிர்க்க முடியுமா?

துர்கா பூஜையின் போது மேற்கு வங்கத்தால் கோவிட்-19 எழுச்சியை தவிர்க்க முடியுமா?
X

கொல்கத்தா: நவராத்திரி துர்கா பூஜை விழாக்கள் தொடங்கிய நிலையில் மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவின் போது கோவிட் -19 பரவுவதை கட்டுப்படுத்த, மாநில அரசின் வழிகாட்டுதல்கள், குறைந்தளவு கூட்டம் இருந்தால் மட்டுமே செயல்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோவிட்-19 சூப்பர்ஸ்ப்ரெடர் நிகழ்வுகள் மற்றும் தற்போது குறைந்த தொற்று பாதிப்பு உள்ள மாவட்டங்களில் வேகமாக பரவுவது குறித்து பலரும் கவலை கொள்கின்றனர்.

ஐந்தாவது கட்டஊரடங்கு’ தளர்வு நடைமுறையில் உள்ள சூழலில், கொல்கத்தாவில் மட்டும் 2,509 உட்பட, இந்த ஆண்டு மேற்கு வங்கம் முழுவதும் 37,000 பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பூஜை காலத்தில் கொல்கத்தா முழுவதும் மட்டும் 2,500 துர்கா பூஜை பந்தல்கள் இருந்தன; அங்கு 60 லட்சம் பார்வையாளர்களை வந்து சென்றதாக, கொல்கத்தா போக்குவரத்து காவல்துறை அதிகாரி பார்த்தா தத்தா கூறினார்.

புதிய தளர்வு வழிகாட்டுதல்கள், அக்டோபர் 9ல் வெளியான அதேநேரம், கோவிட் எழுச்சி கண்டு ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கையாக அக்டோபர் 11 அன்று -- அதாவது திருவிழா தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும், பூஜைக்கு முந்தைய ஷாப்பிங் தீவிரமடைந்த நிலையில் -- 3,612 வழக்குகளை மாநிலம் பதிவு செய்தது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் அக்டோபர் 19 ம் தேதி பிறப்பித்த உத்தரவில், அமைப்பாளர்களைத் தவிர வேறு யாரையும் பந்தல்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றது. "இந்த உத்தரவை கொண்டு, கூட்டத்தை ஓரளவிற்கு குறைக்க வேண்டும்" என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் தொற்று நோயியல் பேராசிரியர் பாலி ராய் கூறினார். "பெரிய கூட்டங்களை ஈர்க்கும் பெரிய விழாக்கால பந்தல்களில் பூஜை கொண்டாட்டங்கள் நடப்பது உண்மையில் நல்லதல்ல. கூட்டங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்பது பொது அறிவு, இல்லையெனில் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள், அத்துடன் வைரஸ் பரவலை தடுக்க முடியாது, ”என்று அவர் கூறினார்.

இருப்பினும், இது நிலைமையை மிகவும் மாற்றிவிடும் என்று சிலர் சந்தேகிக்கின்றனர். "தெருக்களில் கூட்டம் இருந்தால், உடல் ரீதியாக அதிக நெருக்கமும், பந்தல்களின் நுழைவாயில்களுக்கு அருகே நெரிசலும் இருக்கலாம்," என்று கொல்கத்தாவின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER -ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இணை பேராசிரியரான பார்த்தோ சாரதி ரே கூறினார். "எனவே, பந்தல்களுக்குள் நுழைவதை நிறுத்துவது பெரிதும் உதவாது" என்றார்.

தற்போது தொற்றுநோய் ஆபத்து இருப்பதால், இம்முறை குறைந்தளவு மக்களின் வருகையையே காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் எதிர்பார்ப்பதாக, கொல்கத்தா காவல்துறை இணை ஆணையர் சுபங்கர் சின்ஹா சர்க்கார் தெரிவித்தார். "இதுபோல் கணிப்பது கடினம், ஆனால் பூஜைகளின் போது வழக்கத்தைவிட கூட்டம் 30-40% குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரி தத்தா கூறினார். “குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வீட்டிலேயே இருக்கும் வாய்ப்பை தேர்வு செய்யாமல், தங்கள் உடல்நலத்தை பணயம் வைப்பார்கள். துர்கா பூஜை என்பது வங்காளிகளுக்கு ஒரு பெரிய விஷயம், எனவே இது மற்ற ஆண்டுகளை போலவே வழக்கம் போல் நடந்தால், நான் ஆச்சரியப்பட மாட்டேன், இருப்பினும் அதற்கு எதிராக நடக்கும் என்று உண்மையிலேயே நம்புகிறேன்” என்றார்.

மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான நவராத்திரி துர்கா பூஜைக்கு முன்பாக, கொல்கத்தாவின் கரியாஹாட் சந்தையில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள். கோவிட் பாதிப்பில் ஒரே நாளில் அதிகபட்ச தொற்றை அக்டோபர் 11ல் இந்த மாநிலம் பதிவு செய்துள்ளது.

தளர்விற்கு பிறகு அதிகரிப்பு

அரசின் தொடர்ச்சியான ஒவ்வொரு கட்ட ஊரடங்கு தளர்விற்கு பிறகும் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்துள்ளதை தரவு காட்டுகிறது. நாடு தழுவிய ஊரடங்கின் கடைசி நாளான மே 31 வரை, மேற்கு வங்கத்தில் மொத்தம் 5,501 வழக்குகள் பதிவாகி இருந்தன. அதில் 3,027 வழக்குகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. தளர்வு 1.0-க்கு பிறகு ஒரு மாதத்தில், மொத்த கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 237% உயர்ந்து 18,559 ஆக அதிகரித்துள்ளது. அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி மொத்த வழக்குகள் மாநிலத்தில் 321,036 ஆக உள்ளன.

பொதுப்போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது மற்றும் அலுவலகங்கள், வணிகங்கள், சந்தைகள், உணவகங்கள், பார்கள் மற்றும் மால்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவது இந்த நிலையான உயர்வுக்கு பங்களித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது, கடந்த மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து அதிகரித்துள்ளதாக தத்தா கூறினார். "இன்னும், பயணிகள் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து அளவுகள் கோவிட்டுக்கு முந்தைய நிலையைவிட குறைவாக உள்ளன, ஏனெனில் சில துறைகள் இன்னும் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவில்லை. வாகன அடர்த்தி விகிதம் கோவிட்டுக்கு முந்தைய அளவை விட குறைவாக உள்ளது,” என்றார் அவர்.

பயணிகள் பரவல் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்தின் அதிகரிப்பு, கடைக்காரர்கள், மால்கள் மற்றும் புதிய சந்தை மற்றும் கரியாஹாட் போன்ற சந்தைப்பகுதிகளுடன் ஒத்துப்போகிறது. புதிய சந்தை அல்லது கரியாஹாட்டில் உள்ள சந்தைகளுக்கு வருவோர் எண்ணிக்கைகளை மதிப்பிடுவதற்கு எந்த முறையும் இல்லை என்றாலும், கொல்கத்தாவின் மால்கள், கோவிட்டுக்கு முந்தைய வருகையுடன் ஒப்பிட்டால், அக்டோபர் 5 மற்றும் 11 க்கு இடையில் 12 லட்சத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தன. அவற்றின் விற்பனை முந்தைய ஆண்டைவிட 70% குறைவாக இருந்தது. கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன், சந்தைகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அக்டோபர் 18 முதல் கரியாஹாட் சந்தைகளில் உள்ள வணிகர்கள் மதியம் 2 மணிக்குள்ளாகவும், நடைபாதை கடைகளை மாலை 3 மணிக்குள் மூடவும் உத்தரவிட்டது.

இதற்கிடையில், ஊக்கமளிக்கும் ஒரு முன்னேற்றம் என்னவென்றால், மார்ச் 17 அன்று முதல் உறுதிப்படுத்தப்பட்ட வழக்கில் இருந்து சோதனையின் வேகம் அதிகரித்துள்ளது என்று, ஐ.ஐ.எஸ்.இ.ஆரின் ரே கூறினார். மார்ச் மாதத்தில் 539 சோதனைகள் முடிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் இறுதிக்குள் வங்கத்தில் 32 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதான, செப்டம்பர் மாதத்தில் சராசரியாக 44,660 சோதனைகள் நடைபெற்றன.

