‘18.5 லட்சம் பெண்கள் ஊரடங்கின் போது கருக்கலைப்பு செய்யத் தவறியிருக்கலாம்’

‘18.5 லட்சம் பெண்கள் ஊரடங்கின் போது கருக்கலைப்பு செய்யத் தவறியிருக்கலாம்’
X

புதுடெல்லி: கோவிட்-19 ஊரடங்கால் முதல் மூன்று மாதங்களில், அதாவது 2020 மார்ச் 25 முதல் ஜூன் 24 வரை நிலவிய அசாதாரண சூழலால், இந்தியாவில் 3.9 லட்சம் கருக்கலைப்புகளில் சுமார் 47% பேர், கலைக்காமல் விட்டிருக்கலாம் என்று மதிப்படப்பட்டுள்ளது. இதன் பொருள் 18.5 லட்சம் இந்திய பெண்கள் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க முடியாது என, தேவையற்ற கர்ப்பங்களை தடுப்பதை நிர்வகிக்கும் லாபநோக்கற்ற அமைப்பான இந்தியா ஐபஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் (IDF - ஐடிஎஃப்), 2020 மே ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. இந்த 18.5 லட்சம் பெண்களில் 80% பேர் அல்லது 15 லட்சம் பேர் கருக்கலைப்பு செய்யாமல் ஏற்றுக் கொண்டதற்கு, மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்துகள் கிடைக்காதது காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எட்டு மாநிலங்களில் உள்ள 509 பொது மருத்துவமனைகள், 52 தனியார் மருத்துவச் சேவை வழங்குவோர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் (FOGSI) உறுப்பினர்களின் நிபுணர் கருத்து, கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தரவு மற்றும் மருந்து தொழில் வல்லுநர்களிடம் தொலைபேசி வழியே நடத்திய கணக்கெடுப்புகளின் தரவு, இத்தகைய மதிப்பீட்டை தந்துள்ளது.

அணுகல் வசதி குறைந்ததால் மற்றொரு 20% பேர், அல்லது கிட்டத்தட்ட 3,70,000 பேரின் கருக்கலைப்புகள் கைவிடப்பட்டுள்ளன - இதில் தனியார் சுகாதார மருத்துவனை அணுகல் குறைந்ததால் 16% மற்றும் பொது சுகாதார வசதிகள் இல்லாமல் 4% ஆகும். இந்தியாவில் ஆண்டுதோறும் நிகழும் 1.56 கோடி கருக்கலைப்புகளில் 73% வெளியே அணுகும் மருந்துகள் மூலம், 16% தனியார் சுகாதார மருத்துவமனைகள், 6% பொது சுகாதார மையங்கள் மற்றும் 5% பாரம்பரிய பாதுகாப்பற்ற முறைகள் வாயிலாக நடப்பதாக, தி லான்செட் இதழின் 2015 ஆய்வு தெரிவிக்கிறது.

.கருத்தடை செய்வதற்கான வாய்ப்பு இல்லாததால் பல லட்சக்கணக்கான திட்டமிடப்படாத கர்ப்பங்கள், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் மற்றும் பிரசவ இறப்புகள் ஏற்படக்கூடும்; மேலும் அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் 20% வரை பாதிக்கக்கூடும் என்று இந்தியா ஸ்பெண்ட் 2020 மே மாத கட்டுரை குறிப்பிட்டது.இதன்மூலம் பல லட்சம் பெண்கள் தேவையற்ற கர்ப்பத்தை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம் அல்லது தாமதமாக அல்லது பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். எனவே நாட்டின் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதும் மிக முக்கியமானது என்று இந்திய ஐடிஎஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோஜ் மானிங், இந்த நேர்காணலில் இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

கருத்தடை மற்றும் கருக்கலைப்பு தொடர்பான பல தேசிய பணிக்குழுக்களில் உறுப்பினராக மானிங் இருக்கிறார். பாதுகாப்பான கருக்கலைப்பு வழிகாட்டுதல்களை பகிர்ந்து கொள்ளும் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவின் ஒரு பகுதியாகவும் அவர் இருந்துள்ளார். கிராமப்புற நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமா மற்றும் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ-பிளஸ் தலைமைச்சான்றிதழ் பெற்றவர். அவருடன் நேர்காணல்.

