இந்தியாவின் 90% ஏழைகளுக்கு சுகாதார காப்பீடு இல்லை

இந்தியாவின் 90% ஏழைகளுக்கு சுகாதார காப்பீடு இல்லை
X

புதுடில்லி: இந்தியாவில் கிராமப்புற (10.2%) மற்றும் நகர்ப்புற (9.8%) இந்தியர்களில் ஐந்தில் ஒரு பங்கு ஏழைகளுக்கு எந்தவொரு தனியார் அல்லது அரசு சுகாதார காப்பீடும் இல்லை என, ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை நடந்த சமூக நுகர்வு குறித்த மிகப்பெரிய தேசிய கணக்கெடுப்பின் தரவுகள் காட்டுகின்றன.

ஏழைகள் வழக்கம் போல் தங்கள் சேமிப்பை கரைத்து, கடனில் சிக்குவதால் தாமதமான அல்லது தரமற்ற சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக சில இந்தியர்கள் (கிராமப்புறங்களில் 14.1% மற்றும் நகர்ப்புறங்களில் 19.1%) எந்தவொரு வகையான சுகாதார பாதுகாப்பையும் கொண்டிருக்கவில்லை என்று மத்திய புள்ளி விவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய கணக்கெடுப்பு அலுவலகம் (என்எஸ்ஓ) அறிக்கை கண்டறிந்துள்ளது. இது பெரும்பாலான இந்தியர்களை உடல்நலம் தொடர்பான நிதி அதிர்ச்சிகளுக்கு ஆளாக்குகிறது.

இந்த ஆய்வில் பிரதமரின் சுகாதார பாதுகாப்பு (பி.எம்.ஜே.ஏ.ஒய்.) திட்ட முன்னோடியான ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (ஆர்.எஸ்.பி.ஒய், தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம்), அரசு ஊழியர்களுக்கான மத்திய அரசின் சுகாதார திட்டம், அமைப்புசார்ந்த துறை ஊழியர்களுக்கான மாநில காப்பீட்டு திட்டம் மற்றும் மாநில அரசுகளின் சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் ஆகியன எடுத்துக் கொள்ளப்பட்டன.

சுகாதாரச்செலவுகள் மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கின்றன; வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களை மீண்டும் வறுமைக்குத் தள்ளுகின்றன. 2011-12 ஆம் ஆண்டில், சொந்த பணம் மூலம் சுகாதார செலவுகள், 5.5 கோடி (இது தென் கொரிய மக்கள்தொகையான 5.11 கோடியை விட அதிகம்) இந்தியர்களை வறுமையில் தள்ளியது என்று இந்தியா ஸ்பெண்ட் ஜூலை 2018 கட்டுரை தெரிவித்தது. 3.8 கோடி இந்தியர்கள் மருந்து செலவினங்களால் வறியவர்களாக இருந்தனர்.

இந்தியாவில் சுகாதாரக்கேட்டிற்கான செலவு அதிகமாக உள்ளது. மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு (17.33%) பேர் 10%-க்கும் அதிகமாக செலவழிக்கின்றனர். 3.9% மக்கள் தங்கள் வருமானத்தில் 25%-க்கும் மேல், சுகாதாரத்திற்காக செலவிடுவதாக, 2017 உலக வங்கி அறிக்கை தெரிவித்தது. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தனியார் சுகாதார செலவினங்களில் ஆறாவது இடத்தில் இந்தியர்கள் உள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட் மே 2017 கட்டுரை தெரிவித்துள்ளது.

அதே என்எஸ்ஓ வீட்டு நுகர்வு கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு மதிப்பீட்டின்படி, கிராமப்புற வறுமை 2011-12 மற்றும் 2017-18க்கு இடையில் 4% புள்ளிகள் அதிகரித்துள்ளது (3 கோடி மக்களை வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளியது) என்று, டிசம்பர் 3, 2019 லைவ்மிண்ட் செய்தி தெரிவித்தது.

வறுமை மீதான அதிகரித்து வரும் சுகாதார செலவுகளின் தாக்கத்தை மதிப்பிட இயலாது; ஏனெனில் "தரம் பிரச்சினையால்" நாடு தழுவிய நுகர்வோர் செலவு அறிக்கை மற்றும் மூலத் தரவுகளை அரசு நிறுத்தி வைத்துள்ளது என, நவம்பர் 16, 2019 பிஸினஸ் ஸ்டேண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நுகர்வு கணக்கெடுப்பு இந்தியாவின் 75வது ஆய்வாகும். இது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய 113,823 நகர்ப்புற மற்றும் கிராமப்புற வீடுகளில் நடத்தப்பட்டது.

அரசு சுகாதார காப்பீடு

கடந்த 2017-2018இல் மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (பி.எம்.ஜே.ஏ.ஒய் - பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டம்) தொடங்கப்படுவதற்கு முன்பு, கிராமப்புறங்களில் 12.9% மற்றும் நகர்ப்புறங்களில் 8.9% பேர் மட்டுமே ஏதேனும் ஒரு மத்திய அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருந்ததாக, என்.எஸ்.ஓ. அறிக்கை கூறியது. கிராமப்புற ஏழைகளில் 9.9% (1வது குவிண்டில் சேர்ந்தவர்கள்) மற்றும் நகர்ப்புறங்களில் 7.5% பேர் மட்டுமே அரசின் சுகாதாரப் பாதுகாப்பை கொண்டிருந்ததாக, ஆய்வு கண்டறிந்துள்ளது.