நகர்ப்புறங்களே ஹாட்ஸ்பாட்கள்

வைரஸ் மேலும் பரவுவதற்க எடுக்கும் அனைத்தும் “பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகை மற்றும் தொற்றுநோயை அறிமுகப்படுத்துதல்”, என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் லைஃப் கோர்ஸ் தொற்றுநோயியல் தலைவர் கிரிதர் பாபு செப்டம்பர் 24 அன்று இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

கேரளத்தின் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களும், அதைத் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரிப்பும் பார்க்கும் போது, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழாக்கள் முடிந்ததும் அங்கும் கோவிட்-19 எழுச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. பண்டிகை காலங்களில், பெரிய கூட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு வெளியேயும் மக்களின் நடமாட்டத்தை அரசு காணலாம் - இது, வைரஸ் பரவுவதற்கான சரியான சூழல் ஆகும். எந்தவொரு அறிகுறிகளும் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு பாதிக்கப்பட்ட நபர்கள் கூட சமூகத்தில் வைரஸை மிக வேகமாக பரப்ப முடியும். இது இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளிலும் நடக்கிறது,” என்று வைராலஜி பேராசிரியர் ராய் கூறினார்.

மேற்கு வங்கத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்லி - அனைத்து நகர்ப்புறங்களும் என்று, தன்னார்வலால் இயக்கப்படும் கோவிட்19 கண்காணிப்பு அமைப்பான, Covid19India.org தெரிவிக்கிறது. அக்டோபர் 18ம் தேதி வரை பதிவான மொத்த 321,036 வழக்குகளில், இப்பகுதிகளில் மட்டும் மொத்தமாக 60% க்கும் அதிகம் உள்ளன. மறுபுறம், கிட்டத்தட்ட அனைத்து வட வங்காள மாவட்டங்களும் -- உத்தர் தினாஜ்பூர், டார்ஜிலிங், கலிம்பொங், ஜல்பைகுரி, அலிபுர்தார் மற்றும் கூச்பிஹார்-- அக்டோபர் 18 நிலவரப்படி மொத்த வழக்குகளில் 10.9%ஐ கொண்டிருந்தன. ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் (சிலிகுரி டவுன்ஷிப்) தவிர, மீதமுள்ளவை பெரும்பாலும் கிராமப்புறங்களாகும்.

பூஜை, பண்டிகை காலங்களில் அதிக கூட்டம் நகர்ப்புறங்களில் தான் நிகழ்கிறது, குறிப்பாக கொல்கத்தாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்று ஐ.ஐ.எஸ்.இ.அரின் ரே கூறினார். அக்டோபர் 18ம் தேதிவரை மொத்த வழக்குகளில் 22% மட்டுமே நகரத்தில் இருந்தது. மால்டா, கிழக்கு பர்தாமன், மேற்கு பர்தாமன் (துர்காபூர் மற்றும் அசன்சோல் நகரங்கள்), முர்ஷிதாபாத் (பஹாரம்பூர் டவுன்ஷிப்), நாடியா (சாந்திபூர்) மற்றும் பாசிம் மெடினிபூர் (காரக்பூர்) போன்ற மாவட்டங்களிலும் துர்கா பூஜை பந்தல்கள் பிரபலமாக உள்ளன. அவற்றில் பாசிம் மெடினிபூர் மற்றும் நதியா ஆகியன, அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி முறையே 3.8% மற்றும் 3.1% ஆக உள்ளன.

இந்த தொற்றுநோய் கிராமப்புற மாவட்டங்களை விட நகரங்களில் வேகமாக பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய செரோ-கண்காணிப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பரிசோதிக்கப்பட்ட மக்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் நோயெதிர்ப்புகளை உருவாக்கி கொண்டுள்ளனர் என்று, இந்தியா ஸ்பெண்டால் அணுகப்பட்ட தனியார் பரிசோதனை ஆய்வக தைரோகேரின் சமீபத்திய ஆய்வைக் கண்டறிந்தது. கொல்கத்தாவை சேர்ந்த 18,476 பேரும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 46,785 பேரும் தொடர்புடைய கணக்கெடுப்பில் கொல்கத்தாவின் செரோ-நேர்மறை விகிதம் 29% ஆகவும், மாநிலத்தின் விகிதம் 26% ஆகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டம் மற்றும் ஹூக்லி போன்ற இடங்களில் முறையே 31%, 23% மற்றும் 25% ஆன்டிபாடி பாதிப்பு இருந்தது.