அத்தியாவசிய தேவையான கருத்தடை மருந்துகளை பெறுவதற்கான அணுகலை, இந்த ஊரடங்கு எவ்வாறு முடக்கியது?

ஊரடங்கு காலத்தில் கருத்தடை செய்யும் பெண்களின் அணுகலை பாதிக்கும் காரணிகள் பலவகையிலும் கருக்கலைப்புக்கு ஒத்தவை:

  • பொது சுகாதார மருத்துவமனைகள் கோவிட்-19 பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டன; இது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார (SRH) சேவைகள் கிடைப்பதை முடக்கியது.
  • கோவிட் -19 சிகிச்சையை கவனிக்க வேண்டி இருப்பதால் மருத்துவ ஊழியர்களுக்கு பிற சேவைகளை வழங்க நேரம் இல்லை அல்லது சேவைகளை பாதுகாப்பாக வழங்க தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இருக்கலாம்
  • சேவை அளிப்பவர்கள் கிடைக்காதது, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் அல்லது கட்டாய கோவிட்-19 பரிசோதனை செய்யும் வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன அல்லது அவற்றின் சேவைகள் குறைத்துக் கொள்ளப்பட்டன.
  • வினியோக சங்கிலிகள் சீர்குலைவுகள் கருத்தடை மருந்துகள் மற்றும் பல கருத்தடை முறைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கிடைக்கச் செய்கின்றன.
  • பொது போக்குவரத்துகளை நிறுத்தி வைப்பது மற்றும் வெளியே வருவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் பெண்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தின.

கூடுதலாக, சில குறிப்பிட்ட காரணங்கள் பின்வருமாறு:

  • திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட மே மாதத்தின் நடுப்பகுதி வரை, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனையின்படி கருத்தடை மற்றும் ஐ.யூ.சி.டி.களை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதாவது, பெண்கள் தாங்கள் விரும்பும் கருத்தடை முறையை, குறிப்பாக அவர்களுக்கு நீண்டகால கருத்தடை தேவைப்பட்டால் அதை பெற முடியவில்லை என்பதாகும்.
  • கோவிட் தொடர்பான கண்காணிப்புப்பணிகளில் ஆஷா தொழிலாளர்களின் ஈடுபாடு சமூக அளவிலான கருத்தடை சேவை வழங்கலை பாதித்தது.
  • கோவிட்-19 பரவக்கூடுமோ என்ற அச்சத்தால் பெண்கள் சுகாதார மையங்களுக்கு சென்று வருவதை தவிர்த்தனர்.

ஊரடங்கின் போது கருத்தடை செய்து கொள்ள முடியாத மற்றும் கர்ப்பமானதை அறிந்த ஒரு பெண்ணுக்கு இருக்கும் சாத்தியமான வாய்ப்புகள் எவை?

அத்தகைய பெண்ணுக்கு சாத்தியமான வாய்ப்புகள் பின்வருமாறு:

  • திட்டமிடப்படாத அல்லது எதேச்சையாக இருந்தாலும் அவரது கர்ப்பத்தை தொடர்வது;
  • ஊரங்கின் போது பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்ய முயற்சிப்பது (ஒரு மருந்துக்கடையில் இருந்து கருக்கலைப்பு மருந்து மாத்திரைகளை வாங்க அவர் முயற்சிக்கலாம் அல்லது தெருவோர மருந்து வைத்தியரை சந்திக்கலாம்); அல்லது
  • ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை காத்திருப்பது; அதன் பிறகு சுகாதார நிலையத்தில் இரண்டாம் மூன்று மாத கருவை கலைக்கச் செய்வது (ஊரடங்கு காரணமாக, கருக்கலைப்புக்கான 12 வார கர்ப்ப காலம் என்ற வரம்பை அவர் கடந்திருக்கலாம்).