இதில் சுகாதார பாதுகாப்பு குறைவாக உள்ளது; காரணம், இந்த ஆய்வு பி.எம்.ஜே.ஏ.ஒய். தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில் ஆர்.எஸ்.பி.ஒய்.- இன் கீழ் சேவை மற்றும் கவரேஜ் செயல்திறன் மோசமாக இருந்ததாக, புதுடெல்லியை சேர்ந்த இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் சுகாதார பொருளாதாரம், நிதி மற்றும் கொள்கை இயக்குனர் சக்திவேல் செல்வராஜ் கூறினார். "பி.எம்.ஜே.ஏ.ஒய். தொடங்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்" என்றார் அவர்.

கடந்த 2011 செப்டம்பரில் தொடங்கப்பட்ட பி.எம்.ஜே.ஏ.ஒய். திட்டம் - 2011 இன் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பால் (எஸ்.இ.சி.சி) அடையாளம் காணப்பட்ட 10 கோடி ‘ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய’ குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் சுகாதாரக்காப்பீடு வழங்குகிறது.

பி.எம்.ஜே.ஏ.ஒய். திட்டத்தில் டிசம்பர் 1, 2019 வரை, சுமார் 6.7 கோடி பேருக்கு இலவச சிகிச்சைக்கான மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 64 லட்சம் நோயாளிகளின் சிகிச்சைக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று அதன் இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகையில் 40% பேர் இப்போது பி.எம்.ஜே.ஏ.ஒய். சுகாதாரக் காப்பீடு உள்ளது. இது, உலகளாவிய சுகாதாரக் காப்பீடுகளில் இது செய்த மிகப்பெரிய பாய்ச்சல் ”என்று பி.எம்.ஜே.ஏ.ஒய். காப்பீடு தலைமை நிர்வாக அதிகாரி இந்தூ பூஷன் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ஆனால் "2011 [எஸ்.சி.சி] தரவுகள் பழையது. அதில் [வெளியேறிய] நபர்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டு, திட்டத்தின் ஒரு பகுதியாக இணைந்து இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

அடுத்த என்.எஸ்.ஓ., உடல்நலத்திற்கான செலவினங்களை பி.எம்.ஜே.ஏ.ஒய். எந்த அளவிற்கு குறைத்துள்ளது என்பதைக் காண்பிக்கும் என்று செல்வராஜ் கூறினார். காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது போதாது, ஏனெனில் பதிவு செய்த அனைவருக்கும் இத்திட்டம் அல்லது அதன் நன்மைகள் பற்றி தெரியாது; ஏழைகள் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்போ, சுகாதார வசதியோ இல்லை என்றார்.

தொடர்ந்து குறையும் சுகாதார காப்பீடு

முந்தைய சுகாதார நுகர்வு கணக்கெடுப்பு நடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கிராமப்புற ஏழை இந்தியர்களுக்கு சுகாதார பாதுகாப்பு 0.7% புள்ளிகள் குறைந்தும், நகர்ப்புற ஏழைகளுக்கு 1.2% புள்ளிகள் அதிகரித்தும் உள்ளது.

பணக்கார கிராமப்புற இந்தியர்களில் கால் பங்கிற்கும் குறைவானவர்கள் (21.9%) மற்றும் பணக்கார நகர்ப்புற இந்தியர்களில் 33% பேர் 2017-18 ஆம் ஆண்டில் (எந்தவொரு செல்வந்த குழுவின் மிக உயர்ந்த விகிதம்) சுகாதார செலவுகளை கொண்டிருந்ததாக அறிக்கை கூறியுள்ளது. இது 2014 முதல் 2017 வரை கிராமப்புறங்களில் 3% புள்ளிகளும், நகர்ப்புறங்களில் 0.4% புள்ளிகளும் அதிகரித்துள்ளன.

இந்தியாவில் சுகாதார காப்பீட்டுத்தொகை மோசமாக உள்ளது. ஏனெனில் தனியார் சுகாதார காப்பீட்டுத்தொழில் இந்தியாவில் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. காப்பீட்டிற்கு பணம் செலுத்தத் தயாராக உள்ளவர்கள் குறைவாக உள்ளனர். மேலும், காப்பீட்டு பிரீமியங்களும் அதிகமென, அமீர் உல்லா கான் கூறினார். இவர், சுகாதார பொருளாதார நிபுணர் மற்றும் தெலுங்கானா அரசின் மனித வள மேம்பாட்டுக்கான மர்ரி சன்னா ரெட்டி நிறுவனத்தின் பேராசிரியர் ஆவார்.

மேலும், இந்தியர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள், மருத்துவமனை போன்ற சுகாதார சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலே இருப்பதால், அவர்கள் சுகாதார காப்பீடு வாங்கும் வாய்ப்புகள் குறைவு என்று அவர் கூறினார்.