இது ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும் என்ற ரே, கூட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான வாய்ப்பைக் குறிப்பிட்டார். "[கூட்ட நோயெதிர்ப்பு சக்தி] பற்றி பேசுவது மிக விரைவாக இருந்தாலும், நகரங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் [30% அல்லது அதற்கு மேற்பட்டவர்களை] செரோபோசிட்டிவ்வை நெருங்குகிறார்கள். எனவே தொற்றுநோயில் இருந்து பாதுகாக்கப்படலாம் என்றால், அது அந்த திசையை நோக்கி நகர்வதைக் குறிக்கிறது," என்றார் ரே. "இது நகரங்களில் பரவுவதற்கு எதிராக சில பாதுகாப்பைக் கொடுக்கக்கூடும்". இருப்பினும் குறைந்த கோவிட்-19 எண்ணிக்கைகளை கொண்ட மாவட்டங்கள் பண்டிகை காலத்திற்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் குறைந்த நிகழ்வால், ஒரு எழுச்சியை காணலாம் என்று ரே எச்சரித்தார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், வங்கத்தில் இருந்து வேறு இடங்களுக்குச் சென்ற ஏராளமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகை நேரத்தில் சொந்த ஊருக்கு திரும்ப முனைவது என்று, உலக சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த மருத்துவ அதிகாரி அனிருத்த சென் குப்தா கூறினார். பிற நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்றாலும், மும்பை, டெல்லி உள்ளிட்ட ஆறு நகரங்களில் இருந்து நேரடி விமானங்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் உள்நாட்டு பயணிகளின் வருகை கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சுற்றுலாவும் படிப்படியாக மீண்டும் தொடங்குவதால், விடுமுறை காலத்தில் மக்கள் வட வங்காளத்தின் மலைகளுக்குச் செல்லக்கூடும் என்று சென்குப்தா மேலும் கூறினார், இதன் மூலம் தொற்று பரவல் வீதம் இன்னும் குறைவாக இருக்கும் இடங்களுக்கு தொற்றுநோயை எடுத்துச் செல்கிறது.

பொருளாதார vs அரசியல் காரணங்கள்

உடல்நல அபாயங்கள் இருந்தபோதிலும் துர்கா பூஜை கொண்டாட்டங்களை முன்னெடுப்பது ஒரு அரசியல் முடிவாக இருக்கலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத மாநில சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு முன்பே மேற்கு வங்கம் நோய் பரவுவதை சரிபார்க்க, ஒவ்வொரு வாரமும் இரண்டு நாள் ஊரடங்கை செயல்படுத்தியது. மாநிலத் தேர்தல்களுக்கு எட்டு மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் உள்ள நிலையில், அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இந்த துர்கா பூஜை மிகவும் முக்கியமானது என்று அந்த அதிகாரி கூறினார். “2019 பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட பாதி இடங்களை வென்றது. 2011ல் இருந்து ஆட்சிக்கு வந்தபின் மாநிலம் வளர்ச்சியை கண்டிருக்கிறது என்பதே, திரிணாமுல் காங்கிரஸ் எவ்வாறு மீண்டும் மீண்டும் ஆட்சியை அனுபவித்து வருகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இந்த ஆண்டு துர்கா பூஜை விழா முன்னேற்பாடுகளுக்கான அரசியல் காரணங்கள் குறித்து கேள்வியெழுப்பிய இந்தியா ஸ்பெண்ட் மின்னஞ்சலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள், இதுவரை பதிலளிக்கவில்லை, அதேபோல் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் குறித்து அரசுக்கு தனது ஆலோசனை என்ன என்பதை வெளியிட காவல்துறையும் மறுத்துவிட்டது: “நாங்கள் அதை உங்களுக்கு சொல்ல இயலாது,” என்று, கொல்கத்தா காவல்துறை இணை ஆணையர் சர்க்கார் கூறினார்.