கருத்தடை மருந்துகள் மறுக்கப்படுவதால், பெண்களுக்கு ஏற்படும் நீண்ட மற்றும் குறுகிய கால பாதிப்புகள் என்ன?

கருத்தடை மருந்துகளை பெற முடியாத பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது - இது அவர்களின் திட்டமிடப்படாத கர்ப்பத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும் அல்லது இரண்டாவது மூன்று மாதங்களில் அல்லது பாதுகாப்பற்ற கருக்கலைப்பாக இருந்தாலும் சரி. திட்டமிடப்படாத கர்ப்பம் என்றால், முந்தைய பிரசவத்துடன் போதுமான இடைவெளியை உறுதி செய்யாமல் போகலாம்; அத்துடன் மன ஆரோக்கியமும் (ஊரடங்கால் ஏற்பட்ட சொந்த தாக்கத்திற்கு அப்பால்) பாதிக்கலாம். இவை அனைத்தும் அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பாதுகாப்பற்ற கருக்கலைப்பு உடல்நலத்தில் நீண்டகால விளைவுகளுடன் நோயுற்ற தன்மைக்கு வழிவகுக்கும் மற்றும் மோசமான நிலை ஏற்படும் பட்சத்தில் பெண்களுக்கு இறப்பு நேரிடலாம்.

கருக்கலைப்பு செய்ய அல்லது கர்ப்பத்தைத் தொடர அவருக்கு / அவரது குடும்பத்தினருக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் நிதி தாக்கங்களும் இதில் ஏற்படும். கோவிட்-19 காரணமாக வேலை இழப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், ஊட்டச்சத்து, குடும்ப இயக்கவியல் போன்றவை பாதிக்கப்படக்கூடும் என்பதால், சிறு குழந்தைகள் உட்பட முழு குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் இது கேடு விளைவிக்கும்.

பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் இந்தியாவில் தாய்மார்கள் இறப்புகளுக்கு மூன்றாவது பெரிய காரணம் ஆகும். ஊரடங்கின் போது இது உயர்ந்திருக்குமா?

உலக சுகாதார அமைப்பின் வரையறைப்படி கருக்கலைப்பு என்பது:

  • உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த நடைமுறையுடன் உரிய பயிற்சி பெற்ற நபர் கருக்கலைப்பு செய்தால், அது பாதுகாப்பானது. இத்தகைய கருக்கலைப்புகளை மாத்திரைகள் (மருந்து கருக்கலைப்பு) அல்லது தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன், புறநோயாளியாகவே வைத்து இந்த செயல்முறை பயன்படுத்தி செய்ய முடியும்.
  • தேவையான தகுதியோ திறனோ இல்லாத நபர்களால் ஒத்துவராத சூழலில் அல்லது குறைந்தபட்ச மருத்துவ தரங்களுக்கு இணங்காத நிலையில் கருக்கலைப்பு மேற்கொள்வது என்பது பாதுகாப்பற்றது. பயிற்சி பெறாத நபர்கள் (தெரு வைத்தியர் / போலி மருத்துவர் / செவிலியர் ) மேற்கொள்ளும் கருக்கலைப்புகளும் இதில் அடங்கும். மேலும் அவை பாரம்பரிய கலவைகள், காஸ்டிக் பொருட்கள் அல்லது வெளிநாட்டு கருவிகளை செருகுவது போன்ற ஆபத்தான முறைகளை பயன்படுத்துதல் ஆகியனவும் இதில் அடங்கும்.
  • ஒரு மருந்தாளுனரின் மேற்பார்வையுடன் / அது இல்லாமல் சுகாதார மையத்திற்கு வெளியே நடக்கும் மருத்துவ கருக்கலைப்பு குறைந்தபட்சமே பாதுகாப்பானது. இந்தியாவில் நடக்கும் கருக்கலைப்புகளில் சுமார் 73%, இந்த வழியில் நடைபெறுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருக்கலைப்புகளில் பெரும்பாலானவை வெற்றிகரமான தாக்கத்தை விளைவிக்கின்றன என்பதையும், எனவே உலக சுகாதார அமைப்பு, இதை "குறைந்தளவு பாதுகாப்பானது" என்றும் வகைப்படுத்தி உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊரடங்கின் போது பாதுகாப்பற்ற கருக்கலைப்பு அதிகரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை; எனினும் சில ஊடகங்களின் செய்திகள், இத்தகைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கின்றன. பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு உட்படுத்தும் பெண்கள் முழுமையற்ற கருக்கலைப்பு (கர்ப்ப திசுக்கள் அனைத்தையும் கருப்பையில் இருந்து அகற்றவோ அல்லது வெளியேற்றவோ தவறுவது) போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். ரத்தக்கசிவு (அதிக ரத்தப்போக்கு), தொற்று, கருப்பையில் ஓட்டை (கருப்பை ஒரு கூர்மையான பொருளால் துளைக்கும்போது ஏற்படுகிறது) அல்லது குச்சிகள், ஹேர்பின் ஊசிகள் அல்லது உடைந்த கண்ணாடி போன்ற ஆபத்தான பொருட்களை யோனி அல்லது ஆசனவாயில் நுழைப்பதன் மூலம் பிறப்புறுப்பு பாதை மற்றும் உள் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படலாம். இவை நோயுற்ற தன்மைக்கு அல்லது இறப்புக்கு வழிவகுக்கும். உளவியல் தாக்கங்கள் கோபம், பதட்டம் அல்லது மனச்சோர்வு ஆகியவற்றுடன் - பொருளாதாரச் சுமையால் அது மேலும் அதிகரிக்கின்றன.

கிராமப்புறங்களில் பெண்களுக்கு கருத்தடை அணுகல் என்பது மோசமாக இருந்ததா?

ஆமாம். கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு இது மிக மோசமாக இருந்தது, அதற்கு காரணம்:

  • சமூக காரணிகள்: பழிச்சொல், கருத்தடை பயன்பாட்டை நிராகரிக்கும் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் விதிமுறைகள்.
  • செயல்பாட்டில் உள்ள சவால்கள்: வரையறுக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள்; மருந்து கடைகள் / அல்லது விநியோகச் சங்கிலி சீர்குலைந்து போகுதல் மற்றும் சுகாதார மையங்களில் மருந்து வினியோகங்கள் தடைபடுவது.
  • சுகாதார அமைப்பு தொடர்பான சிக்கல்கள்: கள சுகாதார ஊழியர்களால் (முக்கியமாக ஆஷா தொழிலாளர்கள்) சமூக அளவிலான விநியோகத்தை நம்பியிருத்தல்; இது, கோவிட் -19 தொற்று பரவலால் பாதிக்கப்பட்டது.

கோவிட்-19 கண்காணிப்பு நடைமுறைகள் கட்டாயம் என்பதும், கருக்கலைப்புக்கான தேவை அதிகரிப்பதாலும் செலவுகள் அதிகரிக்குமே? ஆம் என்றால், கருக்கலைப்பு சேவைகளை அணுகுவதில் இருந்து பெண்களை மேலும் விலக்கி வைப்பது என்ற நியாயமற்ற நடைமுறைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வழக்கமான காலங்களில், 73% கருக்கலைப்புகள் கருக்கலைப்பு மருந்துகளை பயன்படுத்தி மருத்துவமனைக்கு வெளியே நடக்கின்றன; வசதி அடிப்படையிலான கருக்கலைப்புகளுக்கான அதிகரித்த தேவை, பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான செலவை, குறிப்பாக இரண்டாம் மூன்று மாத கருக்கலைப்புகளுக்கு கணிசமாக அதிகரிக்கும். கூடுதல் ஆய்வக பரிசோதனைகளுக்கான செலவுகள், கோவிட் -19 தொடர்பான மருத்துவமனை செலவுகளுக்கு கூடுதலாக மருத்துவமனையில் (இரண்டாம் மூன்று மாத கருக்கலைப்புக்கு பொதுவாக முதல் மூன்று மாதங்களில் பகல்நேர பராமரிப்பு அல்லது ஓ.பி.டி. நடைமுறைகளுக்கு மாறாக அனுமதி தேவைப்படுகிறது) சேருதல் ஆகியவை இதில் அடங்கும். கருக்கலைப்பு சேவைகளை அணுகுவதற்கு முன்பு செய்ததை விட பெண்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கலாம் என்பதால் பயணச் செலவு மற்றும் வாய்ப்புகளுக்கான செலவு என, கூடுதல் செலவுகள் இருக்கும்.