ஆரோக்கியத்தை பாதிக்கும் பணப் பற்றாக்குறை

குறைந்த தொகை காப்பீட்டுத் திட்டத்தின் விளைவாக, 2016-17 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் சுமார் 79.5% பேர், நகர்ப்புறங்களில் 83.7% பேர், தங்கள் சேமிப்பில் இருந்து மருத்துவ செலவினங்களுக்கு பணம் செலவிட்டதாக, என்எஸ்ஓ அறிக்கை தெரிவித்துள்ளது. இது 2014இல், கிராமப்புறங்களில் 67.8% மற்றும் நகர்ப்புறங்களில் 74.9% ஆக இருந்தது.

அதிகமான மக்கள் தங்கள் சேமிப்பைப் பயன்படுத்துவதால், மருத்துவ செலவினங்களுக்கு கடன் வாங்குவது கிராமப்புறங்களில் 2014 இல் 24.9% ஆக இருந்தது 2017 இல் 13.4% குறைந்தது; இது நகர்ப்புறங்களில் 18.2%இல் இருந்து 8.5% ஆக குறைந்ததாக தரவு காட்டுகிறது.

இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் (கிராமப்புறங்களில் 51.9% மற்றும் நகர்ப்புறத்தில் 61.4%) தனியாருக்கு சொந்தமானவை. ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ஏற்படும் சராசரி மருத்துவச் செலவு (ரூ. 31,845), அரசு மருத்துவமனையின் (ரூ. 4,452) தொகையை விட ஏழு மடங்கு அதிகம் என்று என்எஸ்ஓ அறிக்கை தெரிவித்துள்ளது.

இதை பார்க்கும்போது, ஏழைகள் மருத்துவமனையில் சேருவது மிகவும் குறைவு.பணக்கார 20% குடும்பத்தினர் மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் - இது, கிராமப்புறங்களில் 31.9% மற்றும் நகர்ப்புறங்களில் 22.4% என, தரவு காட்டுகிறது. மக்கள்தொகையில் 20% ஏழ்மை குடும்பங்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கை (கிராமப்புறங்களில் 12.9%, நகர்ப்புறத்தில் 16.2%) பதிவாகி உள்ளது. இது வீட்டு சேமிப்பு குறைவாக இருந்து, மருத்துவச்செலவினங்கள் மேற்கொள்ள இயலாதது காரணமாக இருக்கலாம்.

தங்களின் சொந்த சேமிப்பில் இருந்து சுகாதாரத்துக்காக பணம் செலுத்துவதன் மிகப்பெரிய விளைவு, வறுமை என்கிறார் கான். "சுகாதாரத்துக்காக பணம் செலுத்த முடியாது என்பதால், காசநோய், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்பட்டால், சிகிச்சைக்கு செல்வதை ஏழைகள் தள்ளி வைக்கின்றனர்," என்று அவர் கூறினார்.

பணக்காரர்களுக்கு சுகாதார காப்பீடு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தரவு காட்டுகிறது. பணக்காரர்களுக்கு நிதி மற்றும் மருத்துவமனைகளுக்கு அதிக அணுகல் உள்ளது. நகர்ப்புற செல்வந்த குழுவால் (21.8%) அனைத்து மருத்துவமனைகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் மேலான செலவு திருப்பிச் செலுத்தப்படுகிறது என்று செல்வராஜ் கூறினார்.

கிராமப்புறங்களிலும் கூட, ஏழைகள் அரசின் சுகாதார உதவிக்கான அணுகலில் பின்தங்கியே இருக்கின்றனர்: மக்கள்தொகையில், 40% ஏழைகளை விடவும், பணக்காரர்களில் 40% பேர் அரசின் சுகாதார திட்டங்களை பயன்படுத்துவதாக, என்.எஸ்.ஓ. தரவுகள் காட்டுகின்றன.

Government And Private Health Insurance By Wealth Group
Sector Wealth Group Percentage of persons
Not Covered Covered by
Govt- Sponsored Insurance Scheme Insurance If Employed By Govt./ PSU Employer Supported Health Protection (Excluding Govt./PSU) Households’ Private Health Insurance Other
Rural 1st quintile 89.8 9.9 0.2 0.1 0 0
2nd quintile 90.6 9 0.2 0.1 0 0.1
3rd quintile 87.1 12.1 0.4 0.1 0.1 0.1
4th quintile 84 15.1 0.3 0.2 0.2 0.1
5th quintile 78.1 18.4 1.6 0.8 0.8 0.3
All 85.9 12.9 0.6 0.3 0.2 0.1
Urban 1st quintile 90.2 7.5 0.6 0.9 0.6 0.1
2nd quintile 86 10.7 1.2 1.5 0.5 0.2
3rd quintile 81.8 11.6 2.6 2.1 1.6 0.1
4th quintile 79.6 9 4.2 3 4 0
5th quintile 67 5.5 8 7 12 0
All 80.9 8.9 3.3 3 4 0

Source: National Sample Survey, 2017-18

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் / சுகாதாரம் சரிபார்ப்பு இணையதள சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story