பல துறைகளும், திருவிழாவில் ஈடுபட்டுள்ளன என்று, ஹூக்லி மாவட்டத்தின் சின்சுராவில் உள்ள துர்கா பூஜைக்குழுவான பஞ்சநந்தலா சர்போஜனின் துர்கோட்சாப் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் சமூக ஊடக மேலாளர் அசமஞ்சா சட்டோபாத்யாய் கூறினார். "மாநிலத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும் இத்தகைய கொண்டாட்டங்களுடன் முன்னேற வேண்டியது அவசியம். இதில் குமோர்துலியின் கைவினைஞர்களும் கிராமப்புற நாட்டுப்புற கலைஞர்களும் அடங்குவர், அவர்களின் முழு வாழ்வாதாரமும் பூஜைக்கு கமிஷன்களைப் பெறுவதைப் பொறுத்தது” என்று சட்டோபாத்யாய் மேலும் கூறினார். பந்தல்கள், அலங்காரம், விளக்குகள், உணவு, உபகரணங்கள் வாடகை மற்றும் கலைஞர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வேலைகள், இந்த துர்கா பூஜை காலத்தில் கிடைக்கிறது.

சமூக இடைவெளி நனவாகுமா

சமூக இடைவெளி, முகக்கவசம் பயன்பாடு, கைகளை சுத்தம் செய்தல் மற்றும் ஆன்லைன் வாயிலாக மாற்றத்தை வலியுறுத்தும் வழிகாட்டுதல்களை செயல்படுத்த போதுமான நிதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு பூஜை கமிட்டிக்கும் ரூ.50,000 நிதி உதவியை மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நேரத்தில் முகக்கவசங்கள், கைகளை சுத்தம் செய்தல் மற்றும் சமூக இடைவெளி அவசியம் என்பதை வல்லுநர்கள் ஒப்புக் கொண்டனர், ஆனால் திருவிழாவின் போது அவற்றின் நடைமுறைத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தது. "வட்டங்களை வரையவும், சமூக இடைவெளிக்கான இடங்களைக் குறிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தாலும், காவல்துறை மற்றும் அமைப்புக்குழுக்களால் குறைகூற முடியாதபடி ஒருங்கிணைப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு இல்லாவிட்டால் மக்கள் உண்மையில் எவ்வளவு தூரம் அதை பின்பற்றிச் செல்வார்கள் என்பது விவாதத்திற்குரியது,” என்று தொற்றுநோயியல் பேராசிரியர் ராய் கூறினார்.

பல்வேறு துர்கா பூஜை குழு அமைப்பாளர்கள், இதை ஏற்றுக் கொள்ள முயல்கின்றனர். சிலர் டிரைவ்-இன் தரிசனத்திற்கு அதாவது மக்கள் தங்கள் வாகனங்களில் இருந்து வெளியே வராமல் உள்ளிருந்தபடி சிலைகளை வணங்கத் திட்டமிட்டுள்ளனர்.பெரிய பெயர்களில் ஒன்றான வடக்கு கொல்கத்தாவின் ஷோபா பஜார் ராஜ்பரி போன்றவை, எந்த பார்வையாளர்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்று அறிவித்துள்ளனர்.

பூஜையின் போது போக்குவரத்துக் கட்டுப்பாடு என்பது நெரிசலான சாலைகள் மற்றும் மாற்றப்பட்ட போக்குவரத்து வழித்தடங்களை (பந்தல்கள் மற்றும் அலங்காரங்கள் குரித்த விரிவான அட்டவணை) நிர்வகிப்பதை உட்படுத்துகிறது. சமூக இடைவெளியை உறுதி செய்யும்போது, களத்தில் பெரிய பணிக்குழு தேவைப்படும் என்று கொல்கத்தா போக்குவரத்து காவல்துறையின் மோட்டார் போக்குவரத்து அதிகாரி கவுதம் சென்குப்தா கூறினார். "நகரங்களில் இது மிகவும் கடினமாக இருக்கும், ஏனெனில் அவை அதிக வாகன அடர்த்தி விகிதத்துடன் மிகக்குறுகலான தெருகளை கொண்டுள்ளன, இது திருவிழாவின்போது மேலும் மோசமடைகிறது," என்று அவர் கூறினார்.

மக்கள் சமூக இடைவெளி விதிகளை மீறி, வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காவிட்டால், எல்லா இடங்களிலும் முற்றிலும் தவறான நிர்வாகம் இருக்கக்கூடும் என்று மேற்கு வங்க சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையை சேர்ந்த செரீன் அடக் கூறினார். "மருத்துவ ஊழியர்கள், ஏற்பாட்டுக் குழுக்கள் அல்லது காவல்துறை மட்டுமல்ல - பொதுமக்களும் சமமான பொறுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

அரசு என்ன செய்ய வேண்டும்

துர்கா பூஜையின் போது கூட்டம் அதிகமாக சேருவது குறைக்கப்பட வேண்டும் என்று ஐ.ஐ.எஸ்.இ.ஆரின் ரே கூறினார்.