கருக்கலைப்புக்கு பெண்களின் அணுகலை மேம்படுத்த, முதல் அல்லது இரண்டாவது மூன்று மாத கருக்கலைப்பை செய்யும் சேவை வழங்கும் (பொது மற்றும் தனியார்) மையங்களின் இருப்பிடங்களை அடையாளம் காணும் வசதிகளை ஏற்படுத்துவது அவசியம்; அடுத்து, மையங்களின் தயார்நிலையை மதிப்பிடுவதன் மூலம் மற்றும் கருக்கலைப்பு சேவைகளை வழங்க அவற்றை வலுப்படுத்துவதன் மூலம், குறிப்பாக இரண்டாவது மூன்று மாத கருக்கலைப்புகள், அதை மேம்படுத்த வேண்டும். தனியார் மையங்களில் செலவுகளை ஈடுசெய்வதுடன், ஏழை சமூக-பொருளாதார பின்னணியில் உள்ள பெண்கள் / குடும்பங்களுக்கு போக்குவரத்து மானியங்களை வழங்குவது கூடுதல் நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு கருத்தடை / கருக்கலைப்பு அணுகலை உறுதி செய்ய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இது போன்ற சூழ்நிலைகள் மீண்டும் எழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

கருத்தடை வசதி இல்லாததால் ஏற்பட்ட கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பு உள்ளிட்ட பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் பற்றாக்குறையால் உண்டாகும் மருத்துவ சிக்கல்கள் மோசமான விளைவுகளிய ஏற்படுத்துபவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாட்டின் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை சேர்ப்பதை உறுதி செய்வதும் மிக முக்கியம். இதுபோன்ற நெருக்கடி சூழலில் அத்தியாவசிய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்வதும், நிவாரண நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதும் இதில் அடங்கும்.

சில பரிந்துரைகள்:

  • நெருக்கடி காலத்தின் போது விரிவான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் தொடர வேண்டும். தொடர்புடைய ஆலோசனைகள் மற்றும் பின்தொடர்புகளுக்கு நடமாடும் கிளினிக் மற்றும் டெலிமெடிசின் ஆகியன சாத்தியமான இடங்களில் அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்.
  • மருந்து பொருள் விநியோகச்சங்கிலியை நெறிப்படுத்துதல் மற்றும் மருத்துவ கருக்கலைப்பு மருந்துகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் எல்லா நேரங்களிலும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • கருக்கலைப்பு சேவையை நாடும் பெண்களை அணுகுவதற்கு பரிந்துரைப்பு இணைப்புகளை, குறிப்பாக சமூக அளவிலான இணைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
  • கூடுதல் பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் சொந்த செலவினங்களை ஈடுசெய்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்த வேண்டும்.
  • தெளிவான, சீரான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பொது சுகாதார தகவல்கள் சமூகத்தை சென்றடைய வேண்டும். மருத்துவ சிக்கல்கள் சுகாதார வசதிகளில் பரவும் அபாயத்தை விட அதிகமாக உள்ளன என்பதை நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்; ம ற்ற அனைத்து அத்தியாவசிய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவையின் தேவைகளையும் பெண்கள் தொடர்ந்து கவனித்துப் பெற வேண்டும் என்பதையும் நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

(திவாரி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story