கோவிட்-19: மருத்துவர்களுக்கு பாதுகாப்பு குறைவு; நிரூபணமாகாத தடுப்பு மருந்துகளை பரிந்துரைக்கும் அரசு

கோவிட்-19: மருத்துவர்களுக்கு பாதுகாப்பு குறைவு; நிரூபணமாகாத தடுப்பு மருந்துகளை பரிந்துரைக்கும் அரசு
X

புதுடெல்லி: கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை பராமரிக்கும் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு, நோய் தடுப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) பரிந்துரைக்கலாம் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) பரிந்துரைத்துள்ளது. நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் கூறியது போல், கோவிட்-19 நோய்த்தொற்றுகளை இந்த மருந்து தடுக்குமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

அதே நேரத்தில், சுகாதாரப்பணியாளர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் உதவும் முகக்கவசங்கள் மற்றும் உடற்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவமனைகளில் குறைந்து வருகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

"சார்ஸ் கோவி-2 தடுப்புக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயனுள்ளதாக இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை [கொரோனா வைரஸ் நாவல் அறியப்பட்டதால்]; எனவே இது சுகாதாரப் பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணமாக (PPE) மாற்ற முடியாது," என்று, அமெரிக்காவை சேர்ந்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் வைராலஜிஸ்ட், ஏஞ்சலா ராஸ்முசென் கூறினார். தற்போது, கோவிட்-19க்கு தடுப்பு மருந்தோ, சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.

கோவிட்-19 தொற்றுநோய், உலகளவில் 28,000-க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றுள்ளது மற்றும் 6,20,000-க்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது என்று, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத்தின் (மார்ச் 28 அன்று இரவு 8.42 மணி) தரவு தெரிவிக்கிறது. இந்தியாவில், இந்நோய் 19 உயிர்களைக் கொன்றுள்ளது; குறைந்தது 918 பேரை பாதித்துள்ளது (இது, மார்ச் 28, 2020 மாலை 5.45 மணி வரை) என்று, ஹெல்த்செக் தரவுத்தளமான கொரோனா வைரஸ் மானிட்டர் தெரிவிக்கிறது.

இந்தியாவின் முதலாவது கோவிட் -19 நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில், மார்ச் 27, 2020 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில், மருத்துவ நிபுணர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்- பிபிஇ (PPE) போதிய அளவில் கிடைக்கச் செய்வது கடினம் என்று இந்திய அரசு கூறியது. சில பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செயலாமெனில், “அது கிடைப்பதில் சில தடைகள், சில சிக்கல்கள் இருந்தன”, என்று செய்தியாளர் கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி லாவ் அகர்வால் கூறினார். "இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால், என்.95 முகக்கவசங்களிலும் சில சிக்கல்கள் இருந்தன. இந்த விவகாரம் குறித்து அரசு அறிந்திருக்கிறது” என்றார்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) சப்ளைக்கான அரசின் முடிவு "அரசியல் ரீதியாக பயனுள்ளது", ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சத்தீஸ்கரில் உள்ள லாப நோக்கற்ற மருத்துவமனையான ஜான் ஸ்வஸ்தியா சஹயோக்-இன் யோகேஷ் ஜெயின் கூறினார். போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாயிலாக தயார்படுத்தத் தவறியதால், சுகாதார ஊழியர்களை பாதுகாப்பது போல் அரசு காட்டிக் கொள்வதற்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற ஒரு மருந்தை விநியோகிக்கிறது என்றார் அவர்.

"சுகாதாரத் தொழிலாளர்கள் இப்போதே மிகவும் பயப்படுகிறார்கள்," என்று கோவிட்-19 ஐ கையாள அரசால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் பெயர் வெளியிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் கூறினார். "அரசு, அவர்களுக்காக ஏதாவது செய்வதை, அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்கு உத்தரவாதம் தேவை. இதுகுறித்து பிரெஞ்சு ஆய்வின் வரம்புகளை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆம், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒரு சிறந்த தடுப்பு என்று இன்னும் 100% நிரூபிக்கப்படவில்லை. ஆனால் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்க, நாம் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு மாற்றாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இருக்க முடியாது

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்கொள்வது சுகாதார ஊழியர்களுக்கு தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்ற "தவறான உணர்வை" வழங்கக்கூடாது என்று ஐ.சி.எம்.ஆரின் பரிந்துரை எச்சரித்த போதிலும், அதன் விளைவு இதில் சரியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறினர்.

"இந்த [HCQ] பரிந்துரையில் இருந்து, மருத்துவப்பணிக்குழுவை இழக்கக்கூடாது என்பதில் அரசு கவலை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது," என்று மணிப்பால் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தூக்க மருந்துத்துறையின் தலைவர் சத்யநாராயண மைசூர் கூறினார். "ஆனால் சுகாதார ஊழியர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்னை எடுத்துக்கொள்ள சொல்வதால், நாங்கள் மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அர்த்தமல்ல. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பாதுகாப்பு தடுப்புக்கு ஒரு மாற்று அல்ல” என்றார் அவர்.