அக்டோபர் 18 அன்று 3,983 புதிய வழக்குகளுடன் புதிய ஒருநாள் அதிபட்ச தொற்று பரவல் என்ற உச்சபட்சத்திற்கு சென்ற பிறகு, கொல்கத்தா மாநகராட்சி நிர்வாகம் அதை தடுப்பதற்கான திசையில் முதல் படியை எடுத்தது; அதன்படி, சந்தைகளில் மக்கள் கூட்டத்தை குறைக்க, தெற்கு கொல்கத்தாவின் கரியாஹாட் மற்றும் ஹதிபகன் சந்தைகளில் கடைகள், ஸ்டால்கள் மதியம் 2 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

வைரஸ் பரவுவதை முன்கூட்டியே முயற்சித்து கட்டுப்படுத்த, தனிநபர்களின் பொறுப்பு என்று ராய் கூறினார், முகக்கவசம் அணிவது, எல்லா நேரங்களிலும் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை பராமரித்தல், பூஜை சடங்குகளுக்கு வீட்டில் இருந்தே சொந்த பூக்களை எடுத்துச் செல்வது போன்ற சுய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுக்க வேண்டும். "அவர்கள் பூஜாரிகள் அல்லது வேறு யாரிடம் இருந்தோ பிரசாதம் அல்லது தீர்த்தத்தை பெறக்கூடாது," என்று அவர் மேலும் கூறினார்.

ஓணத்திற்கு பிறகு கேரளாவை போலவே மேற்கு வங்கத்திலும் தொற்றின் எழுச்சி ஏற்பட்டால், நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த வழி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரிடமும் வைரஸ் இருக்கிறதா என கண்காணித்து, தனிமைப்படுத்தி கண்காணிப்பதாகும் என்று ராய் கூறினார். இருப்பினும், மாநிலத்தில் தொடர்பு கண்டுபிடிக்கும் முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் ரே. இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஜனவரி 22 முதல் ஏப்ரல் 30 வரை கோவிட்-19 க்கான ஆய்வக கண்காணிப்பு குறித்த ஆய்வின்படி, நாட்டில் ஒரு மில்லியனுக்கு சோதனை செய்யப்பட்ட நபர்களின் அடிப்படையில் மேற்கு வங்கம் 50வது சதவீதத்திற்கு கீழே உள்ளது. அறிகுறி தொடர்புகள் அல்லது அறிகுறியற்ற குடும்ப உறுப்பினர்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வழக்கிற்கு சராசரியாக 3.4 தொடர்புகள் மட்டுமே தொடர்பு தடமறிதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் நிச்சயமற்ற தொடர்புகள் உள்ளிட்டவை 7.6 என்று ஆய்வு தெரிவித்தது.

அறிகுறிகளை பொருட்படுத்தாமல் கடுமையான மற்றும் விரைவான சோதனை முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு பணிக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும், மருத்துவ வல்லுநர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் அல்லது வட்டாரத்திற்கும் வழக்கமான வெப்பநிலை சோதனைகள், அறிகுறிகளை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் பொது தளங்களில் பகிர்வது போன்றவற்றுக்கு நியமிக்கப்படுவார்கள். மேலும் செரோ-கண்காணிப்பு ஆய்வுகள் அவசியம் என்ற வல்லுநர்கள், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றனர்.

இருப்பினும், மிக முக்கியமானது எல்லா நேரங்களிலும் தகவல்களை சுதந்திரமாகவும் விரிவாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று, வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலங்களில் தரவுகளை முடக்கியதாக மாநில அரசு எவ்வாறு குற்றம் சாட்டப்பட்டது என்பதை மனதில் வைத்து, வழக்குகளில் அதிகரிப்பு ஏற்படும்போது, தரவுகள மூடி மறைப்பது மிகவும் ஆபத்தானது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(தத்தா, சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் புகைப்படக் கலைஞர். ஷ்ரெனிக் அவ்லானி, இக்கட்டுரையை திருத்திய, செய்திக்கு பங்களிப்புசெய்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story