ஆதாரமின்மை

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றிய ஐ.சி.எம்.ஆரின் ஆலோசனையானது, மருந்துகளின் செயல்திறன் குறித்து, குறிப்பாக ஒரு தடுப்பு பற்றி எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

ஆய்வக பரிசோதனைகள், இன்-விவோ ஆய்வுகள் மற்றும் முன் மருத்துவ தரவுகளின் அடிப்படையில் “ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது” என்று மார்ச் 22, 2020 அன்று வெளியான ஆலோசனை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு வரச் செய்த ஆய்வுகள் எவை என்ற விவரம் குறிப்பிடவில்லை. இந்த முடிவு எடுக்கப்பட்ட கூட்டங்களின் குறிப்போ, நிரல்களோ எதுவும் கிடைக்கவில்லை.

"ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட தரவு என்னவென்று அறிய எனக்கு ஆர்வமாக உள்ளது," என்று அமெரிக்காவை சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையத்தில் தொற்று நோய்கள் மருத்துவர் மற்றும் உயிரி பாதுகாப்பு சகா கிருத்திகா குப்பள்ளி கூறினார். "எனக்குத் தெரிந்தவரை, மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன; ஆனால் இதுவரை முடிவு எதுவும் கிடைக்கவில்லை" என்று அவர் கூறினார்.

கலந்து விவாதித்த விவரங்களை ஐ.சி.எம்.ஆர் உடனடியாக வெளியிட வேண்டும்; இதன்மூலம் “அவை எவ்வாறு இத்தகைய அளவுக்கோலுக்கு வந்தன, மற்ற மருந்துகளில் தனித்துவமாக இருப்பது என்ன, அல்லது அவை ஒன்றாகக் கருதப்பட்டிருக்கிறதா” என்பதைக் காணமுடியும் என்று, டெல்லியை சேர்ந்த மருத்துவரும், ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளருமான சவுமியாதீப் பூமிக் கூறினார்.

"தயவுசெய்து இம்மருந்தை ஒரு தடுப்பு நடவடிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்," என்று, டெல்லியை சேர்ந்த தொற்று நோய் இயல் துறை வல்லுனரும், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் தொண்டு நிறுவனமான ‘இந்தியா அலையன்ஸ்’ தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷாஹித் ஜமீல் கூறினார். "இந்த வழக்கில் இதுவொரு உறுதியான மருந்து என்பதற்கு போதுமான மருத்துவச்சான்றுகள் இல்லை - இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்" என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்த இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்தியாவின் பரிந்துரை வந்தது: “இது வேலை செய்யக்கூடும். இது வேலை செய்யாமலும் போகலாம். நான் இதை பற்றி நல்லதாகவே உணர்கிறேன். அவ்வளவுதான். இது ஒரு உணர்வு,” என்று டிரம்ப் கூறினார்.

“[கோவிட்-19 க்கு எதிராக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒரு தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான சான்றுகள் ஒரு நிகழ்வு மட்டுமே” என்று உலகின் முன்னணி நோயெதிர்ப்பு நிபுணர்களில் ஒருவரான அந்தோனி ஃபக்கி கூறினார்; இவர், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவில் உள்ளவர்; அந்த செய்தியாளர் சந்திப்பில், டிரம்புடன் மேடையில் இருந்தவர். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்பது மலேரியா, கீழ்வாதம் போன்ற வாத பிரச்சினைகள் மற்றும் பல தசாப்தங்களாக லூபஸ் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ஒரு பழைய மருந்து. "நீங்கள் அதை வேறொரு நோயின் பின்னணியில் வைத்து பார்க்கும் போது, அது பாதுகாப்பானதா என்பது எங்களுக்கு தெரியவில்லை" என்று ஃபக்கி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சிகிச்சையாக ஹெ.சி.க்யூ பற்றிய ஆராய்ச்சி மிகக்குறைவு, முடிவற்றது

கோவிட் -19 இல் இருந்து குணமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (ஹெ.சி.க்யூ) பற்றிய பெரும்பாலான சான்றுகள் ஒரு சிறிய பிரெஞ்சு ஆய்வில் இருந்து கிடைத்தவை. இந்த ஆய்வு அதன் வழிமுறை மற்றும் நெறிமுறைகளுக்காக விமர்சிக்கப்பட்டன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வு குறித்து பல கவலைகள் உள்ளன என்று ஜான் ஹாப்கின்ஸ் மையத்தின் குப்பள்ளி கூறினார்.இது மிகச் சிறிய மாதிரி அளவை - 20 நோயாளிகள் - கொண்டிருந்தது; மற்றும் நோயாளிகளுக்கு இருக்கும் நோய்கள் (அல்லது ‘கொமொர்பிடிட்டிகள்’) என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை, அவை விளைவுகளை பாதிக்கக்கூடும் என்று அவர் விளக்கினார். நோயாளிகளுடன் பின்தொடர்வுகள் எதுவும் இல்லை; எனவே, நோய் மீண்டும் மீண்டும் வந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது, என்று அவர் மேலும் கூறினார்.

"வெளியாகி இருக்கும் வரம்புக்குட்பட்ட தரவுகளை பொறுத்தவரை, பயன்பாட்டைப் பற்றிய பரிந்துரைகளைச் செய்வதற்கு முன், சீரற்ற மருத்துவ பரிசோதனையில் மருந்துகளை மேலும் மதிப்பீடு செய்வது முக்கியம்" என்று குப்பாலி பரிந்துரைத்தார். "எவ்விதமான பாதகமான விளைவுகளும் இல்லை, உண்மையில் இது வைரஸைத் தடுப்பதற்கும் / அல்லது குணப்படுத்துவதற்கும் உதவுகிறது என்பதை, இது பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

மருந்து பக்க விளைவுகளின் சாத்தியமும் நோய் எதிர்ப்பும்

ஃபக்கி கூறியது போல், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்பது கோவிட்-19 ஐ தவிர பிற நோய்களுக்கு, நன்கு அறியப்பட்ட மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்து. இருப்பினும், இது மருத்துவ கண்காணிப்புடன் எடுக்கப்பட வேண்டும் மற்றும் இதய அரித்மியா (ரத்தம் தடை படுதல்) மற்றும் விழித்திரை சேதம் போன்ற கடும் பக்க விளைவுகளும் இதில் உள்ளன.

இந்தியாவில் இந்த மருந்து ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தான் தரப்பட வேண்டும்; உதாரணமாக சத்தீஸ்கரில் தனது மருத்துவமனையில் இது கிடைப்பது கடினம் என்று ஜெயின் கூறுகிறார்; ஏனென்றால் மக்கள் பீதியில் இருந்து அதை வாங்கத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் ஒரு "விஞ்ஞானமற்ற மனநிலை" இருப்பதாலும், தேவைப்படும் பல மருந்துகள் பெரும்பாலும் எப்படியும் எளிதில் விற்கப்படுவதாலும் தான் இந்தநிலை என்று அவர் கூறுகிறார்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் ஆகிய மலேரியா எதிர்ப்பு மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு, நோய் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிக்கிறது.

அறிகுறியற்ற சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயுடன் தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே, பரிந்துரைக்கப்பட்டவர்களின் ஆலோசனைப்படி இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும் என்று அரசின் பரிந்துரை கூறுகிறது. இந்த மருந்து ஒரு அட்டவணை ஹெச்.1 மருந்தாக பட்டியலிடப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளனர்; அதாவது மருந்தாளுனர்கள் குறைந்தது மூன்று வருடங்களுக்காவது, யார் இதை வாங்குகிறார்கள் என்ற பதிவுகளை வைத்திருக்க வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் ஹெ.சி.க்யூ. மருத்துவ பரிசோதனை

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்பட கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடிய சில மருந்துகளுக்கான உலகளாவிய மருத்துவ பரிசோதனையை ஒற்றுமை (SOLIDARITY) என்று, மார்ச் 18 அன்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

ஆனால், இச்சோதனை ஒரு நெருக்கடியான நேரத்தில் நடக்கிறது: போதிய ஆதாரங்கள் இல்லாத சூழலில், பிரான்ஸ், இத்தாலி மற்றும் பஹ்ரைன் ஆகியவை கோவிட் -19 சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்-ஐ பயன்படுத்த அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. ஜோர்டான் நாடு, மார்ச் 23, 2020 அன்று, இம்மருந்தை பயன்படுத்த அனுமதித்துள்ளது.

“உலக சுகாதார அமைப்பின் ஒற்றுமை என்ற இச்சோதனை மிகவும் நடைமுறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இது, அதன் ஒரு பகுதியாக இருப்பது கடினமாதல்ல, ” என்று, ஃபரிதாபாத்தை சேர்ந்த சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ககன்தீப் காங் கூறினார். "[இந்திய] அரசு உண்மையிலேயே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வேலை செய்யும் என்று நம்பினால், பரிசோதனையின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதை பயன்படுத்த வேண்டும். நான் ஒரு ஆராய்ச்சியாளர், நான் ஆதாரங்களை நம்புகிறேன். இது போன்ற கொள்கை பரிந்துரைகள் ஆதாரமின்றி செய்யப்படக்கூடாது” என்றார்.

இந்த வாரத்தின் நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பின் பரிசோதனையில் இந்தியாவும் பங்கேற்கும் என்று, இந்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. "உலக சுகாதார அமைப்பின் ஒற்றுமை என்ற தலைப்பிலான சோதனையில் எங்கள் பங்கேற்பை விரைவில் தொடங்குவோம்," என்று, மார்ச் 27, 2020 அன்று செய்தியாளர் சந்திப்பில் ஐ.சி.எம்.ஆரின் ராமன் கங்ககேத்கர் கூறினார். "முன்பு நாம் இதை செய்யவில்லை; ஏனென்றால் நம் நாட்டில் பாதித்தோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நமது பங்களிப்பும் மிகக்குறைவாகவே இருந்திருக்கும்" என்றார்.

(அனூ பூயான், இந்தியா ஸ்பெண்ட் ஒரு சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story